Published : 29 Mar 2018 09:30 AM
Last Updated : 29 Mar 2018 09:30 AM

தேனி மாவட்டத்தில் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் ‘நியூட்ரினோ ஆய்வுமையம்’ வளர்ச்சி திட்டமா?: எண்ணற்ற ஆராய்ச்சிகளுக்கு அடித்தளமாக அமையும் என விஞ்ஞானிகள் விளக்கம்

தேனி மாவட்டத்தில் ரூ.1500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வுமையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அண்மையில் அனுமதி வழங்கியது. இத்திட்டம் எண்ணற்ற ஆராய்ச்சிகளுக்கு அடித்தளமாகும் ஆக்கபூர்வமான திட்டம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த பிரபஞ்சத்தில் புரோட்டான், எலெக்ட்ரான், நியூட்ரான் துகள்கள் தவிர்த்து வேறு சில நுண்ணிய துகள்களும் இருக்கலாம் என சர்வதேச விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அத்தகைய துகள்களில் ஒன்றுதான் ‘நியூட்ரினோ’. நியூட்ரினோ என்பது கண்ணுக்கு புலப்படாத பிரபஞ்சம் எங்கும் விரவிக்கிடக்கும் அடிப்படை துகள். பிரிக்கவே முடியாத மிக நுண்ணிய துகள். அதற்கு உள் தோற்றமும் இருக்காது என்கிறார்கள். 1930-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்த துகள் பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் வேகமெடுக்கத் தொடங்கின. இத்துகளை ஆய்வு செய்வதால் சூரியன், பூமியின் தொடக்க கால ரகசியத்தையும், பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் தெரிந்து கொள்ளலாம் என்கின்றனர் இந்திய நியூட்ரினோ அறிவியல் ஆய்வுக்கூட விஞ்ஞானிகள் (Indian Based Neutrino Observatory).

ஆபத்து ஏற்படும் என அச்சம்

தேனி மாவட்டம், பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப் பகுதியில்தான் ‘நியூட்ரினோ’ ஆய்வுத் திட்டம் அமைய உள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் 25 அறிவியல் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் அடங்கிய குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நடந்தால் மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்லுயிர் பெருக்கத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

நியூட்ரினோ திட்டம் பற்றி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் கூறியதாவது: நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையை பல்லுயிர் பாதுகாப்பு பகுதியாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. அரசு கொடுத்த அறிக்கையில் கூட, இந்த பொட்டிப்புரம் பகுதி வைகையின் நீர்ப்பிடிப்பு பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹை-குவேக் (HiQuake) எனும் அமைப்பின் சமீபத்திய ஆய்வு அறிக்கையில், கடந்த 150 ஆண்டுகளில் 746 பூகம்பங்கள் மனிதர்களால் தூண்டப்பட்டவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நியூட்ரினோ அமைய உள்ள பகுதி ஏற்கெனவே அணைகளால் அழுத்தம் உண்டான பகுதி ஆகும். அந்த இடத்தில் 10 லட்சம் டன் முதல் 12 லட்சம் டன் வரை மலையை பிளந்து பாறைகளை உடைக்கப் போகிறார்கள். இதற்கு 6 லட்சம் கிலோ வெடிமருந்தை பயன்படுத்த உள்ளனர். அதனால், நிச்சயமாக பூகம்பம் ஏற்படும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு மாநில துணைச் செயலாளர் மோ.செங்குட்டுவன் கூறியதாவது: பெரியாறு அணையில் இருந்து தண்ணீர், இந்த நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு திருப்பி விடப் போகிறார்கள். 10 டிஎம்சி தண்ணீர் எடுத்தால் இந்த தண்ணீரை நம்பியிருக்கும் தேனி, மதுரை மாவட்டங்கள் கதி என்னாவது என்றார்.

ஆக்கபூர்வமான திட்டமே

இதுகுறித்து இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூட விஞ்ஞானி எஸ்.ஸ்டீபன் ராஜ்குமார் கூறியது: நியூட்ரினோ திட்டம் எதிர்காலத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளுக்கு அடித்தளமான ஆக்கபூர்வமான திட்டம்.

நியூட்ரினோ துகள்கள் சூரியனில் இருந்து நமக்கு நேரடியாகவும் கிடைக்கிறது. பூமியின் மேலே இருந்து வரக்கூடிய காஸ்மிக் கதிர்கள் (கோலக் திர்கள்), சுற்றுச் சூழலோடு வினைபுரியும்போதும் நியூட்ரினோ துகள்கள் உற்பத்தி ஆகின்றன. நமது உடலில் உள்ள பொட்டாசியமும் நியூட்ரினோ துகளை உருவாக்குகிறது. உலகத்துக்கு வெளிச்சம் தரும் ஒளித் துகள்களுக்கு அடுத்து அதிகமாக பரவிக் கிடப்பது நியூட்ரினோ துகள்தான். எதனுடனும் எளிதாக வினைபுரியாது. ஒவ்வொரு விநாடியும், பல ஆயிரம் கோடிகளுக்கு மேற்பட்ட நியூட்ரினோக்கள் நம் உடலை ஊடுருவி செல்கின்றன. இந்த நியூட்ரினோவை ஆராய்ச்சி செய்தால் பூமி உண்டான விதம், அதன் பரிமாணம், பூமியின் கட்டமைப்புகளை அறியலாம். மேலும், இதில் இருந்து பல புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தலாம்.

பிரபஞ்சத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வரும் நியூட்ரினோக்களை இரும்பால் ஆன கலோரி மீட்டர் உணர்கருவிகளை கொண்டு ஆராய்ச்சி செய்வதே இத்திட்டத்தின் முதன்மையான நோக்கம். இந்த இரும்பால் ஆன உணர் கருவி மிகப்பெரிய காந்த உணர் கருவியாக செயல்படும். கதிரியக்கம் உள்ள சூழலில் இந்த ஆராய்ச்சியே நடத்த முடியாது. எனவே, இந்த ஆய்வகம் எந்த கதிரியக்கத்தையும் வெளிப்படுத்தாது. இந்த ஆய்வகத்தில் உபயோகிக்கப்படும் உணர்கருவியானது 2 கண்ணாடித் தட்டுகளைத் துல்லியமான இடைவெளிவிட்டு ஒன்றன்மேல் ஒன்றை வைத்து அதின் ஓரங்கள் அடைக்கப்பட்டு அமைக்கப்படும். இந்த கண்ணாடித் தட்டுகளின் இடையே உணர் கருவியும், கட்டுப்பாட்டு கருவியும் நிறுவப்படும். மலைக்கு அடியில் இந்த குகைகளை அடைய சுமார் 2 கி.மீ. நீள சுரங்கப் பாதை அமைக்கப்படும். பாறைகளை குடைய பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளால் ஏற்படக்கூடிய அதிர்வுகள் 100 மீட்டருக்கு ஒரு மி.மீ. அதிர்வு மட்டுமே இருக்கக் கூடும். அதனால், 50 கி.மீ. தூரத்தில் உள்ள இடுக்கி அணைக்கு எந்த பாதிப்பும் வராது.

யாரும் வசிக்காத பகுதியில்..

இந்த திட்டம் பூமியைக் குடைந்து அமைக்கப்படவில்லை. யாருமே வசிக்காத பகுதியிலேயே தரைமட்டத்தில் 2 கி.மீ. தூரம் மட்டுமே மலையை குடையப் போகிறோம். அதனால், நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பே இல்லை. மேற்கு தொடர்ச்சி மலையில் வேறு எந்த பகுதிக்கும் இந்த திட்டத்தால் இடையூறு ஏற்படாது. கதிரியக்கம் இருந்தால் எப்படி அங்கு நிரந்தரமாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொள்வர். இந்த திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் வாயுவும் குளிர்சாதனப் பெட்டிகளில் பயன்படுத்தக் கூடியதுதான். பாறையில் அமைந்துள்ள ஆய்வுக்கூடம் நாலாப்புறம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும். விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கும், கட்டுமானத்துக்கு மட்டுமே நீர் தேவைப்படும். 10 டிஎம்சி நீர் தேவை என்பதெல்லாம் செவிவழி தகவல்தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

‘நியூட்ரினோ’ ஏன் தேனியில் அமைகிறது?

விஞ்ஞானி எஸ்.ஸ்டீபன் ராஜ்குமார் மேலும் கூறும்போது, ‘‘பூமியின் மேற்பரப்பில் காஸ்மிக் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள், ஒளித்துகள்கள் போன்ற கதிரியக்கங்கள் இருக்கும். நியூட்ரினோவும் இருக்கும். அதில் நியூட்ரினோவை ஆராய்ச்சி செய்ய மற்ற கதிர்களை மறைத்து நியூட்ரினோ மட்டும் அனுப்பக்கூடிய வடிகட்டி தேவை. இந்த வடிகட்டும் தன்மை, இயற்கையாகவே கடினமான பாறைகளுக்கு உண்டு. இந்த பாறைக்கு அடியில் உணர் கருவியை வைத்து நியூட்ரினோ துகள்களை வடிகட்டலாம். இதற்கு சரியான இடம் இந்தியாவில் இமயமலை சார்ந்த பகுதியிலும், அதற்கு அடுத்து மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த மலைப் பகுதியிலும் மட்டுமே உள்ளது. இமயமலை பாறைகள் அடிக்கடி நில அதிர்ச்சி ஏற்படக்கூடிய ஆபத்தான இடம். அதனால், சமநிலையுடன் இருக்கும் பொட்டிப்புரம் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைகிறது.

இந்த மலையில், ஆய்வு மையம் அமைக்க ஏற்ற வகையில் அதன் பரப்பு எல்லா திசையிலும் ஒரு கி.மீ. இருக்கிறது. அதனால், நியூட்ரினோ துகளை வடிகட்டி அனுப்ப சரியான இடம் என பொட்டிப்புரத்தை தேர்வு செய்தனர்’’ என்றார்.

மதுரையில் மாதிரி ‘நியூட்ரினோ’ மையம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் எதிரே உள்ள வடபழஞ்சி கிராமத்தில் உயர் ஆற்றல் இயற்பியல் ஆய்வு மையம் உள்ளது. இங்கு தேனியில் அமையக்கூடிய நியூட்ரினோவை போன்ற ஒரு மாதிரி நியூட்ரினோ அறிவியல் ஆய்வுக்கூடம் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏப்ரல் 2-வது வாரத்தில் பணிகள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதிரி நியூட்ரினோ அறிவியல் ஆய்வு மையத்தை அனைவரும் பார்வையிடலாம். இதில் 50 ஆயிரம் டன் இரும்புக்கு பதில் 85 டன் இரும்பைக் கொண்டு மாதிரி உணர் கருவி அமைக்கப்படுகிறது. இந்த ஆய்வு மையத்தில் மலை இல்லாததால் நியூட்ரினோ துகள் கிடைக்காது. ஆனால், நியூட்ரினோவின் மாதிரி செயல்பாட்டை எளிமையாக புரிந்துகொள்ளலாம். இந்த மையம் செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில் சாமானிய மக்களின் அச்சம் விலகும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x