Published : 15 Apr 2019 06:15 PM
Last Updated : 15 Apr 2019 06:15 PM
அதிமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் எதிரி பாஜகவைவிட துரோகி காங்கிரஸ் மோசம் என்றும் தமாகா மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜா தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தமாகா வேட்பாளர் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். அவருக்காகச் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் அக்கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜா. அவர் 'இந்து தமிழ் திசை'க்கு அளித்த சிறப்புப் பேட்டி
என்ன மாதிரியான பிரச்சார வியூகத்தை மேற்கொள்கிறீர்கள், மக்கள் வரவேற்பு எப்படி இருக்கிறது?
சிறப்பான வரவேற்பு உள்ளது. ஆரம்பத்தில் திமுகவுக்கே கள நிலவரம் சாதகமாக உள்ளதுபோன்ற சூழல் இருந்தது. ஆனால் இப்போது தீவிரப் பிரச்சாரத்தால் வெற்றி வாய்ப்பு எங்கள் பக்கம் மாறிவிட்டது.
தஞ்சாவூர் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள அனைத்து இடங்களுக்கும் நடந்தே சென்று பிரச்சாரம் செய்திருக்கிறோம். கோயில்கள், சர்ச்கள், மசூதிகள், ரவுண்டானாக்கள், பேருந்து நிலையங்கள், கல்லூரிகள் என வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் பிரச்சாரம் செய்துள்ளோம். நான் மட்டுமே 4,318 வீடுகளுக்குச் சென்று தமாகாவுக்காக ஓட்டு கேட்டேன். சிறுபான்மையினரான கிறிஸ்தவர், முஸ்லிம்கள் இடையே நல்ல ஆதரவு உள்ளது. குறிப்பாக முத்தலாக் விவகாரத்தில் முஸ்லிம் பெண்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.
அதிமுகவின் இரட்டை இலையும் இல்லை. உங்களின் பாரம்பரிய அடையாளமான சைக்கிள் சின்னமும் இல்லை. ஆட்டோ சின்னத்தை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கிறீர்கள்?
தஞ்சாவூர் முழுக்க ஆட்டோ சின்னம் அச்சடிக்கப்பட்ட சுமார் 15 லட்சம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ளோம். தினந்தோறும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சுமார் 200 ஆட்டோக்களை எடுத்துச் சென்று பிரச்சாரம் செய்கிறோம். இதுதவிர தோள்களில் ஆட்டோ பொறிக்கப்பட்ட அட்டை, ஆட்டோ படம் அச்சடிக்கப்பட்ட சட்டை என சின்னத்தைப் பிரபலப்படுத்துகிறோம். சொல்லப்போனால் சைக்கிளைவிட ஆட்டோ சின்னம் வாக்காளர்களிடம் நன்றாக ரீச் ஆகியுள்ளது.
காலங்காலமாக தஞ்சாவூர் திமுகவின் கோட்டையாக இருந்துள்ளது. அதன் சார்பில் நிற்கும் பழனிமாணிக்கம் தொடர்ச்சியாக 5 முறை வென்றவர். மத்திய அமைச்சராகவும் இருந்தவர். அவரை தமாகா வெற்றி கொள்ளுமா?
மக்களிடம் திமுக வேட்பாளர் மீது அதிருப்தி நிலவுகிறது. பழனிமாணிக்கம் யாரையும் மதிப்பதில்லை. கட்சிக்காரர்களைக் கூட, தன்னுடன் வைத்துக் கொள்வதில்லை. அத்துடன் உட்கட்சிப் பூசலும் அதிகமாக இருக்கிறது.
தாங்கள்தான் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் திமுகவினர் மெத்தனமாக இருந்தனர். இப்போது பணம் கொடுத்தால்தான் திமுகவுக்கு வெற்றி என்ற சூழல் உள்ளது. இதனால் இரண்டு நாட்களாகத்தான் திமுகவினர் களப்பணி ஆற்றி வருகின்றனர். ஆனால் நாங்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்வதால், எங்களுக்கு வெற்றி உறுதி.
பாஜக கூட்டணியை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள்? கஜா புயலின்போது பிரதமர் தமிழகத்தில் தலைகாட்டவில்லை; ஓட்டு கேட்க மட்டும் பல்வேறு முறை வருகிறார் என்று விமர்சிக்கப்படுகிறதே?
கஜா புயலால் பாதிக்கப்பட்ட யாரும் இத்தகைய குறையைச் சொல்லவில்லை. புயல் நிவாரணத் தொகை இதுவரையில் 80% குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் டெல்டா மாவட்டங்களுக்கு வந்திருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதை மக்கள் ஒரு குறையாக நினைக்கவில்லை.
குடிசைப் பகுதி மக்களுக்குக் கூட மோடியைத் தெரிந்திருக்கிறது. பாஜகவின் 'அனைவருக்கும் வீடு' வாக்குறுதி அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. பிரதமர் வேட்பாளராகவும், தலைவராகவும் மக்கள் அவரை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் காங்கிரஸின் ரூ.72 ஆயிரம் வாக்குறுதி குறித்து யாருக்கும் தெரியவில்லை.
அரசியலில் நிரந்தர எதிரிகள் அதிமுக - திமுக மற்றும் காங்கிரஸ் - பாஜக. காங்கிரஸிடம் இருந்து பிரிந்த தமாகா, பாஜகவுடன் இணைந்திருப்பது நெருடலாக இல்லையா?
எதிரியை விட துரோகி மோசமானவன். எங்கள் முதுகில் குத்திய கட்சி காங்கிரஸ். தமாகா எந்தக் கட்சியுடனும் சேரக்கூடாது; நாங்கள் தனித்து விடப்பட வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பியது. எங்களை அழிக்க நினைத்தது. அதனால் அதிமுக கூட்டணியில் இணைந்தோம்.
ஏன் அதிமுக கூட்டணி? ஒற்றை சீட் போதுமா?
எங்கு மரியாதை கிடைக்கிறதோ, அங்கு இருப்பதுதானே முறை? திமுகவும் காங்கிரஸும் எங்களை அழிக்க நினைக்கிறார்கள். குறிப்பாக காங்கிரஸ். கட்சியைப் பலப்படுத்தவும் வளர்க்கவும் வலுவான கூட்டணி அவசியம். அதனால் அதிமுக கூட்டணிக்கு வந்தோம். 1 சீட் என்பதில் வருத்தம்தான். ஆனால் உள்ளாட்சித் தேர்தல் உட்பட வருங்காலங்களில் அங்கீகாரம் கிடைக்கும் என்று உறுதி வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணியால் சிறுபான்மையினருக்கான வாக்குகள் அனைத்தும் திமுக வசம் செல்லும் என்று கூறப்படுகிறதே?
கள நிலவரம் அப்படி இல்லை. 18 முதல் 24 வயது இளைஞர்கள் சிலர் வேண்டுமானால் அப்படி இருக்கலாம், பெரும்பாலான சிறுபான்மையினர் அதிமுகவுக்கு ஆதரவாகவே உள்ளனர். வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். அதிமுக மீது மக்களுக்கு அதிருப்தி உள்ளது. ஆனால் திமுக மீது மக்களுக்கு வெறுப்பு உள்ளது. நில அபகரிப்பு, ஊழல் என மக்கள் திமுகவைக் கட்டோடு வெறுக்கின்றனர். அதிருப்தியை விட வெறுப்புதான் பெரிது. அது தேர்தலில் எதிரொலிக்கும்.
கருத்துக் கணிப்புகள் அனைத்தும் திமுக கூட்டணிக்கு ஆதரவாகத்தானே இருக்கின்றன?
ஆரம்பத்தில் நாற்பதுக்கு நாற்பது என்றனர். பின்னர் அதிமுக கூட்டணிக்கு 3, பிறகு 8 என வந்து இப்போது 12-ல் நிற்கிறது. தேர்தலின்போது இன்னும் முடிவுகள் மாறும்.
மீத்தேன் எதிர்ப்பு நெடுவாசல் உள்ளிட்ட போராட்டங்களில் உங்களின் குரல் ஓங்கி ஒலிக்கவில்லை என்ற விமர்சனம் எழுப்பப்படுகிறதே?
நெடுவாசல் போராட்டக்குழுவில் இருந்த ஐவரில் செந்தில் எங்கள் கட்சிக்காரர். அங்கே பயன்படுத்திய நிலமும் தமாகாவைச் சேர்ந்தவருடையதுதான். ஹைட்ரோகார்பன் போராட்டத்தில் தமாகா இளைஞரணிச் செயலாளர் சிறையில் பல நாட்கள் இருந்தார். வளர்ச்சி வரும் என்று எதிர்பார்த்தோம். நடக்கவில்லை. ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் உடனடிக் கவனம் கிடைக்கும். எங்களுக்குக் கிடைக்கவில்லை.
காலம் கனிந்து, கசப்புகள் மறைந்து காங்கிரஸ், தமாகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் என்ன செய்வீர்கள்?
அப்படியொரு சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை.
சமூக வலைதளங்களில் தமாகா ஏன் அதிக கவனம் செலுத்துவதில்லை?
கொச்சையாகப் பதிவிட்டால்தான் ரீச் அதிகம் கிடைக்கும் என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது. எங்களுக்கு அப்படிப் போடத் தெரியவில்லை; போடவும் முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை சமூக வலைதளங்களால் அதிகத் தாக்கம் ஏற்படுவதில்லை. அங்கு பேசுவதில் முக்கால்வாசிப் பேர் ஓட்டு போட வருவதில்லை. இணையத்தில் அதிக கவனம் செலுத்துபவர்கள் களத்தில் முறையாகப் பணியாற்றுவதில்லை. எனினும் வருங்காலத்தில் உங்கள் விமர்சனத்தைக் கருத்தில்கொண்டு, கவனம் செலுத்துவோம்.
தஞ்சையில் பணப் பட்டுவாடா தங்குதடையின்றி நடப்பதாகக் கூறப்படுகிறதே?
நாங்கள் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. ஆனால் திமுக சார்பில் ஓட்டுக்கு 300 ரூபாய் கொடுப்பதாகக் கேள்விப்பட்டோம். இதுதொடர்பாகத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறோம்.
தஞ்சாவூர் மக்களிடம் தமாகா முன்வைக்கும் வாக்குறுதிகள் என்னென்ன?
தஞ்சை விவசாயிகளுக்கான வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். விவசாயம் பாதுகாக்கப்படும். உபரி நீர் முறையாகச் சேமிக்கப்படும். தடுப்பணைகள் கட்டப்படும். தரமான கல்லூரிகள் அமைக்கப்படும். சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். வேளாண் பல்கலைக்கழகம் புதுப்பிக்கப்படும்.
க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT