Published : 10 Apr 2019 04:01 PM
Last Updated : 10 Apr 2019 04:01 PM
பெரியகுளம் தொகுதி அமமுக வேட்பாளர் டாக்டர் கதிர்காமு மீது பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் தொகுதியைக் கைப்பற்ற அதிமுக உள்ளடி வேலைகளில் ஈடுபடுவதாக களத் தகவல் தெரிவிக்கின்றது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற டாக்டர் கதிர்காமு அதிமுக பிளவுக்குப் பின்னர் டிடிவி தினகரன் ஆதரவாளரானார். கதிர்காமுவை வெற்றி பெற வைத்ததில் ஓபிஎஸ் பங்கும் இருக்கிறது.
இந்நிலையில், இன்று அதிமுகவை எதிர்த்து ஓட்டைப் பிரிக்கும் சக்தியாக அவர் இடைத்தேர்தல் களத்தில் நிற்கிறார். திமுக வேட்பாளர் சரவணகுமாருக்கு பலமான ஆதரவு இருக்கிறது. இந்நிலையில் அமமுக பிரிக்கும் ஓட்டுகள் எல்லாம் திமுகவை வெற்றி பெற வைத்துவிடும் என்பதே நிலவரம். இதனால் தொகுதியைத் தக்க வைத்துக்கொள்ள ஓபிஎஸ் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அப்ப காப்பாத்துனாங்க.. இப்ப புகார் சொல்றாங்க..
கதிர்காமு மீதான பாலியல் புகார் ஏதோ பரபரப்பு செய்திபோல் பேசப்பட்டாலும்கூட பெரியகுளம் மக்களுக்கு பழைய செய்தி. 2015-லேயே அந்தப் பெண் புகார் கொடுத்தார். ஆனால், அப்போது அதிமுகவினர் கதிர்காமுவைக் காப்பாற்றியுள்ளனர். இதனை நன்றாக அறிந்த ஊர் மக்கள் "அப்ப காப்பாத்துனாங்க.. இப்ப புகார் சொல்றாங்க.. இவுங்களுக்கு பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்னு பண்ணலை. தேர்தல்ல குழப்பம் பண்ண நினைக்கிறாங்க. அவ்ளோதான்.." என்று பேசிக் கொள்கின்றனர்.
இருந்தாலும், ஓட்டுக்குப் பணம், வேட்பாளர் மீது புகார் போன்ற உள்ளடி வேலைகளில் அதிமுக ஈடுபடுவதாகவே சொல்லப்படுகிறது. ஒருவேளை தேர்தல் ஆணையம் கதிர்காமுவின் வேட்புமனுவை நிராகரித்தால் தேர்தல் முடிவு தனக்குச் சாதகமாக அமையும் என அதிமுக கணிக்கிறது.
வேட்பாளர் தேர்விலிருந்தே...
துணை முதல்வரின் ஊர் என்றாலும்கூட பெரியகுளத்துக்காக எந்த நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. அதனால், மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். குடிநீர் பிரச்சினை தலை விரித்தாடுகிறது. ஊரிலிருந்த பெரிய கிணற்றை மக்களுக்காக ஓபிஎஸ் விட்டுக்கொடுத்தாலும் அதற்குப் பின்னால் இருக்கும் நாகமுத்து கொலையும் அந்த வழக்குப் பின்னணியில் இருக்கும் ஓபிஎஸ்ஸின் சகோதரரும் மக்கள் மனதில் நெருடலாகவே உள்ளனர்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே பெரியகுளம் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வும் நடைபெற்றது. ஆரம்பத்தில் முருகன் என்பவரை வேட்பாளராக அறிவித்த அதிமுக பின்னர் மயில்வேலை வேட்பாளராக அறிவித்தது. இதில் ஜெ. பாணியை பின்பற்றியிருக்கிறார் ஓபிஎஸ் என்கிறது தேனி அதிமுக வட்டாரம். மயில்வேல் எந்த அரசியல் பின்புலமும் இல்லாதவர். அதிமுக கூட்டங்களுக்கு பந்தல் போடுபவர். ஆனால் விசுவாசி. எக்காரணம் கொண்டும் கட்சி மாறமாட்டார். இந்தத் தகுதிகளை வைத்தே அவரை வேட்பாளராக களமிறக்கியிருக்கிறாராம் ஓபிஎஸ். தேனியில் மகன் ரவீந்திரநாத்துக்காக மெனக்கிடும் அளவுக்கு பெரியகுளத்திலும் மயில்வேலுக்காக ஓபிஎஸ் அக்கறை காட்டி வருகிறார்.
ஆனால், தொகுதி முழுவதும் அதிமுகவினரே தெரிந்தலும் உண்மையான கள நிலவரம் திமுகவுக்கே சாதகமாக இருக்கிறது என்கின்றனர் உள்ளூர்க்காரர்கள். எங்கும் அதிமுகவினரே தெரிவது எல்லாம் மாயை. இவர்கள் கொடுக்கும் காசுக்கு பாமர மக்கள் வேண்டுமானால் உண்மை, சத்தியம், பழிபாவம் என மயங்கி வாக்கு போடலாம். ஆனால், அதிமுக அதிருப்தியாளர்கள்தான் அதிகமாக இருக்கின்றனர் எனக் கூறுகின்றனர்.
வாடிக்கையாகும் பாலியல் புகார்கள்...
அண்மையில் அமைச்சர் ஜெயக்குமார் மீது அமமுகவின் வெற்றிவேல் ஒரு பாலியல் புகார் கூறினார். அடியோ டேப் வெளியிடப்பட்டு அது ஊடகங்களில், சமூக வலைதளங்களில் பரவலானது.
இப்போது அதிமுக, அமமுக வேட்பாளர் மீது பாலியல் புகார் கூறி ஒருபடி மேலே சென்று வீடியோ ஆதாரத்தை வெளியிட்டிருக்கிறது.
அண்மையில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் அதிமுக மீது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இத்தகைய பாலியல் புகார்கள் அரசியலில் இளம் தலைமுறை வாக்காளர்கள், புதிய வாக்காளர்களுக்கு ஒருவித அருவருப்பை ஏற்படுத்தி மாற்றத்தை நோக்கி செல்ல வைக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
தொட்டுவைத்ததோடு விட்டுவைத்த ஈவிகேஎஸ்..
தேனி மக்களவைத் தொகுதியில் ஆரம்பகட்ட பிரச்சாரக் கூட்டங்களில் ரவீந்திரநாத் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெளியூர்க்காரர் என தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசினார். அதற்கு பதிலடி என ஆரம்பித்த ஈவிகேஎஸ், "ரவீந்திரநாத் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. அவரது சினிமா தொடர்பு பற்றி சொல்லட்டுமா? அவர் பிஞ்சிலேயே பழுத்தவர்" என்றெல்லாம் பேச ஆரம்பித்தார். ஆனால், ஒரே நாள் பிரச்சாரத்தில் ரவீந்திராத் ஈவிகேஸ் மீதான தனிநபர் தாக்குதல்களைத் தவிர்த்துவிட தொட்டுவைத்ததோடு விட்டுவைத்தார் ஈவிகேஎஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT