Published : 12 Mar 2018 08:13 PM
Last Updated : 12 Mar 2018 08:13 PM

யானைகளின் வருகை 142: ரமேஷ் பேடியின் காடுகளின் அரசன்

 

கோவை சதாசிவம் கவிஞர். பின்னாலாடைத் தொழிலாளியாக திருப்பூரில் கசங்கியவர். தன் மண்ணில் உயிர்ப்போடு இருந்து இறந்த நதியான நொய்யலின் அவலத்தைக் கண்டு நெஞ்சு நோக அழுதவர். அந்த மண்ணில் கடைசியாக சிணுங்கும் ஒவ்வொரு உயிர்ப்பொருளுக்கும் அர்த்தம் தேடி அலைந்தவர். தான் அறிந்ததிலிருந்து ஒரு வகைப் புரிதலை ஏற்படுத்தி, அந்தப் புரிதலுக்கான தேடலை வாசிப்பின் மூலம் விரிவுபடுத்தி காடுகளுக்குள் நுழைந்து பார்த்து சூழலியம் பேசுகிறார். இவரின் எழுத்திலும், பேச்சிலும், செயலிலும் கூட சூழலியல் குறித்த அக்கறை வெளிப்பட்டாலும், அவரின் ஆதி, அந்தமாக இருக்கும் இலக்கியத்திலிருந்து, அதில் ஒளிரும் கவித்துவத்திலிருந்தே பேசுகிறார்.

அவரின் பேசுபொருள், பாடுபொருளில் எல்லாமே அழகியலும், துயரியலும் புதைந்தே கிடக்கிறது. ஆனால் இவர் நூலிற்கு முன்பே எனக்கு அறிமுகமான ரமேஷ் பேடி எழுதிய 'யானை காடுகளின் அரசன்' என்ற நூல் யானைகளைப் பற்றி அறிந்து கொள்ளும் மகுடம் என்றே சொல்ல வேண்டும். அதுதான் இந்திய, ஆப்பிரிக்கா காடுகளில் ஆதி, அந்தம் முதல் வாழ்ந்த/வாழ்ந்து வரும் யானைகளை பற்றிய முழுமையான விவரணையை எனக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு யானை ஆராய்ச்சியாளர்களுக்கும் அளித்தது. இவர் நூலிலிருந்து ஒரு சில பக்கங்களையாவது எடுத்தாளாமல் யானைகளைப் பற்றிய ஆய்வு நூல்களோ, புனைவு நூல்களோ இல்லை என்பதே உண்மை.

யானைகள் பற்றிய அறிமுகம், அதன் இனச்சேர்க்கையும், உய்விடம் குறித்த தகவல்கள், மனிதனுக்கு யானை சாதகமாக மாறிய தன்மை மற்றும் காலம், யானைகளின் வகைகள், அவற்றின் இனச்சேர்க்கை, கன்று ஈனும் முறை, ஊர்தி விலங்காக யானை மாற்றப்பட்ட கோலம், யானையின் பெருமைகள், இந்திய வரலாற்றில் மட்டுமல்லாது உலக வரலாற்றிலும் அணிவகுத்து நிற்கும் யானையின் பெருமைகள், இலக்கியப் பாடுபொருளில் யானைகள் காணப்படும் இடங்கள், யானை வேட்டையில் உள்ள சிரமங்கள், மதங்கொள்ளும் யானையின் தன்மை மற்றும் சூழல், யானை முத்துக்கள், யானைகளுக்கு ஏற்படும் இடையூறுகள், யானைக்கு ஏற்படும் நோய்களும் பணிகளும், இலக்கியக் குறிப்புகளில் யானையின் நோய்கள், தந்தத்தில் உண்டாகும் நோய்கள், யானையின் வாழ்நாட்கள், யானைகளின் வயதை அறிதல், யானையின் இறுதி நாட்கள், மனிதனை அச்சுறுத்தும் யானை, யானையின் தாய்ப்பாசம், மனிதனுக்கு பயன்படும் யானை, யானையை எப்படிப் பிடிப்பது, பழக்குவது, யானை மந்தைகளை கைப்பற்றுதல், ஆற்றுநீரின் வழியே யானை வேட்டை, யானை பிடிக்கும் திருவிழாக்கள், யானைகளுக்குப் பயிற்சி, கொட்டடியை விரும்புகின்ற யானைகள், யானையின் வணிகப் பயன்கள், வெள்ளை யானை, யானைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துதல், உலகெங்கும் யானைகள் வியாபாரம் நடக்கும் இடங்கள், யானைகளிடம் நல்ல குறி- கெட்ட குறி அடையாளங்கள், தந்தக் கலை வேலைப்பாடுகள், தந்தத்தில் உள்ள வேதிகப் பொருட்கள், யானை இறந்தாலும் ஆயிரம் பொன், யானையின் மாமிசம் சாப்பிடும் மனிதர்கள், நாடுகள், யானையின் மருத்துவப் பயன்கள் என லட்சக்கணக்கான ஆண்டுகளாக யானைகளின் வாழ்க்கையை நம் முன் விரித்து விடுகிறார் ரமேஷ் பேடி.

ரமேஷ் பேடி காலாபாக் என்ற ஊரில் 1915-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ம் நாள் பிறந்தவர். இவ்வூர் இப்போது பாகிஸ்தானில் உள்ளது. காடுகளை அடிப்படையாகக் கொண்ட குருகுல் காங்கிரி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, விடுதியில் தங்கிப் படித்தவர். காடுகளில் நடந்து வனவிலங்குகளைப் பற்றி அறிந்துகொள்வதில் மிக்க ஆர்வம் கொண்டிருந்துள்ளார். காடுகளின் அரசனான யானை அவரை மிகவும் ஈர்த்திருக்கிறது. தனது படிப்பை முடித்துவிட்டு லாகூருக்கு திரும்பியவர் 1947 இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது ஹரித்துவாரில் குடியேறினார். இங்கு அவர் யானைகளை பலவித கோணங்களில் கண்டார்.

மதங்கொண்ட யானை, பெண் யானையை அடையும் பொருட்டு மற்ற யானையுடன் போரிட்ட யானை, இனச் சேர்க்கை செய்யும் யானை, பள்ளத்தாக்குகளில் பிளிறும் யானைகள், குட்டியை ஈன்றும் யானைகள் என காட்டு யானைகளை பல நிலைகளில் தரிசித்திருக்கிறார். அவை அத்தனையும் கற்பனைக் கலப்பின்றி மிக அழகான அனுபவங்களாக விவரிக்கிறார். அதோடு புராண, பண்டைய, சரித்திர கால யானைகளைப் பற்றியும் தடம் புரளாமல் விவரித்துச் செல்கிறார். சாம்பிளுக்கு அவர் கூறும் சில தகவல்களைப் பாருங்கள்.

வால்மீகி முனிவர் காலத்தில் யானையும் மற்ற காட்டு விலங்குகளைப் போலவே வேட்டையாடப்பட்டது. அதனைக் கொல்வது எளிதாக இல்லை. யானையைக் கொல்ல நஞ்சு தோய்த்த அம்புகள் பயன்படுத்தப்பட்டன. ராமன் காட்டுக்குத் தன்னுடன் வரவேண்டாம் என்று சீதையை கேட்டுக் கொண்ட செய்தி, பெண் யானையை தாக்கும் நச்சு அம்புகளைப் போல சீதையின் உள்ளத்தை தைத்தது என்று ராமாயணம் கூறுகிறது.

சரவணக்குமார் என்பவனை, யானை என தவறாக எண்ணி தசரதன் அம்பெய்தினான். அந்த அம்பில் இருந்த விஷம் விரியன் பாம்பின் விஷத்தை விட கடும் வீரியமுடையதாக இருந்தது. தண்ணீரை மொண்டு வருவதற்கு சரவணக்குமார் பயன்படுத்திய ஜாடியில் நீர் உட்புகுந்த சப்தம், யானை தண்ணீர் குடிப்பது போன்று இருந்ததால் தசரதன் யானை வந்ததாக தவறாக எண்ணி அதன் மீது விஷம் தோய்ந்த அம்பை எய்து விட்டார். தற்போதும் யானைகள் துப்பாக்கியால் எளிதாகக் கொல்லப்படுகின்றன.

ஒரு முறை ஒரு பெண் யானை 500 'போர்' துளை கொண்ட துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது. காதுக்கு 23 செ.மீ. கீழே துளைத்த குண்டு, இதயத்தைத் தாக்கி ஒரு மீட்டர் ஆழமான காயத்தை ஏற்படுத்திவிட்டது. இந்த குண்டு மட்டும் படுகாயத்தை ஏற்படுத்தாமல் இருந்தால், யானை தன்னுடைய ஏழு டன் எடையை தாங்கிக்கொண்டு எதிரியைத் தாக்க வரும் வேகத்தைப் பார்க்க வேண்டுமே!. குண்டு மட்டும் தலையைத் தாக்கினால் யானை உடனடியாக இறந்து விடும்.

சராசரியாக யானை மணிக்கு 6.5 கிலோமீட்டர் வரை நடக்கும். ஆனால் ஓடும்போது மணிக்கு 32 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும். ஆனால் இந்த வேகத்திறன் சற்று நேரமே இருக்கும். ஆனால் மணிக்கு 16 கிலோமீட்டர் வேகத்தில் அதனால் அயராது வெகுதூரம் நடந்தே செல்ல முடியும். யானைக்கு மோப்ப உணர்ச்சி அதிகம். தனது நுகர்ச்சி திறனைக் கொண்டு மனிதன் அருகில் இருப்பதை புரிந்து கொண்டு, எழுச்சியுடன் துள்ளிக் குதித்தோடும். தனது பார்வை மூலமாகவோ, ஒலியின் வழியாகவோ அல்லது மோப்ப உணர்ச்சியின் வாயிலாகவோ மனிதன் அருகில் இருப்பது தெரிந்தால் கூட சில சமயம் யானை கண்டுகொள்வதில்லை.

ஆனால் வேறு சில சமயங்களில் திடீரென மனிதனைத் தாக்கிவிடும் வாய்ப்புள்ளது. உருவ மறைப்பு செய்து ஒளிந்துகொள்ள இதன் கரிய சாம்பல் நிறமுடைய உடல் மிகவும் உதவி புரிகிறது. இதனால் இது இயற்கை சூழ்நிலையோடு ஒன்றி விடுவதால், அது அசைவின்றி நிற்கும்போது, அதன் மிக அருகில் வந்து பார்த்தாலன்றி அதன் உருவம் நம் கண்ணுக்கு புலப்படாது.

சுமேரிய இனத்தவரிடம் யானை வாழ்க்கையினை காக்கும் விலங்கு எனும் பொதுவான நம்பிக்கை ஊறியிருந்திருக்கிறது. வாழ்க்கை ஒரு தெய்வீக மரம் என்றும் அது ஒருவர் விரும்பியதை கொடுக்கும் என்றும் கருதப்பட்டது. மெசபடோமியா பகுதியில் நெபுகாத்நேசர் எனும் அரசன் காலத்திய முத்திரையில் (சீல்) மாட்டின் உடம்புடன் கூடிய உருவம் ஒன்று காணப்படுகிறது. இவ்வகை விலங்கு உயிர் காக்கும் மரத்தின் அருகே நின்று கொண்டு, மரத்தை வெட்ட வரும் துஷ்டர்களிடமிருந்து காப்பது போன்று பொறிக்கப்பட்டுள்ளது.

மெசபடோமியா பகுதியில் யானைகள் கிடையாது. எனவே சுமேரியர்கள் இந்தக் கருத்தை சிந்துசமவெளிக் கலாச்சாரத்திலிருந்து பெற்றிருக்கக்கூடும். ஹரப்பா, மொகஞ்சதாரோ பகுதியில் கண்டெடுக்கப்பட்ட படிமங்களில் யானை பலவேறாக போற்றப்பட்டிருப்பதை காண முடிகிறது. இப்படிமத்தின் ஒரு பக்கத்தில் புலி வேட்டையும், அதன் கீழே சில குறிப்புகளும் காணப்படுகின்றன. மறுபக்கத்தில் ஒற்றைக் கொம்புடைய குதிரை போன்ற ஒரு கற்பனை விலங்கு, யானை மற்றும் காண்டா மிருகம், ஒன்றன் பின் ஒன்றாக நின்றுகொண்டு உயிர்காக்கும் மரத்தை வழிபாடு செய்வதும் காணப்படுகிறது.

ஒற்றைத் தந்தமுடைய யானையை நாம் அபூர்வமாகக் காண நேரிடலாம். இதனை ஏகதந்தம் என்று குறிப்பிடுவர். விநாயகர் ஒற்றைத் தந்தத்துடன் காட்சியளிப்பதால், ஒற்றை தந்தம் கொண்ட யானைகள் எல்லாம் கணேசன் என்றும் அழைக்கப்படுகின்றன.

- மீண்டும் பேசலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x