Published : 24 Mar 2018 08:36 PM
Last Updated : 24 Mar 2018 08:36 PM

யானைகளின் வருகை 150: கிருஷ்ணமூர்த்தி என்கிற யானை டாக்டர்

நைஜில் விலங்குகள் நலம் குறித்த ஆராய்ச்சிக்காக நிறைய நாடுகளுக்கு சென்றிருக்கிறார். இந்தியாவில் இவரின் அமைப்பு இதுவரை சுமார் ஒரு லட்சம் தெருநாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்துள்ளது. ரேபிஸ் (வெறிநாய்க்கடி) இல்லாத மாவட்டமாக நீலகிரி அறிவிக்கப்பட இருக்கிறது. அதற்கு பெரும்பங்கு வகித்தது இவர் அமைப்பின் சேவையே.

இவரிடம் வீட்டு விலங்குகள் குறித்து மட்டுமல்ல, காட்டு விலங்குகள் சிகிச்சை குறித்தும் கேட்காத காட்டிலாகா அதிகாரிகளே இல்லை. இந்தியாவில் எந்த மூலையில் இருந்து முதுமலைக்கு வரும் கால்நடை மருத்துவர்களும் இவரிடம் ஆலோசனைகள் கேட்காமல் சென்றதில்லை. குறிப்பிட்ட வனவிலங்குக்கு இந்த நோய் என்றால், அதை குணப்படுத்தும் மருத்துவர் எந்த நாட்டில் எங்கே இருக்கிறார். அவர் பெயர் என்ன என்பதை தெளிவுறக் கண்டுபிடித்து செல்லும் ஆற்றல் பெற்றவர்.

குழந்தை மாதிரி வெள்ளந்தியாகப் பேசுபவர். ஒரு காலத்தில் நீலகிரி காடுகளில் குறிப்பாக முதுமலையில் கானுயிர்களுக்கு நடக்கும் திரைமறைவு அட்டூழியங்கள் இவர் மூலமே மீடியாக்கள் மூலம் வெளிச்சம் போடப்பட்டது. புதுசு, புதுசாய் வந்த சூழல் ஆர்வலர்கள் இவர் மூலமே பல விஷயங்களை தெரிந்துகொண்டு அதை வர்த்தக ரீதியாக செயல்படுத்த ஆரம்பித்தார்கள். அதில் உழன்ற அரசியல், காழ்ப்புணர்ச்சிகள் இவரின் மீது பலரும் புழுதி வாரித் தூற்றும் செயல்களை செய்தன.

இவருடன் அன்றிலிருந்து இன்று வரை பழகிய காலகட்டத்தில் பார்க்கிறேன். இவர் அன்றைக்கு பார்த்த மாதிரியேதான் இருக்கிறார். பழைய மாதிரியேதான் பேசுகிறார். இன்றைக்கும் நூற்றுக்கணக்கான விலங்குகளை வைத்து பராமரித்து வருகிறார்.

ஆனால் இவரால் பயனடைந்தவர்களில் பலருக்கு இவரே வேம்பு. ஏனென்றால் அவர்கள் வனத்துறையுடன் வைத்திருக்கும் வண்டவாளத்தை எல்லாம் தண்டவாளத்தில் ஏற்றி விடும் வண்ணம் அனைத்தும் அறிந்தவராக உள்ளார். அப்படித்தான் ஒருவர் ஒரு முறை என்னிடமே வந்தார். அவரும் ஒரு என்ஜிஓதான். ஒரு நாள் கூட அவர் ஒரு பூனைக்குட்டியை வளர்த்துக்கூட நான் பார்த்ததில்லை. ஆனால் வனத்துறை ஒப்பந்தங்கள் நிறைய எடுத்துள்ளார் என கேள்விப் பட்டிருக்கிறேன். அதை விட ஒருநாள் கூட செல்வராஜ் அடிக்கடி சுட்டிக்காடும் செக்சன் 17 நிலங்களை பற்றி பேசியதேயில்லை. அந்த அளவுக்கு அதிகாரிகளுடனும், எஸ்டேட் நிர்வாகங்களிடமும் அவருக்கு நெருக்கம் உண்டு.

அப்படிப்பட்டவர், ‘எதற்கு நைஜில் பற்றி செய்தி வெளியிடுகிறீர்கள். அவர் எவ்வளவு சம்பாதித்து விட்டார் தெரியுமா? வெளிநாட்டிலிருந்து எவ்வளவு ஃபண்டு வருகிறது தெரியுமா?’ எனக் கேட்கிறார்.‘நைஜிலுக்குத்தானே? வெளிநாட்டு ஃபண்டுதானே. வரட்டுமே! அவர் வைத்து பராமரிக்கும் கழுதைகள் நூறாக இருப்பது ஆயிரமாக ஆகட்டுமே. அதனால் என்ன? அதில் அவர் ஒரு பங்கு இல்லை; நூறு பங்கு சாப்பிட்டாலும் தப்பில்லை. ஏனென்றால் அவர் அந்த விலங்குகள்பால் காட்டும் அர்ப்பணிப்பு அப்படி. அதற்கு எத்தனை விலை கொடுத்தாலும் தகும்!’ என்கிறேன். ‘நான் சொல்றது சொல்லீட்டேன். பிறகு உங்கள் இஷ்டம்!’ என்று சொல்லிச் சென்றவர்தான். இன்றைக்கு வருடம் பதினைந்து ஆயிற்று என் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.

இப்போதும் வனவிலங்குகள் குறித்து ஏதாவது தகவல் எங்கிருந்தாவது வந்தால் நான் அதைப் பற்றி ஆலோசிப்பது நைஜில், செல்வராஜ் போன்ற ஒரு சிலரைத்தான். கூடலூர் எம்.எஸ்.செல்வராஜூம் அப்படித்தான். இவர் மட்டும் இல்லாவிட்டால் கூடலூர் செக்சன்-17 நிலங்களை பகாசூர கம்பெனிகள் வைத்து முறைகேடு செய்து கொண்டிருப்பது வெளியுலகுக்கே தெரிந்திருக்காது. அவரை போய்ப் பார்க்குமாறு முதலில் பணித்தவர் அப்போது குமுதத்தில் தலைமை நிருபராக இருந்த மணா. அதைத் தொடர்ந்து கோவை மார்க்சிய அறிஞர் ஞானி வீட்டில் சந்தித்தேன்.

அந்த காலகட்டத்தில்தான் ஞானி மூலமாகவே தாய்த்தமிழ் பள்ளி, அதன் நிறுவனர் தியாகு, இயற்கை வேளாண்மை நம்மாழ்வார் போன்றவர்கள் அறிமுகமானார்கள். அந்த சமயம் நம்மாழ்வார் இவ்வளவு பிரபலம் அடையவில்லை. இயற்கை வேளாண்மை குறித்து பேசுவார். காகம், குருவி எச்சங்கள் போடுவதை குறித்து பேசுவார். ஒரு மஞ்சள் பையை வைத்துக் கொண்டு ஞானி வீட்டுக்கு வருவார். அவரை அங்கு வைத்துத்தான் பேட்டி கண்டிருக்கிறேன்.

அப்போதே வெகு ஊக்கமான சமூக செயற்பாட்டாளராக செல்வராஜையே அறிந்திருந்தேன். மற்றவர்கள் எல்லாம் இவர் முன்னே சும்மா என்பதே என் எண்ணம். எந்த இடத்திலும் விளம்பரம் தேடிப் போக மாட்டார். தேடி வருபவர்களுக்கு தகவல் சொல்வார். ஒரு நாள் போன் செய்தால் ஜார்கண்டில் இருப்பார். இன்னொரு நாள் டெல்லி நாடாளுமன்றத்தின் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக சொல்வார். பிறிதொரு முறை போன் செய்தால் மங்களூரில் கர்நாடகா-தமிழ்நாடு விவசாயிகளை இணைத்து செமினார் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறேன் என்பார்.

கூடலூரில் அவர் இருக்கும் நாட்கள் மிகக்குறைவு. போன் செய்யும்போது கோவையில் இருந்தால், அவரை சந்திக்க நேரம் கேட்டால், ‘நீங்கள் எதற்கு தோழர் வருகிறீர்கள். நானே உங்களை தேடி வருகிறேன்!’ என்று வந்துவிடுவார். 18 ஆண்டுகளுக்கு முன்பு எப்படிப் பார்த்தேனோ அப்படியே இருக்கிறார். பொருளாதாரத்தில் மட்டும்தான் அப்படி.

மற்றபடி ஸ்ரீமாவோ போராட்டக் கள செயல்பாடுகள் முன்னை விட வேகம். ஸ்ரீமாவோ பண்டாரநாயகா ஒப்பந்தப்படி இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வந்த இந்தியா வம்சாவழிகள் பிரச்சினை முதற்கொண்டு ஜார்கண்டில் உள்ள பழங்குடிகள் பிரச்சினை வரை கையிலெடுத்து போராடுகிறார். அந்த விஷயங்களையெல்லாம் எனக்கு கொண்டு வந்து சேர்த்துக் கொண்டே இருக்கிறார்.

