Published : 26 Mar 2018 03:26 PM
Last Updated : 26 Mar 2018 03:26 PM
டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பற்றி தொடர்ந்தார் நைஜில்.
''அப்படித்தான் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சிகிச்சையளித்தும் பயனளிக்காது இறந்த விலங்குகளையும் பாவித்தார்கள் எல்லோரும். இப்போது வனத்துறைக்குள் வந்து போகும் கால்நடை மருத்துவர்கள் யாவரும் வனவிலங்குகளுக்கு இவரின் வைத்திய முறையையே பின்பற்றுகிறார்கள். மக்னா மூர்த்தி முதுமலையில் கவலைக்கிடமான நிலையில் இருந்தபோது இவரிடம் பயிற்சி பெற்ற கால்நடை மருத்துவர்கள் குழுதான் அதற்கு சிகிச்சை செய்து வந்தது. அதே சமயம் வாரத்திற்கு ஒரு முறை நேரில் முதுமலை வந்து மக்னாவிற்கு சிகிச்சையளித்தார். காந்தி குட்டியானைக்கும் இதே நிலைதான். அதில் மருத்துவர்கள், வனத்துறைக்குள் ஈகோ யுத்தமும் நிகழ்ந்தது.
இவர் வாரம் ஒரு முறை ஒரு வித சிகிச்சை கொடுத்துவிட்டு மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்துச் செல்வார். மற்ற நாட்களில் அங்குள்ள மருத்துவர்கள் வேறு விதி சிகிச்சை கொடுத்து அதைப் பற்றி பத்திரிகைகளில் சொல்வார்கள். அதுவே பல முரண்பாடுகளை கொண்டிருக்கும். இப்படியான போட்டியில்தான் மக்னாவின் உடல்நலம் குன்றி கோர்ட்டு வரை விவகாரம் போனது. வெளிநாட்டு மருத்துவரும் வரவழைக்கப்பட்டார். அதிலும் அதிகார அரசியல் கலந்து வந்தது. அப்போது மட்டுமல்ல, இப்போது வரை வனவிலங்குகள் சிகிச்சை விஷயத்தில் இதுபோன்ற சர்ச்சைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
நம் நாட்டைப் பொறுத்தவரை யானை டாக்டர் என்று யாருமே கிடையாது. உலக அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வனவிலங்குகள் மருத்துவப்படிப்புகள் (Wild life medical institutions) கற்றுக்கொடுக்கும் கல்வி நிலையங்கள் சில உள்ளன. அங்கே யானைகளுக்கு என்று தனித்துறைகளும் உள்ளன. ஒட்டுமொத்தமாக வனவிலங்குகள் குறித்த மருத்துவம் படித்தவர்களும், அல்லது யானைகள் குறித்து தனிப்பாடம் எடுத்து மருத்துவம் படித்தவர்களும்தான் வனவிலங்குகள் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என உலக அளவில் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட சில மருத்துவர்களேனும் நம் நாட்டிற்கு வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு மேனகா காந்தி முயற்சி எடுத்தார்.
அதற்காக நம் அரசு செலவிலேயே சிலரை வெளிநாட்டிற்கு அம்மருத்துவம் படிக்கவும் அனுப்பி வைத்தார். அவர்கள் எல்லாம் படித்து தேர்ந்தும் விட்டார்கள். ஆனால் யாருமே இந்தியா திரும்பவில்லை. அவரவர் வெளிநாடுகளிலேயே செட்டில் ஆகி விட்டனர். இதை ஒரு முறை மீட்டிங்கில் மேனகா காந்தியே ஒரு மீட்டிங்கில் சொல்லி வேதனைப்பட்டதைக் கேட்டிருக்கிறேன். இதனால் இங்கே வனவிலங்குகள் மருத்துவம், சிகிச்சை முறைகள் குறித்த விஷயங்கள் மட்டுமல்ல, அவை ஏன் நோய்வாய்ப்படுகின்றன? ஏன் சாகின்றன? என்பது குறித்து கூட ஒரு தெளிவான புள்ளி விவரம் அளிக்கப்படுவதில்லை. அப்படி அளிக்கப்படும் விவரங்களும் வனத்துறையின், அதிகாரிகளின் தவறுகளை காப்பாற்றும் விதத்திலேயே அமைகின்றன!'' என்று வரிசைப்படுத்துகிறார் நைஜில் ஓட்டர்.
இவர் சொல்வது எவ்வளவு தூரம் உண்மை? என் அனுபவங்கள் மூலமே அதை ஆராதிக்கிறேன். இதை முழுமையாக ஆமோதிக்கவும் செய்கிறேன். அதற்கு காரணம் அடுத்தடுத்து நடந்த சில சம்பவங்கள். இதோ அதற்கு ஆதரவாக கட்டியங்கூறும் ஆழமான அழுத்தமான காட்சி ஒன்று.
19.10.2016 கோவை, பெரிய தடாகம் பகுதி பள்ளத்தில் பெண் யானை ஒன்று விழுந்து மயங்கிக் கிடந்தது. அது எழ முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்ததால், பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டு வனத்துறையினருக்கு தகவல் சொல்லப்பட்டது. வனத்துறையினர் வந்த போது, குறிப்பிட்ட அந்த யானையைச் சுற்றி 10க்கும் மேற்பட்ட யானைக்கூட்டம் பிளிறியபடி வலம் வந்தது. அவற்றை விரட்டிவிட்டு பத்திரமாக மீட்டு அங்கேயே அதற்கு முதலுதவி சிகிச்சையளித்தனர் வனத்துறை மருத்துவர்கள். 40 பாட்டில் குளுக்கோஸ் வாட்டர் மற்றும் வைட்டமின் மருந்துகள் என அதற்கு கொடுக்கப்பட்டது. அதன் பிறகு அதை பழக்கப்படுத்தப் பட்ட கும்கி யானை மற்றும் கிரேன் மூலம் தூக்கி வேறு சமதள இடத்தில் நிறுத்தினர் வனத்துறையினர். அது சில அடி தூரம் மட்டுமே நடந்தது. பிறகு திரும்பவும் நடக்க முடியாமல் படுத்துவிட்டது.
அதையடுத்து அந்த யானையை கிரேன் மூலம் மீண்டும் தூக்கி, டிரக்கரில் வைத்து அங்கிருந்து 15 கிமீ தொலைவில் உள்ள சாடிவயல் கும்கி யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டது. ''இந்த யானைக்கு 35 வயதிற்குள் இருக்கும். விஷச் செடியோ, பாலிதின் பைகளோ ஏதோ ஒவ்வாத பொருட்களை சாப்பிட்டு விட்டது. அதனால்தான் அது வயிற்றுவலியால் துன்பப்படுகிறது. சாப்பிடக்கூட முடியாமல் சோர்ந்து விழுந்து விட்டது!'' என்றுதான் வனத்துறை மருத்துவர்கள் தெரிவித்தனர். அதற்குரிய சிகிச்சையிலும் இறங்கினர்.
அப்போதும் கூட வனத்துறை மருத்துவர்கள் அது நோய்வாய்ப்பட்டதற்கு வயிற்று உபாதையே காரணம் என்று திரும்பத் திரும்ப சொல்லி வந்தனர். மேலும் சில நாட்கள் வனத்துறை முகாமிலேயே அதற்கு உணவும் மருத்துவ சிகிச்சையும் அளிக்க வேண்டும் என்றும், அது முழுக்க குணமானவுடனே காட்டுக்குள் விடப்படும் என்றும் தெரிவித்தனர்.
ஆனால் என்ன வேடிக்கை. மூன்று நாள் கழித்து 23.10.2016 அன்று அதிகாலை 4.30 மணிக்கு இந்த பெண் யானை ஓர் அழகான ஆண்குட்டியை ஈன்றது. அதையடுத்து பல்வேறு சர்ச்சைகளும் கிளம்பியது. இத்தனை வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள், அனுபவப்பட்ட கும்கி பாகன்கள் இருந்தும் ஒரு நிறைமாத கர்ப்பிணி யானை பற்றிய அறிகுறியைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் இருந்துள்ளனர். அந்த அளவுக்குத்தானா அவர்களின் நிபுணத்துவம் என வன உயிரின ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.
அந்த நேரத்தில் குட்டி ஈன்ற பெண் யானை பற்றி செய்தி சேகரிக்க சாடிவயல் சென்றிருந்தேன். காலை 8 மணியிலிருந்து இதோ வருகிறேன், அதே வருகிறேன் என்று போனில் சொல்லிக் கொண்டிருந்த வனத்துறை அதிகாரிகள், மருத்துவக்குழுவினர் யாரும் 12 மணி ஆகியும் எட்டிப் பார்க்கவில்லை. மீடியாக்கள் எந்த மாதிரியான கேள்வி கேட்கும்; அவர்களுக்கு என்ன சொல்லி சமாளிப்பது என்பதிலேயே அவர்கள் உழன்று கொண்டிருப்பதாக அங்குள்ள பாகன்களே வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
குட்டி ஈன்ற போது அருகில் இருந்து கவனித்த பாகன்கள் என்னிடம் பேசியபோது அந்த அனுபவத்தை கதை,கதையாய் விவரித்தார்கள்.
''நேற்று ராத்திரி இந்த யானை கட்டி வைக்கப்பட்ட இடத்திற்கு அருகில்தான் தூங்கிக் கொண்டிருந்தோம். அது குட்டி போடும் என்று நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. காலை 4.30 மணிக்கு குட்டி கத்திய சத்தம் கேட்டுத்தான் கண்விழித்தோம். பார்த்தால் அழகாக குட்டியை ஈன்று இப்படி நின்று கொண்டிருக்கிறது யானை. இந்த யானை பிடிக்கப்பட்டபோது வனத்துறை அதிகாரிகளிடமும் டாக்டர்கள்கிட்டவும் நாங்கள் அனுபவப்பூர்வமாக சொன்னோம்.
யானையோட வயித்துல குட்டி இருக்கு. இது கொஞ்சம் வயசான யானை. இந்த வயசில (45- 50 வயது இருக்கும் என்பது பாகன்களின் அனுமானம்) கர்ப்பம் தரிக்கிறது அபூர்வம். அப்படி கர்ப்பம் தரிச்சா அதற்கு தாங்கற சக்தி குறைச்சலா இருக்கும். அதுதான் யானை இப்படி படுத்திருக்கு. குட்டி போட்டா சரியாயிடும்னு சொன்னோம். அதை அவங்க யாருமே கேட்கலை. நேத்து பார்த்தா யானையோட மார்புல பால் சுரந்து நின்னுச்சு. அதையும் சொன்னோம். அது வேற ஏதாச்சும் காரணமா இருக்கும்னுட்டாங்க. என்னதான் இருந்தாலும் அதிகாரிங்க. எங்க சொல் அம்பலமேறுமா? கம்முனு இருந்துட்டோம். காலையில பார்த்தா குட்டி போட்டு எழுந்திரிச்சு நிக்குது!'' என வியப்பு மாறாமலே அவர்கள் பேசினார்கள்.
மீடியாக்காரர்கள் தொடர்ந்து போன் செய்து அழைத்த பின்பே இந்த யானைக்கு மருத்துவம் பார்த்த கால்நடை மருத்துவர் மனோகரன் வந்தார். அவரிடம் இந்த சர்ச்சைகள் குறித்து கேள்வி எழுப்பியபோது, பல்டியடிக்காத குறையாக ரொம்பவுமே சமாளித்தார்.
''யானை ஏதாவது தேவையற்ற பொருட்களை உண்டிருக்கலாம். வேறு வயிற்று உபாதைகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இது கர்ப்பமாகவும் இருக்கலாம் என்றே முடிவு செய்து அதற்கேற்ப சிகிச்சைகளை கொடுத்தோம். ஆனால் கர்ப்பம் என்ற சந்தேகத்தை நாங்கள் மீடியாக்களிடம் வெளிப்படுத்தவில்லை. காரணம் அதை சொன்னால் அடுத்த கேள்வி எத்தனை மாதம் கர்ப்பம் என்று வரும். ஒரு வேளை வயிற்றில் கட்டி இருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அன்றைக்கு கர்ப்பம் என்று சொன்னீர்களே என்ற கேள்வி கேட்பார்கள். அதன் காதுமடல்கள் சுருக்கம், வாய்ப்பகுதி குழிவிழுந்த தன்மை எல்லாம் வைத்து பார்க்கும் போது இந்த யானைக்கு 45 வயது முதல் 50 வரை இருக்கலாம். யானையின் பேறுகாலம் என்பது 20 முதல் 40 வயதுக்குள் இருந்தால் அது ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு பிறகு என்றால் அதனால் நிற்க முடியாது. சோம்பி விடும். போதாக்குறைக்கு இதற்கு போதிய தீவனம் கிடைக்கவில்லை. எனவேதான் இது குழிக்குள் மயங்கி விழுந்திருக்கிறது. இன்னமும் 25 நாட்கள் இதனை முகாமில் வைத்து கண்காணித்து சிகிச்சைகள் அளிக்கப்படும்!'' என்றார்.
- மீண்டும் பேசலாம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT