Published : 12 Apr 2019 05:36 PM
Last Updated : 12 Apr 2019 05:36 PM
நீட் தேவையா? இல்லையா? என்பதை தமிழகமே முடிவு செய்யும் அதிகாரம் தருவோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சற்றுமுன்னர்தான் சேலத்தில் முழங்கினார்.
ஆனால், உண்மையிலேயே நீட் வேண்டுமா வேண்டாமா என்பதை இப்போது மருத்துவக் கனவுடன் இருக்கும் மாணவர்களிடமும், நீட்டுக்கு முன்னால் மருத்துவரான சாதனையாளர்களிடமும்தான் நாம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அது தான் நடுநிலையான கணிப்பாக இருக்கும்.
அந்த தார்மீகத்தின் அடிப்படையில் மட்டுமே, இன்று கோத்தகிரியில் உள்ள கோத்தர் இன மக்களின் நம்பிக்கை முகமான டாக்டர் ஜனனி, நீட் தொடர்பான தனது தனிப்பட்ட கருத்தை முன்வைக்கிறார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மலையில் உள்ள புது கோத்தகிரி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனனி. இந்த ஊரில் மொத்தம் 50 குடும்பங்களே வசிக்கின்றன. இங்கு எம்பிபிஎஸ் படித்து மருத்துவரான முதல் பெண் ஜனனி.அங்குள்ள 6 பழங்குடியின மக்களின் முதல் பெண் மருத்துவர் என்பதே அவருக்கான மகத்தான அறிமுகமாக இருக்கும்.
ஆனால், அவர் நீட் தேர்வுகள் எல்லாம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே மருத்துவரானவர். இன்று அந்த ஊரில் உள்ள பல இளம் தலைமுறையினரும் அவரால் ஈர்க்கப்பட்டு படிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். சாதனை முகங்கள் செய்யும் சத்தமில்லாமல் செய்யும் புரட்சியின் அடையாளம் இது.
இந்த நிலையில்தான் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கட்சிப் பிரமுகர்கள் தங்கள் பகுதியில், தங்கள் சமூகத்திலிருந்து மருத்துவரான (எம்பிபிஎஸ்) ஜனனி என்ற சாதனைப் பெண்ணைப் பற்றி சொல்லி வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கின்றனர்.
சரியான போக்குவரத்து வசதி இல்லாத, பழங்குடி கிராமத்திலிருந்து ஒரு பெண் மருத்துவராக முடிந்தது என்றால் அதற்கு நீட் தேர்வு என்ற முட்டுக்கட்டை இல்லாததே காரணம் என்பதுதான் அரசியல்வாதிகளின் வாதமாக இருக்கிறது. இதனை முன்வைத்தே நம்மூரில் நிறைய ஜனனிகள் உருவாக வேண்டும் என்றால் நீட் தேர்வு இருக்கக் கூடாது என்ற கோஷத்தை எழுப்புகின்றனர் பழங்குடி சமூகத்தினர்.
இது குறித்து, மருத்துவராகி தற்போது பெங்களூருவில் இருக்கும் ஜனனியை 'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்காகத் தொடர்பு கொண்டோம்.
அவர் நம்மிடம் கூறியதாவது:
''நான் மருத்துவப் படிப்பில் சேர்ந்தபோது பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கட் ஆஃப் மதிப்பெண் கொண்டே மருத்துவ சீட் வழங்கப்பட்டது. எனக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்க ஆசை இருந்தது. ஆனால், நான் பெற்ற கட் ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.
எங்கள் ஊரில் எனக்கு முன்னதாக ஒரு அக்கா ஹோமியோபதி மருத்துவம் பயின்றார். ஆனால், ஊரின் முதல் பெண் எம்பிபிஎஸ் நான் தான்.
எனக்கு 7 வயது இருக்கும்போதே எனது தந்தை மாரடைப்பால் மறைந்துவிட்டார். எனக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற வேட்கை சிறுவயதிலிருந்தே இருந்தது. என்னுடன் பிறந்தவர்கள் இருவர். ஒருவர் பிஎஸ்சி அக்ரி, இன்னொருவர் பி.இ. கணினி பயின்றுள்ளனர். அம்மா எங்கள் கல்விக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தார்.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சீட் என்பதால் என்னால் எனது கடின உழைப்பின் காரணமாக மருத்துவராக முடிந்தது. ஆனால், இன்று கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் பிளஸ் 2-வில் நல்ல மதிப்பெண் பெற்றாலும்கூட நீட்டில் கோட்டை விட்டுவிடுகின்றனர்.
இங்கு நம் நாட்டில் ஒரே கல்வி முறை இல்லை. நம் மாநிலத்துக்குள்ளேயே நகரத்தில் இருக்கும் பள்ளிகளில் இருப்பதுபோல் கிராமங்களில் கல்வித் தரம் இல்லை. இப்படி பாகுபாடுகள் இருக்கும்போது நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு நடத்துவது சரியான நடைமுறையாக எப்படி இருக்க முடியும். இந்தப் பாகுபாடு தேவையற்றது என நான் நம்புகிறேன். முதலில் கல்வித் தரத்தை மேம்படுத்திவிட்டு அப்புறம் இப்படியான தேர்வுகளை நடத்தலாம்.
ஆனால், கல்வித்தரம் உடனே மேம்பட்டுவிடாது. அதுவரை மாணவர்கள் தங்கள் கனவுகளைத் தொலைக்க இயலாது. எனவே, நீட் வேண்டாம் என்பதே எனது நிலைப்பாடு. நீட் ரத்தை ஆதரிப்பவர்கள் எந்த அரசாங்கமாக இருந்தாலும் நான் அதனை வரவேற்பேன்".
இவ்வாறு ஜனனி தெரிவித்தார்.
ஜனனியின் தாய் குந்திதேவியிடம் பேசியபோது, "எனது சிறு வயதிலேயே எனது கணவரை இழந்துவிட்டேன். நான் 10-வது வரை மட்டுமே படித்திருந்தேன். அதனால், என் கணவர் மறைவுக்குப் பின்னர் எனது சகோதரர்களை நம்பி வாழ வேண்டியிருந்தது.
அதனால், எனது பிள்ளைகள் அவர்கள் சொந்தக் காலில் நிற்க கல்விதான் அவசியம் என்று உணர்ந்தேன். என் மூன்று பிள்ளைகளையும் நன்றாகப் படிக்க வைத்தேன்.
சில தொண்டுள்ளம் கொண்டவர்கள் படிப்புக்கு உதவினார்கள். ஜனனி ஆரம்பத்திலிருந்தே மருத்துவராக வேண்டும் என விரும்பினார். அவர் படித்து மருத்துவரானார். அவர் காலத்தில் நீட் எல்லாம் இல்லை. ஆனால் மிகக் கடுமையாக உழைப்பார்.
இப்போது உள்ள குழந்தைகளுக்கும் அதையே சொல்கிறேன். நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும், எந்த வசதியில் இருந்தாலும், எத்தகைய சமூகத்தில் இருந்தாலும் கடின உழைப்பைக் கைவிடக் கூடாது. மற்றபடி இதுபோன்ற தேர்வு சம்பந்தமான உரிமைகளுக்கு அரசியல்வாதிகள் போராடுவார்கள்" என்றார்.
நீலகிரியில் ஒரு மலைகிராமத்தில் மக்களால் கொண்டாடப்படும் ஜனனி எம்பிபிஎஸ் வெறும் தேர்தல் பிரச்சாரத்துக்காக, நீட் எதிர்ப்புக்காக பயன்படுத்தப்பட வேண்டிய முகம் அல்ல. பின் தங்கிய கிராமங்கள், சாதிக்கத் துடிக்கும் பழங்குடியின மாணவர்களுக்கான நம்பிக்கை முகம் என்பதே அவரது கிராம மக்களின் குரலாக இருக்கிறது.
தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT