Last Updated : 10 Jun, 2019 04:02 PM

 

Published : 10 Jun 2019 04:02 PM
Last Updated : 10 Jun 2019 04:02 PM

அவர்களைப் புறக்கணிக்காதீர்கள்!- மன நோயாளிகளைப் பேண ஆலோசனை சொல்கிறார் மருத்துவர் அசோகன்

சம்பவம் 1:

மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்த சம்பவம் இது. 80 வயது முதியவர் ஒருவர், கையில் தடி அருகில் ஒரு சாப்பாட்டுப் பொட்டலத்துடன் 2 நாட்கள் அமர்ந்திருக்க அங்குள்ளவர்கள் தாத்தா என்ன இப்படியே உட்கார்ந்திருக்கீங்க? என்று விசாரித்துள்ளார்கள்.

 

 

அப்போதுதான் அவர் சொல்லியிருக்கிறார் என் மகனுடன் வந்தேன்பா இருப்பா வந்திடுறேன்னு சொல்லிட்டுப் போனான். இன்னும் வரலை என்று கம்மிய குரலில் சொல்லியிருக்கிறார். அங்கே இப்படி நடப்பது வழக்கமென்பதால் மருத்துவமனை ஊழியர்களுக்குத் தெரிந்துவிட்டது மகன் வரவே மாட்டான் என்று. உடனே சட்ட நடவடிக்கைகளை முடித்து அவரை ஒரு காப்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவம் 2:

சென்னை, அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் நடந்த சம்பவம் இது. மீனாட்சியம்மாளை வேலூர் மக்கம் ஒரு கிராமத்திலிருந்து அவரது மகன், மகள்கள் அழைத்து வந்துள்ளனர். அன்பாகப் பேசி அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முதல் மாதம் அவரை வந்து பார்த்துச் சென்றனர். இரண்டாம் மாதமும் வந்து பார்த்துச் சென்றனர். ஆனால், அதன் பின்னர் வரவே இல்லை. அவர்கள் கொடுத்த தொலைபேசி எண் தவறு, வீட்டு முகவரி போலி. மீனாட்சியம்மாள் சில மாதங்களில் இறந்தே போய்விட்டார்.

முதுமையும், தீரா நோயும் மட்டுமல்ல மனநோயும் உறவுகளைப் புறக்கணிக்கும் செயலை ஊக்குவிக்கிறது. பொருளாதாரம் என்றெல்லாம் காரணம் சொன்னாலும்கூட இதன் பின்னால் இருப்பது சுயநலம் மட்டுமே. நாளை நமக்கேகூட அதே உடல் நோயோ, மனநோயோ வரலாம். அதுவும் முதுமை நிச்சயம் வந்தே தீரும். அதனால் நோயாளிகளைப் புறக்கணிக்காமல் இருப்போம்.

பேயும் அல்ல சூனியமும் அல்ல..

மனநோயாளிகளை இன்னமும் கிராமப்புறங்கள் பேய் பிடித்தவர்கள், பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்றுதான் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஆனால், உண்மையில் அவர்களை எந்தப் பேயும் பிடிக்கவில்லை, பில்லி சூனியம் ஏவல் என எதுவும் ஆட்கொள்ளவில்லை. அவர்கள் சாதாரண மன அழுத்தம் தொடங்கி பைபோலார் டிஸ்ஆர்டர், மனப்பிறழ்வு எனப் பல்வேறு விதமான கொடூர மனச்சிதைவு நோய் வரை ஏதாவது ஒன்றில் சிக்கியிருக்கலாம்.

நோயாள் பீடிக்கப்பட்டவரின் வீரியத்தை வன்முறையை வைத்து அவருக்கு பேய் பிடித்துவிட்டது என்று கிராமங்கள் இன்னும் தீர்மானிக்கின்றன.

 

 

ஆகஸ்ட் 6 2001-ம் ஆண்டு மனநோயாளிகளின் வரலாற்றில் ஒரு கருப்பு தினம். அந்த கருப்பு நாள் தமிழகத்தில்தான் அரங்கேறியது. மனநோயாளிகளை பேய்கள் ஆட்கொண்டிருப்பதாக எண்ணி அவர்களை நாகூர் ஏர்வாடி தர்காவில் சங்கிலியால் கட்டி வைத்ததன் விளைவு 28 மனநோயாளிகள் தீ விபத்தில் சிக்கி கருகி உயிரிழந்தனர். ஏற்கெனவே தங்களைச் சுற்றி நடப்பதறியாது உயிராவது எஞ்சியிருந்த நிலையில் இருந்த அவர்கள் அன்று உயிர் கருகும் வலியை மட்டும் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.

இத்தகைய கொடூரம் நடக்க முழுக்க முழுக்க அவர்களின் குடும்பத்தாரே காரணம் என்று சொல்ல வேண்டும். ஒரு ஆண் இயல்பாக ஓடி ஆடி உழைத்துத் தரும் வரை அவரை குடும்பத் தலைவன் என குடும்பம் கொண்டாடுகிறது. ஒரு பெண் வீட்டையும், வீட்டாரையும் கவனித்துக் கொள்ளும் வரை இல்லத்தரசி என சமூகம் போற்றுகிறது. இருபாலரும் புத்தி பேதலித்து பாதிக்கப்பட்டால் அவர்களை சுமையாக, குப்பைத்தொட்டியாகவே குடும்பமும் சமூகமும் கருதுகிறது. அதன் விளைவாகவே எங்காவது கொண்டு தள்ளிவிட வேண்டும் என்று இப்படிப்பட்ட இடங்களில் தள்ளிச் செல்கின்றனர். விளைவு 23 உயிர்கள் சாம்பலானது.

மனநோயாளிகளைப் பேணுவது எப்படி?

மனநோயாளிகளைப் பேணுவது குறித்து 'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்காக மனநல மருத்துவர் அசோகனிடம் ஆலோசனை கேட்டோம்.

''முதலில் மனநோய் குறித்து மக்களுக்கு மற்ற நோய்களைப் போல் விழிப்புணர்வு வேண்டும். வேலைச்சுமை இல்லை வேறேதும் பிரச்சினை காரணமாக குறுகிய காலத்துக்கு ஏற்படும் மன அழுத்தம் கூட மனநோய் தான். ஆனால், ஆரம்ப காலத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டால் மன அழுத்தத்திலிருந்து எளிதில் விடுபட்டுவிட இயலும்.

வீட்டில் யாருக்கேனும் மனநோய் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால் முதலில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். இப்போதெல்லாம் அரசு மருத்துவமனைகளிலேயே மனநல சிகிச்சை சிறப்பாகக் கிடைக்கிறது. அவருடைய நோயின் தீவிரம் பொறுத்து அவருக்கு நீண்ட கால சிகிச்சை தேவையா? அல்லது குறுகிய கால சிகிச்சை தேவையா என்பதை மருத்துவர்கள் முடிவு செய்வார்கள்.

 

மருந்து, மாத்திரைகளை நிச்சயமாக யாராவது ஒருவர் பொறுப்புடன் பராமரித்து வழங்க வேண்டும். ஏனென்றால் பாதிக்கப்பட்டவர்கள் தாமாகவே முன்வந்து மாத்திரைகளை உட்கொள்வார்களா என்பதை உறுதியாகச் சொல்ல இயலாது. ஒருவேளை அவர்கள் ஒழுங்காக மாத்திரைகளைச் சாப்பிடாவிட்டால் நோய் தீவிரமடையும். அந்த மாதிரியான நேரங்களில் அவர்களை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஊசி மூலம் மருந்தை செலுத்தச் செய்வது நலம்.

நோய் தீவிரமாக இருப்பவர்கள், வெளியில் இருந்தால் அவர்களால் மற்றவர்களுக்கு ஆபத்து நேரலாம் என்ற நிலையில் இருப்பவர்களை மருத்துவர்களே மருத்துவமனையில் அனுமதித்துவிடுவார்கள்.

மருத்துவமனையில்தான் அனுமதித்துவிட்டோமே என ஒருமுறைகூட எட்டிப் பார்க்காமல் இருப்பது என்பதே புறக்கணிப்பு. மனநோயாளிகளுக்கு மருந்து எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் உறவுகளின் அன்பும் அரவணைப்பும்.

ஒரு மனநோயாளி நோயிலிருந்து மீளும் விதம் மூன்று விதமாகப் பிரிக்கப்படுகிறது உள்ளார்ந்த மீட்சி (Internal Recovery) செயல்திறன் மீட்சி (Functional Recovery) சமூக மீட்சி (Social Recovery).

முதல் நிலை மீட்சி மருத்துவர்களாலேயே தர இயலும். முறையான மருத்துவம, தொடர் சிகிச்சை மருத்துவரின் கண்காணிப்பு ஆகியனவற்றின் மூலம் ஒரு மனநோயாளி நிச்சயமாக பூரண குணமடைய இயலும். இரண்டாவதாக அந்த ஆணோ அல்லது பெண்ணோ பழையபடி வேலை செய்ய இயல வேண்டும். பழைய நிலைக்கு பழைய வேலையில் அவரால் தொடர இயல வேண்டும். இது அந்த நபர் மீண்டும் தன்னை தொழிலில் ஈடுபடுத்திக் கொள்ளும்போது மெதுவாகச் சீரடையும். காலப்போக்கில் அவர் தொழிலிலும் பழைய நிலைக்குத் திரும்புவார்.

மூன்றாவதாக சமூக மீட்சி. இதற்கு குடும்பத்தினரும், சுற்றத்தினரும்தான் உதவி செய்ய வேண்டும். மனநோயிலிருந்து மீண்டவரை நீ பைத்தியம் பிடித்து இருந்தாய், இனிமேலாவது ஒழுங்காக இருப்பாயா?, உன்னை நம்பலாமா? போன்ற கேள்விகளால் புறக்கணிக்காமல் இருக்க வேண்டும். நம்மைப் போல் அவர்களும் சமூகத்துடன் ஒட்டி வாழ அனுமதிக்க வேண்டும்.

இந்த உலகில் எல்லோருக்கும் தரமான வாழ்க்கைக்கான உரிமை இருக்கிறது. அதை யாரும் யாருக்கும் இலவசமாகத் தர வேண்டாம். நான் தான் உயர்ந்தவன், நான் தான் அறிவாளி என்ற எண்ணம் இல்லாமல் இருந்தாலே அடுத்தவரின் வாழ்க்கைத் தரம் அவர் வசமே இருக்கும். உண்மையில் இத்தகைய சுய பெருமைகூட மனநோய்தான்.

பொறுமை அவசியம்..

மனநோயாளிகளைப் பேணுவதில் பொறுமை மிகவும் அவசியம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் சுயநலம் பெருகிவிட்டது. அதுவும் பொருளாதார அடிப்படையிலான சுயநலம் ஓங்கிவிட்டது. அதனால்தான் சொந்தபந்தங்களே மனநலம் பாதிக்கப்பட்டோரை வெறுத்துக் கைவிடுவது வழக்கமாகிவிட்டது.

ஒரு பெண் தனது கணவர் போதைப்பழக்கத்தால் மனநோயாளி ஆகிவிட தன்னால் முடிந்தவரை சிகிச்சை பார்த்திருக்கிறார். ஆனால், இரண்டு குழந்தைகளை வளர்த்தெடுப்பதா? அல்லது கணவனைப் பேணுவதா? என்ற கேள்வி வந்தபோது பிள்ளைகளே என முடிவெடுத்து கணவரை ரயிலில் ஏற்றிவிட்டு அடுத்த ஸ்டேஷனில் தான் இறங்கிவிட்டதாக என்னிடம் ஒருவர் சொன்னார்.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. சில குடும்பங்களில் இதுமாதிரியான சிக்கல்கள் இருப்பதும் உண்மைதான். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அரசு மனநலக் காப்பகங்களில் இலவசமாக சிகிச்சை வழங்கப்படுகிறது. அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தங்கள் உறவினர் தீவிர நோயிலிருந்து மீளும்வரை அங்கு சிகிச்சை கொடுக்க ஏற்பாடு செய்யலாம். அதைவிடுத்து மனநோயாளிகளைப் புறக்கணிப்பது என்பது எந்தக் காரணத்தைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள இயலாததே.

அரசு மருத்துவமனைகளில் மனநல மருத்துவர்கள் எண்ணிக்கை குறைவு என்பது போன்று சில தனியார் மையங்கள் போலி செய்திகளைப் பரப்புகின்றன. வட இந்தியாவில் வேண்டுமானால் இந்த நிலை இருக்கலாம் ஆனால், இங்கு அத்தகைய நிலை இல்லை.

என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு ஆதங்கம் இருக்கிறது. அது, மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை படிக்கும்போதே மனநல மருத்துவப் பாடத்தை தேர்வுக்கு கட்டாயமாக்க வேண்டும். இது மருத்துவ மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்''.

இவ்வாறு மருத்துவர் அசோகன் கூறினார்.

தொடர்புக்கு:bharathi.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x