Published : 30 Apr 2019 05:01 PM
Last Updated : 30 Apr 2019 05:01 PM

மனு மனுவாம் சூலூர் வேட்புமனுவாம்...: இடைத்தேர்தல் காட்சிகள்

மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்கிற கதையாக பொதுத் தேர்தல் முடிந்தாலும், தொடர்ந்து நடைபெற இருக்கும் நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சூடும், அதில் நிகழும் கல,கல காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. அதில் ஒவ்வொரு கட்சிகளும், அதன் வேட்பாளர்களின் நடவடிக்கையும் ஒவ்வொருவிதம். அதில் கோவை சூலூர் இடைத்தேர்தல் காட்சிகள் கூடுதல் விதம். அதில் சாம்பிளுக்கு சில..

 

சால்வை அணிவிப்பது பொங்கலூர் பழனிசாமி பாலிஸி

 

pongalurjpg 

 

இந்த தொகுதியின் விஐபி வேட்பாளர் திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி. தன் வேட்பு மனு தாக்கலுக்கு முன்னதாக தேர்தல் அலுவலத்தை பிரம்மாண்ட விஐபி வீட்டுத் திருவிழா போலவே நடத்தினார். வார்டு வாரியாக, பூத் வாரியாக தம் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மட்டுமல்ல, கூட்டணி கட்சியை சேர்ந்த சிறு,குறு நிர்வாகிகளும் ஆயிரக்கணக்கானோர் இத்திருவிழாவுக்கு படையெடுத்தனர்.

 

வந்தவர்கள் யாவரும் சால்வை கொண்டு வந்து வேட்பாளருக்கு போர்த்திக் கொண்டிருக்க, அதையே திருப்பி அவரவர்க்கே போர்த்தி கெளரவித்து குஷிப்படுத்தினார். சால்வை இல்லாது வந்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த லோக்கல் நிர்வாகிகளுக்கு தயார் நிலையில் தாம் வைத்திருந்த சால்வையை எடுத்து வந்து தந்தார்கள் அவரின் உதவியாளர்கள்.

 

ஆக, இந்த நிகழ்ச்சிக்கு வந்து பொங்கலூரருக்கு சால்வை போடாதவர்கள் இருந்தாலும் இருக்கலாம்; பொங்கலூராரிடம் சால்வை வாங்காத தலைகள் மட்டும் இல்லை எனலாம். அதை வாங்கிய உடன்பிறப்புகளில் சிலர், ‘இப்ப நம்ம துண்டு போட்டா திருப்பிப் போடறார். இதுக்கு பதிலா நாமெல்லாம் ஓட்டுப் பெட்டியை நிரப்பி ஜெயிக்க வச்சுட்டோம்ன்னா இவர் எம்.எல்.ஏவாகி மந்திரியும் ஆயிடுவார். அப்ப நம்ம சால்வை போட்டா வாங்கிக்குவார்; திருப்பிக் கொடுக்க மாட்டார்ல!’ என்று கமெண்ட் அடிக்கவும் தவறவில்லை.

 

கும்பிடு போடுவது கந்தசாமி ஸ்டைல்

 

kandasamyjpg 

சூலூர் அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமி மனுதாக்கலுக்கு பக்கபலமாக அமைச்சர் வேலுமணி உடன் வந்தபடியே இருந்தார். தாரை தப்பட்டையுடன் பிரச்சார வேனில் வந்தபோதும் சரி, அதை விட்டு 100 மீட்டர் தொலைவில் இறங்கிய போதும் சரி, சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தை நாலுபேருடன் நடந்து நெருங்கும்போதும் சரி இருகரம் கூப்பி கும்பிட்டபடியே இருந்தார்.

 

அமைச்சர் அவருடன் பேசினாலும் சரி, உடன் வந்த மற்ற நிர்வாகிகள் பேசினாலும் சரி குனிந்து, குனிந்து காது கொடுத்து ஆமோதித்து பதிலளித்தாரே ஒழிய அவரின் கும்பிட்ட கைகள் பிசின் போட்டு ஒட்டினதுபோலவே நர்த்தனம் ஆடின. தப்பித்தவறி கூட உள்ளங்கைகள் பிரியவேயில்லை. அதிகாரியிடம் வேட்புமனு கொடுத்த போது மட்டும் அவ்வப்போது கைகள் பிரிந்து மறுபடி குவிந்தன.

 

மனுதாக்கல் முடிந்த பின்பு, வெளியில் வந்து பிரஸ்ஸை சந்திக்கும்முன்பு, அவரை சில நிமிடம் நிறுத்தி நிருபர்களிடம் என்ன பேசவேண்டும் என்பதை இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்தார் அமைச்சர். அப்போதும் கூட குனிந்து, குனிந்து கும்பிட்டபடியே இருந்தார் கந்தசாமி. பிரஸ்மீட்டில் ‘ஆட்சியின் சாதனை, தான் இறந்த முன்னாள் எம்.எல்.ஏ கனகராஜின் சகோதரர், அவர் விட்ட பணியை செவ்வனே செய்வேன்!’ என்ற சொல்லும்போதும் கூட அவர் கைகள் நிருபர்களை நோக்கி கும்பிட்டபடியே இருந்தது. அதை கவனித்த அவர் பக்கத்தில் நின்றிருந்த முன்னாள் தேமுதிக எம்.எல்.ஏ., தினகரன் கும்பிட்ட கையை சட்டென்று இழுத்து விட்டும் பார்த்தார்.

 

அந்த ஒரு நிமிஷம் மட்டும் கையை தொங்க போட்ட வேட்பாளர், அடுத்த நிமிஷமே கைகளை குவித்து கும்பிட்டுக் கொண்டே பேச ஆரம்பித்தார். அப்படி அவர் பேசி முடித்ததும், ‘தன் தொகுதியை தனக்கு தராத அதிருப்தியில் உள்ளாரே முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி!’என்ற கேள்வியை நிருபர்கள் கேட்டதுதான் தாமதம் இவர் பெரிய கும்பிடு போட, அமைச்சரே தலையிட்டு, ‘அதிருப்தியெல்லாம் ஒண்ணுமில்லை. நாங்க 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்துல ஜெயிக்கப் போறோம்!’என்றபடி நடையை கட்ட, வேட்பாளர் பெரிய கும்பிடு போட்டபடியே நகர்ந்தார்.

 

இவரின் வேட்பு மனுதாக்கலுக்கு முன் தினம். சூலூரில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அதில் 2 டன் கோழிக்கறி, 10 ஆயிரம் முட்டைகள் என தருவிக்கப்பட்டு பிரியாணி விருந்து நடந்ததாம். அதிலும் கூட வந்தவர்களை நோக்கி கும்பிட்டபடியேதான் இருந்திருக்கிறார் வேட்பாளர். இதைப்பற்றி கட்சி சீனியர் ஒருவரிடம் பேசியபோது, ‘மனுசன் நல்லா பேசறவர்தான். தேர்தல் முடியற வரைக்கும் நீ கும்பிட்டுட்டே இரு. அதுதான் கட்சிக்குள்ளே இருக்கிற அதிருப்திக்கு நமக்கு நல்லதுன்னு யாரோ சொல்லியிருப்பாங்க போல. அதுதான் இப்படி கும்பிட்டுட்டே இருக்காரு!’ என போற போக்கில் சொல்லிவிட்டுப் போனார்.

 

அமைதி காப்பது சுகுமார் இயல்பு

 

sugumarjpg 

 

அதிமுக வேட்பாளர் மனுதாக்கி விட்டு போன பிறகுதான் அமமுக வேட்பாளர் சுகுமார் மனு தாக்கலுக்கு வந்தார். மனுதாக்கல் அலுவலகத்திற்கு 100 மீட்டர் எல்லையில் இவர் வரும்போது ஒரே களேபகாரம். சத்தமிட்டது முன்னாள் எம்.எல்.ஏவும், அமமுக திருப்பூர் மாவட்ட செயலாளருமான சிவசாமி.

 

‘‘ஏய் யாரும் வரக்கூடாது. நாங்க நாலுபேருக்கு மேல யாரும் வராதீங்க. தூரப்போங்க. தூரப்போங்க. பக்கத்துல வந்தீங்க. நடக்கறதே வேற!’’ எல்லோரையும் அடித்து விரட்டாத குறைதான். அவரின் கூச்சலைக்கேட்டு போலீஸ் படையே என்னவோ ஏதோவென்றுதான் ஓடி வந்தது. அதில் தன் கட்சி வேட்பாளர் வருவார். சால்வை போர்த்து விட்டு நகரலாம் என்று இந்த எல்லைக்குள் காத்திருந்த அமமுகவினர் எல்லாம் தெறித்து ஓடாத குறைதான்.

 

மீடியா திரையில் கூட ஐந்து பேருக்கு மேல் விழுவதை அனுமதிக்கவில்லை அவர். இந்த களேபகாரத்திலும் சாந்தசொரூபியாய் எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் பேரமைதியாய் கும்பிட்ட படி வந்தார் வேட்பாளர் சுகுமார். இவருடன் முன்னாள் எம்.எல்.ஏ சேலஞ்சர் துரை, இன்னபிற கட்சி நிர்வாகிகள் இருவர். வேர்த்து விறு,விறுத்து ஏதோ போருக்கு போவது போல் வந்த வேகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுதாக்கல் செய்து விட்டு வெளியேறின சிவசாமியிடம், ‘ஏன் இந்தசலம்பல், ஏன் இந்த விரட்டல்?’ எனக் கேட்டேன்.

 

‘‘என்னண்ணா செய்யச் சொல்றீங்க. ஏதாவது ஒரு வீடியோவுல எங்க அஞ்சு பேரோட வேறொரு ஆளைக் காட்டியாவது தேர்தல் விதிமீறல் மனு தள்ளுபடின்னு கணக்குக்காட்ட துடியாய் துடிச்சுட்டு இருக்காங்க அதிகாரிங்க. அந்த அளவுக்கு ஆளுங்கட்சி எங்களைத்தான் குறி வைக்குது. அதுக்குத்தான் இந்த அளவு சேஃப்டி!’’ என்றார் கூலாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x