Last Updated : 29 Mar, 2019 05:19 PM

 

Published : 29 Mar 2019 05:19 PM
Last Updated : 29 Mar 2019 05:19 PM

பணக்கார்களின் நண்பர் மோடி பிரதமராக இருக்கத் தேவையில்லை: விருதுநகர் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்

இது இந்திய தேசத்தை, தேசத்தின் அடையாளத்தை மீட்டெடுக்கும் தேர்தல். இந்தியாவின் பிரதமராக வெறும் 5, 6 கார்ப்பரேட் பணக்காரர்களின் நண்பர் இருக்கத் தேவையில்லை என காட்டமாக கூறுகிறார் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்.

இவர் ஏற்கெனவே இத்தொகுதி எம்.பி.யாக இருந்தவர் என்பதால் தொகுதி மக்களுக்கு பரிச்சயம் ஆனவர்.

கடந்த 2009-ல் சிவகாசி மக்களவைத் தொகுதி விருதுநகர் மக்களவைத் தொகுதியாக மாற்றம் பெற்றது. தற்போது இத்தொகுதியில் சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

2009-ம் ஆண்டில் நடைபெற்ற விருதுநகர் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,07,187 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணன் 4,06,694 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த முறையும் திமுக கூட்டணியில் மாணிக் தாகூர் போட்டியிடுகிறார். தேர்தல் குறித்த தனது பார்வை, வெற்றி வாய்ப்பு, காங்கிரஸ் பிரதமர் வேட்பாளர் யார், தொகுதியின் பிரச்சினைகள் என பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவர் பேசினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இந்தத் தேர்தலை எப்படிப் பார்க்கிறீர்கள்? 2019 மக்களவைத் தேர்தல் ஏன் முக்கியமானது என நினைக்கிறீர்கள்?

இந்தக் கேள்விக்கு நீண்ட பதில் தர வேண்டும். ஏனெனில் இந்தத் தேர்தல் இந்திய தேசம் சந்திக்கும் மிக முக்கியமான தேர்தல். இந்தியா பல மதங்கள், பல இனங்கள், பல கலாச்சாரங்கள் ஒற்றுமையாக இயங்கும் தேசம். நான் பார்த்த இந்தியா இதுதான். நான் வளர்ந்த இந்தியாவும் இதுதான். இத்தகைய இந்தியாவை நேருவும், காந்தியும் கட்டமைத்தனர். அதேகாலகட்டத்தில் சிலர் ஒரு மொழி மேன்மையானது, ஒரு மதம் பிரதானமானது, ஓரினம் முக்கியமானது மற்றவையெல்லாம் அதன் கீழ் என்ற கலாச்சாரத்தைக் கட்டமைத்துக் கொண்டிருந்தனர்.

ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம் என்ற அமைப்புகள் அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தனர். ஆனால், அந்த அமைப்புகளால் அன்றைய தினம் மக்கள் செல்வாக்கைப் பெற முடியவில்லை. அதனால் இந்தியா இந்தியாவகவே இருந்து கொண்டிருந்தது. திடீரென்று ஆர்.எஸ்.எஸ். கொள்கையெல்லாம் ஆட்சியாளர்களால் பின்பற்றும் வலுவான நிலை பாஜக மூலம் அவர்களுக்குக் கிடைத்தது. இப்போது இந்தியா என்ற அடையாளம், கொள்கை அச்சுறுத்தலில் உள்ளது.

இந்தியாவை மீட்டெடுக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் ஆட்சி மலர வேண்டும். மாநிலத்தில் பாஜகவுக்கு முட்டுக்கொடுக்கும் ஆட்சி ஒழிய வேண்டும். அதற்கு ஸ்டாலின் முதல்வராக வேண்டும். இந்த வகையில் 2019 மக்களவைத் தேர்தலையும், 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறேன்.

இந்தியா ஜனநாயக நாடு. இங்கு மக்கள்தானே மோடியை பிரதமராக அமர வைத்தார்கள்?

ஆமாம். மக்கள்தான் ஆதரித்தார்கள். ஆனால் ஏன் ஆதரித்தார்கள். மோடி சொன்ன வாக்குறுதியை எல்லாம் நம்பினார்கள். சப்கே சாத் சப்கே விகாஸ் என்று இந்தியில் முழங்கினார். அனைவருக்குமான அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்றார். ஆனால், அப்படிப்பட்ட வளர்ச்சியை இந்தியா கண்டுகொண்டிருக்கிறதா? 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்றார். வேலைவாய்ப்பு கிடைத்துவிட்டதா?

தமிழும், ஆங்கிலமும் மட்டுமே தெரிந்த தமிழர்கள் இருக்கும் பொதுக்கூட்டத்தில் இந்தியில் பேசி இன்னொருவரை மொழிபெயர்க்கச் செய்கிறார். ஏன் குறைந்தபட்சம் ஆங்கிலத்திலாவது அவரால் பேச இயலாதா?இதைத்தான் மொழித் திணிப்பு என்கிறேன்.

மாட்டிறைச்சி சாப்பிட்டால் அடிக்கிறார்கள், வேற்று மொழி பேசினால் அடிக்கிறார்கள், மத சகிப்புத்தன்மை இல்லை, எழுத்தில் கருத்து சுதந்திரம் இல்லை. இதில் அனைவரையும் உள்ளடக்கிய என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவானது? அதனால்தான் சொல்கிறேன் இந்தியாவை மீட்க வேண்டும் என்று.

மோடி வேண்டாம் என்பதற்கு நீங்கள் முன்வைக்கும் முக்கியக் காரணங்கள் இரண்டு?

ஒரு காரணம் மட்டுமே போதுமானது. இந்த நாட்டின் பிரதமராக ஏழைகளின் நண்பர்தான் வர வேண்டுமே தவிர 5,6 பணக்காரர்களின் நண்பர் வரக்கூடாது. மோடி கார்ப்பரேட் முதலாளிகளின் நண்பர். அவரது திட்டங்கள் எல்லாம் பணக்காரர்களை பெரும் பணக்காரர்களாக்குமே தவிர விவசாயிகளையோ சாமானியர்களையோ கண்டு கொள்ளாது. இந்தியாவின் பிரதமரமாக பணக்காரர்களின் நண்பர் இருக்கத் தேவையில்லை.

ராகுல் ஏன் பிரதமராக வேண்டும் என்று சொல்லுங்கள்?

முதலில், ராகுல் நான்தான் பிரதமராவேன் என்று எங்காவது எப்போதாவது சொல்லியிருக்கிறாரா? அவர் காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். இப்போது பேசுமிடங்களில் எல்லாம் காங்கிரஸ் கட்சிக்காக வாக்கு சேகரிக்கிறார். அவர் நான் என்று எங்கும் பேசியதில்லை. நாம் என்றே பேசுகிறார். இந்தியாவை மீட்பதற்காகப் பேசிக் கொண்டிருக்கிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோழமைக் கட்சிகள் எல்லாம் அவரை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கின்றனவே தவிர அவர் தன்னைத் தானே அப்படிப் பார்க்கவில்லை. தேர்தல் வெற்றிக்குப் பின் நாங்கள் எங்கள் பிரதமர் வேட்பாளரை இயல்பாகவே ஆதரிக்கப் போகிறோம்.

மம்தா, சந்திரபாபு எல்லாம் இன்னும் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஆதரிக்கவில்லையே.. ஏன்?

மம்தா, சந்திரபாபு நாயுடு. மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோரை எங்களுடன் இணைத்திருக்கும் புள்ளி மோடி எதிர்ப்பு. தேர்தலுக்குப் பின்னர் பிரதமரைத் தேர்வு செய்யும்போது எங்களுக்குள் இணக்கம் ஏற்படும்.

இந்தத் தொகுதியின் முன்னாள் எம்.பி. என்ற முறையில் உங்கள் கவனம் எந்தெந்த பிரச்சினைகள் மீது இருக்கும்?

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப் பின்னர் இங்கு சிறு, குறு, நடுத்தர தொழில்கள் முடங்கியுள்ளன. இப்போது 7 விதமான வரி விதிப்புகளை உள்ளடக்கியதாக ஜிஎஸ்டி இருக்கிறது. இதனை மாற்றி ஒரே ஜிஎஸ்டி எளிமையான ஜிஎஸ்டி என்பதை அமல்படுத்த குரல் கொடுப்பேன்.

சிவகாசி பட்டாசுத் தொழில் சிக்கலுக்கு தீர்வு என்ன?

சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986-ல் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு பட்டாசுத் தொழிலுக்கான சிக்கல்களை நீக்கி பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும். டெல்லியில் மாசு ஏற்படுவதை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் பட்டாசு வெடிக்கத் தடை விதித்தது. ஆனால், அது சுட்டிக் காட்டிய காரணங்களில் 18-வது இடத்தில்தான் பட்டாசு இருக்கிறது. மாசை குறைப்பதற்கான வழிவகைகளையே மேற்கொள்ள வேண்டுமே தவிர பட்டாசை ஒழிக்கக் கூடாது. பட்டாசு தொழிலைப் பாதுகாப்பதற்கான குரலை நிச்சயம் எழுப்புவேன்.

அதுபோலவே பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுத்து பட்டாசுத் தொழில் பாதுகாப்பானதாக இருக்க நடவடிக்கை மேற்கொள்வேன். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முந்தைய ஆட்சியில் பட்டாசுத் தொழிலின் ஆபத்துகளைக் குறைப்பதற்கான வழிமுறைகளை வகுக்க அறிவியல் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அப்போதைய அமைச்சர் அஸ்வனி குமார் அதற்கு தலைமை வகித்தார். அந்தக் குழு நிறைய பரிந்துரைகளைக் கொடுத்தது. ஆனால், ஆட்சி மாறியவுடன் அவை கிடப்பில் போடப்பட்டன. காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின்னர் அவற்றை காலத்திற்கு ஏற்ப திருத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சி செய்வேன்.

ஏப்ரல் 18-ம் தேதிக்காக இந்திய மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாறும்போது ஏற்றங்கள் இயல்பாக நிகழும்.

இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x