அவரின் சங்கப் போராட்டங்களைத் தாண்டி, நான் எடுக்கும் செய்திகளைத் தாண்டி இந்த நாட்டில் நடக்கும் சமூக சீர்கேடுகளைப் பற்றி பல இடங்களில், பல நேரங்களில் கவலையுடன் நான் உண்மையாக விவாதிக்கும் நண்பர்களில் செல்வராஜூம் ஒருவராகவே இருக்கிறார். இவர்களைப் போன்றவர்கள்தான் 32 வயது வரையிலும் பொம்மை வடிவிலேயே எனக்குள் உலா வந்த காட்டு யானைகளை நிஜ யானையாக்கி அதற்குண்டான புரிதலை ஊட்டியவர்கள். அதற்காக அவர்கள் சொல்லுவதையெல்லாம் வேதவாக்காக எடுத்துக் கொ்ணடு எழுதி அச்சுக்கு அனுப்பி விடுவதில்லை. அவர்களின் மூலம் கிடைத்த புரிதலை, அது சம்பந்தப்பட்ட விஷயங்களை எப்போதாவது வாசிக்கும் போது அதனுடன் வைத்து பொருத்திப் பார்த்துக் கொள்ளவும் செய்கிறேன். அதில் எழும் சந்தேகங்களை திரும்ப எழுப்பி அவர்களிடம் விளக்கம் கேட்கிறேன்.

அவற்றையெல்லாம் அது குறித்த என்னுடைய அனுபவங்களுடனும் ஒப்பிட்டு மனதளவில் தெளிவு கொண்டே அதை பதிவேற்றம் செய்கிறேன்.

இப்போதும் கூட பாருங்கள். இந்த தமிழகத்தில் யானைகளுக்கென சிறப்பு மருத்துவர் யாராவது இருக்கிறார்களா? வனத்துறையில் பணியாற்றிய மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி 99 யானைக் குட்டிகளை தன் அனுபவத்தில் காப்பாற்றியிருக்கிறாராமே உண்மையா?’எனவும் கேட்கிறேன்.

நைஜில் ஓட்டர் சொல்கிறார்: ‘டாக்டர் கிருஷ்ணமூர்த்தியை பொறுத்தவரை நல்லவர்தான். கால்நடை மருத்துவத்துறையிலும் வல்லவர்தான். தன் வாழ்நாளையே முதுமலையில்தான் கழித்தார். பணி ஓய்வு பெற்ற பின்பு அவருக்கு அரசு பெங்களூரில் உள்ள இந்தியன் இஸ்டிட்யூட் ஆப் சயின்ஸில் ஏதோ ஒரு கவுரவப் பதவியை அளித்திருந்தது. முதுமலையில் அவர் ஆரம்பத்தில் காடுகளில் குழிகளை வெட்டி யானை பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார். அதில் பிடிபடும் யானைகளுக்கு மயக்க ஊசி போடுவது, அதில் பட்ட காயங்களுக்கு மருந்திட்டு சிகிச்சையளிப்பது, காடுகளில் குட்டி யானைகள் கிடைத்தால் முகாமிற்கு கொண்டு வந்து சிகிச்சை கொடுத்து பராமரிப்பது போன்றவற்றை எல்லாம் அனுபவப்பட்ட மாவூத்தன்கள் உதவியோடு இவரே செய்து வந்தார். அதில் நிறைய யானைகள் இறந்திருக்கின்றன. சில யானைகள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன.

ஒரு கட்டத்தில் வனத்துறைக்கு டெபுடேஷனில் அனுப்பப்படும் கால்நடை மருத்துவர்களுக்கெல்லாம் இவரே பயிற்சி கொடுக்கும் அளவுக்கு அனுபவ அறிவில் வளர்ந்துவிட்டார். பழங்குடி மக்களிலோ, பாரஸ்ட்டுக்காரங்களுக்கோ ஒரு வயித்து வலி, தலைவலி என்றால் கூட இன்ன மருந்து சாப்பிடு என்று சொல்லி, அதை வாங்கி சாப்பிட்டாலோ, இவரே தயாரித்து வைத்திருக்கும் நாட்டு மருந்தை விழுங்கினாலோ உடனே அவர்களுக்கு சீக்கு குணமாகி விடும். காட்டிற்குள் ஒரு மருத்துவரைப் பார்ப்பதே அரிது. அந்த இடத்தில் இவர் வந்து அகப்பட்டார். மக்கள் மட்டுமல்ல; இங்குள்ள யானைகள், பூனைகள் கூட அவருடன் ஐக்கியமாகியே இருந்தன. நமக்கு மனதளவில் நல்லது செய்பவர்களின் அறியாமையால் விளையும் தீமையை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள் இல்லையா?

- மீண்டும் பேசலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x