Published : 25 May 2019 12:53 PM
Last Updated : 25 May 2019 12:53 PM
ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தாத 'அறிவுஜீவிகளை' கட்சியிலிருந்தே தூக்கி எறிய வேண்டும் என ஆவேசமாகக் கூறுகிறார் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாக்கூர் 1,49,010 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
அவரது தனிப்பட்ட வெற்றி குறித்தும், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்தும் அவரிடம் பேசியதில் இருந்து...
காங்கிரஸ் கட்சி இத்தகைய தோல்வியைச் சந்திக்கும் என நீங்கள் நினைத்தீர்களா?
நிச்சயமாக நினைக்கவில்லை. ராகுல் காந்தி அவ்வளவு சிறப்பாகக் களப்பணி ஆற்றினார். தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து 155 பேரணிகளில் கலந்து கொண்டார். அவர் முன்வைத்த நியாய் திட்டமாகட்டும், ஒரே வரி எளிமையான வரி என்ற ஜிஎஸ்டி சீர்திருத்தமாகட்டும் எல்லாமே மக்களைக் கவர்ந்தது. அதனால், காங்கிரஸ் தோல்விக்கு ராகுல் மீது பழிபோடுவது ஏற்புடையது அல்ல.
அப்புறம் யார் காரணம் என நினைக்கிறீர்கள்?
டெல்லி மேலிடத்தில் காங்கிரஸ் கட்சியில் சில அறிவு ஜீவிகள் இருக்கின்றனர். அவர்கள்தான் இதற்குக் காரணமானவர்கள்.
கொஞ்சம் விளக்கமாகக் கூற இயலுமா?
தமிழகத்திலும், கேரளத்திலும் மட்டுமே பாஜக காலூன்ற இயலவில்லை. அது ஏன் தெரியுமா? தமிழகத்தில் ஸ்டாலின் முதன்முதலாக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினார். கேரளத்திலும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராகவே அறிமுகப்படுத்தினர். இதுதான் இங்கு பாஜக காலூன்ற முடியாமல் போனதற்கு முக்கியக் காரணம்.
வாக்காளர்களிடம் நீங்கள் என்னதான் வாக்குறுதிகளைக் கொடுத்தாலும் அதை எங்களுக்காகச் செய்து கொடுக்கும் முகம் யார் என்றுதான் கேட்பார்கள். தமிழகம், கேரளா அந்த முகத்தை அடையாளம் காட்டியது. காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. மற்ற மாநிலங்களில் கூட்டணித் தலைவர்களுக்கு ஸ்டாலின் போல் மனமில்லை.
ஒரு சிறிய கணக்கைச் சொல்கிறேன். 2009-ல் நான் எம்.பி. தேர்தலில் நின்றபோது விருதுநகரில் 10 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். 2019-ல் நான் போட்டியிடும்போது 14 லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்கள். புதிதாக இணைந்தவர்கள் இளம் வாக்காளர்கள். இவர்களுக்கு செயலில் வேகம் காட்டும் தலைவர்தான் தேவை. அப்படி ஒரு தலைவராகத் தான் ராகுல் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறார். அதனால்தான் தமிழகமும், கேரளமும் விதிவிலக்காக ஆகியிருக்கிறது.
ராகுலின் எதிர்மறைப் பிரச்சாரம் எடுபடாமல் போய்விட்டது என்ற குற்றச்சாட்டு பற்றி..
ராகுல் விமர்சனம் மட்டுமேதான் செய்தாரா என்ன? அவர் நலத்திட்டங்களைப் பற்றி பேசினார். ஆனால், காங்கிரஸில் சில அறிவுஜீவிகள் அவரை பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கவிடாமல் தடுத்தனர். மம்தா வரட்டும், மாயாவதி வரட்டும், அகிலேஷ் வரட்டும் என்று காத்துக்கிடந்து காலத்தை வீணடித்தனர். அப்படிப்பட்டவர்களை காங்கிரஸ் கட்சியில் இருந்து தூக்கி எறிய வேண்டுமே தவிர ராகுல் மீது பழியை சுமத்துவது பொருத்தமற்றது.
ராகுல் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா வலியுறுத்தியுள்ளாரே?
ராமச்சந்திர குஹா வரலாற்று அறிஞர். அவர் சொன்னது அவருடைய தனிப்பட்ட கருத்து. ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டுமா வேண்டாமா என்பதை காங்கிரஸ் கட்சி, அமைப்பு முடிவெடுக்க வேண்டியது. தனிப்பட்ட முறையில் ராகுல் ராஜினாமா செய்யவே கூடாது என்பதே எனது கருத்து. காங்கிரஸ் கட்சியை உடைந்துவிடாமல் சேர்த்துவைத்திருக்கும் சக்தியே காந்தி குடும்பம் தான். அதுவும் இப்போது அதில் ராகுலின் பங்கு மிகப்பெரியது.
ஸ்டாலின் கணித்தது போல, கேரள காங்கிரஸ் கணித்தது போல மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் ராகுலை பிரதமர் முகமாக முன்னிலைப்படுத்தியிருந்தால் இன்று தேர்தல் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். பாஜகவுக்கு ஆரம்பத்திலிருந்தே மோடி மட்டும்தான் முகம்... ஒரே முகம்... அந்த ஒருமுகத்தை அடையாளப்படுத்துவதே அனைவரின் வேலையாகவும் இருந்தது. அதைத்தான் காங்கிரஸும் செய்திருக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் உங்கள் தொகுதிக்காக உங்கள் முதல் குரல் எதுவாக இருக்கும்?
பட்டாசுத் தொழிலாளர்களுக்காகவே எனது குரல் இருக்கும். பட்டாசுத் தொழிலே அழிந்துவிடும் நிலைக்கு வந்துவிட்டது. இந்த தீபாவளிக்காவது அவர்களுக்கு தொழில் சிறக்க வேண்டும். அதற்காகவே எனது முதல் குரல் ஒலிக்கும்.
இரண்டாவதாக தண்ணீர் பிரச்சினை. விருதுநகரில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. தமிழகத்தில் தண்ணீர் மேலாண்மை மிகமிக மோசமாக இருக்கிறது. இந்த அரசாங்கம் மத்தியிலிருக்கும் பாஜகவுக்கு தலையாட்டும் அரசாக இருக்கிறதே தவிர மக்களுக்கான அரசாக இல்லை. தண்ணீர் மேலாண்மைக்காக அரசு எதுவுமே செய்யவில்லை. விருதுநகரின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்கப் போராடுவேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT