Published : 20 Mar 2018 09:33 AM
Last Updated : 20 Mar 2018 09:33 AM
கா
லத்துக்கேற்ப தன்னை புதுப்பித்துக் கொள்ளும் வல்லமை கொண்ட மக்கள் மொழிதான் பழமொழி. உண்மையில் அதுதான் தமிழின் ஆதிமொழி. அனுபவ மொழி, பாமரர்களுக்கான ஆறுதல் மொழி, சொல்லுக்குள் சுருங்கியிருக்கும் சூட்சுமம் என்று பழமொழியின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
எதுகை மோனையுடன், ஓசையுடன் ஒரு வரி, பல வரி, தொடர், அடுக்கு, இணை, எதிர்மறை, உவமை, உடன்பாடு என்று பழமொழியின் வகைகளும் நீளும். ஒவ்வொரு பழமொழிக்குள்ளும் ஒரு யதார்த்தக் கதை ஒளிந்திருக்கும். அது எந்தக் காலத்துக்கும் பொருந்துவதாக இருக்கும்.
“பழமொழி பொய்யின்னா பழையதும் சுடும்” என்பது பழமொழிக்கே உண்டான பழமொழி. பல மொழிகள் தாக்கினாலும் பழமொழிகளின் குணம், மணம், ஆழம் மாறுவதில்லை. தமிழுக்கு அழகு மகுடம் சூட்டும் இந்த பழமொழிகளை சேகரிப்பதையே தனது லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார் திண்டுக்கல் மெயின் ரோட்டில் பேக்கரி வியாபாரம் செய்து வரும் ‘பழமொழி ராமசாமி’.
அவரிடம் பேசினோம். அவர் பகிர்ந்தது: திண்டுக்கல்லுக்குப் பக்கத்தில இருக்கிற பாலம் ராசக்காபட்டிங்கிற கிராமம்தான் எனது பிறந்த ஊர். விவசாயக் குடும்பம். வயல்வேலையில அலுப்புத் தெரியாம இருக்க பெண்கள் கதை, பாட்டு, விடுகதை, சொலவம்-ன்னு நிறையச் சொல்லுவாங்க, பாடுவாங்க. கலகலப்பா இருக்கும்.
அவங்களோட பாமரத் தமிழ் பரவசமானது. 1977-ல் பேக்கரித் தொழிலை ஆரம்பிச்சோம். பேக்கரி வேலைகளுக்கு இடையில அம்மா சொன்ன சொலவடைகளை ஒரு நோட்டுல அப்பப்ப எழுதிவச்சேன். கிராமத்துக்குப் போனா பெரியவங்களப் பழமொழி சொல்லக் கேட்டு எழுதினேன்.
வட்டாரச் சிறுகதைகள், நாவல்கள், ஆய்வேடுகள்ல இருக்குற பழமொழிகளைத் தேடிப்பிடிச்சேன். இப்பிடித்தான் எனக்குப் ‘பழமொழிக் கிறுக்குப்’ பிடிச்சுச்சு. ஏறத்தாழ பதினஞ்சு வருச உழைப்பு. 50 ஆயிரத்துக்கும் மேல பழமொழி சேந்திருச்சு. இதை ஒரு நூலாக வெளியிடப்போறேன்.
ஒவ்வொரு பழமொழியும் தமிழுக்கான தமிழ் இனத்துக்கான அடையாளமாத்தேன் நான் பாக்குறேன். “அரிசியின்னு அள்ளிப் பார்ப்பாரும் இல்ல, உமியின்னு ஊதிப் பார்ப்பாரும் இல்ல”ன்னு ஒரு பழமொழி இருக்குது. இதுதான் இன்னைக்கிப் பழ மொழியோட நிலமை. இவ்வாறு கூறினார் ராசாமி.
வாய்மொழி மரபுகள்
பழமொழிகள் ஆய்வு பற்றி காந்தி கிராமப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒ.முத்தையாவிடம் கேட்டாம், ‘‘கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஆய்வு மையங்கள் செய்ய வேண்டிய பணியை தனி ஒருவராய் 50 ஆயிரம் பழமொழிகளைச் சேகரித்துச் சாதனை படைத்திருக்கிறார் ராமசாமி.
ஏட்டில் எழுதாப் பழமொழிகள்தான் தமிழரோட ஆதி வழக்காறு. ஒட்டுமொத்தத் தமிழின், தமிழர்களின் சொத்து. வாழ்க்கையை நெறிப்படுத்தும் மூத்தோர் அனுபவமொழி. அது மென்மேலும் வளர்க்கப்பட வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டும், ஆராயப்பட வேண்டும் என்பதுதான் பண்பாட்டு அக்கறையாளர்களின் எதிர்பார்ப்பு, விருப்பம்.
ஆய்வு மாணவர்கள் களத்துக்குச் சென்று பழமொழிகளைச் சேகரிக்க வேண்டும். இன்னும் கிராமங்களில் ஏராளமான பழ மொழிகள் புழக்கத்தில் உயிர்ப்போடு இருக்கின்றன. நமது வாய்மொழி மரபுகளைக் காக்க மாணவர்கள் களமிறங்க வேண்டும். அப்போதுதான் மக்கள் தமிழை, பண்பாட்டை வளர்க்க முடியும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT