Published : 12 Sep 2018 06:06 PM
Last Updated : 12 Sep 2018 06:06 PM
இந்தியாவைப் போல் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே திரைப்படங்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டது அர்ஜென்டினா. மேலும் இந்தியாவுக்கும் அர்ஜென்டினாவுக்கும் தொடக்கம் முதலே இணக்கமான திரை நட்பு இருந்துவருகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த புகழ்பெற்ற அர்ஜென்டினா திரைப்பட இயக்குநர் பாப்லோ சீசர், "சத்யஜித் ராயும் ஷியாம் பெனகல்லும் எங்கள் நாட்டின் ஆதர்ச இயக்குநர்கள்" என்றார்.
அர்ஜென்டினா நாட்டின் சினிமா கருவறை எனப் புகழப்படும் உலகப் புகழ்பெற்ற நகரமான புயினோஸ் ஐரிஸ் நகரத்துக்கு 1924-ல் ரவீந்திரநாத் தாகூர் வந்தபோது, அவருக்கும் அர்ஜென்டினா பெண்ணியவாதி விக்டோரியா ஒகாம்போவுக்கும் இடையில் மலர்ந்த ஆத்மார்த்தமான நேசத்தை அடிப்படையாகவைத்து அவர் இயக்கிய திரைப்படம் ‘திங்கிங் ஆஃப் ஹிம்’ (Thinking of Him).
இந்த அர்ஜென்டீனத் திரைப்படத்தில் தாகூராக இந்தி நடிகர் நஸ்ருதின் ஷாதான் முதலில் நடிப்பதாக இருந்தது. பிறகு பாலிவுட் நடிகை ரெய்மா சென் மட்டுமே படத்தில் இடம்பெற்றார்.
இந்நிலையில் ‘திங்கிங் ஆஃப் ஹிம்’ திரைப்படம் உட்பட அர்ஜென்டினாவின் சிறந்த திரைப்படங்களில் சிலவற்றை உலகத் திரை ஆர்வலர்களுக்குக் கொண்டு சேர்க்கவிருக்கிறது ‘சென்னை அர்ஜென்டினா திரைப்பட விழா 2018’.
ஆண்டுதோறும் சென்னை சர்வதேசப் படவிழாவை ஒருங்கிணைத்துவரும் ‘இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன்’ திரைப்படச் சங்கம், புதுடெல்லியில் உள்ள அர்ஜென்டினா தூதரகத்துடன் இணைந்து மூன்று நாள் அர்ஜென்டினா திரைப்பட விழாவை நடத்துகிறது. சென்னை ரஷ்யக் கலாச்சார மையத்தில் செப்டம்பர் 17, 18, 19 ஆகிய நாட்களின் மாலைப் பொழுதுகளில் இந்தத் திரையிடல் நடைபெற இருக்கிறது.
மிதக்கும் கலைஞன்
கடந்த ஆண்டு வெளியான ‘திங்கிங் ஆஃப் ஹிம்’ படத்துடன் திரைப்பட விழா செப்டம்பர் 17 அன்று தொடங்குகிறது. மறுநாள், ஓர் இல்லத்தரசியின் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத திகில் நிறைந்த திருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட ‘காட் மதர்’ (God Mother), ராக் அண்டு ரோல் நாயகன் எல்விஸ் பிரெஸ்லியின் மறுபிறவியாகத் தன்னைக் கற்பனைசெய்துகொள்ளும் ஓர் இசைக் கலைஞனின் வாழ்க்கைச் சிக்கல்களைச் சொல்லும் ‘தி லாஸ்ட் எல்விஸ்’ (The Last Elvis) ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.
மனதைத் திறக்கும் பூட்டு
பூட்டு பழுதுபார்க்கும் தொழிலாளி செபாஸ்டீன் உண்மையான காதல் உறவில் பற்றுதல் அற்றவன். ஆனால் திடீரென்று ஒரு நாள், தான் யாருக்கெல்லாம் பூட்டைப் பழுதுபார்க்கிறானோ அவர்கள் உணர்வுகள் அவனுக்குக் காட்சியாக விரிகிறது என்பதைத் திரையில் காட்டும் படம் ‘லாக் சேமர்’ (Lock Chamer).
மனிதர்களோடு சகவாசமே வேண்டாம் என்று, தான் வளர்க்கும் 10 நாய்களோடு புயினோஸ் ஐரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள சிதிலமடைந்த கட்டிடம் ஒன்றில் வசிக்கும் பெண் பற்றிய படம், ‘டாக் லேடி’ (Dog Lady). இந்த ஐந்து படங்கள் முன்வைக்கும் நிலப்பரப்பும் புயினோஸ் ஐரிஸ் நகரம்தான் என்பது சுவாரசியமான தற்செயல்.
கூடுதல் தகவலுக்கு..
அர்ஜென்டினா திரைப்பட விழா குறித்துக் கூடுதல் விவரங்கள் அறிந்துகொள்ள விரும்பினால் 044 2821 2652 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT