Published : 02 Aug 2017 01:20 PM
Last Updated : 02 Aug 2017 01:20 PM
அந்த யானை ஏன் அப்படி நடந்து கொண்டது?
இன்னும் ஓரிரு அடி எட்டி வைத்திருந்தால் என்னை நார் நாராக கிழித்துப் போட்டிருக்க முடியும். கீழே விழுந்த செல்போனை எடுப்பதற்காக திரும்பியிருந்தேன் என்றால் கூட அது தன் காலடியில் போட்டு நசுக்கியிருக்கும். அங்கிருந்து ஓடி வந்து திரும்பிப் பார்த்த தூரமும் சில மீட்டர்தான்.
அங்கே கூட எட்டிப்பிடித்து துவம்சம் செய்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. ஏன் அப்படி? யானைகள் நுண்ணுணர்வு மிக்கவை. தன்னையும் தன் குட்டிகளையும் காப்பாற்றிக் கூட்டிச்செல்ல உதவி புரிந்தவர்கள் இந்த மனிதர்கள். அதில் ஒருவரை கொல்வதில் அர்த்தம் இல்லை. எனவேதான் அது விட்டுவிட்டுப் போய்விட்டது என்று வெள்ளந்தியாக பேசினார்கள் அங்குள்ள பழங்குடியின மக்கள்.
அது குட்டியுடன் இருந்தது. அதை விட்டு, விட்டு ஓரடி எடுத்து வைத்தால் கூட குட்டிகளுக்கு மனிதர்கள் மூலம் ஆபத்து வந்துவிடுமோ என்று அதற்கும் மேல் நகராமல் இருந்திருக்கிறது. குட்டிகள் மட்டும் இல்லாவிட்டால் நீங்கள் மிச்சமாகியிருக்க முடியாது என்றனர் உடனிருந்த பத்திரிகை நண்பர்கள்.
கடைசியாக அப்போது எடுத்த புகைப்படத்தை பிரிண்ட் எடுத்துப் பார்த்த போதோ ஆச்சர்யமும் அயற்சியுமே மிஞ்சியது. அதாவது அந்த யானை திரும்பும் ஷாட் எடுத்துள்ளேன். அது நன்றாகவே பதிவாகியிருக்கிறது. ஆனால் அந்த பெரிய யானைக்கு முன்னே இரண்டு குட்டிகளில் ஒன்று திரும்பி என்னை நோக்கி வந்திருக்கிறது.
ஆக, அந்த குட்டி திரும்பி வந்ததாலேயே அதனுடன் வந்து அதை திரும்ப அழைத்துப் போயிருக்கிறது.
ஒரு வேளை குட்டி எட்டி வந்திருந்தால் நிச்சயம் தாய் யானையினால் அங்கே கொடூரமாக கொல்லப்பட்டிருப்பேன் என்ற உண்மையை உணர முடிந்தது.
அதைவிட ஒரு விஷயம். எனக்கு முன்னே ஓடிய சேனல் நிருபர் அவினாஷ் அதற்குப் பிறகு என்னை மற்ற நண்பர்களிடம் இந்த விஷயத்தை பகிரும்போதெல்லாம், ''வேலா அன்னைக்கு செத்திருக்க வேண்டிய ஆள். அவர் யானை காலடியில் விழுந்து கிடந்தப்ப அவர் கண்ணுல தெரிஞ்ச உயிர் பயம், பீதி இருக்கிறதே. அது என் கண்ணு முன்னால நிற்குது!'' என்றே சொல்வதை வழக்கமாகக் கொண்டார்.
எனக்கோ அது கொஞ்சம் மிகைப்படுத்துதலாகவே தெரிந்தது.
ஏனென்றால் நான் ஓடும்போது என்னைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தவர்தான் அவினாஷ். அவர் நான் யானைக்கு கிட்டத்தில் உயிர் பயம் கவ்வ விழுந்து கிடந்ததை, அதிலும் என் கண்ணில் தெரிந்த பீதியை அவர் கண்டிருக்க வாய்ப்பேயில்லை. எப்படி அதை அவர் அப்படி நுட்பமாக சொல்கிறார் என்று பலமுறை அவரையே கேட்டிருக்கிறேன்.
பிறகுதான் தெரிந்தது. அவருடன் வந்த புகைப்பட நண்பர் எஸ்.டி.எஸ்.சுப்பு (இவர் டெலி லென்ஸ் போட்டு யானைகளை தூரத்திலிருந்து படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார்) நான் யானையின் காலடியில் விழுந்து கிடந்ததை படம் எடுத்துள்ளார்.
அதில் என் கண்களில் இருந்த பீதியும், எனக்கு அருகாமையில் யானையின் காலடியும் பதிவாகியிருந்ததாகவும் சில மாதங்கள் கழித்து தெரிவித்தனர். அதைப் பார்த்துதான் அவினாஷ் அப்படி ஒரு விஷயத்தை பகிர்ந்து வந்ததையும் அறிந்து கொள்ள முடிந்தது.
'அந்த புகைப்படத்தை எனக்கு காட்டியிருக்கலாம். எனக்கு தந்திருக்கலாமே சுப்பு!' என்று கேட்டபோது,
'இல்லே, நீ தப்பா நினைச்சுக்குவீல்ல. நான் யானைகிட்ட மிதிபட்டு சாகறதை படம் பிடிச்சியே. மனுசனாய்யா நீ. ஈவு இரக்கமில்லாதவனா நீன்னு கேட்டிருவீல்ல. அதுதான் கொடுக்கலை!' என்று வெளிப்படையாகவே பேசினார்.
என்றாலும் இன்று வரை அந்த புகைப்படத்தை தேடித்தரும்படி சுப்புவிடம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்.
'அது நெகட்டிவ்ல இருக்கு. லட்சக்கணக்கான நெகட்டிவ்ல அது எங்கே இருக்குன்னு கண்டுபிடிக்க முடியலை!' என்றே இன்றளவும் சொல்லி வருகிறார் என்பதும் உண்மை.
அந்த காட்டுயானையிடம் மாட்டி தப்பித்த சம்பவம் இன்றைக்கும் என் நெஞ்சை விட்டு நீங்காத ஒன்று.
அப்படி யானை காலடியில் விழுந்து தப்பித்தவன் என்ற காரணமோ தெரியவில்லை. அதற்குப் பிறகு தொடர்ந்து காட்டு யானைகள் குறித்த செய்தி சேகரம் என்பது என் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே அமைந்துவிட்டது.
என்னதான் ஆனாலும் மிருகம். அது காட்டுயானை என்பதை அறிவுப்பூர்வமாக சிந்தித்து ஓடியதால் மட்டுமே நம் உயிரை காத்துக் கொள்ள முடிந்தது.
அதையே கடவுளாக பாவித்து, 'ஐயோ விநாயகா, பிள்ளையாரப்பா. நான் குழந்தை குட்டிக்காரன் என்னை ஒன்றும் செஞ்சுடாதே!' என்றால், அது சும்மா விட்டிருக்குமா? அது ஒரு மிருகம் என்ற சொல்லை அடியாழமாக ஊட்டி நம் பிள்ளைகளை வளர்த்திருக்கிறோமா?
அப்படியே ஆனாலும் ஒரு பள்ளிப் பருவத்து சிறுமி காட்டு யானை எதிர்ப்பட்டால் அதை பிள்ளையாராக பார்ப்பாளா? அஞ்சுக்கும், பத்துக்கும் துதிக்கை ஏந்தும் கோயில் யானையாக பார்ப்பாளா? ஆபத்தான மிருகம் என்று பார்ப்பாளா?
அதற்கான அனுபவம் கோவை குற்றாலத்தில் ஒரு தம்பதிக்கு ஏற்பட்டது. அதில் அவர்களின் ஏழு வயது மகள் பலியான துயரமும் நேர்ந்தது.
கோவை குற்றாலத்தைப் பொறுத்தவரை காலை ஒன்பது மணிக்குப் பின்பும், மாலை 5 மணிக்கு முன்பும் மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவது வழக்கம்.
ஏனென்றால் வனத்துறை சோதனைச் சாவடி தொடங்கி அருவிக்கு செல்லும் 5 கி.மீ. தூரத்தில் எந்த நேரத்தில் என்று இல்லை. அடர்ந்த காட்டுப் பாதைகளில் குறுக்கே காட்டு யானைகளின் நடமாட்டம் மிகுதியாக இருக்கும்.
சுற்றுலா பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுவதற்கு முன்பும், அனுமதி மறுக்கப்பட்ட பின்பும் வனத்துறை ஊழியர்கள் இந்த பாதை முழுக்க ஒரு முறை கண்காணித்து மிருகங்கள் நடமாட்டம் இல்லை என்று அறிந்த பின்பே மக்களை உள்ளே விடுவது அன்றாடம் நடக்கும் நிகழ்வு.
அன்றைய தினம் வனத்துறை சோதனைச் சாவடியில் காலை ஏழு மணிக்கே கூட்டம். வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. மூன்று யானைக் கூட்டங்கள் வேறு காட்டுக்குள் மூலைக்கு மூலை நடமாடிக் கொண்டிருந்ததை வைத்து அன்றைய தினம் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தனர் வனவர்கள்.
அதற்கு முன்னரே 3 நாட்கள் மழையின் காரணமாகவும், வழிமறிக்கும் மிருகங்களின் காரணமாகவும் பொதுமக்கள் அருவிக்கு அனுமதிக்கப்படவில்லை என்பதால் அன்றைய தினம் வந்திருந்த சுற்றுலா பயணிகள் கொஞ்சம் கோபம் கொப்பளிக்க காத்திருந்தனர்.
இன்றைக்கு அருவிக்குள் விடாவிட்டால் நடப்பதே வேறு என்று அன்று சுற்றுலா வந்த சில அரசியல்வாதிகளும் கறுவிக் கொண்டிருந்தனர்.
'வழியில் காட்டு யானை நிற்கிறது. வேட்டு விட்டு இப்போதுதான் துரத்தி விட்டு வந்திருக்கிறோம். எனவே 10 மணிக்கு மேல்தான் அருவிக்குள் விட முடியும்!' என்று எடுத்துச் சொன்ன வன ஊழியர்கள் பேச்சை 99 சதவீதம் பேர் கேட்பதாயில்லை.
அவர்களின் நெருக்கடி தாளாமல் மணி 9க்கு 10 நிமிடம் இருக்கும்போதே சுற்றுலா பயணிகளை அனுமதித்தனர் வன ஊழியர்கள். எதற்கும் எச்சரிக்கைக்கு இந்த பயணிகள் கூட்டத்திற்கு முன்பு துப்பாக்கியுடன் 2 வனத்துறை வாட்ச்சர்கள் பாதுகாப்புக்கு சென்றனர்.
கட்டவிழ்த்து விட்டதும் அவர்களையும் விஞ்சி ஓடியது கூட்டம். எல்லோரிடமும் குதூகலிப்பு. அவர்களின் கெக்களிப்பு அந்த வனாந்திர பிரதேசத்தில் நெடு, நெடுவென நின்றிருந்த தேக்கு மரக்காடுகளுக்குள் பட்டு எதிரொலிப்பு கண்டது.
கிட்டத்தட்ட 50 பேர் இருந்தால் அதிகம். அருவிக்கு சுமார் அரை கி.மீ. தொலைவில் ஒரு வளைவு. நடக்கும் பாதையில் இடது புறம் தலைக்கு மேலே நீளும் மலைக்குன்று. அதில் உயர்ந்து வளர்ந்து நிற்கும் பல்வகை மரங்கள். வலது புறமோ பெரும் பள்ளத்தாக்கு. தட்டிவிழுந்தால் கண்டிப்பாக 10 அடி குழியில் விழுந்து 30 அடி பள்ளத்தில் உருண்டு அடுத்த மலைக்குன்றின் சரிவில் படுத்து சரியலாம் போல் தோற்றம்.
இந்த இடத்தில்தான் கருமுசுன்னு பெரிய அந்த உருவம் வழியை மறித்தபடி நின்றது.
'யானை.. யானை...!' என்று கத்துகிறது ஒரு கூட்டம்.
நின்றிருந்த யானை; ஆண் யானை.
பளபளத்த கொம்புகளை நீட்டிக் கொண்டு, தும்பிக்கையை தன் வாயிற்குள்ளேயே செருகிக் கொண்டு, காதுமடல்களை அப்படியே பின்னோக்கி மடித்துக் கொண்டு மனித வாசம் கண்டதும் எச்சரிக்கை உணர்வுடன், சிறிய கண்களில் கூர்மையை பாய்ச்சிக் கொண்டு ஒரு செறுமல்தான்.
இடது புற மலைக்குன்றில் ஒரு வலசைப் பாதை உண்டு. அதிலிருந்து இறங்கி நகர, ஒரு கூட்டம் அதைத் தாண்டி ஓட்டம் பிடிக்கிறது. இன்னொரு கூட்டம் வந்த வழியே திரும்பி ஓடுகிறது.
சிலர் வலது புறம் இருந்த பள்ளத்தில் எட்டிக் குதிக்க, 'குய்யோ; முய்யோ!' கூப்பாடு. அதில் ஏழு வயது சிறுமி நித்யா. அப்படியும் போகமுடியாமல், இப்படியும் செல்ல முடியாமல் மாட்டிக் கொண்டாள்.
ஏனென்றால் தம்பியுடன் வந்த அம்மாவை பின்னுக்கு இருத்தி, முன்னுக்கு சென்று கொண்டிருந்த அப்பாவின் கையை பற்றி பிஞ்சுக்கால்கள் மண்ணில் தவழ துறு, துறுப்புடன் நடந்து கொண்டிருந்தாள்.
தனக்கு எதிரில் இப்படியொரு யானை வரும்; மனிதர்கள் அதைப் பார்த்து மிரண்டு ஓடுவார்கள். யானையும் வெகுண்டு முன்னே வரும், தன் கையை பற்றியிருந்த தகப்பன் அனிச்சை செயலாய் எட்டிக் குதித்து பக்கத்தில் உள்ள பள்ளத்தில் பதுங்குவார் என்று நினைத்துப் பார்த்திருக்க அச்சிறுமிக்கு வாய்ப்பில்லை.
அந்த யானை விநாயக் கடவுள் அல்ல; ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் பிச்சையெடுக்கும் பிராணி அல்ல, கோயிலில் தும்பிக்கை தூக்கி ஆசிர்வதிக்கும் ஜந்து அல்ல என்ற கற்பிதத்திலிருந்து விலகி அது பயங்கரமான ஒரு மிருகம் என்ற கற்பிதத்தையும் அறிந்திருக்க வாய்ப்பேயில்லை.
யானையைக் கண்டு அலறி ஓடின கூட்டத்தில் அவள் தாயுமிருந்தார். 'எம்மா கண்ணுா.. ஓடிவா...!' ஓடிப் பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டு தன் மகளை பார்த்துக் கத்துகிறாள்.
பள்ளத்தில் பதுங்கின தந்தையோ, 'ஏம்மா இங்கே ஓடியாந்துடு!' என்று மூச்சிரைக்கிறார். அங்கும் இங்குமாக பாய்ந்த சிறுமியை துதிக்கையால் எட்டிப் பிடித்தது அந்தக் காட்டு யானை.
ஒரு சுழற்று. ஒரே மிதி. சிறுமியின் வீல் ஒலி கூட யாருக்கும் கேட்கவில்லை. மூர்க்கமாய் அப்படியும், இப்படியுமாய் சிறுமியின் உடலைப் புரட்டியறது யானை. தாயின், தந்தையின் கண்ணெதிரே நடக்கும் கொடூரம். எட்டிப்பிடிக்கும் தூரத்தில் பள்ளத்தில் மரணத்தை விழுங்கும் தன் புதல்வியைக் காண சகிக்காமல், கத்தி ஓலம் எழுப்பக் கூட முடியாமல் துவழ்கிறார் தந்தை.
அவர் எட்டிப் போய்விடக் கூடாது என்று அவர் பின்னால் இருந்தவர்கள் அவரைப் பிடித்து குழிக்குள்ளேயே பதுக்குகிறார்கள்.
பின்னால் நின்ற கூட்டத்தை முன்னே நகர விடாமல் வன ஊழியர்கள் தடுக்கிறார்கள். துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடுகிறார்கள். பட்டாசுகளை கொளுத்தி வீசுகிறார்கள்.
தகவல் கீழே உள்ள வனத்துறை சோதனைச் சாவடிக்கு பறக்கிறது. அவர்களும் ஓடி வருகிறார்கள். கூடவே சுற்றுப்புற ஆதிவாசி மக்களும். கற்கள், கரடுகள், பட்டாசுகள், துப்பாக்கி சத்தங்கள்.
எல்லா சத்தத்தையும் அசட்டை செய்தது அசராத அந்த யானை. அசையாது அந்த இடத்திலேயே 15 நிமிடங்களுக்கு மேல் நின்றது. பிறகு சிறுமியை புரட்டி புரட்டிப் பார்த்தது. சிறுமியின் உடலிலிருந்து பிணவாசம் கண்ட பின்னரே பக்கத்தில் இருந்த குறுகலான பாதையில் ஓடி மறைந்தது அந்தக் காட்டு யானை. அப்போது தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு மேல் பூட்டப்பட்டது கோவை குற்றாலம். சுற்றுலா பயணிகள் யாவரும் அனுமதிக்கப்படவில்லை.
இன்றைக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு நிருபராக இந்த சம்பவத்தை புகைப்படம் எடுக்கவும், செய்தி சேகரிக்கவும் சென்ற நான் அங்கு உறைந்திருந்த சிறுமியின் ரத்தத்தையும், அங்கு நிலவிய மரண அமானுஷ்யத்தையும், சிறுமியை இழந்த பெற்றோர்கள் கதறித் துடித்ததையும், நடந்த சம்பவத்தை வனத்துறையினரும், இங்கு வசிக்கும் இருளர் இனத்து மக்கள் விவரித்ததையும் என்னால் இன்றளவும் மறக்க இயலவில்லை.
ஆனால் அந்த சிறுமியை இழந்த பெற்றோர்கள், 'எங்கள் குழந்தையை காட்டு யானை தெரியாமத்தான் மிதிச்சது; பாரஸ்ட்டுக்காரங்கதான் தெரிஞ்சே கொன்னுட்டாங்க' என்று சொல்லிக் கதறியதை யாரும் மறக்க மாட்டார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT