Published : 26 Apr 2019 05:02 PM
Last Updated : 26 Apr 2019 05:02 PM
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம்போட்டோமே
நண்டூரும் நரி ஊரும் கருவேலங் காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே...
குழந்தையின் உலகம் எவ்வளவு மகிழ்ச்சியானது என்பதையும் அதன் மகிழ்ச்சிக்குப் பணம் தேவையில்லை, பலம் தேவையில்லை, பதவி தேவையில்லை. கைகோத்து சுற்ற 5,6 சகாக்கள் மட்டும் போதுமென்பதையும் அழகாக வடித்திருக்கும் பாடல் வரிகள் இவை.
நம் குழந்தைகள் கோடை விடுமுறையில் வெயிலோடு விளையாடி உறவாடுகிறார்களா?!
கோடை வந்துவிட்டால் குழந்தைகளுக்கு குதூகலம்தான். அதில் அந்தக் காலம் இந்தக் காலம் என்றெல்லாம் பாகுபாடு இல்லை. ஆனால், அவர்கள் குதூகலத்தை நிர்ணயிப்பது எதுவாக இருக்கிறது என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது. ஆறேழு வருடங்களுக்கு முன்னர்கூட கோடை விடுமுறையில் தெருவில் பிள்ளைகள் விளையாடித் திரிவதைப் பார்க்க முடிந்தது.
ஆனால் இப்போது அந்தக்காலம் மலையேறிவிட்டது. கோடை விடுமுறையில் ஷாப்பிங் மால்களுக்குச் சென்று அங்கிருக்கும் விளையாட்டுகளைக் கூப்பன் வாங்கி விளையாடுவதும், இல்லையென்றால் மொபைல் போன், ஐபேடில் வீடியோ கேம் விளையாடுவதுமே வழக்கமாகிவிட்டது. இரவு வெகு நேரம் கண் விழித்திருந்து டிவி பார்ப்பதற்கு கிரிக்கெட் மேட்ச்களையும் பார்ப்பதற்கான காலமாக கோடை விடுமுறை பயன்படுத்தப்படுகிறது.
பேய்ப் படங்களும், சாகசப் படங்களும் குழந்தைகளைக் குறிவைத்து வெளியாவதால் ஏசி திரையரங்கில் அமர்ந்து படம் பார்ப்பது கபடி விளையாடுவதைவிட அவர்களுக்கு சொகுசாகிவிட்டது. ஒருவேளை அருகிலிருக்கும் மைதானத்துக்கு விளையாடச் சென்றாலும்கூட குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுகிறார்களே தவிர கபடியோ, கிட்டிப்புல்லோ அல்லது கோ-கோ விளையாட்டோ விளையாடுவதில்லை.
கிரிக்கெட் கூடாது என்பதெல்ல நோக்கம். கிரிக்கெட்டைவிட சற்று அதிகமாகவே நம்மூர் விளையாட்டுகளுக்கு இடமிருக்க வேண்டும் என்பதே இலக்கு.
சில குடும்பங்கள் இவற்றிற்கு விதிவிலக்கு. ஆனாலும் முற்றிலுமாக சந்தோஷப்பட்டுவிட இயலாது. காரணம், குழந்தைகளை டிவி, கேட்ஜட்ஸிலிருந்து தற்காப்போம் என்ற பெயரில் அவர்களை சம்மர் கேம்ப்களில் திணித்து விடுகின்றனர் பெற்றோர்கள்.
கோடை வந்ததும் வெப்ப அளவு போல் இத்தகைய சம்மர் கேம்ப்களின் எண்ணிக்கையும் விர்ரென்று ஏறி விடுகின்றன. கையெழுத்துப் பயிற்சி தொடங்கி ரோபோடிக்ஸ் வரை கற்றுத் தருகிறார்கள். அதுவும் ஒரே மாதத்தில்.
குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது போலவே தினமும் காலையில் கிளம்பிச் செல்கின்றனர். பணத்தையும் நேரத்தையும் எங்கோ கொண்டு செலவழிப்பதற்குப் பதிலாக அக்கம் பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுடன் விளையாட அனுமதித்தாலே குழந்தைகளுக்கு கோடை கால குதூகலம் முழுமையாகக் கிடைத்துவிடும் என்பதை உணர்த்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
குழந்தைகள் சம்மர் கேம்ப்பிலும் சிக்கிக் கொள்ளக்கூடாது, இணையக் கைதியாகவும் ஆகிவிடக் கூடாது. அதேவேளையில் அவர்கள் மகிழ்ச்சியை எப்படி உறுதி செய்வது என்ற தேடலின்போது விடைகூற கிடைத்தவர்தான் மு.தென்னவன். மதுரை ய.ஒத்தக்கடை அரசு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருக்கிறார்.
விளையாட்டுக்கும் பள்ளிக்கூடத்துக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? ஒத்தக்கடையில் ஓர் தொடக்கப் பள்ளி; அங்கோர் ஜனநாயக வகுப்பறை; அதில் ஆடலாம், பாடலாம், விளையாடலாம்... இதுதான் அதன் சிறப்பு.
ஆசிரியர் தென்னவனிடம் சம்மர் கேம்ப்பில் இருந்தே கேள்வியை ஆரம்பித்தோம். கோடை கால வகுப்புகளை நான் முழுவதுமாக எதிர்க்கிறேன். பள்ளி விடுமுறையைக் குழந்தைகள் விளையாடிக் கழிக்க வேண்டுமே தவிர நான்கு சுவர்களுக்குள் சிக்கிக் கொள்ளக்கூடாது. விளையாட்டு மூலம் குழந்தைகள் வாழ்க்கை நெறிகளைக் கற்றுக்கொள்ள இயலும். அதுவும் நம் பாரம்பரிய விளையாட்டுகள் வெகு இயல்பாகவே விட்டுக்கொடுத்தல், குழுவாக இணைந்து செயல்படுதல், வெற்றி தோல்விகளை சமமாகப் பாவித்தல், தொட்டு விளையாடுதல் ஆகியனவற்றை இயல்பாகக் கற்றுக்கொடுக்கின்றன.
நாட்டுப்புற ஒலிம்பிக்ஸ்
பல்லாங்குழி, சொட்டாங்கல், பரமபதம், பாண்டியாட்டம், பச்சக்குதிரை, கபடி, கிட்டிப்புல், கோலி, கண்ணாமூச்சி, தாயம், ஆடுபுலி ஆட்டம், பம்பரம் என நாம் மறந்துபோன பாரம்பரிய விளையாட்டுகள் ஏராளமாக இருக்கின்றன. இவற்றை மீட்டெடுத்தால் நம் பாரம்பரிய விளையாட்டு வகைகளைக் கொண்டு ஒரு நாட்டுப்புற ஒலிம்பிக்ஸே நடத்தலாம். விளையாட்டு என்பதே பொதுவாக நற் பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதாக இருந்தாலும் நம் மண் சார்ந்த விளையாட்டை மீட்டெடுப்பது நமது கடமை. அதிலும், பாரம்பரிய விளையாட்டுகள் குழந்தைகளிடம் வளைந்து கொடுக்கும் தன்மையை உருவாக்குகிறது. நேர்மையைப் பின்பற்றச் செய்கிறது. தைரியத்தை விதைக்கிறது. அறிவுக்கூர்மையையும் படைப்பாற்றலையும் வளர்க்கிறது.
பல்லாங்குழி விளையாட்டில் கூட்டல், கழித்தல், பங்கிடுதலைக் கற்றுக் கொள்ள இயலும். சொட்டாங்கல் விளையாட்டு இன்றைய நவீன கண் மருத்துவர்கள் கூறும் அத்தனை கண் பயிற்சிகளையும் இயல்பான விளையாட்டாக செய்ய வைக்கிறது. சொட்டாங்கல் விளையாடும் குழந்தைகளுக்கு கண் பாதிப்பு ஏற்படுவது மிக மிகக் குறைவு. பரமபதம் விளையாடும்போது ஏணியில் ஏறுவதும் பாம்பு கடித்து இறங்குவதும் வாழ்க்கைப் பாடத்தையே புகட்டிவிடுகிறது.
பச்சக்குதிரை விளையாட்டு தொட்டுப் பழகும் வாய்ப்பை குழந்தைகளிடம் ஊக்குவிக்கிறது. பம்பரம் சுழற்றும்போது மகிழ்ச்சி பொங்கும். கோலி விளையாட்டு கை விரல்களுக்குப் பயிற்சி. தாயம் விளையாடுவதில் ஒரு யுத்தி வேண்டும். பகடையை சுழற்றி வேண்டிய எண்ணை விழவைப்பதும் வெட்டுப்படாமல் காய் நகர்த்துவதும் சாம்ர்த்தியத்தைக் கற்றுக் கொடுக்கும். கபடி விளையாட்டு குழுவாக இணைந்து இயங்குவதை கற்றுக் கொடுக்கும். இப்படி ஒவ்வொரு விளையாட்டும் வாழ்வியல் திறனை ஊக்குவிக்கும்.
பாரம்பரிய விளையாட்டுகள் பாடப் பொருளாகவும் நேர்மறை சிந்தனையை வளர்க்கும் கருவியாகவும் இருக்கின்றன. தற்காப்புக் கலை என்றாலும்கூட சிலம்பும் ஒரு விளையாட்டு வகையைச் சார்ந்ததுதான். தன்னம்பிக்கை மிளிரச் செய்யும் விளையாட்டு இது. துணிவான மனமே வலுவான உடலுக்கு அடிப்படை.
அதைவிடுத்து டிவி திரை முன்னாலும் செல்ஃபோன் தொடுதிரை முன்னாலும் நேரத்தை செலவழிக்கின்றனர் நம் குழந்தைகள். இந்த விளையாட்டுகளால் கோபம், வன்மம், சுயநலம், தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமின்மை முதலியன ஏற்படுகின்றன. ஆங்க்ரி பேர்ட்ஸாக குழந்தைகளும் மாற வேண்டாம் என்பதே எனது நோக்கம் என பாரம்பரிய விளையாட்டுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார் தென்னவன்.
உங்கள் முகநூல் பக்கத்தில் மு.தென்னவன் ஜனநாயக வகுப்பறை எனக் குறிப்பிட்டுள்ளீர்களே? அது ஏன்?
வகுப்பறைகள் முன்னொரு காலத்தில் குருகுலமாக இருந்தன. ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பணிவிடை செய்து பாடம் கற்றுக் கொண்டார்கள். பின்னர் வகுப்பறைகளில் பிரம்பு நுழைந்தது. தண்டனைகள் வழங்கப்பட்டன. இப்போது குழந்தைகளை அடிப்பதற்கு எதிராகச் சட்டங்கள் கொண்டு வந்துவிட்டாலும்கூட ஆசிரியர்கள் மனதளவில் பிரம்பு மனப்பான்மையுடன் உலா வருகின்றனர். அப்படிப்பட்ட வகுப்புகள் கல்வி கற்றவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் உற்பத்திக்கூடமாகத்தான் இருக்கும்.
ஆனால், ஏட்டுக் கல்வியை கற்க மட்டுமா பள்ளிக்கூடம்? இல்லையல்லவா! அதனால்தான் எனது வகுப்பறைகளை ஜனநாயக வகுப்பறை எனக் கூறுகிறேன்.
இங்கு ஆசிரியரைப் பார்த்தால் மாணவருக்கு பயம் வராது. மாணவனுக்கும் எனக்கும் இடையே சுவர் கிடையாது. அவர்களை நான் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறேன். அவர்கள் வளர்ச்சிக்கு தேவைப்படும் இடத்தில் வழிகாட்டியாக இருக்கிறேன். இதுதான் ஜனநாயக வகுப்பறை. மாணவர்கள் செயல்படுவார்கள், நான் வழிகாட்டுவேன். கற்பிப்பது மட்டுமல்ல மாணவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதும் ஆசிரியப் பணி.
நீங்கள் ஆண்டுதோறும் உங்கள் பள்ளியில் பாரம்பரிய விளையாட்டுப் பயிற்சி நடத்துகிறீகள்? அதற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?
விளையாட்டு மூலம் கற்றல் என்பதை தொடக்கப்பள்ளிகளில் அரசே ஊக்குவிக்கிறது. அந்த வழியில்தான் எங்கள் பள்ளி செல்கிறது. தமிழகத்திலேயே மிகப் பெரிய அரசு தொடக்கப்பள்ளி எங்களது ய.ஒத்தக்கடை ஊராட்சி தொடக்கப் பள்ளியே. எங்கள் ஊரில் இருந்த தனியார் மழலையர் பள்ளிகளில் இருந்து எங்கள் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர் படையெடுக்கின்றனர்.
எங்கள் பள்ளியின் மாணாக்கர் எண்ணிக்கை 556 என்றளவில் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள பெற்றோர்கள் எல்லாம் விளையாட்டின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டுள்ளனர். என் பள்ளிப் பிள்ளைகள் விடுமுறையில் தொலைக்காட்சியில் ஐபிஎல் பார்க்க சண்டை போட மாட்டார்கள். மாறாக குழுவாக இணைந்து ஏதாவது விளையாடுவார்கள். நாங்கள் நடத்தும் பாரம்பரிய விளையாட்டு விழாவில் பெற்றோரும் ஆசிரியரும்கூட மகிழ்ச்சியாக பங்கு பெறுகின்றனர். தங்கள் குழந்தைப் பருவம் மீட்கப்பட்டதாக உணர்கின்றனர்.
மண்ணில் சேற்றில் விழுந்து விளையாடும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே உருவாகிறது. வீட்டினுள் பொத்திப் பொத்தி வைக்கும் குழந்தைக்குத்தான் சரும வியாதிகள் எளிதில் தொற்றுகின்றன. பாரம்பரிய விளையாட்டுகள் மண்ணோடும் உறவாட வைக்கிறது.
நீங்கள் விளையாட்டை ஊக்குவிக்கிறீர்கள்.. ஆனால் மேல்நிலைப் பள்ளி சென்றுவிட்டால் அரசு, தனியார் பள்ளி என பேதமின்றி விளையாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறதே?
விளையாட்டு மூலம் கற்றல் என்பதை தொடக்கப்பள்ளியோடு நிறுத்திவிடக் கூடாது என்பதுதான் எனது எண்ணமும். இன்டகிரல் கேல்குலஸ், டிஃபரன்சியல் கேல்குலஸ் போன்ற கடினமான கணிதப் பாடங்களைக் கூட விளையாட்டாக கற்பிக்க இயலும்.
நான் அதற்கான முயற்சிகளை சிறிய அளவில் மேற்கொண்டேன். மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கணித சூத்திரங்கள், அறிவியல் கூறுகளை விளையாட்டு மூலமாகவே கற்பிக்கும் வகையில் ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும். அப்படி ஒரு கற்பித்தல் முறை நடைமுறைக்கு வந்தால் தேர்வு ஒரு மாணவனுக்கு இரும்புச் சுவராக இருக்காது.
இறுதியாக பெற்றோருக்கு நீங்கள் சொல்ல விரும்பும் அறிவுரை..
குழந்தைகளை குழந்தைகளாகவே வாழ அனுமதியுங்கள். மழையில் நனையாதே, வெயிலில் திரியாதே, அவனுடன் சேராதே, மண்ணைத் தொடாதே என்றெல்லாம் கட்டுப்படுத்தாதீர்கள். அவர்கள் எதிர்காலத்தில் இந்த சமூகத்தில் மக்களோடு மக்களாகத் தானே வாழ வேண்டும். அப்படியென்றால் இப்போதே துள்ளிக் குதித்து நீந்தித் திரிந்து தொட்டுப் பழகி சிரித்து வாழட்டும்.
தெருவில் உள்ள குழந்தைகளுடன் குழுவாக இயங்கட்டும். முடிந்தால் நீங்களே தெருவில் உள்ள குழந்தைகள் அனைவரையும் ஒருங்கிணைத்து விளையாட உதவி செய்யுங்கள். டி.வி.களும், வீடியோ கேம்களும் விடுமுறையில் இருக்கட்டும் குழந்தைகள் குதூகலிக்கட்டும்.
இதையெல்லாம் மறுத்தீர்கள் என்றால் எதிர்காலத்தில் சமூகத்தோடு ஒட்டி வாழ உங்கள் பிள்ளைகள் பெர்சானலிட்டி டெவலப்மென்ட் கோர்ஸ் சென்று கொண்டிருப்பார்கள். அலுவலகத்தில் நடக்கும் போட்டா போட்டியை எதிர்கொள்ள இயலாமல் உளவியல் நிபுணரை நாடுவார்கள். வாழ்க்கை பரமபதம் போலத்தான். ஏணி கிடைக்கும்போது ஏறுவேன் முடிந்த அளவு பாம்பிடம் சிக்காமல் தப்பிப்பேன் என வாழ்க்கையை மகிழ்ச்சியை வாழ்வார்கள்.
கோடை வகுப்பு செல்வதல்ல வெயிலோடு விளையாடி உறவாடுவதே குதூகலம்!
தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT