Published : 15 Aug 2017 10:37 AM
Last Updated : 15 Aug 2017 10:37 AM
பல்வேறு தலைவர்களால் பல்வேறு வடிவங்களில் பல்வேறு எண்ணங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட இந்திய தேசியக் கொடியானது பல பரிணாமங்களைக் கடந்து, இன்றுள்ள வடிவத்தைப் பெற்றது. சுதந்திர இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட கொடிகளில் ஒரு வடிவம் உதகையிலும் உதயமானது. அதை வடிவ மைத்தவர் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அன்னி பெசன்ட் அம்மையார்.
லண்டனில் பிறந்து சென்னை அடையாறில் தனது இறுதி நாட்களை நிறைவு செய்தவர் அன்னி பெசன்ட். அந்நியராய் இருந்தாலும் காங்கிரஸ் தலைவர்களோடு சேர்ந்து இந்திய சுதந்திர போராட்டங்களில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்ட போராளி. இதற்காகவே, 1917 ஜூன் 15-ல் கைது செய்யப்பட்ட அன்னி பெசன்ட், உதகையில் உள்ள பிர்லா ஹவுஸில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் நடந்ததன் நூற்றாண்டு இது.
உதகையில் உதித்த கொடி
உதகையில் வீட்டுச் சிறையில் இருந்தபோதே இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த அன்னி பெசன்ட், பிர்லா ஹவுஸ் வளாகத்தில் துணிச்சலுடன் அந்தக் கொடியை ஏற்றினார். அன்றைக்கு அவர் கொடியேற்றிய இடத்தை இன்றைக்கும், பிர்லா ஹவுஸ் நிர்வாகத்தினர் வரலாற்று நினைவிடமாக போற்றி மதித்து வருகின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய நீலகிரி ஆவண காப்பக இயக்குநர் டி.வேணுகோபால், “பிறப்பிலேயே புரட்சியாளரான அன்னி பெசன்ட், ஆங்கில அரசின் அடக்குமுறைகளைக் கண்டு கொந்தளித்தார்.
இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக ‘காமன் வீல்’ என்ற வாரப் பத்திரிகையை 1913-ல் தொடங்கினார்.
அடுத்த ஆண்டே ‘நியூ இந்தியா’ என்ற நாளேடு ஒன்றையும் சென்னையில் தொடங்கி, அதில் சுதந்திரப் போராட்டக் கருத்துக்களை எழுதினார். சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொள்வதற் காகவும் கூட்டங்களில் பேசுவதற்காகவும் நாடு முழுவதும் அன்னி பெசன்ட் பயணம் செய்தார்.
ஒருகட்டத்தில், இவரை முடக்க நினைத்த ஆங்கிலேய அரசு, கைதுசெய்து வீட்டுச் சிறையில் வைத்தது.
சென்னையில் கைது செய்யப்பட்ட அன்னி பெசன்ட், ஊட்டி பிர்லா மாளிகையில் மூன்று மாதங்களுக்கும் மேலாக வீட்டுச் சிறை வைக்கப்பட்டார். அங்கு இருந்தபோதுதான் சுதந்திர இந்தியாவுக்கான புதிய கொடியை, தானே வடிவமைத்து அதை அங்கேயே ஏற்றவும் செய்தார் அன்னி பெசன்ட். இந்த நிகழ்வை போற்றும் வகையில், அவர் கொடியேற்றிய இடத்தில் கல்வெட்டு வைத்து பாதுகாத்து வருகிறார்கள் பிர்லா ஹவுஸ் உரிமையாளர்கள்.” என்றார்.
பொக்கிஷமாய் பாதுகாக்கிறார்கள்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வீட்டை இதன் உரிமையாளர்கள் பொக்கிஷமாய் பாதுகாப்பதாகக் கூறும் பிர்லா ஹவுஸின் மேலாளர் பாபுலால், ’’பிரெட் முரே பார்லேட் என்பவருக்கு சொந்தமான இந்த வீடு ஸ்டாக்பிரிட்ஜ் என பெயர் மாற்றப்பட்டு 1947-ல் சர் ஹெரால்டு நஜென்ட் கோலம் என்பவருக்கு விற்கப்பட்டது.
1964-ல் இந்த வீடு ஏலத்துக்கு வந்தபோது குவாலியர் குழுமத்தினர் 40 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர். அதன்பிறகு தான் ‘பிர்லா ஹவுஸ்’ என மாறியது.
அதிலிருந்து இந்த வீட்டை வரலாற்று நினைவிடமாகப் போற்றி வரும் பிர்லா குடும்பத்தினர், இங்கு நடந்த வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில், ஆண்டு தோறும் வீட்டு வளாகத்தில் விழா எடுத்து, இளம் தலைமுறையினர் மத்தியில் தேசபக்தியை பரப்பி வருகிறார்கள். அதற்காகவே இந்த வீட்டை பழமை மாறாமல் அப்படியே வைத்திருக்கிறார்கள்.” என்றார்.
சுதந்திரப் போரில் பெரும்பாலும் வடுக்களே வரலாறு ஆகியிருக்கின்றன. அன்னி பெசன்ட் சிறை வைக்கப்பட்ட இந்த பிர்லா ஹவுஸும் அப்படித்தான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT