Published : 17 Mar 2018 01:26 PM
Last Updated : 17 Mar 2018 01:26 PM
மகாபாரதப்போரில் துரோணச்சாரியின் கவனத்தைத் திருப்ப, அஸ்வத்தாமா என்ற யானை இறந்ததை முன்வைத்து, துரோணரின் மகன் அஸ்வத்தாமன் மரணமடைந்தான் என்பது போல தருமரைக் கூவச் செய்த கிருஷ்ணனின் சதிச்செயல் உரைக்கிறது.
யானைப் படையை குதிரைப்படையால் வெல்ல முடியும் என்பதை ஜீலம் நதி தீரத்தில் வென்று காட்டினார் அலெக்சாண்டர். போரஸ் மன்னன் தனது 200 யானைகள் கொண்ட படையுடன் கிமு 323-ல் அலெக்சாண்டரை எதிர்த்தான். பயந்து பின் வாங்கிய மெசபடோமிய மன்னன், இரவு ஆற்றைக் கடந்து வந்து போராஸின் படையைச் சுற்றி வளைத்து, மாவூத்தர்களைக் கொன்றான். யானைகள் குழம்பி ஓடின. அலெக்சாண்டர் வென்றார். என்றாலும் யானைப் படையின் சிறப்பு கண்ட அலெக்சாண்டர், (இந்த வரலாற்று, புராண தகவல்கள் ரமேஷ்பேடியின் நூலிலும் சொல்லப்பட்டுள்ளது) தோல்வியுற்ற போராஸைத் தனது நண்பனாக ஏற்று, நாட்டையும் திரும்பத் தந்தான். இது மகத்தான யானைகளின் தோற்றம் உருவாக்கிய மாற்றம்.
அர்த்த சாஸ்திரம் எழுதிய கெளடில்யர் யானை பிடிப்பது, பழக்குவது பற்றிய நுட்பங்களை எழுதியுள்ளார். யானைகளைச் சமவெளிகளிலிருந்து ஒழித்து விட்டு அவற்றை மக்கள் பயன்பாட்டுக்கான ஊர்களாக மாற்ற வேண்டும் என எழுதுகிறார். யானைகளைப் பொருள்கள் சுமக்கவும், போரிடவும் மன்னர்கள் பயன்படுத்திய காரணத்தால் வேட்டைக்காலக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்த யானை மாமிசம் உண்ணுதல் பாவம் என்று தடுக்கப்பட்டது. யானை இறைச்சி உண்பது சங்ககாலப் பாடல்களில் உள்ளது. இன்றும் நாகாலாந்து, மிசோராம் பகுதிகளின் பழங்குடி மக்கள் யானை இறைச்சி உண்கிறார்கள்.
கி.பி. 3 மற்றும் கி.பி. 4-ம் நூற்றாண்டுகளில் யானை வழிபாட்டுப் பொருளானது. வல்வினை போக்கும் விநாயகர் என்று வாதாபியிலிருந்து கணேச வழிபாடு தென்னகம் வந்தது. யானை முகத்தோன் உருவானதற்கு பார்வதி வழிகதை உண்டு. குளிக்கச் சென்ற பார்வதி தனக்கு காவல் கணமாக களிமண்ணால் ஓர் உருவம் செய்து வைத்ததாகவும், அதுவே கணேசன் என்றும், பார்வதியைக் காண வந்த சிவனையே கணமான கணேசன் தடுத்ததாகவும், கோபம் கொண்ட சிவன் அதன் தலையை வெட்டி வீசினார் என்றும், பின் சினம் தணிந்த சிவன் தன் மனைவியைச் சமாதானப்படுத்த வெட்டிய தலையைக் கொண்டு ஒரு கணத்தை உருவாக்கி அதையே காவலாளியாக்கினார். அதுவே கணேசர் என்கிறது புராணக்கதை.
மற்றொரு கதை சிவனும் பார்வதியும், காட்டில் சென்று கொண்டிருந்தனர். அங்கே யானைகள் புணர்வதைக் கண்டு உணச்சி வசப்பட்டுத் தாமும் புணர்ந்ததால் யானை போன்ற உருவத்துடன் பார்வதி ஒரு பிள்ளை பெற்றாள். அதுவே விநாயகர் என்கிறது என்றெல்லாம் சொல்லிச் செல்லும் நூலாசிரியர் ஒரு கட்டத்தில் மனிதன்- யானையை பழக்கிய விதத்திற்கு அடிநாதமாக ஒன்றைச் சொல்கிறார்.
''அடர்ந்த காட்டில் தன் இனத்திலிருந்து பிரிந்த யானைக்குட்டி ஒன்று தன் குடும்பத்தை தேடி இரவு பகலாக அலைகிறது. மேகம் கருத்து, வானம் மழை பொழிகிறது. இடியும், மின்னலும் அச்சுறுத்த மழை அருவியென கொட்டுகிறது. மெலிந்து ஓடிய சிற்றாற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கிறது. தண்ணீரில் கால்வைத்த இந்தக் குட்டியை தண்ணீரின் வேகம் இழுக்கிறது. தன் நிலை தடுமாறிய குட்டி நீரில் சறுக்கி விழுகிறது. நல்லவேளை. சமதளத்தில் ஓடியதால் நீரின் வேகம் குறைவு. குட்டி சமாளித்து எழுந்து நின்று, ஆற்றைக் கடந்து கரையேறியது. திசையறியாது தவித்தது. தூரத்தில் ஏதோ மெல்ல மெல்ல அசைந்து வருவது போல் தோன்றியது. பயந்து போய் நின்ற குட்டியின் அருகில் வந்தவை மேய்ச்சல் முடிந்து வந்த மாடுகள். அவை யானைக்குட்டியை சட்டை செய்யாமல் கடக்க, அந்த மந்தையை வேறு வழியில்லாமல் அந்த மந்தையை பின் தொடர்கிறது யானைக்குட்டி. மாடுகள் பட்டியில் போய் அடையத் தயங்கி, தயங்கி நின்றது இந்தக் குட்டி.
காலை விடிந்து வந்து பார்த்த கிராமத்து மக்கள் பட்டியில் ஒட்டி ஒரு யானைக்குட்டி நிற்பதைக் கண்டு முதலில் பயந்தனர். பின் அதன் அருகில் சென்று தயங்கியபடியே அதன் பின்புறம் தொட்டனர். சாதுவாக நின்ற குட்டியை தன் மாடுகளைத் தடவிக் கொடுப்பதைப் போல தடவிக் கொடுத்தனர். பின் சில நாட்களில் அது கிராம மக்களின் செல்லப் பிள்ளையாகிப் போனது. பிள்ளைகள் அதன் மீது ஏறி மேயப்போகும் மாடுகளுடன் காட்டுப் பகுதிக்கு சென்று வந்தனர். காட்டிலிருந்து வரும்போது அது விறகுக்கட்டைகளை கூட சுமந்து வந்தது. இப்படி கிராமத்தின் பயனுள்ள விலங்காக மாறிப்போனது. 4 ஆயிரம் ஆண்டுகள் முன்பு காடுகளை ஒட்டிய இந்திய கிராமங்களில் யானைகள் மனிதர்களுடன் நெருங்கிப் பழகிய வரலாறு இப்படித்தான் உருவாகியிருக்க வேண்டும்!'' என்று சொல்கிறார் நூலாசிரியர் ரமேஷ் பேடி.
இதைப் படிக்கும் போது யானை மனிதனுக்கான பழக்கம் இப்படித்தான் ஆரம்பமாகியிருக்க முடியுமா? காட்டு யானை நாட்டு யானையாக மாறியது ஒரு கால்நடைக்கூட்டத்துடன் வந்த குட்டியானையால் என்பது எந்த அளவு லாஜிக்காக ஒத்துப் போகிறது? அதற்கு முன்பு காடுகள் இல்லையா? காட்டுவாசிகள் இல்லையா? ஆதி மனிதன், அதன் நீட்சியாக வந்த பழைய கற்கால, புதிய கற்கால மனிதர்கள், காடுகளில் எப்படி வாழ்ந்தார்கள். அவர்கள் எடுத்த எடுப்பில் கால்நடை மேய்ப்பில் ஈடுபட்டார்களா? வேட்டையாடுதலில் ஈடுபட்ட போது அவர்கள் யானையை கொன்று இறைச்சியாக மட்டுமே புசிப்பதை மட்டுமே செய்து வந்தார்களா? யானைகளை பழக்கப்படுத்தப்படவில்லையா? நாட்டில் வாழ்ந்த மனிதர்கள் எப்படி உருவானார்கள். திடீரென்று அதில் உதித்து விட்டார்களா? என்றெல்லாம் நமக்குள் கேள்விகள் புறப்படுவதை தவிர்க்க முடிவதில்லை. இவர் சொல்வதைப் போலவே நடந்திருந்தாலும், அந்தக் காலத்தில் பழங்குடிகளும், நாட்டுப்புற மக்களும் ஒருவருக்கொருவர் தொடர்பே இல்லாமல் உருவானார்களா? தொடர்பே இல்லாமல் இருந்தார்களா? அதற்கு பின்புதான் யானைகளை / யானைக்குட்டியையே கண்டார்களா? என்று சிந்தனை விரிகிறது.
யானை என்கிற பிரம்மாண்ட உருவத்தைப் பற்றி பார்வையற்றவர்கள் என்ன யோசிப்பர்? அவர்கள் யானைகளை எப்படி உணர்வார்கள். அதன் வாலைப் பிடித்துப் பார்த்து அதுதான் யானையின் கால்கள், கால்களை பிடித்துப் பார்த்துவிட்டு அதுதான் உடல் என்றும், ஒரு யானைக்கு நான்கு உடல்களும், ஒரு காலும் உண்டு என்றும் சொன்னால் எப்படியிருக்கும்? அப்படித்தான் யானைகளை அறிந்தவர்கள், புரிந்தவர்கள், யானைகளுடன் நெருக்கமான வாழ்க்கை உணர்ந்தவர்கள் இதை நிச்சயம் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை ஆய்வாளரின் அனுபவ ஆய்வுக்கு எட்டிய தூரம் வரையிலான கற்பனை என்றே எண்ணத் தோன்றுகிறது.
அந்தக் காலத்திலிருந்தே நம்மவர்களுக்கு ஒரு கோளாறு உண்டு. ஒரு விஷயம் அச்சில் வந்துவிட்டால் அதுதான் ஆவணம், அதுதான் உண்மை என்கிற முடிவு. நானே சில இடங்களில் போய் நேரில் சில சம்பவங்களைப் பார்த்திருப்பேன். அதில் கற்பனைக்கு எட்டாத விஷயங்கள் கூட நடந்திருக்கும். அதைப் பற்றி எல்லாமே எழுத முடியாது.
இந்த சமூகக் கட்டமைப்பு, சட்ட ரீதியான பிரச்சினை, பத்திரிகை தர்மம் கருதி பல விஷயங்களை விட வேண்டி வரும். அதைப் பற்றி நாம் எவ்வளவு சொன்னாலும் நண்பர்கள் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதுவே ஒரு பத்திரிகையில், செய்தியாளர் குறிப்பிட்ட சம்பவ இடத்திற்கு செல்லாமலே கற்பனை குதிரையை தட்டிவிட்டு ஏதாவது அபத்தமாக எழுதியிருப்பார். அதைத்தான் உண்மை என்று தொங்கிக் கொண்டிருப்பார்கள்.
'அப்படியில்லை, இப்படித்தான் இதில் நடந்தது!' என்று வாதிட்டால் கூட நம்ப மாட்டார்கள். 'என்னப்பா, அந்தப் பத்திரிகையில் அச்சில் வருகிறது என்றால் அவர்கள் ஆய்வு செய்யாமல், ஒரு முறைக்கு நாலு முறை சரிபார்க்காமலா செய்தி வெளியிட்டிருப்பார்கள்?' என திருப்பிக் கேள்வி கேட்பார்கள். அதுவே நான் எழுதிய செய்தி அச்சில் வந்த பிறகு காட்டினால் நம்புவார்கள்.
அதே சமயம் எத்தனை விஷயங்கள் தனி மனித, அரசியல், சமூக சூழ்நிலைக்காக வெளியுலகுக்கு இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது என்பதை எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் நம்ப மாட்டார்கள். இதுவும் ஓர் அறியாமை குணம்தான். படித்தவர்கள் மத்தியில் இருக்கும் அறியாமை. நம் மக்களைப் பொறுத்தவரை, அவர்களின் முழு நம்பிக்கையைப் பெற வேண்டுமானால், எந்த விஷயமாக இருந்தாலும் அச்சில் வரவேண்டும். அதுவே ஆய்வு நூல்கள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. அளவு கடந்த மரியாதை. தங்கத் தாம்பூலம் ஏந்திய மரியாதைதான்.
இது போலத்தான் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய யானை டாக்டர் என்ற நூலைப் பற்றி நம் இலக்கிய விரும்பிகள் 'ஆஹா, ஓஹோ' என்று பாராட்டினார்கள். நானும் அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை வாசித்துப் பார்த்தேன். என் அனுபவத்தில் உண்டான யானைகளுக்கும், அதில் பிரவேசம் செய்த யானை டாக்டர்களுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் அதைப் படிக்கப் படிக்க அயற்சியே மேலிட்டது. அதில் அவர் குறிப்பிட்டிருக்கும் யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, 1998களில் முதுமலையில் பிடிபட்ட மக்னா யானைக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களில் ஒருவரும் கூட.
- மீண்டும் பேசலாம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT