Published : 14 Mar 2019 07:47 AM
Last Updated : 14 Mar 2019 07:47 AM
ராகுல் காந்தியின் தமிழக வருகையை ஒட்டி ட்விட்டரில் #GoBackRahulGandhi #GoBackPappu போன்ற ஹேஷ்டேகுகள் தேசிய அளவில் ட்ரெண்டாகிக் கொண்டிருந்தன. டெல்லி, ஹைதராபாத்திலிருந்தெல்லாம்கூட இந்த ஹேஷ்டேக் கீழ் ட்வீட்கள் வந்து கொண்டிருந்தன.
இந்தபோக்குதான், ட்ரெண்ட் உருவானதா அல்லது உருவாக்கப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பியது.
அந்தக் கேள்வியோடு, அப்படியே சில ஆண்டுகள் பின்னோக்கி சொல்வோம். 2015-ல் மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது. அப்போதும் ராகுலுக்கு எதிராக சில ஹேஷ்டேகுகள் ட்ரண்டாகிக் கொண்டிருந்தன. #RahulMissing என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகிக் கொண்டிருந்தது. வெளிநாட்டுச் சுற்றுலா சென்றிருக்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது.
ராகுலும் இந்தியா திரும்பினார். பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பாகத்தில் ராகுல் கலந்துகொண்டார்.
கடைசி வரிசையில் உட்கார்ந்து உறங்குவார் என்று முன்முடிவுகள் வைக்கப்பட்ட நிலையில் ராகுல் முன் எப்போதும் இருந்திராத அளவுக்கு பேச்சிலும் உடல்மொழியிலும் மேம்பட்டிருந்தார்.
நாடாளுமன்றத்தில் அவர் பேசியபோது வழக்கம்போல் கலாவதி கதை சொல்லப்போகிறாரோ! என்று எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேறு ஒரு கதை சொன்னார்.
"பிரதமர் மோடியை பாராட்டி அமெரிக்க அதிபர் ஒபாமா மிக நீண்ட குறிப்புரை எழுதியிருக்கிறார். இதுவரை எந்த ஒரு இந்தியப் பிரதமரை குறித்தும் அமெரிக்க அதிபர் ஒருவர் இவ்வளவு பாராட்டி புகழ்ந்து எழுதியதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய சோவியத் ரஷ்யாவின் அதிபர் மிச்செல் கோர்பசேவை அப்போதைய அமெரிக்க அதிபர் வெகுவாக பாராட்டிப் பேசியிருந்தார். மிச்செல் கோர்பசேவ் அதிகாரத்தின் கீழ்தான் சோவியத் ரஷ்யா பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. சோவியத் ரஷ்யா வீழ்ச்சிக்கு வித்திட்டுக் கொண்டிருந்த கோர்பசேவை அமெரிக்க அதிபர் பாராட்டியதுக்கு இணையானதே ஒபாமா மோடியை பாரட்டியதும்" என்று ராகுல் முன்வைத்த அந்த உரை காங்கிரஸ் தலைவராகும் தகுதி அவருக்கு வந்துவிட்டது என்ற பேச்சுக்களை உருவாக்கியது.
அந்தக் கதை அவர் மீதான பப்பு அடையாளத்துக்கு முதல் அடி கொடுத்தது.
அதன் பின்னர் அவரது பேச்சு மெருகேறிக்கொண்டே சென்றது. இன்னும் அது தொடர்கிறது.
குஜராத் தேர்தலில் ராகுலின் பிரச்சாரம் காங்கிரஸுக்கு வெற்றி பெற்றுத்தரவில்லை என்றாலும்கூட மோடியின் செல்வாக்கை பாஜகவின் செல்வாக்கை அசைத்துப் பார்த்திருந்தது. முந்தைய தேர்தலைவிட குஜராத்தில் பாஜக பெற்ற வாக்குவங்கி சரிந்திருந்தது. இத்தனைக்கும் பிரதமரே ஊர் ஊராக பிரச்சாரம் செய்திருந்தார்.
அந்தத் தேர்தல் முடிவு மூலம் நான் பப்பு இல்லை என பாஜகவுக்கு வலுவான செய்தியை ராகுல் காந்தி அனுப்பினார்.
அதன்பின்னர், மோடியே நேரடியாக ராகுலை விமர்சித்துப் பேசுவது, பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியைவிட ராகுலை அதிகமாக விமர்சிப்பதும் அதிகரித்திருந்தது.
தடம் பதித்த தழுவல்:
2018 ஜூலை மாதம், மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.சீனிவாஸ் கொண்டுவந்திருந்தார்.
அன்று ராகுலின் பேச்சும், பிரதமரை அவர் கட்டிப்பிடித்ததும் ஒட்டுமொத்த தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.
அவர் பிரதமரை கட்டிப்பிடித்தார் என்பதற்காக மட்டுமல்ல அன்றைய உரையில் எதிர்க்கட்சியினரை அவர் திணறடித்தார் என்பதாலும் அந்த ஈர்ப்பு ஏற்பட்டது.
அப்போது மீண்டும் ஒரு முறை அவர் நான் பப்பு அல்ல என்னவென்பதை அரசியல் அரங்கில் உறுதிப்படுத்தினார்.
அந்த செயலுக்கு அடுத்த மாதம் ஜெர்மனியின் ஹேம்பர்க் நகரில் பள்ளி ஒன்றில் மாணவர்கள் மத்தியில் பேசியபோது, உங்களை வெறுப்பர்கள் மீதும் அன்பு காட்ட வேண்டும் என்பதே காந்திய சிந்தனை. வன்முறைக்கு வன்முறையே தீர்வு என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே தான் என் மீது வெறுப்புணர்வான கருத்துக்களை அவர் தெரிவித்தபோது, அவருக்கு பதிலுக்கு அன்பபை தெரிவிக்க முற்பட்டேன் என்று விளக்கம் கூறினார்.
உலக அரங்கில் தன்னை நிலைநிறுத்தும் முயற்சி அது. வெளிநாட்டு ஊடகங்களில் பேசு பொருளானார்.
வடக்கே வாகை சூடிய ராகுல்:
அடுத்ததாக, மினி மக்களவைத் தேர்தலாகப் பார்க்கப்பட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆண்ட மூன்று மாநிலங்களில் பாஜகவை அப்புறப்படுத்த ராகுலின் பிரச்சாரம் முக்கியப் பங்கு வகித்தது. அதுவும் மத்தியப் பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்குப் பின் பாஜகவை வீழ்த்தியது காங்கிரஸுக்கு மிகப்பெரும் சவால் வெற்றி.
இப்படி ராகுலின் பேச்சுக்கள் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது எல்லாம் வடமாநிலங்களில்.
ஆனால், அவர் ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் நடத்திய கலந்துரையாடல் ராகுலுக்கு தமிழகத்தில் வலுவான ஓர் அடையாளத்தை ஏற்படுத்த அடித்தளமிட்டிருக்கிறது.
கணக்கை தொடங்கினார்..
தமிழகத்தில் தனது கணக்கை ராகுல் தொடங்கிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.
ஜீன்ஸ் டிஷர்ட்டுடன் வந்தபோதே ராகுல் அந்த அரங்கத்தில் இறுக்கத்தை தளர்த்திவிட்டார். இவரும் இளைஞர்தான் நம்முள் ஒருவர் என்று அந்த இளம் மனங்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்.
என்னை சார் என்று அழைக்க வேண்டாம், எளிமையான கேள்விகள் வேண்டாம் என்று சொல்லியதோடு ஒரு சின்ன முன்னோட்டம் என அவர் பேசிய வார்த்தைகள் கூட்டத்தில் இருந்தவர்கள் மனதளவில் தயார் செய்ததாகவே இருந்தது.
"இங்கே இரண்டு சித்தாத்தங்களுக்கு இடையேயான போர் நடந்து கொண்டிருக்கிறது.
ஒருங்கிணைந்த இந்தியா என்ற கொள்கையை நாங்கள் முழங்குகிறோம். இங்கே எந்த ஒரு மாநிலமும் கலாச்சாரமும் மொழியும் மற்றவைக்கு சளைத்தது அல்ல.
இன்னொரு சித்தாந்தத்தை இந்த அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. அது, ஒவ்வொரு மாநிலத்தையும் ஒவ்வொரு கலாச்சாரத்தையும் தங்களது ஒற்றை சித்தாந்ததின் கீழ் அடக்க நினைக்கிறது" என்று ராகுல் பாஜகவின் ஐந்தாண்டு கால அரசியலை ஐந்தாறு வரிகளில் விவரித்துச் சென்றிருக்கிறார்.
கடைசியாக என்னை நீங்கள் எல்லோரும் சமூக வலைதளங்களில் தொடரலாம் என்று கூறிச் சென்றார்.
அங்கே இருந்த அனைவரும் வாக்குரிமை கொண்டவர்கள் என்பதால் இந்த வார்த்தைகள் நிச்சயமாக அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ராபர்ட் வத்ரா கேள்வியின் போது மட்டும் சற்றே ராகுல் உணர்ச்சிவசப்பட்டார் என்பதை எல்லோருமே கவனித்திருப்பார்கள். ஆனால், சுதாரித்துக் கொண்டு ராபர்ட் வத்ரா விசாரிக்கப்பட வேண்டும் ஆனால் மோடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்றார்.
ஸ்டெல்லா மாரீஸ் பேச்சு ராகுல் பற்றி தமிழக இளைஞர்களை பேச வைத்திருக்கிறது. நான் இனியும் பப்பு இல்லை என்று அவர் மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
வெள்ளை ஜிப்பா முக்கியப் புள்ளி:
அடுத்த சில நிமிடங்களில் செய்தியாளர் சந்திப்புக்கு வந்த ராகுல் வெள்ளை ஜிப்பாவில் முக்கிய புள்ளிபோல் பக்காவாக தோற்றமளித்தார். அங்கேயும் கேள்விகளை எதிர்கொண்ட விதம் ஒரு கேள்வியிலிருந்து கிளைக் கேள்விகள் எழுப்பப்பட அதை அணுகியவிதமும் அரசியல் முதிர்ச்சியைக் காட்டியது.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு திரும்பத் தருவீர்களா என்ற கேள்விக்கு, "பள்ளிக் கல்வி மாநிலங்களிடமும் உயர்கல்வியில் சில அதிகாரங்கள் மத்திய அரசிடமும் இருக்க வேண்டும்" என்ற பதில் ஆட்சி மாற்றத்தால் நீட் பிரச்சினையில் தமிழக குழந்தைகளுக்கு தீர்வு கிடைக்குமா என்ற கேள்வி எழாமல் இல்லை. அந்த பதிலையும் கூட அவர் சிதம்பரத்திடம் ஆலோசித்தே சொன்னார்.
ஆனாலும், தமிழகத்தில் உள்ள அரசு மத்திய அரசால் இயக்கப்படுவது தமிழக மக்களுக்கான அவமானம் என்று கூறி வெகுஜன ஈர்ப்பு வாதத்தை முன்வைத்தவிதம் பாராட்டுக்குரியதே.
மாநில உரிமைகள் பற்றிய முதிர்ச்சியான பார்வை..
செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக் கொண்டு நாகர்கோவிலில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய ராகுலின் பேச்சுக்கள் மிக அழுத்தமாகவே இருந்தன. மாநிலத்தின் உரிமைகள் பற்றி, மொழி உணர்வு, கலாச்சார உணர்வு பற்றி நேர்த்தியாகப் பேசினார்.
ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு என்ற பிரம்மாண்ட அறிவிப்பு அவருக்கு பெண்களின் ஓட்டை வெகு நிச்சயமாகப் பெற்றுத்தரும். ஏனெனில் அது இலவசம், இனாம் அல்ல பாலின சமத்துவத்துக்கான அடித்தளம்.
நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று கருணாநிதி அழைத்ததுபோல் இந்திராவின் மருமகளே வருக என நான் அழைத்ததுபோல இன்று உங்களை அழைக்கிறேன் ஒளிமையான எதிர்காலம் தாருங்கள் என்று ஸ்டாலின் பேசியபோது பொதுக்கூட்டத்தில் கரகோஷம் அதிர்ந்தது.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராகுலின் பேச்சுக்கள் தாக்கத்தை ஏற்படுத்தியதை மக்களவைத் தேர்தலுக்கும் தமிழகத்தின் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அப்படியே பொருத்திப் பார்த்தால் மத்தியில் இளம் பிரதமரும் மாநிலத்தில் ராகுல் சொன்னதுபோல் ஸ்டாலின் முதல்வராவதும் உறுதியாகலாம்.
முடிவு என்னவாக இருந்தாலும், ராகுல் இனி பப்பு இல்லை என்பதை மோடியும், பாஜகவும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT