Published : 19 Aug 2017 01:41 PM
Last Updated : 19 Aug 2017 01:41 PM
ரஜினிதான் அடுத்த முதல்வர் என்ற முடிவுக்கு நிச்சயம் தமிழகம் வந்து சேரும்...அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறார் தமிழருவி மணியன்.
சுவாரஸ்யத்துக்காக அதிரடியாகப் பேச வேண்டும் என்று நினைக்காதவர் தமிழருவி. ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாகவும், அதே சமயம் ஆழமாகவும் பேசுவது அவரது ஸ்டைல்.
ரஜினியின் அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைப்பதற்காக காந்திய மக்கள் இயக்கம் சார்பில் ஆகஸ்ட் 20 அன்று திருச்சி உழவர் சந்தைத் திடலில் மாபெரும் மக்கள் திரள் மாநாட்டை தமிழருவி மணியன் தலைமை தாங்கி நடத்துகிறார். அதற்கான பணிகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவர் 'தி இந்து தமிழ்' இணையதளத்துக்காக அளித்த சிறப்புப் பேட்டி.
திருச்சி மாநாட்டின் முக்கிய நோக்கம் என்ன? மாநாட்டின் மூலம் அரசியல் வெள்ளோட்டம் பார்க்கிறாரா ரஜினி?
தமிழக மக்களின் நலன் சார்ந்த மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் மாநாட்டின் ஒரே நோக்கம். தமிழகத்தின் நலன் சார்ந்த அரசியல் மாற்றத்துக்கான அடித்தளம் என்பது திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளும் அதிகாரத்திற்கு வராமல் பார்த்துக் கொள்வதுதான். அந்த அடித்தளத்தை அமைக்க வேண்டும் என்பதுதான் காந்திய மக்கள் இயக்கத்தின் கனவு. அதற்காகத்தான் திருச்சியில் மாநாடு.
இந்த மாநாட்டுக்கு இரு நோக்கங்கள் உள்ளன. ரஜினி அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் என்ன, எது அவரை அரசியல் களத்துக்கு நிர்பந்தம் கொடுத்து வரவழைக்கிறது, அரசியலுக்கு வந்தால் ரஜினியிடம் இருக்கக்கூடிய கனவுத் திட்டங்கள் என்ன, தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு ரஜினியிடம் இருக்கும் தீர்வுகள் என்னென்ன ஆகியவற்றை எல்லாம் அவரிடம் நான் பல முறை பேசியதின் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விளக்குவது ஒரு பக்கம்.
தமிழகத்தில் உள்ள மக்கள் ரஜினிக்கு வாக்களித்து முதல்வராக்கினால், ரஜினி என்ன செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள், அந்த மக்களின் எதிர்பார்ப்புகளை ரஜினிக்கு வெளிப்படுத்துவது இன்னொரு பக்கம். இந்த இரண்டு பக்கங்களை விளக்குவதற்காகத்தான் அறிவுலக பிரஜையாக, பொறுப்புள்ள வாக்காளனாக நான் இந்த மேடையை அமைத்திருக்கிறேன்.
மாற்று அரசியலுக்கான தலைமையை ரஜினி தருவாரா?
நிச்சயமாக. இரு திராவிடக் கட்சிகள் தவிர்த்து, தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் இருந்தாலும் அவை அனைத்தும் தனித்தனியாக 5% வாக்குகளைப் பெற முடியாத நிலையில்தான் இருக்கின்றன. அவற்றை ஒன்றாகக் கூட்டி ஒரு கூட்டணியை உருவாக்கினாலும் அது 10%க்கு மேல் வாக்குகள் வர வாய்ப்பில்லை. அந்த நிலையில் மறைமுக திமுக ஆட்சிக்கு வருவதற்குத்தான் அதுபோன்ற கூட்டணி உதவும்.
அதனால் இரு திராவிடக் கட்சிகளையும் புறந்தள்ளி மாற்று அரசியல் மலர வேண்டுமென்றால் ஒரு வலிமை மிக்க, வசீகரமான தலைமை இன்றைக்கு தமிழகத்துக்கு தேவைப்படுகிறது. அந்தத் தலைமையை ரஜினியால் தரமுடியும் என்று தமிழக மக்கள் பரவலாக நம்புகிறார்கள். இப்போது ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற நிச்சயமற்ற சூழலிலேயே 25%க்கு மேல் வாக்குகள் அவருக்கு இப்போதே உள்ளன. ரஜினி அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்து, தேர்தல் பணியாற்றுவதற்கு தன்னை ஈடுபடுத்திக்கொண்டால் நிச்சயம் 45% வரை வாக்குகள் பெற வாய்ப்புள்ளது.
ரஜினியை ஏற்றுக்கொள்கிற, அவர் பின்னால் அணிவகுக்கத் தயாராக இருக்கிற கட்சிகள் எவையெல்லாம் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து ரஜினி தலைமையில் ஒரு வலிமை மிக்க கூட்டணியை உருவாக்கி, அவர் ஆட்சியைக் கைப்பற்ற நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்புகளை எல்லாம் மக்களிடத்தில் விளக்கிச் சொல்வதற்குத்தான் காந்திய மக்கள் இயக்கம் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
அதிமுக, திமுகவுக்கு மாற்றாக ரஜினி இருப்பார் என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?
ஐயத்துக்கு இடமில்லாமல் ரஜினி மட்டும்தான் மாற்றாக இந்த சூழலில் இருக்க முடியும். அவர் அரசியலுக்கு வருவது உறுதி. தனிக்கட்சி தொடங்குவது உறுதி. அவர் வந்தால் மக்கள் வரவேற்பார்களா என்பதை நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்க உள்ள திருச்சி மாநாட்டுக்கு கூடும் மக்களை வைத்தே ஒரு முடிவுக்கு வரலாம்.
நான் ரஜினியின் அரசியல் குறித்து விளக்குவதற்காக பெருந்திரள் வந்து நிற்கும் என்றால், அவர் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கி, மக்களை சந்திக்க மேடைக்கு வந்தால் மக்கள் கடலுக்கு முன்னாடிதான் ரஜினி நிற்க வேண்டி வரும். ரஜினிக்குப் பின் இருக்கும் மக்கள் ஆதரவைப் பார்க்கப் பார்க்க அவர்தான் அடுத்த முதல்வர் என்ற முடிவுக்கு நிச்சயம் தமிழகம் வந்து சேரும்.
ரஜினியின் அரசியல் பயணத்தில் உங்கள் பங்கு என்ன? அவரின் அரசியல் ஆலோசகர் என உங்களைச் சொல்லலாமா?
அவரிடம் நெருங்கிய தோழமை கொண்ட நண்பன் என்று என்னைச் சொல்லலாம். ஒரு நண்பன் இன்னொரு நண்பனுக்கு பரிந்துரைகள் வழங்குவது போல, என் மனதில் தோன்றக்கூடிய நல்ல பரிந்துரைகளை ரஜினிக்கு வழங்கிக் கொண்டிருக்கிறேன். நிச்சயம் வழங்குவேன்.
‘’எனக்கு முன்னால் நீ நடக்காதே. உன்னைப் பின்பற்ற என்னால் இயலாது. எனக்குப் பின்னால் நீ வராதே. உனக்கு தலைமை ஏற்கவும் என்னால் முடியாது. ஆனால், தோளோடு தோள் உரச தோழமையோடு என்னோடு நடந்து வா’’ என்று ஆல்பர் காமியோ என்ற அறிஞன் சொன்னான். அதுபோல தோளோடு தோள் சேர்ந்து நாங்கள் இருவரும் தோழமையோடு நகர்ந்து ஒரு மாற்று அரசியலை உருவாக்கி, தமிழக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை உருவாக்கி அதை செயல்படுத்தி, காமராஜர் ஆட்சியை மீண்டும் மக்கள் கண்களில் காணக்கூடிய நிதர்சனத்தைக் கொண்டு வருவதுதான் எனக்குள் இருக்கும் ஒரே தவம்.
ரஜினி செய்ய வேண்டிய உடனடி சீர்திருத்தம் என்ன?
உடனடியாக செய்ய வேண்டிய சீர்திருத்தம் என்பது நீராதாரத்துக்கு வழிகாட்டுவதுதான். ஏனென்றால் நீராதாரம் குறைந்து, காவிரி பிரச்சினை பெரிதாக வளர்ந்து விவசாயமே இன்றைக்கு கருகிக் கிடக்கிற சூழலில், தமிழக மக்களின் இன்றைய முதல் தேவை தண்ணீர். அந்தத் தண்ணீர் இப்போது அரசியல் பிரச்சினையாகிவிட்ட நிலையில், கர்நாடக மக்கள் காவிரி எங்களுடையது என்ற தவறான மனோபாவத்துக்கு வந்துவிட்டனர். ஆனால், இப்பிரச்சினைக்கு மூன்று நாட்களில் முடிவு கண்டுவிட முடியாது. அதனால் முதல் திட்டம் மகாநதியில் இருந்து காவிரி வரை நதிநீர் இணைப்புத் திட்டம். அதை 2002-ம் ஆண்டிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று குரல் கொடுத்து, அதற்காக ரூ.1 கோடி தருகிறேன் என்று அறிவித்தவர் ரஜினி.
இன்றைக்கு அந்தத் திட்டத்தை மத்தியில் இருக்கும் ஆட்சியைப் பயன்படுத்தி, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் தேவைப்படுகிற அந்தத் திட்டம் 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டும், தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினை முழுவதுமாக தீர்க்கப்பட வேண்டும். இதுதான் ரஜினியின் முதல் திட்டம்.
ரஜினி புதுக்கட்சி தொடங்குவதற்கான தேதி குறிக்கப்பட்டுள்ளதா?
எனக்கான ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லைக்குள் இருந்துதான் நான் செய்திகளை வழங்க முடியும். அவர் எப்போது புதுக்கட்சி தொடங்குவார், அதற்கு என்ன பெயர் வைப்பார், என்ன சின்னத்தை தேர்ந்தெடுப்பார், என்னென்ன வாக்குறுதிகளை மக்களிடம் வழங்குவார் என்பதை ரஜினி கட்சி தொடங்கும்போது ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நிச்சயம் வெளிப்படுத்துவார்.
ரஜினி பாஜக பக்கம் சென்றுவிடுவார் என்று சொல்லப்படுகிறதே?
மோடி, அமித்ஷா உள்ளிட்ட அகில இந்திய பாஜக தலைவர்கள் அனைவரும் அவரது நெருங்கிய நண்பர்கள். அதனால் அப்படி ஒரு பேச்சு இருக்கத்தான் செய்யும். ஒன்றை மட்டும் தெளிவுபடுத்துகிறேன். ஒருநாளும் ரஜினி பாஜகவில் இணையப் போவதில்லை. பாஜக தலைமையிலான கூட்டணி அமைத்தால் அந்தக் கூட்டணியில் ஒரு கட்சியாக ரஜினி இருக்கப் போவதுமில்லை.
சமகால அரசியலில் வைகோ, விஜயகாந்த், திருமாவளவன் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அவரவர் அவரவருடைய கட்சிக்கு ஏற்ப, தமிழக மக்கள் நலனுக்காக தொடர்ந்து களமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. துரதிர்ஷ்டவசமாக அவர்களின் வாக்கு வங்கி என்பது ஒரு தனிக்கட்சிக்குக் கூட 5% இல்லை. இந்த நிலையில் மாற்று அரசியலைக் கொண்டுவர வாய்ப்பில்லை. அதிமுக, திமுகவிடமே தமிழகம் மீண்டும் மீண்டும் சிறைபட்டு இருக்க வேண்டிய நிலையை நிச்சயமாக தடுத்து நிறுத்தியாக வேண்டும். இப்படிப்பட்ட நிலையில் இன்றைக்கு காலம் கொடுத்திருக்கக்கூடிய தவிர்க்க முடியாத மனிதராக நான் ரஜினியைப் பார்க்கிறேன்.
விஜயகாந்த் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?
தன் அரசியல் வீச்சை அளவுக்கு அதிகமாக கணக்குப் போட்டதுதான் அவரது வீழ்ச்சிக்கு முதல் காரணம். விஜயகாந்த் எல்லா வகையிலும் சோதனைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் சூழலில் அவர் மனம் வருந்த நான் எதையும் சொல்ல விரும்பவில்லை.
அதிமுக அணிகள் இணைப்புக்கான சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இதில் மக்களுக்கான நன்மை எதுவுமே கிடையாது. எந்த மக்கள் நன்மையை முன்னிறுத்தி இரண்டு அல்லது மூன்று பிளவுகளாக பிளந்து கிடக்கிறார்கள். எந்த மக்கள் நலன் சார்ந்த திட்டங்களின் அடிப்படையில் இவர்கள் இணைய இருக்கிறார்கள். எப்படியாவது எஞ்சி இருக்கிற நான்கு ஆண்டுகள் ஆட்சியைப் பயன்படுத்தி, அதன்மூலம் அதிகாரம் செலுத்தி, இன்னும் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து, அடித்த கொள்ளையை யார் யார் எப்படிப் பங்கிட்டுக் கொள்வது என்ற பங்காளித் தகராறாகத்தான் இருக்கிறதே தவிர, இது தமிழகத்தின் பிரச்சினையாக இல்லவே இல்லை.
அணிகள் இணைப்பு என்பது சுயநலமே வடிவெடுத்த, அதிகாரப் பசி பிடித்த, சொத்துகளை அளவுக்கு மீறி சேர்த்து வைத்திருந்தாலும் இன்னமும் சொத்துகளைக் குவிக்க வேண்டும் என்கிற தாகம் தணியாத மிகத் தவறான சுயநலவாதிகளுக்கிடையே நடக்கும் பிரச்சினை. இந்தப் பிரச்சினைக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றால் அந்த ஆட்சி இவர்களாலேயே கவிழ்ந்து காணாமல் போகிறபோதுதான். இந்த ஆட்சிக்கான நாட்கள் எண்ணப்படுகின்றன.
ரஜினி பக்கம் யாரெல்லாம் வர வாய்ப்புள்ளது?
அதிமுகவைப் பொறுத்தவரையில் ஜெயலலிதாவின் தலைமைக்குப் பிறகு மக்களையும், தொண்டர்களையும் கவர்ந்திழுக்கக் கூடிய ஆளுமை இல்லாத சூழலில், அதிமுகவில் உள்ள பெரும்பான்மையான தொண்டர்கள் ரஜினியை நோக்கி வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதாவது ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகாத, அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ளாத லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்களுக்கு ரஜினி பக்கம் வர வாய்ப்புள்ளது. அவர்களுக்கு வாசல் கதவு திறந்தே இருக்கும். ஆனால், கொள்ளையடித்துக் குவித்தவர்கள் ரஜினி பக்கம் போய் நின்று மேலும் வாழ்வை வளப்படுத்திக் கொள்ளலாம், அதிகார அரசியலைத் தொடரலாம் என நினைத்தால் அவர்களுக்கு இறுக்கமாக கதவுகள் மூடப்படும்.
மாநாடு குறித்து ரஜினி என்ன சொல்கிறார்?
மாநாடு சிறப்பாக நடந்து முடியவேண்டும் என்ற ஆர்வம் ரஜினியிடம் உள்ளது. ரஜினிக்கும் இந்த மாநாட்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனால், ரஜினி குறித்து பேச இருப்பதால் ரஜினியின் ரசிகர்கள், அவரை நெஞ்சார நேசிக்கக்கூடியவர்கள், மக்கள் ஏராளமானோர் வரலாம். அவர்களுக்கு ரஜினியை ஏன் ஆதரிக்கிறேன், ஏன் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை உரிய முறையில் விளக்க உள்ளேன். ஞாயிற்றுக்கிழமை திருச்சி திணறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT