Published : 26 Jul 2017 02:48 PM
Last Updated : 26 Jul 2017 02:48 PM
'தி இந்து' இணையதளத்தில் வெளியாகும் தொடர் 'அறம் பழகு'. இதில் ஏழை மாணவர்களுக்கு உதவ நினைக்கும் நல்லுள்ளங்களுக்கும், தேவை இருக்கும் மாணவச் செல்வங்களுக்கும் இடையில் ஓர் இணைப்புப் பாலமாகச் செயல்பட முன்னெடுத்து, தேவை குறித்த தகவல்களைக் கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறோம்.
மழை பொய்த்ததால், விவசாயம் செய்ய வழியின்றி செக்யூரிட்டி வேலைக்குச் செல்லும் திருச்சி விவசாயி சிவக்குமார், தன் இரு குழந்தைகளின் பள்ளிக்கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவித்து வந்தார். அது குறித்த செய்தி ஜூலை 13-ம் தேதி 'தி இந்து' இணையதளத்தில் அறம் பழகு: செக்யூரிட்டி வேலைக்குச் செல்லும் திருச்சி விவசாயி- பள்ளிக் கட்டணம் செலுத்தாமல் காத்திருக்கும் குழந்தைகள்! என்ற பெயரில் வெளியானது.
இதைப் படித்த 'தி இந்து' வாசகர்கள், மாணவர்களின் பள்ளிக்கட்டணத்தைத் தந்து உதவியுள்ளனர். இதுகுறித்து நம்மிடம் நெகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார் விவசாயி சிவக்குமார்.
''ரொம்பவே சந்தோசமா இருக்குங்க. இந்தக் காலத்துல, சொந்தக்காரங்களே உதவி பண்ண யோசிக்கறாங்க. ஆனா உங்க (தி இந்து) வாசகர்கள் எங்களுக்கு உதவி பண்ணியிருக்காங்க. நாங்க கேட்டதுக்கும் மேலயே கொடுத்துருக்காங்க.
அவங்க அத்தனை பேருக்கும் என்னோட குடும்பம் சார்பாக பெரிய நன்றிங்க. இப்போ எம்புள்ளைக சந்தோசமா ஸ்கூலுக்குப் போறாங்க'' என்கிறார்.
சிவக்குமாரின் மனைவி விஜயலட்சுமி உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேசுகிறார். ''பொண்ணு, பையன் படிப்பு செலவுக்காக 35 ரூவா (ரூ.35 ஆயிரம்) கேட்ருந்தோம்ங்க. ஆனா இதுவரைக்கும் 65 ஆயிரம் கெடச்சிருச்சுங்க..
புள்ளைகளுக்கு ஃபீஸ் கட்டியாச்சு. போன வருஷ யூனிஃபார்மையே ரெண்டு பேரும் போட்ருந்தாங்க. ஆனா இப்போ யூனிஃபார்ம் எடுக்கலாம், பேக் வாங்கணும்.
உங்க எல்லாருக்கும் மனசார நன்றி சொல்லிக்கறோம்ங்க. நீங்க எல்லோருமே நல்லா இருக்கணும்!'' என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT