Published : 31 Jul 2017 09:08 AM
Last Updated : 31 Jul 2017 09:08 AM
‘பக்கத்து வீட்டுக்காரன் நல்லவனா இருந்தா, பாதி சுமை குறைஞ்சா மாதிரி'. இந்த ‘பாக்கியம்', நமக்குக் கிட்டவே கிட்டாது போல் இருக்கிறது. பாகிஸ்தானின் அரசியல் மாற்றங்கள் நமக்கு கவலை அளிப்பதாகவே உள்ளன.
தனது வருமானத்தை சரியாக காட்டத் தவறிய காரணத்தால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அன்றே அவர் பதவி விலகி விட்டார்.
இதையடுத்து, முன்னாள் பெட்ரோ லியத் துறை அமைச்சர் ஷஹித் காகான் அப்பாஸி இடைக்கால பிரதமராகி இருக்கிறார். பதவி விலகிய நவாஸின் இளைய சகோதரர் ஷாபாஸ் ஷெரீப், இப்போது பஞ்சாப் மாகாண முதல்வராக உள்ளார். இவர், அடுத்த சில வாரங்களில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, நிரந்தர பிரதமராக பொறுப்பு ஏற்றுக் கொள்வார் எனத் தெரிகிறது.
ஆனால் பாகிஸ்தான் ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொண்டாலும், தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி அரசைத் தேர்ந்தெடுத்தாலும், ஆட்சி அதிகாரம் முழுமையாய் அரசாங்கத்திடம் இருந்ததாய் சரித்திரமே இல்லை.
14 ஆகஸ்ட் 1947-ல் சுதந்திரம் பெற்று, 1956-ல் தனியே அரசமைப்புச் சட்டம் ஏற்படுத்திக்கொண்ட, 20 கோடிக்கும் மேலாக மக்கள் தொகை கொண்ட ‘தூய நிலம்' - பாகிஸ்தான்.
அயூப்கான், யாஹ்யாகான், புட்டோ, ஜியா-உல்-ஹக், பெனாசிர், முஷாரப், ஜர்தாரி, நவாஸ் ஷெரீப் என்று பலரும் ‘வந்தார்கள்; சென்றார்கள்'. அவ்வளவு தான். ஒருவருக்கும், ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே இல்லை.
பலமுனை அதிகார மையங்கள்
கடந்த 2013-ல் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நவாஸ் ஷெரீப் பிரதமரானார். அது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம். ஆம். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமரிடம் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு வருக்கு அரசு கை மாறியது, அதுவே முதன்முறை. 1947-ல் இருந்து 2013 வரை, 66 ஆண்டுகளில் ஒருமுறைகூட அவ் வாறு நிகழ்ந்தது இல்லை. பலமுனை அதிகார மையங்கள்தான் இதற்குக் காரணம்.
பாகிஸ்தானின் ராணுவம், அரசாங் கத்தின் ஓர் அங்கமாக கட்டுப்பட்டு நடந்து கொள்ள முன்வந்ததே இல்லை. மாறாக, அரசின் மீது நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதிக்கம் செலுத்துவதையே முழு நேர தொழிலாகக் கொண்டு இருக்கிறது. அயூப்கான், ஜியா-உல்-ஹக், முஷாரப் என்று, ராணுவ தளபதிகள், ஆட்சியைக் கைப்பற்றியபோது, ஜனநாயக நெறிமுறைகள் குறித்தெல்லாம் பொது மக்கள் யாரும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இது எப்படி சாத்தியம் ஆயிற்று?
ராணுவத்துக்கு மக்கள் ஆதரவு
பாகிஸ்தான் ராணுவம் தனது குடிமக்களிடம் இந்திய விரோதப் போக்கை வளர்ப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. இதனால் ஒரு அரசியல் தலைவரை விடவும், ராணுவத்துக்கே அங்கு மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. இதுவே அதிபர், பிரதமர், தலைமை நீதிபதிகளுக்கு, தலை மேல் தொங்கும் கத்தியாக எந்நாளும் அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது.
இதிலிருந்து விடுபட்டு சுதந்திரமாய் செயல்பட நினைப்பவர்கள் ராணுவத்தாலோ, நீதிமன்றத்தாலோ தூக்கி எறியப்படுவார்கள். இதன்மூலம் நவாஸ் ஷெரீபின் ஊழலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக எண்ண வேண்டாம்.
2007-ல் பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதி இப்திகார் முஹமது சவுத்ரிக்கு எதிராக அப்போதைய அதிபர் முஷாரப் எடுத்த அதிரடி நடவடிக்கை மறக்க முடியாதது. முஹமது சவுத்ரி பதவி நீக்கம் செய்யப்பட்டார்; கைது, சிறை வாசம் எல்லாம் அனுபவித்தார். உச்ச நீதி மன்ற நீதிபதிக்கு நேர்ந்த இந்த அவலங்களை அந்த நாட்டில் யாராலும் தடுக்க முடியவில்லை. ஆனால் பலமாக எதிர்ப்பு எழுந்தது.
பாகிஸ்தான் ராணுவத்துக்கு இணையான மற்றொரு அதிகார மையம் - உளவுத்துறை (ஐஎஸ்ஐ). உள்நாட்டு குழப்பங்கள் அனைத்திலும் இதன் பங்கு கணிசமாக இருக்கும் என்று பரவலாக சொல்லப் படுகிறது.
இது எந்த அளவுக்கு உண்மை அல்லது பொய் என்பதை நம்மால் கணிக்கக் கூட முடியவில்லை. இது போதாதென்று இருக்கவே இருக்கின்றன தீவிரவாதக் குழுக்கள். ஏதோ ஒன்று, இரண்டு என்று எண்ணிவிட வேண்டாம். நாம் அறிந்த பெயர்கள் இவ்வளவுதான். ஆனால் டஜன் கணக்கில் உள்ளன.
காஷ்மீர் விடுதலை
எல்லாருக்கும் பொதுவான முழக்கம் 'காஷ்மீர் விடுதலை'. இதைச் சொல்லிக் கொண்டு அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இவர்களுக்கு எதிராக, அரசாங்கம் எதுவும் செய்ய முடியாது. மீறி நடவடிக்கை எடுத்தால், ராணுவம், ஐஎஸ்ஐ, தீவிரவாத குழுக்கள், எதிர்க்கட்சிகள் என்று அத்தனை பேரும் ஒன்றுசேர்ந்து விடுவார்கள். பிறகு அரசாவது சட்டமாவது. எல்லாம் அதோ கதிதான்.
ஒரு நாள் இடைவெளியில் இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றன. நம் நாட்டில் மட்டும் ஜனநாயக அமைப்புகள் வலுவாக இருக்கும்போது, பாகிஸ்தானில் ஏன் சாத்தியம் ஆகாமல் போனது? இத்தனைக்கும் நமக்குத்தான் சாதி, மத, இன, மொழிப் பிரச்சினைகள் ஏராளம்.
பாகிஸ்தானில் இவ்வகை பாகுபாடுகளே இல்லையே... பிறகும் ஏன் இப்படி...? ஆட்சிகள் மாறுவதும் ஆட்சியாளர்கள் தண்டிக்கப்படுவதும் உலகம் எங்கும் நடைபெறுவதுதான். ஆனால் அங்கெல்லாம் அரசியல் ஸ்திரத்தன்மை பற்றிய கேள்வி பெரிதாக எழுப்பப்படுவது இல்லை. ஒருவர் போனால் வேறொருவர். அவ்வளவுதான். ஒரு சில நாட்களிலேயே இயல்பு நிலை திரும்பி விடும்.
பாகிஸ்தானில் மட்டும் நிலையற்ற அரசியல் சூழல், நிலையான அம்சமாகி இருக்கிறது. அந்த நாட்டின் முன்னேற்றத் துக்கு பெரும் தடையாக இருப்பதே இதுதான். தீவிரவாத செயல்களுக்கு, சில சமயங்களில் நேரடியாகவும், பல சமயங்களில் மறைமுகமாகவும் ஆதரவு அளிப்பதை, எல்லா அரசுகளுமே தொடர்ந்து செய்து வருகின்றன. இதனால் சர்வதேச நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. எந்த நேரத்திலும் பொருளாதாரத் தடை கூட விதிக்கப்படலாம்.
பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் சற்றும் அசைந்து கொடுப்பதாய் இல்லை. காஷ்மீர் விவகாரம் மட்டுமே அத்தனை அதிகார மையங்களின் பொதுவான அம்சமாக இருந்து, அவர்களின் இருப்பை நியாயப்படுத்திக் கொண்டு இருக்கிறது.
நவாஸ் ஷெரீப் பதவி விலகியதால் மட்டுமே தூய்மை வந்துவிடப் போவதில்லை. அரசின் செயல் திட்டம் மாறிவிடப் போவதில்லை. குறுகிய அரசியல், மத மாச்சர்யங்களுக்கு இடம் அளிக்காத தலைவர்களே பாகிஸ்தானின் உடனடி தேவை. இதற்கு நீண்ட தூரம் போக வேண்டி இருக்கிறது. அதற்கு முன்னதாக, பயணிக்க வேண்டிய திசையை மட்டுமாவது தீர்மானித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நிற்கிறது பாகிஸ்தான்.
நமக்கும் நல்லதல்ல
திசையறியாப் பயணம் இனியும் தொடர்வது அந்த நாட்டுக்கு மட்டுமல்ல; நமக்குமே கூட நல்லதல்ல. கலகத்தில் இருந்துதான் தீர்வு; குழப்பத்தில் இருந்துதான் தெளிவு பிறக்கும் என்பார்கள்.
பாகிஸ்தானில் அதற்கான அறிகுறி எதுவும், கடந்த 70 ஆண்டுகளில் தோன்றவே இல்லை.ஒரு கலகத்தில் இருந்து மற்றோர் கலகமும், ஒரு குழப்பத்தில் இருந்து மேலும் சிக்கலான வேறோர் குழப்பமுமே பிறப்பதைப் பார்த்து வருகிறோம்.
இதோ.. அடுத்த அத்தியாயம். இதன் முடிவிலாவது ‘சுபம்' வருகிறதா... பார்ப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT