Published : 26 Sep 2018 07:40 AM
Last Updated : 26 Sep 2018 07:40 AM
ரபேல் போர் விமானத் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தஸ்ஸோ நிறுவனம், 100 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் பயணிகள் விமானங்களை யும் போர் விமானங்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தைத் தொடங்கிய மால்செல் புளோச், பிரான்ஸை ஜெர்மனி ஆக்கிர மித்தபோது, விமானத் தயாரிப்பில் ஜெர்மனியுடன் இணைந்து செயல்பட மறுத்ததால், அகதிகள் முகாமில் சித்ரவதையை அனுபவித்தவர். பல தோல்விகள், ஏமாற்றங்களைத் தாண்டி வெற்றிக்கொடி நாட்டியவர் புளோச்.
பிரான்ஸின் பாரீஸ் நகரில் கடந்த 1892-ல் பிறந்தார் புளோச். அப்பா டாக்டர். நான்கு குழந்தைகளில் கடைக்குட்டி. சிறு வயதில் இருந்தே விமானம் மேல் ஆர்வம் கொண்டவர். பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, முதன்முறையாக ஈபிள் டவர் அருகே பறந்த வில்பர் ரைட் விமானத்தைப் பார்த்தார். `அதுவரை விமானத்தையே நான் பார்த்ததில்லை. அதுதான் முதன்முறை. அதிலிருந்தே விமானம் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதுவே என் வாழ்க்கையாகவும் மாறிவிட்டது..’ என்கிறார் புளோச்.
அதன்பிறகு, ஈகோல் சுப்பீரியர் டி ஏரோநாட்டிக் கல்லூரியில் பயின்றார். முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலம் அது. 1913-ல் தான் கற்ற வித்தையை களத்தில் இறக்கினார். 1916-ல் எக்ளேர் என்ற புரப்பெல்லர் ரக விமானத்தை உருவாக்கினார். 2 ஆண்டுகள் கழித்து, 2 பேர் பயணிக்கக் கூடிய சீ 4 என்ற விமானத்தை சக தொழிலாளர்கள் ஹென்றி போட்டஸ் மற்றும் லூயிர் கோரோல்லருடன் இணைந்து உருவாக்கினார்.
போர் முடிந்ததும் ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார். மோட்டார் கார் தொழிலிலும் ஈடுபட்டார். ஆனாலும் விமானம் அவரை ஈர்த்துக் கொண்டே இருந்தது. அதுவரை போர் விமானங்கள் தான் அதிகம் தயாரிக்கப்பட்டு வந்தன. பயணிகள் விமானங்களுக்கும் பெரிய சந்தை இருப்பதை உணர்ந்தார் புளோச். அதில் முழு மூச்சாய் ஈடுபட்டார். 1936-ல் பிரான்ஸில் ஆட்சிக்கு வந்த இடதுசாரி சிந்தனை கொண்ட அரசு, புளோச்சின் நிறுவனத்தை கையகப்படுத்தி அரசு நிறுவனமாக்கியது. அதே ஆண்டு டிசம்பரில் சொசைட்டி அனானிம் டெஸ் ஏவியோன்ஸ் மார்சல் புளோச் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
1939-ல் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. புளோச் உருவாக்கிய போர் விமானங்கள்தான் பிரான்ஸ் வான்வெளியை காப்பாற்றும் பணியில் பயன்படுத்தப்பட்டன. ஜெர்மனி பிரான்ஸை கைப்பற்றியது. விமானங்கள் தயாரிப்பில் உதவுமாறு புளோச்சிடம் ஜெர்மனி வலியுறுத்தியது. ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் அவரும் அவருடைய மனைவி, பிள்ளைகளும் லியோன் சித்ரவதை முகாமில் அடைக்கப்பட்டனர். பின்னர் புச்சென்வால்டு முகாமிலும் டிரான்ஸி முகாமிலும் அடைக்கப்பட்டார்.
சித்ரவதை முகாம்களில் புளோச் அனுபவித்த கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. போர் முடிவுக்கு வந்தபிறகு தனது குடும்ப பெயரை தஸ்ஸோ என மாற்றிக்கொண்டார். மார்சல் புளோச், மார்சல் தஸ்ஸோ ஆனார். மீண்டும் விமானத் துறையில் ஈடுபட்டார். சொந்தமாக பத்திரிகை நடத்தினார். அரசியலிலும் புகுந்தார். செனட்டராகவும் வென்றார். பிரான்ஸின் ஜெட் விமானத் தயாரிப்பில் முன்னோடியாக உயர்ந்தார்.
1949-ம் ஆண்டில் தஸ்ஸோ நிறுவனம் பிரான்ஸ் விமானப் படைக்கு முதன்முறை யாக எம்டி 450 அவுராகன் என்ற போர் விமானத்தை தயாரித்துக் கொடுத்தது. மிகச் சிறந்த போர் விமானம் என்பதால் ஏற்றுமதியும் குவிந்தது. இந்தியாவும் இஸ்ரேலும் இந்த விமானங்களை வாங்கின. 1954-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மிஸ்டரி 4 ஜெட் விமானங்களுக்கு அமெரிக்கா ஆர்டர் கொடுத்தது. 225 விமானங்களை வாங்கிய அமெரிக்கா, 1967-ல் மத்திய கிழக்கு நாடுகளில் நடந்த 6 நாள் போரில் இவற்றை பயன்படுத்தியது.
அடுத்தடுத்து மிஸ்டரி -20, பிளெமண்ட் எம்டி 311, 312 ரக விமானங்களையும் தயாரித்தது. பால்கன் பிராண்ட் விமானங்களுக்கு ஆர்டர்கள் குவிந்தன. பான் அமெரிக்கன் நிறுவனம், தஸ்ஸோ ஜெட் விமானங்களின் செயல்பாட்டில் வியந்து, தொடர்ந்து ஆர்டர்களை வழங்கியது. பால்கன் 20, பால்கன் -30, பால்கன் 40, பால்கன் 50 என விமானத்தின் பயணிகள் இருக்கை திறனை உயர்த்தியது தஸ்ஸோ நிறுவனம். 1983-ல் பாரீஸ் விமானக் கண்காட்சியில் பால்கன் 900 விமானம் அறிமுகம் செய்யப்பட்டது. எங்கும் நிற்காமல் 4000 கடல் மைல் பறக்கும் திறன் கொண்டது இந்த விமானம். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 900 எல்எக்ஸ் ரக விமானம் 4,750 கடல் மைல் பறக்கும் திறன் கொண்டது.
இந்த வகை விமானங்கள் அனைத்தும் மற்ற கம்பெனிகளின் விமானங்களுடன் ஒப்பிடும்போது, 30 சதவீதம் குறைந்த எரிபொருளை மட்டுமே பயன்படுத்தக் கூடியவை. இதனால் விமான நிறுவனங்களின் மத்தியில் பால்கன் விமானங்களுக்கு கிராக்கி இருந்தது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் 200 வகையான பால்கன் விமானங்கள் தயாரிக்கப்பட்டன. இதில் லேட்டஸ்ட் பால்கன் 8எக்ஸ். மத்திய கிழக்கு நாடுகளின் விமான நிறுவனங்கள் இவற்றுக்கு அதிக எண்ணிக்கையில் ஆர்டர்களை கொடுத்துள்ளன. மார்சல் புளோச் முதன்முதலில் விமான புரப்பெல்லரை தயாரித்ததில் தொடங்கி, 100 ஆண்டை கடந்து விட்டது தஸ்ஸோ. 2016-ல் அதை விமரிசையாகக் கொண்டாடவும் செய்தது. பால்கன் விமானங்களின் எரிபொருள் சிக்கனம் குறித்து தற்போதைய சிஇஓ எரிக் டிராப்பியிரிடம் நிருபர்கள் கேட்டபோது, `அது மிகவும் ரகசியம்’ என்றார்.
மார்சல் தஸ்ஸோ 1986-ம் ஆண்டு ஏப்ரல் 17-ல் இறந்தார். பிரான்ஸ் நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி, பிரான்ஸ் அந்நாட்டின் மிக உயர்ந்து விருதான கிராண்ட் கிராஸ் விருதை வழங்கி கவுரவித்தது.
`போலி கவுரவத்துக்கு நான் என்றுமே இடம் கொடுத்தது கிடையாது. கற்பனைக்கும் பஞ்சமில்லாமல் இருந் தேன். என்னுடைய குழுவுடன் இணைந்து கடுமையாக உழைத்தேன். தோல்வி என்றுமே என்னை வருத்தியதில்லை. என் வேலையை நான் பெரிதும் நேசித்தேன். எனது மன உறுதியைக் குலைக்கும் எந்த செயலையும் நான் அனுமதித்ததே இல்லை. மிகவும் எளிமையான, சந்தோஷமான வாழ்க் கையை வாழ்ந்தேன்..’ என தனது வாழ்க்கை பற்றி கூறுகிறார் தஸ்ஸோ.
இந்திய விமானப் படையில்...
தஸ்ஸோ நிறுவனத்திடமிருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஆர்டர் கொடுத்துள்ளது. ரபேல் என்ற வார்த்தைக்கு பிரெஞ்சு மொழியில், ராணுவத் துப்பாக்கிகளின் தொடர் முழக்கம் என்று பொருள். பால்கன் ரக விமானமான ரபேல் அதிகத் திறன் கொண்ட போர் விமானம். உலகம் முழுவதும் உள்ள 90 நாடுகளின் விமானப் படைகளில் இந்த ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தஸ்ஸோ நிறுவனத்திடமிருந்து போர் விமானங்களை இந்தியா வாங்குவது இது முதன்முறையல்ல. ஏற்கனவே டூபானி, மிஸ்டரி -4, ஜாகுவார், மிராஜ் -2000 போர் விமானங்களை இந்தியா வாங்கியுள்ளது.
கடந்த 1954-ல் 71 டூபானி விமானங்களையும் 33 பழைய விமானங்களையும் இந்தியா வாங்கியது. இந்திய விமானப்படையில் 15 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த இந்த விமானங்கள்தான், 1961-ல் கோவா விடுதலையிலும், 1962-ல் இந்தியா- சீனா போரிலும் பயன்படுத்தப்பட்டன.
1957-ல் 104 மிஸ்டரி 4 விமானங்களை இந்தியா வாங்கியது. இந்திய விமானப்படையில் இணைந்த முதல் சூப்பர்ஸானிக் விமானம் இதுதான். 1957-ல் 110 மிஸ்டரி- 4 ஏ ரக விமானங்களை தஸ்ஸோ நிறுவனத்திடம் வாங்கியது. இவை பாகிஸ்தானுக்கு எதிரான போரில் அதிகம் பயன்படுத்தப்பட்டன.
கடந்த 1960-ல் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்துக்காக 12 பிரக்யூட் அலீஸ் விமானங்கள் வாங்கப்பட்டன.
1978-ல் 40 ஜாகுவார் விமானங்களை வாங்க ஆர்டர் கொடுத்தது. அதோடு, இந்தியாவிலேயே இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் மூலம் 120 ஜாகுவார் விமானங்களைத் தயாரிக்கவும் அனுமதி பெற்றது. 1981-ல் மேலும் 40 விமானங்களை வாங்கியது. 1981-ல் 45, 1999-ல் 17, 2001-ல் மேலும் 20 ஜாகுவார் விமானங்களை வாங்கியது.
கடந்த 1982 முதல் 86 வரை மொத்தம் 49 மிராஜ் 2000 ரக விமானங்களை தஸ்ஸோ நிறுவனத்திடமிருந்து இந்தியா வாங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT