Published : 11 Apr 2017 11:50 AM
Last Updated : 11 Apr 2017 11:50 AM

அன்பாசிரியர் 35: ஆரோக்கிய ராஜ்- இசைத்து, பாடி, ஆடி பாடம் நடத்தும் ஆசிரியர்!

ஆசிரியத் துறை மற்ற அனைத்துத் துறைகளையும் உருவாக்குகிறது.

இசை, பாடல், நடன வழிக் கல்வி, கிராமியக் கலைகள், அறிவியல் மன்றம், கண்காட்சிகள், உதவும் பிறந்தநாள் திட்டம் என விழுப்புரம், உலக்கூர் ஒன்றிய கோனேரிக்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளியை எந்நேரமும் மகிழ்ச்சி தவளும் துடிப்பான பள்ளியாக மாற்றியுள்ளார் ஆசிரியர் ஆரோக்கியராஜ். அவரின் ஆசிரியப் பயணம் இந்த அத்தியாய அன்பாசிரியரில்...

ஆசிரியப் பணிக்கு வரவேண்டும் என்றெல்லாம் நினைத்து வரவில்லை. ஆனால் செய்யும் வேலையை முழு ஈடுபாட்டுடன் செய்ய ஆசைப்பட்டேன். எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களை நினைத்துக் கொண்டேன். அவர்கள் கற்பித்த 50% மற்றும் கற்பிக்காத 50% பாடத்தை என் மாணவர்களுக்குக் கற்பிக்க முடிவு செய்தேன்.

ஆர்வம் காரணமாக தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்களைப் படித்தேன். 2007-ல் ஆசிரியப் பயிற்சியை முடித்துவிட்டு காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் பள்ளியில் இணைந்தேன். பேச்சை மறந்து, நானும் சைகையிலேயே பேசினேன். அந்த ஒரு வருடம் எனக்கு நிறைய அனுபவத்தை ஏற்படுத்தித் தந்தது.

பின்னாட்களில் அரசுப்பணி கிடைத்து 2009-ல் கோனேரிக்குப்பம் நடுநிலைப்பள்ளியில் பணிக்குச் சேர்ந்தேன். பள்ளியில் சேர்ந்த ஆரம்பத்தில் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு, நாகரிக ஆசிரியர் போலத்தான் சுற்றிக்கொண்டிருந்தேன். நாட்கள் செல்லச்செல்ல தயக்கம் விடுத்து, இயல்பாகப் பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தேன். தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம் படித்திருந்ததால், இரண்டையுமே மாணவர்களுக்குக் கற்பித்தேன்.

இசை வழிக் கல்வி

எனக்கு இசை ஓரளவு தெரியும் என்பதால் கீபோர்ட் மற்றும் பியானோ மூலம் எழுத்துக்களைக் கற்றுக்கொடுத்தேன். 1, 2-ம் வகுப்புகளுக்கு மட்டுமே பாடம் எடுத்துக் கொண்டிருந்ததால், இன்னும் எளிதானது. தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் மட்டுமே அவர்களின் அடிப்படை. அதனால் முன்னதாக வீட்டிலேயே இசைக்கோர்வைகளை தயாரித்து விடுவேன். பள்ளியில் அதை இசைத்துப் பாடம் நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

இசைத்துக்கொண்டே பாடிப் பாடங்கள் கற்பிக்கும்போது, மாணவர்கள் முழு மனதுடன் அவற்றைக் கவனித்தனர். உற்சாகமாய் கூடச் சேர்ந்து பாடி, எழுத்துக்களை விரைவாகக் கற்றனர். இசைக்கு மயங்காதவர்கள் உலகத்தில் ஏது? அதுதான் அங்கும் நடந்தது; நடக்கிறது.

ஏற்ற இறக்கத்துடன் பாடிக்கொண்டே நடனமாடும்போது, மாணவர்கள் வேறு உலகில் இருந்தனர். 'ஏபிசிடிஈஎஃப்ஜிஹெச் - தகிட தகிட தகிட தகிட தத்தும்' என்பன உள்ளிட்ட செயல் பாடல்கள் முறையையும் கையாள்கிறேன். இதன் மூலம் மாணவர்களின் பேச்சு, செயல், எழுத்து, வார்த்தை, உச்சரிப்பு உள்ளிட்டவை மேம்பட்டன.

குப்பைத் தொட்டியில் பிறந்த இசை

ஒரு நாள் வகுப்பில் மாணவர்கள் மேசையைத் தட்டியதைப் பார்க்கும்போது இனிமையாக இருந்தது. அருகில் இருந்த குப்பைத் தொட்டியைச் சுத்தப்படுத்தி, அதில் இசைக்க ஆரம்பித்தோம். மாணவர்களும் ஆர்வமாய் அதில் ஈடுபட, பின்னரே கிராமிய இசைக் கருவிகளை சொந்தமாகவே வாங்கினேன்.

அதன் மாணவர்கள் கிராமியக் கலைகளைக் கற்றதால், பள்ளி ஆண்டு விழாக்களில் அவற்றிலேயே பாடல், நடனம், இசை ஆகியவற்றை நிகழ்த்தினர். இதற்காக ரூ.15 ஆயிரம் மதிப்பில் அவற்றுக்குத் தேவையான கருவிகளை சொந்தமாகவே வாங்கி பள்ளியில் வைத்துவிட்டேன். எங்கள் ஒன்றியத்தில் இருக்கும் மற்ற பள்ளிகளும் தங்கள் விழாக்களுக்கு அவற்றை இலவசமாகப் பயன்படுத்துகின்றனர்.

சோறு போட்ட கிராமியக் கலை

எங்கள் கிராமியக் கலைக்குழு பற்றி வெளியே தெரிய ஆரம்பித்ததால், கல்லூரிகளில் இருந்து எங்களைப்பங்கேற்க அழைக்கின்றனர். முதல்முறையாக ஒரு கல்லூரியில் அதற்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். வெளியே வந்தவுடன் நேராக உணவகத்துக்குச் சென்றோம். மாணவர்கள் அத்தனை ஆர்வமாய்ச் சாப்பிட்டார்கள். அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.

தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பறை உள்ளிட்ட கிராமியக் கலைக் கருவிகளுடன் மாணவர்கள்.

1, 2 வகுப்புக்காக அறிவியல் மன்றம் ஆரம்பித்தேன். படிப்படியாக எல்லா ஆசிரியர்களும் அவர்கள் வகுப்புகளுக்கு ஆரம்பித்தனர். 3 மாதங்களுக்கு ஒருமுறை அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் படிக்கும் கோனேரிக்குப்பம், நல்லாத்தூர், நங்குணம் ஆகிய மூன்று ஊர் மக்களுக்கும் பழக்கன்றுகளை வழங்கினோம். வெறுமனே கொடுத்துவிட்டு வராமல் நாங்களே குழி வெட்டி அவற்றை நட்டோம். ஃபேஸ்புக் நண்பர் ஒருவர் அளித்த ரூ.4 ஆயிரத்தால் இது சாத்தியமானது.

உதவும் பிறந்தநாள்

பிறந்தநாள் கொண்டாடும் மாணவர்கள் பள்ளியில் இனிப்புகள் வழங்க வேண்டியதில்லை. பேனா, பென்சில், அழிப்பான், வண்ணப் பென்சில்கள் உள்ளியவற்றை தங்களால் முடிந்த அளவுக்கு வாங்கி சக நண்பர்களுக்கு அளிக்க வேண்டும். இதனால் மாணவர்களிடையே உதவும் மனப்பான்மை அதிகரித்துள்ளது.

சாத்தியமான கணினி ஆய்வகம்

கணினியின் மூலம் மாணவர்களின் அறிவை மேம்படுத்தத் திட்டமிட்டோம். ஆய்வகம் அமைப்பதற்கு ரூ. 5,16,470 தொகை தேவைப்பட்டது. 3 ஊர் மக்களிடமும் போய் நின்றோம். அன்றாடப் பாட்டுக்கே அல்லாடும் மக்களிடம் என்ன இருக்கும்? ஆனாலும் எங்களை நம்பி, தங்களிடம் இருந்த 5, 10, 20, 100 ரூபாய்களை அளித்தனர். ஜப்பானில் இருந்து பாரிவேல் முருகன் என்பவர் ரூ.80 ஆயிரம் அளித்தார். ஆசிரியர்கள் ரூ.30 ஆயிரம் அளித்தோம். மதிப்பீட்டின் மூன்றில் ஒரு பங்கு தொகையான 1,72,157 ரூபாயை அரசிடம் அளித்தோம். இப்போது அரசே கணினி ஆய்வகத்தை அமைத்துத் தரவுள்ளது.

தூய்மையில் புதுமை

பள்ளியைப் பெருக்குபவர் இறந்துவிட்ட பிறகு, புதியதாய் யாரும் வேலைக்கு வரவில்லை. மைதானத்தில் குப்பைகள் குவிந்தன. நிதித்தட்டுப்பாடு என்றாலும் மாணவர்களை அதில் ஈடுபடுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். என்ன செய்யலாம் என்று யோசித்தபோது ஓர் உபாயம் தோன்றியது. பனங்காய் வண்டி போல, சைக்கிள் சக்கரங்களை நீளக்குச்சி ஒன்றின் இரு முனையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். அதில் பிரம்பை (கோரை வகையிலான) துடைப்பமாகக் கோர்த்துக்கொண்டோம். அவற்றின் மூலம், மைதானத்தை எளிதில் பெருக்க முடிந்தது.

இந்த செயல்திட்டம் 2016-ம் ஆண்டின் 'டிசைன் ஃபார் சேஞ்ச்' தேசிய விருதுக்கு முதல் 20 ஆகத் தேர்வானது. முதல் இரண்டு இடத்துக்கான போட்டியிலும் தேர்வு செய்யப்பட்டது. ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசு தர உள்ளனர். அதற்காக 3 மாணவர்களை டெல்லி அழைத்துச் சென்று விடுதி, உணவு உள்ளிட்ட செலவுகளை நானே பார்த்துக்கொண்டேன். அதற்கு ரூ.26 ஆயிரம் செலவானது.

இசையமைத்துப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஆரோக்கியராஜ். | மைதானத்தைச் சுத்தப்படுத்தும் கருவி

பிற சமூகப்பணிகள்

பாடுவதோடு, பாடல்கள் எழுதுவதில் எனக்கு ஆர்வம் அதிகம். பெண்கள் பாதுகாப்பு, பிறந்தநாள், இயற்கை, தாய்மொழி, ஜல்லிக்கட்டு மற்றும் கிராமியப் பாடல்கள் நிறைய எழுதி இருக்கிறேன். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்றுள்ளதால் உதவிகள் வேண்டி, இரண்டு மொழிகளிலுமே ஃபேஸ்புக்கில் பதிவிடுகிறேன். இதன்மூலம் ரீச் அதிகமாக இருக்கிறது.

கோனேரிக்குப்பத்துக்கு பக்கத்தில் வண்டிப்பாதை என்ற இடத்துக்கு அருகில் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அரசு அளித்த வீடுகள் இடிந்துவிட்டதால், புறம்போக்கு நிலத்தில் வசிக்கின்றனர். அவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க முயற்சித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்டா வழங்காமல் அலைக்கழிக்கின்றனர். பட்டா கிடைத்தால் போதும், வேலையை ஆரம்பித்து விடுவோம்.

எங்களுக்கு உதவும் கொடையாளர்களைக் கவுரவிக்கும் விதமாக கல்விக்காவலர் என்ற விருதைக் கொடுக்க ஆரம்பித்துள்ளோம். கடந்த வருடம் 31 கொடையாளர்களுக்கு விருதளித்தோம். அதற்கான ரூ.3 ஆயிரத்தையும் ஒரு கொடையாளரிடமே பெற்றுக்கொண்டோம்.

எதிர்காலத் திட்டங்கள்

பள்ளிக்கென தனியாகப் போர்வெல் இல்லாததால் தண்ணீர்ப் பிரச்சனை உள்ளது. அதைச் சரிசெய்ய வேண்டும். வருடத்துக்குக் குறைந்தபட்சம் ஒரு வகுப்பறையை படங்கள், அடிப்படை வசதிகள் கொண்டதாக மாற்ற வேண்டும். முதலில் 1-ம் வகுப்பு அறையை மாற்றி, அதிக மாணவர் சேர்க்கையை ஏற்படுத்த வேண்டும் என்கிறார் அன்பாசிரியர் ஆரோக்கியராஜ்.

முந்தைய அத்தியாயம்: >அன்பாசிரியர் 34: காந்திமதி- பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தில் பள்ளிக்கூடம் கட்டியவர்!

க.சே. ரமணி பிரபா தேவி தொடர்புக்கு--> ramaniprabhadevi.s@hindutamil.co.in

அன்பாசிரியர் ஆரோக்கியராஜின் தொடர்பு எண்: 9940801810

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x