Published : 17 Mar 2018 09:19 AM
Last Updated : 17 Mar 2018 09:19 AM
ஒ
ரு கணம் இப்படி கற்பனை செய்யுங்கள். தட்சிண மேரு (தென்னக இமயம்), ப்ருகத் ஈஸ்வரம் (பெரிய ஈஸ்வரம்) என்றல்லாம் அழைக்கப்படும், வானளாவ நிற் கும் தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறை விமானம் பொன் வேயப்பட்டு தகதகவென ஜொலித்தால் எப்படி இருக்கும்?
ஆச்சரியமாக உள்ளதா ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரமாண்டமான இந்த விமானம், மா மன்னன் ராஜராஜ சோழனால், தங்கம் பூசிய தகடுகள் போர்த்தப்பட்டு சூரிய ஒளியில் ஒளிர்ந்து கொண்டு இருந்தது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் அதன் தொடர்ச்சியாகவும் இந்திய பெருநிலப்பரப்பின் சமூக, பொருளாதார, வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த மன்னனும் தஞ்சையும் பெரிய கோயி லும் தற்போது மீண்டும் முன்னரங்குக்கு வந்திருப்பது வேறு சில காரணங் களுக்காக.
தஞ்சை பெருவுடையார் கோயிலில், சில நாட்களுக்கு முன்னர், தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் விசாரணை அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, 50 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிருந்து களவாடப்பட்ட 2 சிலைகள் குறித்த விசாரணைக்கு உயிரூட்டியுள்ளது.
இக்கோயிலைக் கட்டிய மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் பட்டத்தரசி உலகமாதேவி ஆகியோரின் உருவச் சிலைகள், தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனி யார் அருங்காட்சியகத்தில் உள்ளன.
இந்த முதல் தகவல் அறிக்கை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெரிய கோயிலில் இருந்த விலை மதிப்புமிக்க சிலைகள் ஆபரணங்களின் எண்ணிக்கையைப் பற்றியும் அதன் பெருமைகளையும் அறியும் ஆர்வத்தை தூண்டிவிட்டதோடு மேலும் பல மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் என்றும் எதிர்பார்க் கப்படுகிறது.
பெரிய கோயில் கல்வெட்டுகள் மூலமாக அக்கோயில், ஒரு விலை மதிப்புமிக்க கருவூலம் என்பதை உணர முடிகிறது. தானும் தனது உறவினர்களும் அமைச்சர்களும் கோயிலுக்கும் இறைவனுக்கும் கொடையாக அளித்தவற்றை மாமன்னன் ராஜராஜன், எதிர்கால சந்நதியினர் தெரிந்து கொள்ளும் நோக்கில் கல்வெட்டில் அனைத்தையும் பதிவு செய்துள்ளார்.
ராஜராஜன், தனது 25-ம் ஆட்சி ஆண்டில், 3083 பலம் எடை கொண்ட செப்பு, 2926.50 கழஞ்சு (1 கழஞ்சு என்பது 5.33 கிராம், அதாவது 1949 பவுன் தங்கம்) பொன்னை அளித்து தங்க முலாம் பூசிய செப்புத் தகடுகளைக் கொண்டு விமானத்துக்கு பொன்வேய்ந்தான் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆனால், அந்த மாபெரும் தங்கப் போர்வை எப்போது, எப்படி மறைந்தது என்ற புதிருக்கு இன்றளவும் விடை தெரியவில்லை.
அப்போது, ஸ்ரீபலி பூசைக்காக பலிதேவர் திருமேனி ஒன்றையும் தாமரை வடிவிலான ஸ்ரீபலித் தாலத்தையும் தந்துள்ளார். அதற்கடுத்த ஆண்டில் பொன்னாலான ஷேத்ரபாலர் திருமேனியையும் அதே ஆண்டில் இறைவனுக்குரிய நெற்றிப்பட்டங்கள் தளிகை (நைவேத்ய பாத்திரம்) மண்டை, கெண்டி, ஒட்டுவட்டில், தட்டம், கலசம், படிக்கம், குறுமடல் (விபூதி மடல்) ஆகியவற்றையும் பொன்னால் செய்து தந்துள்ளார் ராஜராஜன்.
இவற்றை, சோழ வரலாற்றறிஞரும் கல்வெட்டியலாளருமான குடவாயில் பாலசுப்ரமணியன், தன்னுடைய ‘இராஜராஜேச்சரம்’ என்ற ஆய்வு நூலில், ராஜராஜனின் கொடைகளை, கல்வெட்டுகள், செப்பேடுகளின் வழியே ஆதாரங்களுடன் பதிவு செய்துள்ளார்.
ராஜராஜன், தனது 29-ம் ஆட்சியாண்டில், தாராபிஷேகத்துக்காக தாமரைத் தாள் வெட்டில், திருமுடி, பொன்னின் கொடி போன்ற மங்கலச் சின்னங்களை பொன்னால் செய்தளித்துள்ளார். சேர, பாண்டிய மன்னர்களை வென்று திரும் பியபோது நிறைய பொன் பொருட்கள், அணிகலன்களை தந்துள்ளார்.
மேலை சாளுக்கிய மன்னனான சத்யாச்ரயனை வென்று திரும்பியபோது, பொன்னால் ஆன 20 பூக்களையும் அதி அற்புதமான தாமரைப்பூ ஒன்றையும் செய்து தந்துள்ளார். இதன் மொத்த எடை 87.593 கிலோ தங்கமாகும்.
ராஜராஜ சோழனாலும் அவனது சுற்றத்தாராலும் வழங்கப்பட்ட கொடைகளின் எடை மற்றும் மதிப்பை மிகவும் துல்லியமாக கல்வெட்டுகளில் அவர் பதிந்துள்ளார். மற்றொரு கல்வெட்டில், அவர் தந்த தங்கத்தாலான 30 அணிகலன்களில் 277 பவளங்களும், 173 வைரங்களும், 19,613 முத்துகளும் இருந்ததை அறியமுடிகிறது. இதன் மொத்த எடை 882 கழஞ்சு ஆகும்.
மேலும், அவர் கோயில் மூலவரான சிவலிங்கப் பெருமானுக்கு பொன்னா லான வீரப்பட்டம் ஒன்றையும் திருப்பட்டிகை ஒன்றையும் அளித்துள்ளார். 435 பவளங்கள், 27 வைரங்கள், 30 பளிங்குகளைக் கொண்ட இவற்றின் எடை 6.802 கிலோ. அதே ஆண்டில் 3.901 கிலோவுக்குச் சமமான 53 பொன் ஆபரணங்களை அளித்துள்ளார்.
மற்றொரு கல்வெட்டைக் கொண்டு அவர், 95.277 கிலோ எடையுள்ள வெள்ளிப் பாத்திரங்களை இறைவனுக்கு அளித்துள்ளதை அறியமுடிகிறது. அத்துடன், 2 வாசுதேவர் வெள் ளித் திருமேனிகளையும் 23 செப்புத் திருமேனிகளையும் கோயிலின் வழிபாட்டுக்காக வழங்கியுள்ளார்.
இதைவிடவும் முக்கியமாக, சோழப் பேரரசின் ஆளுகைக்குட்பட்ட 118 ஊர்ச்சபைகள் மூலமாகவே பெரிய கோயில் அலுவலர்களை நியமித்துள்ளார். சோழ மண்டலத்தில் உள்ள மக்களுக்கு ஊர்ச்சபைகள் மூலமாக தஞ்சாவூர் பெரிய கோயிலின் பணியாளர்களை நியமிக்கும் உரிமையும், அதன் சொத்துகளைப் பாதுகாக்கும் பொறுப்பும், உரிய பங்கேற்பும் இருந்தன.
கோயில் அலுவலர்கள் பொருளும் நிலமும் உடையவர்களாகவும் நல்ல உறவினர்களைக் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். நிர்வாகத்தில் ஏதேனும் தவறுகளோ, இழப்போ ஏற்பட்டால், அதற்கான பொறுப்பு ஊர்ச் சபையினுடையது என்பதும் இந்த இழப்பை ஈடுசெய்ய வேண்டியது மக்களின் ஒட்டுமொத்த பொறுப்பு எனவும் வரையறுத்தார் மன்னர்.
ஆயிரம் ஆண்டுகள் நெடிய வரலாற்றில், பெரும் படையெடுப்புகளில் எல்லாம் தப்பிய, இக்கோயிலின் விலைமதிப்புமிக்க தெய்வத்திருமேனிகளும் ஆபரணங்களும் சுதந்திர இந்தியாவில் எளிதாக சிதைந்தும் மறைந் தும் போயுள்ளதுதான் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT