Published : 11 Jun 2019 12:52 PM
Last Updated : 11 Jun 2019 12:52 PM
4-ம் வகுப்பு படிக்கும் தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு வாரமாக பள்ளிக்குச் செல்லவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு காரணம் சொல்லி தட்டிக்கழித்துவிடுகிறாள். காலையில் சரியாக 8 மணிக்குள் வகுப்புக்குள் இல்லாவிட்டால் அதற்குப் பிறகு நுழைய அனுமதி கிடையாது என்ற பள்ளி நிர்வாகத்தின் கட்டுப்பாடு அவளுக்குச் சாதகமாகிவிட்டது.
சில நாட்கள் எவ்வளவு எழுப்பியும் தாமதமாகவே எழுந்தாள். ஒருநாள் பள்ளி செல்லத் தயாராகி சாலை வரை வந்துவிட்டாள். ஆனால், அவசர அவசரமாக பாத்ரூம் போக வேண்டும் என்று சொல்லி மீண்டும் வீட்டுக்குள் ஓடி தப்பித்தாள். இப்படி நாளுக்கொரு காரணங்களை புதிது புதிதாகக் கண்டுபிடித்தாள். எல்லாவற்றையும் மீறி ஒரு நாள் பள்ளி வளாகத்துக்குள் சென்றவள் வாந்தி எடுத்த காரணத்தால் திரும்பி வீட்டுக்கே வந்தாள்.
மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றால் தியாவுக்கு ஒன்றுமில்லை என்பதே பதிலாக வந்தது. கடைசியில் ஓய்ந்துபோன அவரின் அம்மா பள்ளிக்கூடம் பிடிக்கலையா? வேறு பள்ளிக்குப் போகிறாயா? என்று கேட்டார். நான் பள்ளிக்கூடமே போகவில்லை. வீட்டிலேயே இருக்கிறேன் என்று அதிர்ச்சி கொடுத்தாள்.
''நீதான் ஒரே பொண்ணுன்னு செல்லம் கொடுக்கிற? சம்பாதிச்ச பணத்தையெல்லாம் ஃபீஸா கட்டிட்டு இப்போ கஷ்டப்படறேன். தியாவோட பிரச்சினை அவளோட சோம்பேறித்தனம்தான். நாலு உதை கொடுத்தா சரியாயிடும்'' என்று அப்பா கரித்துக் கொட்டினார்.
பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, ஒருவழியாக மனநல நிபுணரிடம் மனம் திறந்தாள் தியா. அதற்குப் பிறகு ஒழுங்காக பள்ளிக்குச் சென்றாள்.
நடந்தது என்ன?
கடந்த ஒரு மாதமாக அப்பா மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதையும் அதனால் அம்மா சண்டை போடுவதையும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் தியா. அவர்கள் கோபத்தில் தனித்து வாழ முடியும் என்று சொன்னதும், பிரியப்போவதாகச் சொன்னதும் அந்தப் பிஞ்சு மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
பக்கத்து வீட்டில் உள்ள நரேஷின் அப்பாவும் அம்மாவும் பிரிந்து வாழ்வதைப் பார்த்த தியாவுக்கு தன் அப்பாவும் அம்மாவும் பிரிந்துவிடுவார்களோ என்ற பதற்றமும், பயமும் வந்துவிட்டது.
இதனாலேயே பள்ளி செல்ல மறுத்திருக்கிறாள். பள்ளி முடிந்து வீட்டுக்கு வருவதற்குள் அம்மாவையும் அப்பாவையும் பார்க்க முடியாமல் போனால்... பாட்டி வீட்டுக்கு அம்மா போய்விட்டால், அப்பா வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால், வீட்டில் ஒரே ஒருவர் மட்டும்தான் இருப்பார் என்றால் அது அம்மாவா? அப்பாவா?, எனக்கு ரெண்டு பேரும் வேண்டுமே என்ற பதற்ற ரேகைகளுடன் தனக்குள்ளாகவே நிறைய கேள்விகளை கேட்டுக் கொண்டாள். அதனால் ஏற்பட்ட பயம், பதற்றத்தால்தான் பாத்ரூம் ஓடினாள். வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டாள்.
நாம் இல்லாத சமயத்தில் அம்மாவும் அப்பாவும் மீண்டும் சண்டை போட்டால் அல்லது ஒருவர் கோபித்துக்கொண்டு சென்றால் என்ன ஆவது என்ற யோசனை அதிகரித்ததாலே பள்ளி செல்ல மறுத்தாள். இதற்குப் பெயர் பெற்றோரின் பிரிவு குறித்த மனப்பதற்றம் (Seperation Anxiety Disorder) என்று சொல்லப்படுகிறது. இப்போது மனநல நிபுணர் கொடுத்த பயிற்சி முறைகளால் தியா அழகாக பள்ளிக்குச் செல்கிறாள்.
இது குறித்து உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனிடம் பேசினோம்.
''குழந்தைகளுக்கு ஏற்படும் மனப் பதற்றத்தில் இரு வகைகள் உள்ளன. தாயின் அரவணைப்பிலேயே இருக்கும் குழந்தைகள் முதல் முறையாக எல்.கே.ஜி படிக்க பள்ளிக்குச் செல்லும் போது பெற்றோரைப் பிரிய மனமில்லாமல் அழுது அடம்பிடித்து பள்ளி செல்ல மறுப்பார்கள். இது ஒரு வகை. வீட்டில் நடக்கும் பிரச்சினை காரணமாக பெற்றோர் பிரிந்துவிடுவார்கள் என்று பதற்றத்திலேயே இருக்கும் குழந்தைகளும் பள்ளி செல்ல விரும்பமாட்டார்கள். இது இரண்டாவது வகை.
தியா மாதிரியான குழந்தைகள் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள். கணவன்- மனைவி பிரச்சினை, குடும்பப் பிரச்சினை, மாமியார்- மருமகள் பிரச்சினை என பல பிரச்சினைகள் அம்மாவுக்கு இருக்கலாம். ஆனால், அவற்றை குழந்தைகளுக்குத் தெரியும்படி வெளிப்படுத்தக் கூடாது.
எக்காரணம் கொண்டும் குழந்தையின் முன்பு சண்டை அப்பாவும் அம்மாவும் சண்டை போடக்கூடாது. மது குடித்துவிட்டு அப்பா வருகிறார் என்றால் குழந்தையின் எதிரில் அப்பாவை அம்மா அதட்ட வேண்டாம். ஏனெனில், ஏற்கெனவே நிதானம் இழந்து வரும் அப்பா தாறுமாறாகச் சண்டை போட வாய்ப்புகள் அதிகம். இதனால் குழந்தைக்குதான் மனக்காயம் ஏற்படும். எனவே, குழந்தையின் நலன் கருதி அம்மா அமைதியாக இருப்பது பிரச்சினையைத் தவிர்க்க உதவும்.
இதையெல்லாம் செய்யாவிட்டால் அப்பா, அம்மா குறித்த மனக்கவலையும், பாதுகாப்பற்ற தன்மையும் குழந்தை மனதில் வலியாகப் பதியும். அப்பா, அம்மாவிடம் பாசத்தை எதிர்பார்க்காமல் இன்னொருவரிடம் அந்தப் பாசத்தை குழந்தை எதிர்பார்க்கும். அத்தை, மாமா, சித்தி என்றோ அல்லது பக்கத்து வீட்டில் இருப்பவர்களுடனோ நேசம் காட்டும். எனக்குத் தெரிந்து ஒரு குழந்தை தன் அம்மாவை அம்மா என்று அழைப்பதில்லை. பக்கத்து வீட்டு உறவினரையே அம்மா என்று அழைக்கிறது.
நான் அழுதால் அவங்கதான் கண்ணைத் துடைச்சு விடுறாங்க, சாப்பாடு ஊட்டுறாங்க. நீங்க என்னை கவனிக்குறதே இல்லை என்று அம்மாவிடம் சொன்னது அந்தக் குழந்தை. அன்புக்காகவும், பாதுகாப்புக்காகவும் ஏங்கும் குழந்தையை சரியாக கவனித்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் கைகளில்தான் உள்ளது.
குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவதில்லை. கேட்ட வார்த்தையைத்தான் பேசுகிறார்கள். அதேபோல அம்மாவும் அப்பாவும் செய்யும் செயல்களைத் தான் அவர்கள் வளர்ந்த பிறகும் பின்பற்றுகிறார்கள். அதனால் குடிப்பழக்கம் இருக்கும் அப்பாக்களைப் பார்த்து வளரும் ஆண் குழந்தை பின்னாளில் அதே மாதிரி நடந்துகொள்வதற்கான வாய்ப்புள்ளது. அப்பாவின் செயல்பாடுகளில் அதிருப்தி அடையும் பெண் குழந்தை ஒட்டுமொத்த ஆண்களையும் வெறுக்கும். அப்பா செய்யும் வன்முறைகளையும் ஏற்றுக்கொண்டு எல்லா ஆண்களும் இப்படித்தான் என்ற முடிவுக்கு வந்துவிடும். இதுபோன்ற ஆபத்துகள் நிகழாமல் இருக்க, குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அப்பா மதுவைக் கைவிடுவது நல்லது.
எல்.கே.ஜி. செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோரின் பிரிவு குறித்த மனப்பதற்றம் அதிகம் இருப்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஏனென்றால் சுமார் 3 வயது வரை தாயின் அரவணைப்பில் அல்லது கவனிப்பாளரின் பொறுப்பில் இருக்கும் குழந்தை முதன் முறையாக குடும்பத்தை விட்டு பள்ளிக்கூடம் என்ற சமூகத்துக்குச் செல்கிறது. பெற்றோரை விட்டு, பழகிய இடத்தை விட்டு புதிதாக ஒரு இடத்துக்குச் செல்லும் குழந்தை பாதுகாப்பின்மையை உணர்கிறது.
பெற்றோரைப் பிரிகிறோம், புது இடம் எப்படிப்பட்டது என்ற பயத்திலும், பாதுகாப்பின்மையாலும்தான் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லப் பிடிக்காமல் அழுவதும் அடம் பிடிப்பதுமாக தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. இதுபோன்ற சமயங்களில் வாந்தி எடுத்தல், வயிற்றுப்போக்கு போன்ற சுகவீனமும் குழந்தைகளுக்கு ஏற்படும். நாளடைவில் இந்தப் பிரச்சினைகள் தானாக சரியாகிவிடும். பெரும்பாலும் எல்லாக் குழந்தைகளும் வழக்கம் போல பள்ளிக்குச் செல்வர். ஆனால், இரண்டு மூன்று மாதங்களாக இதே பிரச்சினை நீடித்தால் குழந்தை பள்ளி செல்ல மறுத்தால் அது பெற்றோரின் பிரிவு குறித்த மனப்பதற்றம்தான் (Seperation Anxiety Disorder). இது சில குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படும்.
இந்த மனப்பதற்றத்தில் உள்ள குழந்தைகளைச் சரிசெய்ய, பிறந்த உடன் குழந்தையை எந்த மாதிரி கவனிக்கிறோமோ அந்த கவனிப்பைப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கு அளிக்க வேண்டும்.
வேலைக்குச் செல்லும் தாயாக இருந்தால், குழந்தையின் பார்வையிலிருந்து தாய் வெளியே செல்லும்போது அழுகிறது. அம்மா நம்மை விட்டு எங்கேயோ செல்கிறார் என்ற கவலை குழந்தைக்குத் தொற்றிக்கொள்ள, வீறிட்டு அழுகிறது. இந்த சந்தர்ப்பங்களை பெற்றோர் மிக சாமர்த்தியமாக கையாள வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் அம்மாவும் வேலைக்குப் போக வேண்டிய சூழல் இருப்பதைத் தவிர்க்க முடியாது. குழந்தை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்துவிடும். ஆனால், அம்மா தாமதமாகத்தான் வருவார். இதனால் குழந்தை அம்மாவின் அன்புக்காக ஏங்கிப் போகும். அம்மாவின் அரவணைப்பு இல்லாததால் பாதுகாப்பின்மையை உணரும். கவன ஈர்ப்புக்காக சில விஷயங்களில் தேவையில்லாமல் ஈடுபடும். இதைத் தவிர்க்க பெற்றோர் குறிப்பாக அம்மா குழந்தையிடம் தினமும் அரை மணி நேரமாவது பேச வேண்டும் அல்லது சிரித்து விளையாட வேண்டும். கலரிங் புக் காட்டி வண்ணம் தீட்டச் சொல்லுதல், கதை சொல்லுதல், விளையாடுதல், பாடல்கள் பாடுதல், குழந்தையுடன் சேர்ந்து ஆடுதல் என்று பெற்றோர் ஈடுபடும்போது குழந்தை பாதுகாப்பை உணரும்.
இரவு தூங்கும் முன்பு, அம்மா குழந்தையுடன் மனம் விட்டுப் பேசுவது அவசியம். அம்மாவும் கட்டாயம் வேலைக்குப் போக வேண்டும். அப்போதான் உனக்குத் தேவையானதை வாங்கித் தர முடியும். லேட்டா வர்றது எனக்கும் கஷ்டம்தான். உன்னை ரொம்ப மிஸ் பண்றேன். இதுக்கெல்லாம் சேர்த்து லீவ் நாள்ல ஜாலியா விளையாடலாம் என்று சொல்லலாம்.
2 வயதுக் குழந்தைக்கு இதெல்லாம் புரியுமா என்று கேட்கலாம். ஆனால், அம்மா சொல்லச் சொல்ல குழந்தை இலகுவாகப் புரிந்துகொள்ளும். நீ அழ அழ உன்னை விட்டுட்டுப் போறது கஷ்டமா இருக்கு. கவலைப்படாதே. விளையாடு. அம்மா சாயந்திரம் சீக்கிரம் வந்துடறேன் என்று குழந்தையிடம் திரும்பத் திரும்பச் சொன்னால் குழந்தை அம்மாவை நம்பத் தொடங்கும். குறிப்பிட்ட நேரத்தில் அம்மா திரும்பி வந்துவிடுவார் என்று நினைக்கும்போது குழந்தையின் கவலை நீங்கிவிடும்.
தான் திரும்பி வரும் நேரத்தை குழந்தைக்கு அம்மா நினைவூட்ட வேண்டும். வீட்டுக்குத் திரும்பி வரும்போது குழந்தை எதிர்நோக்கி காத்திருக்கும் ஏதோவொன்றைப் பற்றி குழந்தையுடன் கலந்துரையாட வேண்டும். காட்டுல ஒரு சிங்கம் இருந்துச்சாம். அந்த சிங்கம் ஆன்னு வாயைத் திறந்ததான்னு கதை சொல்லும் போது குழந்தையும் ஆ வென்று வாயைத் திறக்கும். அப்போது விளையாட்டுத்தனமாக கதை சொல்லும் போக்கிலேயே சோறூட்டலாம்.
குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பும்போது தினமும் லஞ்சம் தருவதாக உறுதி கொடுக்காதீர்கள். வீட்டுக்கு வந்த குழந்தை அம்மாவின் இடுப்பில் உட்கார்ந்துகொண்டு அடம்பிடித்தால், என் மேல ஒட்டிக்கிட்டா, ரொம்ப ஏங்கிப் போயிருக்கா என்று இடுப்பிலேயே சுமக்காதீர்கள். குழந்தைகள் சுதந்திரமாக வளர அனுமதியுங்கள். அதே சமயம் ‘உன்மீது என் அன்பு குறைவதில்லை’என்ற உணர்வை வெளிப்படுத்திக் கொண்டே இருங்கள்.
எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை என்று குழந்தைக்கு வலிந்து சோறூட்டி தூங்கச் சொல்வதும், வீடியோ கேம்ஸ், கார்ட்டூன்ஸ் பார்க்க போனைத் திணித்துவிட்டு உங்கள் வேலையை மட்டும் பார்ப்பதும் செய்யவே கூடாத விஷயங்கள்.
குழந்தைகளைப் பொருளாகப் பார்க்காதீர்கள். அவர்களிடம் பொருட்களைத் திணித்துவிட்டு உங்கள் வேலையைப் பார்க்கப் போகாதீர்கள். அப்படிச் செய்தால் அக்குழந்தை ஒழுங்காக வளராமல் போகலாம். அது குழந்தைக்கும் பெற்றோருக்கும் சமூகத்துக்கும்தான் ஆபத்து'' என்று பிருந்தா ஜெயராமன் தெரிவித்தார்.
ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போதும், தியானம் செய்யும் போதும் கவனம் சிதறாமல் மனம் ஒன்றிச் செய்யும் செயலை குழந்தை வளர்ப்பிலும் பெற்றோர் கடைபிடிக்க வேண்டும்.
க.நாகப்பன், தொடர்புக்கு: nagappan.k@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT