Published : 24 Mar 2018 09:36 AM
Last Updated : 24 Mar 2018 09:36 AM
வாகன ஓட்டிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்படும் மோதலைத் தடுக்க அபராதம் விதிக்கும் முறையில் மாற்றம் செய்ய போக்குவரத்து போலீ ஸார் திட்டமிட்டுள்ளனர். இதற் காக புதிதாக 300 கையடக்க சிறிய வகை இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளன.
சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதிக்கின்றனர். இந்த அபராதத்தை போக்குவரத்து ஆய்வாளர் (ஆர்.ஐ), உதவி ஆய்வாளர்கள் மட்டுமே வசூல் செய்ய முடியும். அபராதம் விதிப்பதற்காக 340 பழைய கையடக்க இயந்திரங்கள், 100 புதிய இயந்திரங்கள் என 440 இயந்திரங்கள் சென்னை போக்குவரத்து போலீஸாரிடம் உள்ளன. பொதுவாக விதிமீற லில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இருந்து போக்குவரத்து போலீஸார் அபராதத் தொகையை வாங்கும்போது, பிற வாகன ஓட்டி களுக்கு அது கையூட்டுப் பெறுவதுபோல் தோன்றுவதாக போக்கு வரத்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது போலீஸாருக்கு கெட்டபெயரை ஏற்படுத்துவதாக உணரப்பட்டது. சில போலீஸார் அபராத தொகையை வசூல் செய்து, அதற்கான ரசீதை கொடுப்பதில்லை என்று வாகன ஓட்டிகள் மத்தியில் குற்றச்சாட்டு உள்ளது. நேற்று முன்தினம் வேளச்சேரியில் இதுபோன்ற குற்றச்சாட்டால்தான் வாகன ஓட்டி களுக்கும் - போக்குவரத்து போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இப்பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த போக்குவரத்து போலீஸார் முடிவு செய்துள்ளனர். அதன்படி அபராதத் தொகையை வசூல் செய்வதற்காக புதிதாக 300 நவீன இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளன. இனி அபராதத் தொகைக்கான ரசீது இயந்திரம் மூலம் கொடுக்கப்படும். சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகள் அபராதத்தை வங்கி, அஞ்சலகம் அல்லது ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலமும் கட்டலாம். ‘பேடிஎம்’ முறையிலும் அபராதத்தை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து கூடுதல் காவல் ஆணை யர் அருண் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT