Published : 12 Apr 2019 04:02 PM
Last Updated : 12 Apr 2019 04:02 PM
2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவை அப்புறப்படுத்தியே ஆக வேண்டும்; மோடி வேண்டவே வேண்டாம் என்ற கொள்கையுடன் களமிறங்கியிருக்கிறது காங்கிரஸ்.
தமிழகத்தில் வெற்றியைக் குவிப்பது காங்கிரஸின் இந்தக் கனவை நனவாக்கும் பலம் சேர்க்கக்கூடியது.அதனாலேயே, தேர்தல் பரபரப்புகள் தொற்றிக் கொள்வதற்கு முன்னதாகவே கடந்த மார்ச் 13-ம் தேதி தமிழகத்தில் நாகர்கோவிலில் பிரச்சாரத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி. அன்றைய தினம் அதற்கும் சில மணி நேரங்களுக்கு முன்னதாக சென்னையில் தனியார் கல்லூரியில் அவர் நடத்திய கலந்துரையாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
நாகர்கோவிலில் அவர் பிரச்சாரத்தைத் தொடங்க, அதனை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மூத்த தலைவருமான தங்கபாலு மொழிபெயர்த்தார். ஆனால், பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்திலேயே சமூக வலைதளங்கள் கருத்துகளாலும் மீம்ஸ்களாலும் நிரம்பிக்கொண்டிருந்தது.
உற்சாகக் களப்பணியில் இருந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு இது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதோ இன்று சரியாக ஒரு மாதம் கடந்து ராகுல் மீண்டும் தமிழகம் வந்திருக்கிறார்.
இது கடைசிச் சுற்று பிரச்சாரம். மிக முக்கியமான காலகட்டம். கருத்துக் கணிப்புகள் பல திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக இருக்கும் இத்தகைய சூழலில் கிருஷ்ணகிரியில் பேச வந்திருந்தார் ராகுல் காந்தி.
தங்கபாலுவுக்குப் பதிலாக பேராசியர் பழனிதுரை மொழிபெயர்க்க நிறுத்தப்பட்டிருந்தார். ஆனால் அவருடைய மொழிபெயர்ப்பும் விஜய் சேதுபதி படத்தில் வரும் டயலாக் போல் அவர் சுமார் மூஞ்சி குமாரு.. நான் ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு என்றளவிலேயே இருந்தது. அப்புறம் என்ன மீண்டும் நெட்டிசன்கள் விமர்சனத்துடன் கிளம்பியிருக்கின்றனர்.
சிங்கிள் பசங்களுக்கு காதலி கிடச்சாலும் கிடைப்பாங்க, நம்ம ராகுல் காந்திக்கு நல்ல மொழிபெயர்ப்பாளர் கிடைக்கமாட்டாங்க போல... என்றளவுக்கு கலாய்ப்புகள் ஆரம்பித்துவிட்டன.
இப்படியாக மீண்டும் அதிருப்தி கோஷங்கள் வர இது குறித்து சத்தியமூர்த்தி பவனுக்கு அடிக்கடி சென்றுவரும் காங்கிரஸ் கட்சியின் பெயர் தெரிவிக்க விரும்பாத நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.
அவர் கூறும்போது, "மிக முக்கியமான காலகட்டத்தில் இப்படி மொழிபெயர்ப்பு சொதப்பல்கள் என்னைப் போன்ற விசுவாசிகளுக்கு வருத்தம் அளிக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க உட்கட்சிப் பூசல்தான் காரணம். முன்பெல்லாம் டெல்லியில் இருந்து ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் என யார் வந்தாலும் ப.சிதம்பரம், பீட்டர் அல்ஃபோன்ஸ், திருநாவுக்கரசர் ஆகிய கட்சியின் முக்கிய நிர்வாகிகளே மொழிபெயர்ப்பு செய்வார்கள். ஆனால், இப்போது ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் எல்லோரும் கட்சியின் மிக முக்கிய மூத்த நிர்வாகி என்று நிலைக்கு வந்துவிட்டதால் மொழிபெயர்ப்புக்கு வருவதில்லை. அதனால், காங்கிரஸ் தலைமை கைகாட்டும் நபர்கள் மொழிபெயர்ப்புக்கு மேடை ஏறுகிறார்கள். அதன் விளைவே இத்தகைய சொதப்பலகள்.
தனிப்பட்ட முறையில் என்னைப் போன்ற தொண்டர்களின் விருப்பம். இதுபோன்ற, ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டிய சூழலில் மூத்த தலைவர்கள் இப்படி இறுக்கம் காட்டுவது சரியானதாக இல்லை என்பதே. சிதம்பரமோ, திருநாவுக்கரசரோ இல்லை வேறு யாராவது மொழிபெயர்ப்புத் திறன் வாய்ந்தவர்கள் இந்த வேலையைச் செய்ய உட்கட்சிப் பூசல்களையும் தாண்டி முன்வர வேண்டும். ராகுல் பேச்சு மக்களுக்கு முழுமையாகச் சென்றடைய வேண்டிய சூழல் இருக்கிறது.
இந்த நேரத்தில் சரியான நபர்களை நியமிக்க வேண்டாமா? தமிழக காங்கிரஸ் தலைமைக்கு நெருக்குமானவர்கள் மேடை ஏறுவதற்காக மொழிபெயர்ப்பு வாய்ப்பு கொடுக்கக்கூடாது. மக்களுக்கு கட்சியின் கொள்கை சென்று சேருவதற்காக சரியான நபர் மொழிபெயர்ப்பு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். ராஜீவ்காந்தி தென்காசி வந்திருந்தபோது பீட்டர் அல்ஃபோன்ஸ் மொழிபெயர்ப்பு செய்தார். அன்று அந்தப் பகுதி மக்களுக்கு ராஜீவ் சென்று சேர்ந்தார். இலக்கு இப்படியானதாக இருக்க வேண்டும்.
இனியாவது காங்கிரஸ் இதை செய்ய வேண்டும்" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
ஒரே நாளில் கிருஷ்ணகிரி, சேலம், தேனி, மதுரை என சூறாவளிப் பிரச்சாரம் செய்யும் ராகுல் காந்திக்கு மொழிபெயர்ப்பு சறுக்கல்கள் மீண்டும் காதுக்கு எட்டினால் என்ன மாதிரியான உணர்வை ஏற்படுத்தும் என்பதை யூகிக்க இயலவில்லை.
ஆனால், ஒரு சிறு ஆறுதலாக சேலம் பொதுக்கூட்ட மொழிபெயர்ப்பு அமைந்தது. டி.கே.எஸ்.இளங்கோவன் மொழிபெயர்பில் கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் ராகுல் பேச்சை ரசித்து கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT