Last Updated : 16 Apr, 2019 12:46 PM

 

Published : 16 Apr 2019 12:46 PM
Last Updated : 16 Apr 2019 12:46 PM

ஒன் மேன் ஆர்மியாக டிடிஎஸ், ஒதுங்கி நிற்கும் ஈவிகேஸ், இமேஜ் கட்டமைக்கும் ஓபிஎஸ்: தேனி தொகுதியில் இறுதிக்கட்ட கள நிலவரம்

அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் என செல்வாக்குமிக்க  வேட்பாளர்களால் தேனி மக்களவைத் தொகுதி களை கட்டியிருக்கிறது.

இன்று (ஏப்ரல் 16) மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓயும் சூழலில் கடைசி நாளில் கட்சிகளின் கள நிலவரமும் மக்களின் மனநிலையும் அறிய முற்பட்டபோது மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கே வெற்றி என்ற இமேஜை ஓபிஎஸ் வெற்றிகரமாகக் கட்டமைத்திருக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிரச்சாரத்துக்கு செல்வதிலிருந்து பணப்பட்டுவாடாவை தடுப்பது வரை எல்லாவற்றிலும் மெத்தனம் காட்டி ஒதுங்கியே நிற்கிறார் என்றும் அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச் செல்வனோ தனக்குப் பிரச்சாரம் செய்ய ஆளில்லாமல் கிராமம் கிராமமாக வீடு வீடாகத் தானே அலைந்து திரிந்து வேட்பாளர், பேச்சாளர் எல்லாமே நான்தான் என்று ஒன் மேன் ஆர்மியாக நிற்கிறார் என்றும் கள நிலவரம் சொல்கிறது.

அதிமுகவுக்காக அணிவகுத்த பிரபலங்கள்

நடிகர் கார்த்திக், சரத்குமார் என ரவீந்திரநாத்துக்காக பிரச்சாரம் செய்ய அதிமுக சார்ந்த திரை நட்சத்திரங்கள் எல்லோருமே தேனிக்கு வந்து சென்றுவிட்டனர். எல்லாவற்றிற்கும் மேலாக பிரதமர் மோடியே நேரடியாக வந்து பிரச்சாரம் செய்து தேனியில் தேர்தல் பிரச்சாரம் செய்த முதல் பிரதமர் என்ற பெருமையை தட்டிச் சென்றுவிட்டார். ஓபிஎஸ்-ஸோ தேனி, பெரியகுளம் என இரண்டு தொகுதிகளையும் இரு கண்கள் போல் பாவித்து பிரச்சாரம் செய்கிறார்.

ஆளும்கட்சியின் பலம் இப்படியிருக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நடிகை குஷ்பு என காங்கிரஸுக்கும் நட்சத்திர அந்தஸ்து குறையவில்லை.

ஆனால், அமமுகவின் தங்க தமிழ்ச்செல்வனுக்கு மட்டுமே நட்சத்திரப் பேச்சாளர்கள் என்ற கவன ஈர்ப்பு சேராமல் போய்விட்டது. ஆறுதல் அளிக்கும் வகையில் நடிகர் செந்திலும், ரஞ்சித்தும் வந்து சென்றனர். ஓரிரு முறை டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்தார். மற்ற நாட்களில் எல்லாமே தங்க தமிழ்ச்செல்வன் மட்டுமே தனியாக வேட்பாளராகவும் பேச்சாளராகவும் இருக்கும் சூழல் இருக்கிறது. இருந்தாலும் சாதி வாக்குகளை டார்கெட் செய்த டிடிஎஸ் அதனை சரியாக தக்கவைத்துக் கொள்ளவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

பேட்டியே கொடுக்காத ரவீந்திரநாத்

வேட்பாளர் மட்டும்தான் ரவீந்திரநாத். மற்றபடி பேட்டியெல்லாம் ஓபிஎஸ்தான் என்று சொல்லும் அளவுக்கு தேனி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் ஊடகங்களை சந்திப்பதே இல்லை. தொகுதியில் எந்த சர்ச்சை என்றாலும் மகன் சார்பில் தந்தையே பத்திரிகைகளுக்கு விளக்கம் அளிக்கிறார். எங்கே ஊடகங்களில் பேசி ஏடாகூடமாக சிக்கிவிடுவாரோ என்றே ரவீந்திரநாத் பொத்திப் பொதிப் பாதுகாக்கப்படுகிறாராம்.

எங்களுக்குத் தெரியாது... எங்களுக்கும் தெரியாது...

தேர்தலில் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது என்பது தேர்தல் ஆணையத்தின் வேலை மட்டுமல்ல எதிர்க்கட்சிகளின் வேலையும்தான். ஆனால் இந்த காங்கிரஸ்காரர்கள் ஏன் இவ்வளவு மவுனமாக இருக்கிறார்கள் என ஊருக்குள் பேச்சு நிலவுகிறது. பணப் பட்டுவாடா பற்றி திமுகவினரிடம் கேட்டால் எங்களுக்குத் தெரியாது என்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியினரும் எங்களுக்கும் தெரியாது என்பதுபோல் கண்டு கொள்ளாமலேயே இருக்கின்றனர். தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்காவிட்டாலும்கூட ஊடகங்களிடமாவது சொல்லலாம் அல்லவா என்பதே உள்ளூர் சமூக ஆர்வலர்களின் ஆதங்கமாக இருக்கிறது. இப்படி வெளிப்படையாக துணிச்சலாக பணப் பட்டுவாடா நடப்பது வருத்தமாக இருக்கிறது என்றார் ஒரு இளைஞர்.

ரேட்டை ஏற்றிவிட்ட காங்கிரஸ்

பணப் பட்டுவாடா பற்றி பேசாத காங்கிரஸ் கட்சி, மக்களிடம் அதிமுக ரூ.5000 கொடுக்கும், ரூ.10,000 கொடுக்கும் வாங்கிக் கொள்ளுங்கள். அது உங்கள் பணம் என ரேட்டை ஏற்றிவிட்டுள்ளதாம். இதனால், அதிமுகவினர் ரூ.1000-த்துடன் சென்றால் வெறும் ஆயிரம்தானா என மக்கள் கேட்க ஆளுங்கட்சி விழிபிதுங்கி நிற்கிறதாம்.

கமுக்கமாக இருக்கும் மக்கள்

இப்படி ஒன் மேன் ஆர்மியாக டிடிஎஸ், ஒதுங்கி நிற்கும் ஈவிகேஸ், இமேஜ் கட்டமைக்கும் ஓபிஎஸ் என தலைவர்கள் நிலவரம் இருக்க மக்கள் மனநிலையோ என்னவென்று கண்டறிய முடியாதபடி கமுக்கமாக இருக்கின்றனர்.

எல்லோரும் காசு கொடுக்கட்டும். அதனால் அதுவரை எதுவும் சொல்லாமல் இருப்போம் என்ற தொனியில் அமைதியாக இருக்கின்றனர். இளம் வாக்காளர்கள், முதல் முறை வாக்காளர்கள் எல்லோரும் காசை வாங்கிக் கொண்டு விரும்பிய கட்சிக்குத்தான் வாக்கு என்ற ரகசிய உடன்பாடு செய்திருப்பதாகத் தெரிகிறது. அதனால் தொகுதியில் செலவாகும் காசு எல்லாம் வாக்காக மாறும் என்று அடித்துக் கூற முடியாவிட்டாலும் காசைக் கொடுத்தே தீர வேண்டும் என களப் பணி செய்கின்றனராம் தொண்டர்கள்.

மக்களிடம் ஒருவித எதிர்ப்பு மனநிலை நிலவுகிறது. ஆளுங்கட்சியால் ஆதாயம் அடைந்தவர்கள் என்று சொல்லும்படி மக்கள் செல்வாக்கு இல்லாமல் இருக்கிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். மோடி எதிர்ப்பு அலை வேறு இருக்கிறது. பணத்தையும் தாண்டி கடைசி நேரத்தில் பூத்தில் நிலவும் ட்ரெண்ட்தான் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் என்பதுதான் இறுதிக்கட்ட கள நிலவரம்.

இன்று கம்பத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கும் ஓபிஎஸ் மாலை போடியில் பிரச்சாரத்தை முடிக்கிறார். பிரம்மாண்டமாக பேரணியுடன் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

ஈவிகேஸ் இளங்கோவன் தேனி, அல்லிநகரம், பெரியகுளம், தேவதானம்பட்டி, வாடிப்பட்டி, ஆண்டிப்பட்டி பங்களா, சோழவந்தான் என இறுதியாக ஆண்டிப்பட்டியில் பிரச்சாரத்தை முடிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x