Last Updated : 21 Mar, 2019 12:05 PM

 

Published : 21 Mar 2019 12:05 PM
Last Updated : 21 Mar 2019 12:05 PM

ஓபிஎஸ், டிடிவியை அறிந்துகொண்டவர்களே திமுகவுக்கு வருகின்றனர்: பிடிஆர். தியாகராஜன்

அரசியலில் ஓபிஎஸ் எப்படி? டிடிவி யார்? என்பதைத் தெரிந்து கொண்ட அதிமுகவினரும், அமமுகவினரும் தான் திமுகவில் இணைகின்றனர் என திமுக எம்எல்ஏ பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கிறார்.

கடந்த டிசம்பர் மாதம் அமமுகவின் கரூர் மாவட்ட செயலாளராக இருந்த செந்தில் பாலாஜி அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்தார். அவருடன் அமமுகவினர் பலரும் திமுகவில் இணைந்தனர். கடந்த வாரம் அதிமுகவிலிருந்து விலகி ராஜகண்ணப்பன் திமுகவில் ஐக்கியமானார். இரண்டு நாள் இடைவெளியில், இப்போது அமமுகவின் மற்றுமொரு மாவட்டச் செயலாளரான வி.பி.கலைராஜனும் திமுகவில் இணைந்திருக்கிறார்.

இது தொடர்பாக திமுக எம்எல்ஏ பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை அணுகியபோது, அரசியலில் ஓபிஎஸ் எப்படி? டிடிவி யார்? என்பதைத் தெரிந்து கொண்ட அதிமுகவினரும், அமமுகவினரும் தான் திமுகவில் இணைகின்றனர் எனக் கூறினார்.

அவரது பேட்டியிலிருந்து..

திமுகவில் இணையும் அதிமுகவினர், அமமுகவினர்.. காரணம் என்ன?

இந்த கட்சி மாறுதல்களை நான் உளவியல் ரீதியாக பார்க்கிறேன். 2017 பிப்ரவரியில் ஓபிஎஸ் 'தர்மயுத்தம்' தொடங்கியபோது அவருக்குத்தான் அதிமுகவினரின் ஒட்டுமொத்த ஆதரவு என்பதுபோல் ஒரு பிம்பம் உருவானது. ஆனால், அவர் தனி அணியாக செயல்பட முயன்றபோது களத்தில் அவருடன் 10 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே நின்றனர். அன்றைக்கே 30 பேர் வந்திருந்தால் ஆட்சி மாறியிருக்கும் அல்லவா? ஆனால் உண்மை நிலவரம் எப்படி இருந்தது? மீண்டும் அவரே கட்சி இணைப்பை ஏற்றார்.

ஓபிஎஸ்-ஸின் அரசியல் ஆழம் என்னவென்பது குறித்த வெகுஜனத்தின் புரிதல் வேறு, கட்சிக்குள்ளேயே இருக்கும் நிர்வாகிகளின் புரிதல் வேறு. அதனால்தான் அவருக்கு யாரும் ஆதரவு கொடுக்கவில்லை.

அரசியல்வாதியாக இருந்தாலும் அவர்களும் தனிநபர்களே. அந்த தனிநபர்கள் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப நம்பிக்கையின் அடிப்படையில் ஆதரவும் எதிர்ப்பும் காட்டுவார்கள். அப்படிப்பட்ட எதிர்ப்பின் விளைவுதான் இன்று அதிமுக, அமமுகவின் பிரமுகர்கள் திமுகவில் இணைவது.

அதிமுகவில் முக்கிய பதிவியில் இருக்கும் நபர் ஒருவர் என்னிடம் சில நாட்களுக்கு முன்னர் பேசினார். நான் திமுகவுக்கு வந்துவிடுகிறேன் எனக்கு ஏதாவது பொறுப்பு வாங்கிக் கொடுங்கள் என்றார்.

நானோ ஒன்றுமே அறியாததுபோல் ஏன் உங்கள் கட்சி ஆட்சியில்தானே இருக்கிறது? ஒருவேளை ஆட்சி போனால் சொல்லுங்கள் பேசுகிறேன் என்றேன். அதற்கு அவர் தான் சார்ந்த கட்சியின் மீதான நம்பிக்கை குறைந்து வருவதாகவும், தேர்தலுக்குப் பின்னர் வந்து இணைவதைவிட இப்போதே இணைவது சரியாக இருக்கும் என்றார்.

கட்சியின் வெளியில் இருந்து நாம் பார்ப்பது வேறு, கட்சிக்குள்ளேயே இருப்பவர்களின் நம்பிக்கை வேறு.

வெளியில் தலைவராக தெரிபவர் கட்சிக்குள் செயல்படும்விதமே அவருக்கான ஆதரவு, எதிர்ப்பை தீர்மானிக்கிறது. அதிமுகவிலிருந்து, அமமுகவிலிருந்து வெளியேறுபவர்களுக்கு ஓபிஎஸ்.,ஸின் திறமை,என்னவென்று தெரிந்திருக்கிறது. அதேபோல் அமமுகவில் இருந்து வெளியேறுபவர்களும் தினகரனை புரிந்து கொண்ட பின்னர் வெளியேறுகின்றனர்.

'திமுகவை மிகக் கடுமையாகத் தாக்கி நாம் மேடைகளில் பேச வேண்டும்' என டிடிவி சொல்லியிருக்கிறாரே?

டிடிவி தினகரனின் நம்பிக்கையாக இருப்பவர்கள் அதிமுக அதிருப்தியாளர்கள் மட்டுமே. அதனால் அவர் அதிமுகவை விமர்சிப்பதைவிட திமுகவை விமர்சித்தால்தான் பலன் கிடைக்கும். 'ஆங்கிலத்தில் டாக்கிங் யுவர் ஓன் புக்' (Talking your own book) என்பார்கள். இப்போதைக்கு திமுகவை விமர்சிப்பதுதான் டிடிவிக்கான ஒரே மூலதனமாக இருக்க முடியும். அதைத்தான் அவர் செய்துகொண்டிருக்கிறார்.

மதுரைக்கு மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் களமிறக்கப்பட்டது குறித்து உங்கள் பார்வை..

மதுரை வேட்பாளராக சு.வெங்கடேசன் நிறுத்தப்படுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவருக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றுத்தந்த நூலும்கூட மதுரை மண் சார்ந்ததுதான். மதுரையின் வரலாற்றை அறிந்தவர். கீழடிக்காக குரல் கொடுப்பவர். அவர் நாடாளுமன்றத்தில் நிச்சயம் தமிழுக்காகவும், கீழடிக்காகவும், மக்கள் பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுப்பார்.

இன்னும் ஒரு வாரத்தில் எனது ஆதரவு யாருக்கென்று தெரிவிப்பதாக அழகிரி சொல்லியிருக்கிறாரே?

அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை.

மதுரை சித்திரை திருவிழாவுக்காக தேர்தல் தேதியை மாற்ற மறுப்பது குறித்து..

இது அதிமுக அரசு பாஜகவுக்கு அடிமைப்பட்டு கிடப்பதையும், தேர்தல் ஆணையம் பாஜகவால் கட்டுப்படுத்துவதையும் தெளிவாக உணர்த்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x