Published : 24 Jul 2017 09:08 AM
Last Updated : 24 Jul 2017 09:08 AM
ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக இருந்தவர் சர் ஜேம்ஸ் வில்சன். 157 ஆண்டுகளுக்கு முன்பு (24 ஜூலை 1860) இவர்தான் வருமான வரியை அறிமுகப்படுத்தினார். செல்வந்தர்கள் மற்றும் பிரிட்டிஷ்கார்களுக்கு வரி விதித்தார். ‘பெரிய' மனிதர்களின் கோபத்துக்கும் ஆளானார்.
அறிமுகமான முதல் ஆண்டில், வரி வருமானமாக அரசுக்கு 30 லட்சம் ரூபாய் கிடைத்தது. இப்போது ரூ.10 லட்சம் கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. வருமான வரிதான் ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்டது. மற்றபடி வரி விதிப்பு ஒன்றும் இந்தியாவுக்கு புதிது அல்ல.
எல்லா நாட்டு அரசுகளும் காலம் காலமாக, நில வரி, கால்நடை வரி, சொத்து வரி, தொழில் வரி என வெவ்வேறு பெயர்களில் மக்களிடமிருந்து வரி வசூலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
இந்தியாவில் கிருஷ்ணதேவராயர், ஷேர் ஷா, அக்பர் ஆகியோர் வரி விதிப்பு முறையை செம்மைப்படுத்தினார்கள். 1857-லேயே, மாவட்ட ‘கலெக்டர்' மூலம், நில வரி வசூலிக்கும் முறையை ஆங்கிலேயர்கள் கொண்டு வந்துவிட்டனர். ஆனாலும் 1860 ஜூலை 24-ம் தேதிதான் வருமான வரி என்ற பெயரில் ஆட்டம் ஆரம்பம் ஆனது.
1866-ம் ஆண்டு, கவர்னர் ஜெனரல் டஃப்ரின், வருமான வரிச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அதுதான் முறைப்படியான முதல் வரிச் சட்டம். இதில், லைசன்ஸ் வரி, வருமான வரி என இரண்டுமே இருந்தன.
1917-ல் பெரும் செல்வந்தர்களுக்கு என்று தனியாக ‘சூப்பர் டாக்ஸ்' விதிக்கப்பட்டது.
1922-ல் ஒத்துழையாமை இயக்கம் உச்சத்தில் இருந்தபோது, அடுத்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதுதான் ‘முழுமையான' வருமான வரிச் சட்டம். தற்போதுள்ள சட்டத்தின் தந்தை என்று சொல்லலாம்.
இதனைத் தொடர்ந்து, 1924-ல் மத்திய வருவாய் வாரியம் அமைக்கப்பட்டது.
தற்போதுள்ள வடிவில், வருமானவரித் துறை ‘பிறந்தது'. வருமான வரித் துறையின் அதிகார வரம்பும் விரிவடைந்து கொண்டே வந்தது.
சட்ட ஆணையம், 1922 சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து புதிய சட்டத்தைப் பரிந்துரைத்தது. இதுதான் இப்போது நாம் பின்பற்றி வரும் வருமான வரிச் சட்டம் 1961. இது 1962-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
1963-ம் ஆண்டு, மத்திய வாரியத்தில் இருந்து மத்திய ‘நேரடி வரி' வாரியம் உருவானது.
1966-ல் புலனாய்வு இயக்ககம் (Directorate of Investigation) தனியாக உருவானது.
வரி வசூலிப்பதில் நவீன தொழில்நுட்பம் புகுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, 1994-ல் நிரந்தரக் கணக்கு எண் (PAN) அறிமுகமானது. இந்தியா முழுமைக்குமான இந்த எண், வருமான வரிக்குட்பட்ட நடவடிக்கைகளை ஒருமுகப்படுத்துவதில் முழு வெற்றி கண்டது. இன்று ‘பான்' இல்லாமல் நிதி நடவடிக்கை எதுவும் நடைபெற சாத்தியமே இல்லை.
வரி வசூலிப்பில் பல நாடுகளும் கையாளும் முக்கியமான வழிமுறை -
வருமானம் பற்றிய விவரத்தை ‘தாமாக முன்வந்து அறிவிக்கும் திட்டம்' (Voluntary Disclosure Scheme) நம் நாட்டிலும் பலமுறை இது செயல் படுத்தப்பட்டது.
2016-ல் அறிவிக்கப்பட்ட 'தாமாக முன்வந்து அறிவிக்கும் திட்டம்',
29,000 கோடி ரூபாய்க்கும் மேலான வரியை அரசுக்குக் கொண்டு வந்தது.
இந்த வரித்தொகைதான் பள்ளிகளாக, பாலங்களாக, ஆலைகளாக, சாலைகளாக, நம் முன் விரிகிறது. இருப்பவர்கள் தருவதைக் கொண்டு இல்லாதோருக்கு தர முடிகிறது.
கீழே இருப்போரை மேலே தூக்கிவிட ஏதுவாகிறது. வருமான வரி விதிப்பில் நாம் காட்டும் மனிதாபிமான முகம் வெளியில் தெரிவதில்லை.
விவசாய வருமானத்துக்கு வருமான வரியிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுகிறது. இதுபோல 80 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்டு வருமானம் 5 லட்சம் வரையில் வரி செலுத்தத் தேவையில்லை; புதிய தொழில்முனைவுக்கு வரிச் சலுகைகள்; அறக்கட்டளைகளுக்கு வரி விலக்கு; மேலும் ஏராளமான வரிக் கழிவுகள், தள்ளுபடிகள், சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் 1970-களில் தனிமனித வருமான வரி அதிகபட்சம் 90 சதவீதத்துக்கும் கூடுதலாக இருந்தது. ஆனால் இப்போது உலகிலேயே குறைவான தனிமனித வரி விகிதம் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
ஜப்பான் (55%), பிரான்ஸ் (50%), ஜெர்மனி (47.5%), சீனா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா (45%), அமெரிக்கா (40%) ஆகிய நாடுகளில் தனிமனித வரி அதிகமாக உள்ளது. இதில் ஒரு வேடிக்கை சீனா உள்ளிட்ட சில நாடுகளில், நிறுவன வரி 15% முதல் 25% வரையில் உள்ளது. ஆனால் தனிமனித வரி அதிகபட்சம் 45% வரை செல்கிறது.
இந்தியாவில் நிறுவன வரி (கார்ப்பரேட் டாக்ஸ்) 30% விதிக்கப்படுகிறது;
தனிமனித வருமான வரி, குறைந்தபட்சம் 5 சதவீதமும் அதிகபட்சமாக 30 சதவீதமும் விதிக்கப்படுகிறது. ஆனாலும் வருமான வரி மூலம் பல லட்சம் கோடிகள் கிடைக்கிறது. இதன் பொருள்....? இது கூறும் செய்தி...?
உலகின் வலிமையான பொருளாதாரமாக இந்தியா வளர்ந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவும் சீனாவும் நம்மிடம் முரண்டு பிடிப்பதில் நிரம்பவே நியாயம் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT