Last Updated : 30 Mar, 2019 06:55 PM

 

Published : 30 Mar 2019 06:55 PM
Last Updated : 30 Mar 2019 06:55 PM

தமிழ்ச்சமூகம் நேர்மையான முதல்வரை விரும்பும்போது திருமாவளவன் அப்பதவியில் இருப்பார்: விசிக கடைநிலைத் தொண்டரின் கணிப்பு

எந்தக் கட்சியாக இருந்தாலும்சரி அதன் கடைநிலைத் தொண்டனின் கனவு தனது தலைவனை அரியணையில் அமர்த்திப் பார்ப்பதாகவே இருக்கும்.

அத்தகைய கனவுடன் களப்பணியாளராக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடைநிலைத் தொண்டர் கூறிய வார்த்தைகள் இவை.. "தமிழ்ச்சமூகம் நேர்மையான முதல்வரை விரும்பும்போது திருமாவளவன் அப்பதவியில் இருப்பார்.."

அந்த தொண்டரின் பெயர் மாலின். வயது 42. மதுரையைச் சேர்ந்தவர். 20 ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியிலிருந்து பானை சின்னத்தில் திருமாவளவன் போட்டி என்பது உறுதியான நாளிலிருந்து சிதம்பரத்தில் கிராமம் கிராமமாகச் சென்று பானை சின்னத்தை பிரபலப்படுத்தி வருகிறார். சுவர் ஓவியங்கள் வரைந்தும், அதற்கு பொருத்தமான முழக்கங்களை எழுதியும், வாய்ப்புள்ள இடங்களில் 4,5 பேரை அமரவைத்தாவது தன்னளவில் மினி பிரச்சாரம் செய்தும் தொண்டர் பணி ஆற்றிக்கொண்டிருக்கிறார்.

இந்திய பொதுத் தேர்தலை ஜனநாயகத் திருவிழாவை ஒரு தொண்டர் பார்வையில் பார்ப்பதும் சுவாரஸ்யமானதுதான். அந்த சுவாரஸ்யத்துக்கு சரியான தரவுகள் அளித்தது மாலினின் பேச்சு.

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நீங்கள் சேர்ந்த கதையை சொல்லுங்கள்?

அப்போது எனக்கு 16, 17 வயது இருக்கும். நான் காலனியில் வசித்தேன், வசிக்கிறேன். அங்கு சாராய வியாபாரம் உச்சத்தில் இருந்த காலம். சாதி சச்சரவுகளுக்கும் குறைவே இல்லை. குடும்பத்தலைவர்கள் குடியும், கூத்துமாக இருக்க வீட்டுப் பெண்கள் கஷ்டப்பட்டதை கண்கூடாக பார்த்தேன். நானும் நேரடியாக பாதிக்கப்பட்டிருந்தேன்.

5-ம் வகுப்புக்கு மேல் பள்ளி செல்லவில்லை. ஆனால் ஏதாவது வாசித்துக் கொண்டிருப்பேன். பெரியார் சிந்தனை இருந்தது. அப்போதுதான் மதுரையில் திருமாவளவன் பேச்சைக் கேட்டேன். அவரது உரை எனக்குள் ஓர் எழுச்சியை ஏற்படுத்தியது. சண்டை, தகராறு, சிறை என இருந்த எனது வாழ்வில் அவரது உரை உத்வேகம் தந்தது. சமூக சிந்தனையை ஏற்படுத்தியது. அந்த சிந்தனையைப் பற்றிக் கொண்டு பயணிக்க ஆரம்பித்தேன்.

தமிழ்த் தேசிய தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களை வாசித்தேன். அதுதவிர நிறைய புத்தகங்களைத் தேடி தேடி வாசிக்க ஆரம்பித்தேன். இன்றும் வாசிப்பை தொடர்கிறேன். இதோ இன்று 20 ஆண்டுகாலமாக களப்போராளியாக மகிழ்ச்சியுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

அம்பேத்கரை உதாசீனப்படுத்திய சமூகம், காமராஜரை ஏற்றுக் கொள்ளாத சமூகம், பெரியாரை செருப்பு வீசி அவமதித்த சமூகம் இது. இந்த சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் முதலில் எழுச்சி ஏற்பட வேண்டும். எனக்கு எழுச்சி கிடைத்தது. அதுபோல் ஒட்டுமொத்த சமூகமும் எழுச்சி பெற வேண்டும். அந்த சமூக எழுச்சிக்காகவே திருமாவளவன் போராடிக் கொண்டிருக்கிறார். அதில் நான் பங்காளியாக இருக்கிறேன்.

எனக்கு சாதி ஒழிப்பையும், தமிழ் தேசியத்தையும் அவரே கற்றுக் கொடுத்தார். என் பிள்ளைகளுக்கு இளவேனில், ஈழநிலா, இசைப்பிரியா என்று பெயர் சூட்டவும் திருமாவின் எழுச்சி உரைகள்தான் காரணமாக இருந்தன.

நிறைய புத்தகங்கள் வாசித்திருப்பதாக சொல்கிறீர்கள்.. வாசிப்பு ஒரு தொண்டனுக்கு எவ்வளவு முக்கியம்?

ஒரு கட்சியில் நம்மை இணைத்துக் கொண்டால்போதாது. கட்சியின் கொள்கை என்ன பாதை என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது செவிவழியாக மட்டும் நடக்கக்கூடாது. படிக்க வேண்டும். படிப்பு சிந்தனையைத் தூண்டும். கட்சித் தலைமையின் சிந்தனையும் தொண்டனின் சிந்தனையும் நேர்க்கோட்டில் செல்லும். தொண்டர்கள் அனைவரும் வாசிப்பாளர்களாக இருக்க வேண்டும்.

உண்மைத் தொண்டன் எளிமையாக விளக்குங்களேன்...

நேர்மையானவனாக, சமூக அக்கறை கொண்டவனாக இருந்தால் போதுமானது.

தமிழக அரசியலில் திருமாவளவனின் முக்கியத்துவம்.. ஒரு தொண்டர் பார்வையிலிருந்து சொல்லுங்கள்..

ஒடுக்கப்பட்ட மக்களை ஓர் அமைப்பாய் திரட்டியிருக்கிறார். அதுதான் அவரது சிறப்பு. திருமாவளவன் ஒருங்கிணைத்த பனை விதை நடும் நிகழ்ச்சி, மீனாட்சிபுரம் மதமாற்றம் பற்றி ஆய்வு செய்து அவர் பெற்ற முனைவர் பட்டம், அவருடைய அமைப்பாய் தமிழன் இந்த மூன்று விஷயங்களும் அவரை உயரமாய் தூக்கி நிறுத்துகின்றன.

சாதி சமூகத்தில் ஒழிந்திருக்கிறதா? நீங்கள் சினிமாவில் நடித்திருப்பதாகவும் சொன்னீர்கள்.. சினிமாவில் சாதி ஆதிக்கம் குறைந்திருக்கிறதா?

சாதி அவ்வளவு எளிதாக ஒழிந்துவிடாது. ஆனால், சாதி எவ்வளவு தீங்கானது என்பது லேசாக புரியத் தொடங்கியிருக்கிறது. இங்கு சிதம்பரம் தொகுதியில் நிறைய வன்னியர் இன மக்கள் எங்கள் வீட்டுச் சுவற்றில் சின்னத்தை வரைந்து கொள்ளுங்கள் என்று ஊக்கமளிக்கின்றனர். இப்படியான சிறிய ஆரம்பம்தான் சாதியத்தை எதிர்காலத்தில் ஒழிக்கும்.

சினிமாவில் சாதி ஆதிக்கம் மாறவே இல்லை. தலித் கொள்கைகள் பேசும் சினிமாக்கள் வரலாம். ஆனாலும் அங்கு ஒரு தலித் நடத்தப்படும் விதம் இன்னும் மாறவில்லை. சாதி இல்லை என்பதுபோல் மறைப்பார்கள். நான் சினிமாவில் நடித்தபோது சாதி காரணமாகவே ஓடி வந்தேன். சில நாட்கள் கே.டி.குஞ்சுமோனுடன் இருந்தேன். அவர் மலையாளி என்பதால் என் மீது பேதம் காட்டவில்லை என்றே உணர்ந்தேன்.

எல்லா தொண்டனுக்கும் தன் தலைவனை முதல்வராக பார்க்கும் ஆசை இருக்கும்.. உங்கள் ஆசை எப்போது நிறைவேறும் என நினைக்கிறீர்கள்?

தமிழ்ச்சமூகம் நேர்மையான முதல்வரை விரும்பும்போது திருமாவளவன் அப்பதவியில் இருப்பார். 1995-ல் மதுரையில் காந்தி மியூசியத்தில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செயற்குழு கூட்டத்தில், அதற்கு முன்னதாக நடந்த சந்திரிகா உருவ பொம்மை எரிப்பு பற்றி எந்த ஊடகமும் பெரிதாக செய்தி வெளியிடவில்லையே என்று நிர்வாகிகள் ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். தொடர்ந்து பேசிய திருமாவளவன், உண்மையான நேர்மையான களப்போராளியாக களத்தில் நின்று மக்களுக்காக வேலை பார்த்தால் அடுத்த 5 ஆண்டுகளில் நம்மை தவிர்த்துவிட்டு எந்த ஊடகமும் செய்தி வெளியிட முடியாது என்று முழங்கினார். அதை நான் ஒரு ஓரத்தில் நின்று கேட்டுக்கொண்டிருந்தேன். இன்று திருமாவளவனை எந்த ஊடகமும் புறக்கணிக்க இயலாது. பெரும் பணபலத்துடன் கட்சி ஆரம்பித்தவர்களால்கூட கட்சியை நிலைநிறுத்த முடியவில்லை. ஆனால் விசிக விருட்சமாக வளர்ந்திருக்கிறது. அண்ணனின் கொள்கையே அதற்குக் காரணம். அந்த கொள்கை பிடிப்பு காரணமாகத்தான் தனிச் சின்னத்தில் துணிச்சலாக களம் காண்கிறார் எங்கள் தலைவர்.

கட்சியின் மீதும் தலைமையின் மீதும் இவ்வளவு பிடிப்புடன் இருக்கிறீர்கள்.. உங்களுக்கான அங்கீகாரம் கிடைத்ததா?

நிச்சயமாக கிடைத்திருக்கிறது. பதவிதான் அங்கீகாரம் என்றில்லை. அண்ணன் திருமாவை நான் நேரில் சென்று எளிதில் சந்திக்க முடியும். அவருடன் தொலைபேசியிலும் பேச முடியும். எனது வாசிப்பு பற்றி அவருக்குத் தெரியும். தமிழ்மண் வாசகர் வட்டத்தை என் பகுதியில் உருவாக்கியவன். அதனை அறிந்து கொண்ட அவர், அவருடைய ’அமைப்பாய் திரள்வோம்’ நூலில் எனக்கும் நன்றி சொல்லி இருப்பார். ஒரு கடைநிலைத் தொண்டனுக்கு தலைவன் தரும் அங்கீகாரம் இதைவிடவா பெரிதாக இருந்துவிட முடியும்.

இவ்வாறு மாலின் உற்சாகமாகப் பேசி முடித்தபோது.. ஒரு தலைவன் இருக்கிறான் தயங்காதே என்ற பாடலே நினைவுக்கு வந்தது.

தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x