Published : 14 Mar 2018 09:09 AM
Last Updated : 14 Mar 2018 09:09 AM
முன்பெல்லாம் சுற்றுலாப் போகலாம் என்றதும் எல்லோரும் ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானலுக்கு செல்ல ஆசைப்படுவார்கள். ஆனால், இந்தத் தலைமுறையினர் மனிதர்கள் நடமாட்டமே இல்லாத அடர்ந்த காட்டுக்குள் செல்ல ஆசைப்படுகிறார்கள்.
வாகன அணிவகுப்பு, சுற்றுச்சூழல் சீர்கேடு, மக்கள் தொகைப் பெருக்கம் ஆகியவற்றால் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு ஆகிய கோடை வாசஸ்தலங்களுக்கு மவுசு குறைந்தது. அதனால், வசதிபடைத்தவர்கள், ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள், சூழலியல் ஆர்வலர்கள் காட்டுக்குள் சென்றால் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் எனக் கருதி, தற்போது விடுமுறை நாட்களில் அடர்ந்த வனப்பகுதிக்கு ட்ரெக்கிங், சூழல் சுற்றுலாச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
பெருகும் ட்ரெக்கிங் கிளப்புகள்
உள்ளூர் நகரவாசிகள் மட்டுமல்லாது, வடமாநில இளைஞர்கள் முதல் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் வரை ட்ரெக்கிங், சூழல் சுற்றுலா அழைத்துச் செல்வதற்காகவே சென்னை, மதுரை, கோவை, கன்னியாகுமரி ஆகிய முக்கிய சுற்றுலா நகரங்களில் ட்ரெக்கிங் கிளப்புகள் செயல்படுகின்றன.
காட்டுக்குள் அமைந்துள்ள சில டீ எஸ்டேட் நிறுவனங்களும் காசு பார்க்க இந்தச் சூழல் சுற்றுலா வணிகத்தை கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் தனியாக ட்ரெக்கிங் அழைத்துச் செல்கின்றனர். ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ.2,500 முதல் ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். சிலர் வனத்துறையிடம் முறையான அனுமதி பெற்றும், பெரும்பாலானவர்கள் அனுமதி பெறாமலும் சரியான அனுபவம் இல்லாத ஆட்களைக் கொண்டு அழைத்து செல்கின்றனர்.
சமீப காலமாக பள்ளிக் குழந்தைகளையும் இந்த வரிசையில் சேர்த்துள்ளனர். காடுகளைப் பற்றி குழந்தைகளுக்கு புரிதல் ஏற்படுத்துவதாகக் கூறி காட்டுக்குள் செல்வோம், சூழல் சுற்றுலா என்று அவர்களையும் அடர்ந்த வனப்பகுதிக்கு பாதுகாப்பும், வழிகாட்டுதலும் இல்லாமல் அழைத்துச் செல்கின்றனர்.
சில சூழலியலாளர்கள் நல்ல நோக்கத்துக்காக அழைத்துச் செல்கின்றனர். அவ்வாறு சென்னையில் செயல்பட்ட ட்ரெக்கிங் கிளப் நிறுவனம்தான் சூழல் சுற்றுலா என்ற பெயரில் குழந்தைகள், இளைஞர்கள், மாணவர்கள் பலரை 3 குழுக்களாக குரங்கணி மலைக்கு வனத்துறை அனுமதியின்றி உள்ளூர் மலைவாழ் வழிகாட்டி உதவியுடன் ட்ரெக்கிங் அழைத்துச் சென்றனர்.
சுண்டியிழுக்கும் வன வளம்
பச்சைப்பசேல் புல்வெளிகள், செங்குத்தான மலைச் சரிவுகள், அடர்ந்த காட்டுக்குள் ஓடும் காட்டாறுகள், அருவிகள், அரிய வகை வன விலங்குகள், தாவரங்கள், பறவைகள் என தேனி, திண்டுக்கல் மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் ஒவ்வொன்றும் நகரத்தில் இருந்து செல்லும் மனிதர்களுக்கும், மாணவர்களுக்கும் மலைப்பை ஏற்படுத்துகின்றன.
இந்தக் கவர்ச்சி தூண்டிலில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி சமீப காலமாக வணிகரீதியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வனத்துறை, சில ஆண்டுகளுக்கு முன்பு காடுகள் பற்றிய புரிதலை எதிர்கால தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலே சூழல் சுற்றுலாவை அறிமுகம் செய்தது.
ஆனால், தற்போது வனத்துறை அனுமதித்த சூழல் சுற்றுலா இடங்கள், ட்ரெக்கிங் பாதைகளில் இவர்கள் செல்லாமல் செங்குத்தான மலைத் தொடர்கள், அடர்ந்த காப்பு காடுகள் உள்ளிட்ட அபாயகரமான பகுதிகளுக்கு நகரவாசிகளை ட்ரெக்கிங் அழைத்துச் செல்கின்றனர்.
திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை, ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைக்குதான் சூழல் சுற்றுலா, ட்ரெக்கிங் செல்வோர் விரும்பிச் செல்கின்றனர். இதில் மதுரை அழகர் கோயில், திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை, கொடைக்கானல், பெருமாள் மலை, தாண்டிக்குடி, பழநி மலை, தேனி மாவட்டத்தில் குரங்கணி, கொலுக்குமலை, மேகமலை, சூரியநல்லி, டாப் ஸ்டேஷன், சுருளி அருவி ஆகிய இடங்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டாக ட்ரெக்கிங், சூழல் சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குரங்கணி - கொழுக்கு மலையின் சிறப்பு
இதில் குரங்கணி மலைப் பகுதிக்கு மட்டும் ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் சென்று வருகின்றனர். போடியில் இருந்து மூணாறுக்கு 70 கி.மீ. கடந்து செல்ல வேண்டும். இதுவே குரங்கணி மலைப் பாதை வழியாக சென்றால் 14 கி.மீ. தொலைவில் மூணாறு சென்றுவிடலாம். மூணாறின் பின்பகுதியில் டாப் ஸ்டேஷன் சென்றுவிடலாம். அங்கிருந்து கேரளாவுக்குள் எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம். குரங்கணிக்கும், கொழுக்கு மலைக்கும் இடைப்பட்ட பகுதியில்தான் கடந்த 11-ம் தேதி ட்ரெக்கிங் சென்றவர்களில் 10 பேர் வரை தீக்கு இரையாகியுள்ளனர்.
கொழுக்கு மலை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள 70 டிகிரி செங்குத்தான சரிவுப் பகுதி. இங்கு உள்ள பருவநிலைகள் மனதுக்கு குதூகலத்தையும், அமைதியையும் ஏற்படுத்தும். இங்கு உள்ள புல்வெளிகள் ஒரு ஆள் உயரத்துக்கு காணப்படும். ஆனால், இங்கு காற்று ஒரே திசையை நோக்கி வீசாது. திடீர் திடீரென்று சுற்றி சுற்றி பலமாகவும் வீசும். இங்கு விளையும் டீ உலக சந்தையில் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஏற்கெனவே நிகழ்ந்த உயிரிழப்புகள்
குரங்கணி, சூரியநல்லி, டாப் ஸ்டேஷன் பகுதிகளில் சூழல் சுற்றுலா, ட்ரெக்கிங் செல்வதற்கு வனத்துறையே பாதை அமைத்துக் கொடுத்துள்ளது. இந்த இடத்துக்கு செல்வதற்கு அவர்கள் முறைப்படி வனத்துறையிடம் அனுமதி பெற்றிருந்தால் வேட்டை தடுப்புக் காவலர்கள், சூழல் சுற்றுலா காவலர்கள் மற்றும் வனத்துறையினரால் பயிற்சி பெற்ற உள்ளூர் மலைவாழ் மக்களை அனுப்பி வைத்திருப்பார்கள்.
ஆனால், இவர்கள் வனத் துறையினரிடம் முறைப்படி அனுமதி பெறாமல் சில கீழ் நிலை அலுவலர்களை சரிக்கட்டி, அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வழிகாட்டி உதவியுடன் கொழுக்கு மலைக்கு ட்ரெக்கிங் சென்றுள்ளனர். அங்கிருந்து திரும்பும்போதுதான் தீ விபத்தில் சிக்கியுள்ளனர்.
இந்த இடத்தில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்ததால்தான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுபோன்ற ட்ரெக்கிங் உயிரிழப்புகள் தாண்டிக்குடி, சிறுமலை, பெருமாள் மலை, மேகமலை, குரங்கணி, சுருளி அருவி ஆகிய பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக அதிகளவு நடந்துள்ளது. ட்ரெக்கிங் செல்லும்போது இறந்தால் அதற்குப் பல்வேறு காரணங்கள் கூறி அவை மறைக்கப்படுகின்றன.
ட்ரெக்கிங், சூழல் சுற்றுலாப் போர்வையில் காட்டுக்கு செல்பவர்கள் தாராளமாக வனவிலங்குகளையும், காடுகளையும் புகைப்படம் எடுக்கின்றனர். தீ மூட்டி சமையல் செய்கின்றனர். பிளாஸ்டிக் பைகளில் உணவுகளை எடுத்துச் செல்வதால் காடுகளில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கவர்கள், மது பாட்டில்கள் கிடக்கின்றன. அதனால், காடுகளைப் பற்றிய புரிதல் ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சூழல் சுற்றுலா தடம் மாறுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT