Published : 07 Mar 2018 05:13 PM
Last Updated : 07 Mar 2018 05:13 PM
தமிழ் சினிமாவின் அந்த காலகட்ட லாஜிக்கை எல்லாம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் ஜீவகாருண்யம், உயிர்களிடத்தில் அன்பு, காட்டு உயிர்களின் முக்கியத்துவம் ஆகியவற்றை 'யானை வளர்த்த வானம்பாடி மகன்' மட்டுமல்ல 'நல்ல நேரம்' திரைப்படம் அன்றைக்கே பேசியிருக்கிறது என்பதை உணர முடியும்.
இன்றைக்கும் அந்த திரைப்படத்தைப் பார்க்கும்போது அந்த சின்னஞ்சிறு வயசிலேயே நம்மை அறியாமல் மிருகங்கள் மீதான பாசத்தை, குறிப்பாக யானைகள் மீதான பாசத்தை நமக்குள் ஊட்டியே வளர்த்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இந்தப் படங்களைத் தாண்டி இதே தேவர் பிலிம்ஸ் மற்றொரு காலகட்டத்தில் ரஜினியை வைத்து எடுத்த 'அன்னை ஓர் ஆலயம்' காட்டு மிருகங்கள் குறித்த அடுத்த கட்ட நிலைக்கு நம்மை கொண்டு சென்றிருக்கிறது.
இந்தப் படத்தின் முதல் காட்சியை நுட்பமாக பார்ப்பவர்கள் பாசம் பொங்கி விடுவர். பிஞ்சு யானைக்குட்டி ஒன்று தன் தாய் யானையின் மடியில் பால் அருந்தும் காட்சி. டைட் பிரேமில் அது காட்டப்படும்போது மலராத தாய்மை உணர்வு யாருக்கும் மலர்ந்து விடும். அப்படியான தொடக்கத்தில் காட்டு மிருகங்களை வேட்டையாடி சர்க்கஸ் கம்பெனிகளுக்கு விற்கும் வேட்டைக்காரனாக அறிமுகமாவார் கதாநாயகன் ரஜினி.
அதுவும் எப்படி? மிருகங்களுக்கெல்லாம் மோசமான மிருகமாகவே சித்தரிக்கப்படுவார்.
சிறுத்தைகளை, சிறுத்தைக் குட்டிகளை தேடித்தேடி துப்பாக்கியால் சுட்டு விரட்டி அவர் பிடிக்கும் காட்சிகள். பெரிய அகழிகள் வெட்டி யானைக்குட்டியை பிடிக்கும் காட்சிகள். மனதை என்னவோ செய்து விடும். தாயிடமிருந்து குட்டிகளைப் பிரித்து சர்க்கஸ் கூடாரங்களில் சேர்க்கும் ரஜினி, சக்சஸ் கிரேண்ட் சக்சஸ் என்று வெற்றி எக்காளமிடும் ரஜினி தன் தாய் ஊட்டி விடும் சாப்பாட்டைத்தான் சாப்பிடுவார்.
தாய் சொல்லுவார்: 'இத்தனை வயசாகியும், நான் ஊட்டி விட்டாத்தான் நீ சாப்பிடறே. அப்படியிருக்கையில் அந்த சின்னஞ்சிறு குட்டிகள் தாயில்லாமல் எப்படி பால் குடிக்கும்? அந்த குட்டிகளை கொண்டு போய் காட்டுக்குள்ள அதுக தாய்கிட்டவே சேர்த்துடுப்பா. இந்த பாவத்தொழில் வேண்டாம்பா. தாயை பிரிஞ்ச குட்டியும், குட்டியை பிரிஞ்ச தாயும் என்ன பாடுபடும்ன்னு ஒரு தாய்க்குத்தான் தெரியும்!' என்பார்.
ரஜினிக்குள் முகிழ்க்கும் மூர்க்கம். 'மனுசனோட மிருகத்தை ஒப்பிடாதீங்கம்மா. அதுக தன் குட்டியை தானே விழுங்கற ரகம். அதுகளுக்கு இந்த தாய்மை, பாசம், நேசம் உணர்ச்சிகள் எல்லாம் கிடையாது. குட்டிக தன்னை பிரிஞ்ச கொஞ்ச நேரத்துலயே அதுக எல்லாம் அதை மறந்துடும். நான் ஒண்ணும் பாவம் செய்யல. அதை நான் கொல்லலை. நான் புடிச்ச குட்டிகளை சர்க்கஸ் கம்பெனிகளுக்குத்தானே விற்கிறேன். அவங்க அதுக்கு நல்லா சாப்பிடக் கொடுத்து வித்தை கத்துக் கொடுத்து ஜனங்களை சந்தோஷப்படுத்தறாங்க.அதுல வர்ற வருமானத்துல அந்த மிருகங்களுக்கும் நல்லா சாப்பிடவும் கிடைக்குதுல்ல?' என்பார்.
அதற்கு தாய் சொல்லுவார்: 'அப்படியில்லடா. மாடுன்னா முட்ட வரும். நாய்ன்னா கடிக்க வரும். இப்படி ஒவ்வொரு மிருகத்துக்கும் வேறுபாடு இருக்கு. ஆனா அதுக எல்லாத்துக்கிட்டவும் இன வேறுபாடு இல்லாம காணப்படற ஒரே விஷயம் தாய்ப்பாசம்தான்டா!' என்பார். அதையும் மீறி, 'எனக்கு தொழிலுக்கு அப்புறம்தான் எல்லாம்!' என்று ரஜினி ஆணித்தரமாக சொல்லி விடுவார்.
அதே வேகத்தில் ரஜினி யானைக்குட்டி ஒன்றை பிடிப்பார். தாயிடமிருந்து பிரிப்பார். அந்த தாய் யானைக் குட்டியை தேடி அலையும். அது ஏற்றி வரப்படும் லாரியை உடைக்கும். குட்டியைக் காப்பாற்ற முயற்சி செய்யும். துப்பாக்கியால் சுட்டு அதை விரட்டிவிட்டு குட்டியை கொண்டு வந்து சர்க்கஸ் கம்பெனியில் ஒப்படைப்பார்.
இடையில் குட்டியைப் பிரிந்த தாய் யானையை விரட்டி விடும்போது அதனிடம் மகனைக் காப்பாற்ற வந்த தாய் அகப்பட்டுக் கொள்வாள். அதை விரட்ட முடியாது ரஜினி தான் வேட்டைக்கு வைத்த பொறியிலேயே கால் அகப்பட்டுக் கொண்டு தவிப்பார். குட்டியைப் பிரிந்த தாய் யானை, ரஜினியின் தாயை மிதித்துவிடும். ஜீப்புகளில் பறந்து வந்த மற்ற வேட்டைக்காரர்கள் மற்றும் வனத்துறையினர் துப்பாக்கியால் வேட்டு சத்தம் எழுப்பி அந்த யானையை விரட்டி ரஜினியையும் மீட்பார்கள்.
அப்போது குற்றுயிராகக் கிடக்கும் தன் தாயை பிடித்துக் கொண்டு அழுவார் ரஜினி. 'ஒரு பிள்ளையை இழந்த தாயோட கொதிப்புதான் உன்னை உன் தாயிடமிருந்து பிரிச்சிருச்சு!' என்று சொல்லும் தாய், 'கடைசியா ஒண்ணு கேட்பேன் நீ செய்வியா?' எனக் கேட்பார்.
'என்ன செய்யணும் சொல்லும்மா. உன்னை இந்த கதிக்கு ஆளாக்கின இந்த யானைக்கூட்டத்தையே ஒண்ணுமில்லாம சுட்டுத்தள்ளட்டுமா? அதோட இனத்தையே கூண்டோட ஒழிச்சு தள்ளட்டுமா?' என ஆவேசம் பொங்குவார் ரஜினி.
'இல்லப்பா இனிமேல் நீ இந்த பாவத்தொழிலை செய்யக்கூடாது. அந்த தாய் யானைகிட்ட எப்படியாச்சும் அந்தக் குட்டியானையை சேர்த்துடணும்!' என சத்தியம் பெற்றுக் கொண்டே இறப்பார் தாய்.
இந்த இடம் பாசப் பிணைப்பின் உச்சகட்டம். பிறகு சர்க்கஸில் விடப்பட்ட குட்டி யானை தப்பிப்பதும், அது செல்லுமிடமெல்லாம் லூட்டியடிப்பதும், அதை தாஜா செய்து பிடித்துக் கொண்டு போய் தாய் யானையிடம் சேர்ப்பதும்தான் கதை. இதற்குள் சினிமாத்தனமான பல விஷயங்கள் இருந்தாலும், அந்தக் காலகட்டத்தில் சினிமா ரசிகர்களாக இருந்தவர்களை யானைகள் குறித்த அடுத்த ஒரு படி நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது.
யானை வளர்த்த வானம்பாடி மகனில் ஒரு காட்டு யானைக்கும், காட்டில் வளர்க்கப்படும் மற்ற யானைக்குமான விஷயம் ஒரு கணப்பொழுது மட்டும் புலப்படுத்தப்படுகிறது. நல்லநேரத்தில் தனக்கு உதவி செய்த மனிதனுக்கு காட்டு யானை உதவி, அவை வளர்ப்பு யானைகள் போல் அந்த மனிதனுடனே அவன் வீட்டிற்கு வந்து அவனுக்கு சேவை செய்து, அதிலொரு யானை தன் உயிரையே தியாகம் செய்யும் கதை பின்னப்படுகிறது.
இதுவெல்லாம் யானையை 'பிள்ளையாரப்பா' என்று சொன்னால் துதிக்கையை தூக்கி ஆசீர்வதித்து விட்டு சென்று விடும் என்ற மூட கற்பனையை விதைக்கும் தன்மையில் ஆனாலும் கூட, முதல் இரண்டு கதைகளில் உயிர்களிடத்து அன்பு என்பது மிக நன்றாகவே போதிக்கப்படுகிறது.
அதுவே ரஜினியின் அன்னை ஓர் ஆலயத்தில் வேட்டை, சர்க்கஸ், யானையின் தாய்மை, காடு, காட்டு விலங்குகள் எப்படியிருக்கும் என்பது ஓரளவுக்கேனும் சித்தரிக்கப்பட்டு அடுத்த நிலைக்கு சென்று விடுகிறது.
அதையும் தாண்டி சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'கும்கி' முந்தைய திரைப்படங்களையும் ஓரங்கட்டி அசலான காட்டு வாழ்க்கையையும், புதிதாக ஊருக்குள் வரும் கொம்பனையும், அதனால் ஏற்படும் உயிர்ச் சேதங்களையும் உணர்ச்சி பூர்வமாக காட்டி விடுகிறது.
'இத்தனை ஆண்டு காலமாய் வராத கொம்பன் சில வருடங்களாக மட்டும் ஏன் வருகிறான். காடுகள் அழித்து நாடாக்கப்பட்டு வரும் கோலம். பாட்டன், பூட்டன் அரிவாளை வச்சே கொம்பனை விரட்டின நிலை!' எல்லாம் பழங்குடி சமுதாயம் இதில் பேசுகிறது.
காடுகளையும், கானுயிர்களையும் காப்பதாகச் சொல்லும் காட்டிலாகாவினர் அங்கே காட்டின் காவலர்களான பழங்குடிகளை எப்படி நடத்துகிறார்கள், அவர்களை காட்டை விட்டு விரட்டுவதில் எந்தளவு குறியாய் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் கூட அனாயசமாக போகிற போக்கில் வீசிவிட்டுச் செல்கிறது.
இப்படியான கற்பிதங்கள் திரைப்படங்கள் மூலமாக 1971 தொடங்கி நேற்று வரை எனக்குள் மட்டுமல்ல, நம் சமூகத்தில் அன்றைக்கு சிறுவர்களாக இருந்த இன்றைய வயோதிகர்களுக்குள்ளும் ஏற்றப்பட்டுள்ளது தெளிவு. அது நம் ரத்த நாளத்தில் ஏற்றப்பட்டதா? நம் சந்ததிகளின் ஜீன்களுக்குள்ளும் ஏற்றப்பட்டதா?
இதையெல்லாம் அவரவர் அவரவர் அனுபவங்களிலிருந்து உரசிப் பார்த்தால் அதிலிருந்து கிடைக்கும் புதிய ஒளி இதுவரையிலான யானைகளின் அறிதலை பற்றி மட்டுமே உணர்த்தும் என்பது எனது அபிப்ராயம். அப்படியானால் புரிதல் என்பது திரைப்படங்களின் மூலமாக இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறது.
எப்படி?
- மீண்டும் பேசலாம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT