Published : 02 Feb 2019 12:18 PM
Last Updated : 02 Feb 2019 12:18 PM
சில மாதங்களுக்கு முந்தைய சம்பவம் இது. அன்று காலை அலுவலகம் செல்வதற்காக சென்னை திருவல்லிக்கேணி சாலையில் நான் எனது இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்.
என் முன்னால் ஒரு பெண்மணி, பின் இருக்கையில் பள்ளி செல்லும் தன் மகனை அமர வைத்து இருக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். நான்கு சாலைகள் பிரியும் இடத்தில் அந்தப் பெண் இடதுபுற சாலையில் சற்று குறுகலாக ஒடித்து வண்டியைத் திருப்பவே நடைமேடையில் சாய்த்துவைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகை கீழே விழுந்துவிட்டது. அந்தப் பெண் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுவிட்டார். ஒருவேளை பள்ளி செல்லும் அவசரமாகக் கூட இருக்கலாம். வெளியே வந்த கடைக்காரர், முட்டாள் என்ற வார்த்தையோடு பெண்ணுறுப்பைக் குறிக்கும் சொல்லையும் சத்தமாகக் கூறி திட்டினார்.
சுற்றி நின்ற யாருக்கும் அது எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. ஹெல்மெட் அணிந்திருந்ததால் அந்தப் பெண்ணுக்குக் கூட அது கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால்,பின்னிருக்கையில் இருந்த 10 வயதிருக்கும் சிறுவன் மட்டும், அந்த நபர் என்ன சொல்லித் திட்டினார் என்று புருவம் உயர்த்தி திரும்பிப் பார்த்து சிறு புள்ளியாக தூரத்தில் மறைந்தார். எதிர்காலத்தில் அந்தச் சிறுவனும்கூட யாராவது ஒருவரை இப்படித் திட்டக் கூடும். அந்த வசவை வாங்குவது ஓர் ஆணாகக் கூட இருக்கலாம்.
ஆம், நீங்கள் எந்த பாலினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி வாகனம் வைத்திருந்தீர்கள் என்றால் நிச்சயமாக சாலைப் பயணத்தின்போது யாரையாவது திட்டியிருப்பீர்கள் அல்லது திட்டு வாங்கிய அனுபவத்தைப் பெற்றிருப்பீர்கள்.
ஹார்ன் ஓசைகளுக்கு இடையே நாம் சில வசைமொழிகளை தவிர்க்க முடியாமல் கேட்டுச் செல்லத்தான் வேண்டியிருக்கிறது. அப்படி, சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் சாவு கிராக்கி! வீட்டில் சொல்லிட்டு வந்துட்டியா? போன்ற வசவுகளைக்கூட கடந்துவிடலாம்.
ஆனால் இப்படியாக பெண்ணுறுப்பு குறித்து வசைச் சொற்களாக மாற்றி ஏவும் வசவுகளை எப்படித்தான் மிகச் சாதாரணமாகக் கடந்து செல்வது? அதுவும் ஒரு பெண்ணாக இருக்கும்போது அதை எப்படிக் கடப்பது? அதுவும் பின் இருக்கையில் நம் பெண் பிள்ளையிருந்தால் எப்படிக் கடப்பது? ஒருவேளை பின் இருக்கையில் ஆண் பிள்ளையோ, அப்பாவோ இருந்தால் எப்படிக் கடப்பது? பீப் வார்த்தைகளுக்கு முற்று எப்போது?!
வசைபாடுபவர்கள் இதனை என்றாவது யோசித்திருப்பார்களா? அவர்களுக்கும் அத்தனை பெண் உறவுகளும் இருக்கும் தானே. தன்னை ஒரு சந்ததியாக உலகுக்குக் கொண்டு வரவும் தனது சந்ததியைப் பெருக்கிக் கொள்ளவும் தேவைப்படும் பெண்ணுறுப்பு சாலைகளில் சாக்கடையாகிவிடுவது ஏன்?! கோபம் வந்தால் சிம்பு கூட பீப் சாங் தான் பாடுகிறார். அது ஏன்?
அண்மையில் உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பை ஒட்டி சமூக வலைதளங்களில் கேலி, கிண்டல்கள் எதிரொலித்தன. கணவன்மார்களே உஷார்.. என்ற தொனியில் மீம்ஸ்கள் உலா வந்தன.
அந்த வழக்கு தமிழகத்தைச் சேர்ந்தது. கணவரைக் கொலை செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பெண் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு அது.
வழக்கு மற்றும் தீர்ப்பு விவரம்:
வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த அன்று அப்பெண்ணின் கணவர் அப்பெண்ணையும் அவரது மகள்களையும் 'பாலியல் தொழிலாளிகள்' என ஆத்திரமூட்டும் வகையில் திட்டியுள்ளார். இந்தப் பிரச்சினையில் அப்பெண்ணின் ஆண் நண்பருர் தலையிட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த நண்பர், அப்பெண்ணின் கணவரைக் கன்னத்தில் அறைந்திருக்கிறார். பின்னர் அப்பெண் நண்பரின் உதவியுடன் கணவரைக் கொலை செய்து சடலத்தை காரில் ஏற்றி வேறு ஒரு இடத்துக்குக் கொண்டு சென்று எரித்துள்ளார்.
இந்த வழக்கில் அப்பெண்ணும் அவரது நண்பரும் கொலைக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டனர். சென்னை உயர் நீதிமன்றமும் அவர்கள் கொலைக் குற்றவாளிகள் என்பதை உறுதிப்படுத்தியது. இதனை எதிர்த்து அப்பெண் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "இது திட்டமிட்டு நடந்த கொலை அல்ல. கணவர், சம்பந்தப்பட்ட பெண்ணைப் பாலியல் தொழிலாளி என திட்டி அவரது ஆத்திரத்தைத் தூண்டியிருக்கிறார்.
இந்திய சமூகத்தில் எந்த ஒரு பெண்ணும் தன்னை தனது கணவர் பாலியல் தொழிலாளி என்று திட்டுவதை விரும்புவதில்லை. அதுவும் தனது மகளை அப்படி அழைப்பதை ஏற்பதில்லை.
இந்த குறிப்பிட்ட வழக்கில் கணவர் ஆத்திரத்தைத் தூண்டும் வகையில் பெண்ணையும் அவரது மகள்களையும் பாலியல் தொழிலாளி என திட்டியதாலேயே அவர் இத்தகைய சம்பவத்தைச் செய்திருக்கிறார். ஆத்திரத்தின் வெளிப்பாடாகவே இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. திட்டமிட்டு நடக்கவில்லை.
எனவே இந்த நீதிமன்றம் இதைக் கொலையாகக் கருதாமல் மரணம் விளைவிக்கும் குற்றமாகக் கருதுகிறது. அதனால், தண்டனையை 10 ஆண்டுகளாகக் குறைத்து உத்தரவிடுகிறது" என்றனர்.
இந்தத் தீர்ப்பினை பகுப்பாய்வு செய்வதல்ல நோக்கம். கொலையை எப்படியும் நியாயப்படுத்த இயலாது.
ஆனால் இந்த தீர்ப்பையொட்டி எழுந்துள்ள சமூக வலைதளக் கருத்துகளே பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். பெரும்பாலான கருத்துகள் மனைவியை மோசமாகத் திட்டுவது தவறு என்றே உணர்ந்ததாகத் தெரியவில்லை.
இந்திய சமூகத்தில் ஒரு பெண்ணை இழிவுபடுத்த வேண்டும் என்றால் அவளை நோக்கி முதலில் ஏவப்படும் ஆயுதம் அவளது நடத்தையைப் பற்றிய விமர்சனமாக இருக்கிறது.
அதுவும் குடும்பங்களுக்குள் சர்வசாதாரணமாக ஆண்மகன்கள் பெண்களைப் பார்த்து பாலியல் தொழிலாளி என்றும் இன்னும் பல உறுப்பு வசவுகளையும் கொட்டித் தீர்ப்பர். படித்து சம்பாதித்து தங்களை அப்பர் மிடில் க்ளாஸ் என்று அடையாளம் காட்டிக் கொள்ளும் ஆண்கள் அதே வசை மொழியை ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
அந்தஸ்தை மாற்றிக் கொண்டாலும்கூட ஒருவரை அவமானப்படுத்தி அவரது சமநிலையை உடைக்க வேண்டும் என்றால் பலரது முதல் தெரிவு பெண்ணுறுப்பை சொல்லித் திட்டுவதாகவே இருக்கிறது. இது குடும்பங்களுக்குள் சர்வ சாதாரணமாக நிகழ்வதால் அது அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகிறது. சாலைகளில் 50 வயது நபர் இப்படி வசைபாடும்போது 20 வயது இளைஞருக்கு இதுதான் திட்டுவதற்கான வழிமுறை என்று ஈர்க்கப்படுகின்றனர்.
ஜோதிமணியும், மாயாவதியும் அப்புறம் தமிழிசையும்
குடும்பங்களில் மட்டுமல்ல அரசியலிலும் இது நிகழ்கிறது. இப்படியான வன்முறைக்கு ஆளான இருவரைப் பற்றி இங்கே பகிர்வது சமூக வக்கிரத்தின் சாட்சியாக இருக்கும் என நம்புகிறேன்.
ஒருவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய அடையாளங்களுள் ஒருவரான ஜோதிமணி. மற்றொருவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதி.
பண மதிப்புநீக்க நடவடிக்கையைத் தொடர்ச்சியாக விமர்சித்து வந்த ஜோதிமணி, "பிரதமர் அவர்களே 50 நாட்களில் எல்லாம் சரியாகாவிட்டால் ராஜினாமா செய்கிறேன் என்று சொன்னீர்களே?" என்று ஒரே ஒரு கேள்வி எழுப்பியதற்காக சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டார்.
அவர் மீது ஆபாச விமர்சனங்கள் குவிந்தன. அவரை வசைபாடுவதற்காகவே ஒரு ஆபாச வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டது. ஆனால், ஜோதிமணியின் துணிச்சல் வித்தியாசமானது. ஆபாச வாட்ஸ் அப் குறுந்தகவல்கள் அனைத்தையும் பொதுவெளியில் வெளியிட்ட பின்னர் போலீஸில் புகார் கொடுத்தார். அதில் பெரும்பாலான வசவுகள் பெண்ணுறுப்பைக் குறிப்பதாகவே இருந்தன.
ஜோதிமணியைப் போல சமீபகாலமாக அதிகமான விமர்சனத்துக்கு உள்ளாகிவருபவர் மாயாவதி. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்த நாள் முதல் அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. உத்தரப் பிரதேச பெண் எம்.எல்.ஏ., ஒருவரே மாயாவதியை தரக்குறைவாக விமர்சித்தார். அவரைத் தொடர்ந்து மாநில பாஜக தலைவரும் மிக மோசமான ஆபாசத்தின் உச்சமான வார்த்தைகளால் மாயாவதியை விமர்சித்தார்.
ஜோதிமணி, மாயாவதி மீது நேரடியாக ஆபாச வசவுகள் வைக்கப்படும் வேளையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவரது தோற்றத்துக்காக விமர்சிக்கப்படுவது தொடர்கதையாகவே இருக்கிறது.
தனது தோற்றத்தைப் பற்றி விமர்சிப்பவர்களின் அறியாமையைக் கண்டுகொள்ள விரும்பவில்லை என எத்தனை முறை தமிழிசை கடந்து செல்ல முயற்சித்தாலும் கூட அதைவிட அதிகமான முறை அவர் மீதான கேலி தாக்குதல்களை நெட்டிசன்கள் தொடர்கின்றனர்.
அண்மைக்காலமாக அவரது பேச்சுகளை வைத்து டிக் டாக் வைரலாகி வருகிறது. அந்த டிக் டாக்கில் "நான் ஒரு மருத்துவர், ஓர் அரசியல்வாதி, ஒரு பேச்சாளர். இதை எல்லாம் பார்க்க முடியாதவர்கள் என் தோற்றத்தை, என் தலைமுடியை விமர்சிக்கின்றனர். அவர்களைப் பார்த்து பரிதாபப்படுகிறேன்" என்று தமிழிசை அளித்த பதிலையே கிண்டல் செய்து விளையாடுகின்றனர்.
இது என்ன மாதிரியான வக்கிரம்! இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் பெரும்பாலும் இளம் பெண்களே தமிழிசை போன்று இப்படிப் பேசி டிக் டாக் வெளியிடுகின்றனர். ஆளுமைத் திறனுக்கும் தோற்றத்துக்கும் ஏன் ஆடைக்கும்கூட எந்த சம்பந்தமும் இல்லை என்பதை வாழும் சாட்சியாக நிரூபித்த காந்தி பிறந்த தேசத்தில்தான் இத்தகைய கேலிக்கூத்துகள் அரங்கேறுகின்றன.
நம் சமூகத்தில் ஜோதிமணி மட்டுமல்ல; மாயாவதி மட்டுமல்ல; தமிழிசை மட்டுமல்ல தன் மனதில் பட்டதைப் பேசும், தனது முடிவைப் பரிசீலிக்கச் சொல்லும், பொதுவெளியில் தன்னை நிலைநிறுத்த முயற்சிக்கும் எல்லாப் பெண்களுமே இத்தகைய வசவுகளைக் கடக்கத்தான் வேண்டியிருக்கிறது.
இப்படி வீடுகளில், சாலைகளில், சமூக வலைதளங்களில் பெண் உறுப்பை வைத்தும் அரசியல் மேடைகளில் பெண்ணை ஒழுக்கம் கெட்டவள், நடத்தை கெட்டவள் என்றும் வசைபாடுவதன் பின்னணியில் வன்புணர்வு செய்வேன் என்று மிரட்டும் தொனியில் இருக்கும் மனநிலைதான் என்ன?
இத்தகைய வன்முறைக்கு ஆளான ஜோதிமணி நம்மிடம் பேசும்போது, "இந்த விஷயத்தை இரண்டு விதமாக அணுக வேண்டும். ஒன்று சமூகத்தின் வக்கிரம் மற்றொன்று பெண் மீது உருவாக்கப்பட்ட கருத்தாக்கம்.
நம் சமூகமும் இன்னமும் ஆணாதிக்க சமூகமாகத்தான் இருக்கிறது. அந்தச் சமூகம் பெண்ணை வீட்டில் சாலையில் பொதுவெளியில் அவமானப்படுத்துவதற்கு எப்போதும் தயார் நிலையில் இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் ஒரு பெண்ணை அவமானப்படுத்த நினைத்தால் அவள் ஒழுக்கத்தைப் பற்றி பேசுகிறது.
இரண்டாவதாக பெண்கள் மீது ஒரு கருத்தாக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பெண் என்றால் இந்த வேலைதான் செய்யத் தகுதியானவள் என்ற எண்ணம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் பெண் பைலட்டுகள் அதிகரித்து வரும் இந்தக் காலத்தில்கூட ஒரு பெண் பைக், கார் ஓட்டினால் அவள் தப்பாகத்தான் ஓட்டுவாள் என்பது ஆண்களின் பொதுப்பார்வையாக இருக்கிறது.
அரசியல் வெளியில் பெண்களை இப்படி ஆபாசமாக விமர்சிப்பதும் மிரட்டுவதும் வேறு எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் இருக்கிறது. அதற்குக் காரணம் பெண் மீது உருவாக்கப்பட்ட கருத்தாக்கமும் அதனைக் கூர்படுத்தும் வகையில் செயல்படும் சில அரசியல் சித்தாத்தங்களுமே.
நானும் மாயாவதியும் விமர்சனங்களுக்கு உள்ளாவது இத்தகைய சித்தாத்தங்களால்தான். எங்களை அவதூறாகப் பேசிவிட்டு எந்த நடவடிக்கைக்கும் ஆளாக வேண்டாம் என்ற தைரியத்தைத் தருவதற்குப் பின்னணியில் அமைப்புகள், கட்சிகள், சித்தாந்தங்கள் இருக்கின்றன.
ஆனால், இத்தகைய விமர்சனங்களால் நாங்கள் ஒடுங்கிவிட மாட்டோம். அதை நிரூபிக்கவே என் மீதான விமர்சனங்களை நானே பொதுவெளியில் பகிர்ந்தேன். அதன்பின்னர்தான் போலீஸில் புகார் கொடுத்தேன். இன்றளவும் என்னைத் தரக்குறைவாக விமர்சிக்கும் எந்த விமர்சனத்தையும் நான் நீக்குவதோ மறைப்பதோ இல்லை. இது நான் அவர்களை அவமானப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கை.
இத்தகைய வசவுகளால் இனியும் நீங்கள் அவமானப்படமாட்டீர்கள். அது உங்களை உங்கள் முன்னேற்றத்தை எள்ளளவும் பாதிக்காது என்பது எதிரிக்கு எப்போது தெரிகிறதோ அப்போதே அந்த வசவுகள் முற்று பெற்றுவிடும்.
எனக்கு இப்படி ஒரு துன்பம் நேர்ந்தபோது ஆதரவாகக் குரல் கொடுத்தவர்கள் பலரும் ஆண்களே. ஆண்களும் பெரும்பாலும் மாறி வருகின்றனர் என்பதுதான் உண்மை. இன்னும் மாற வேண்டிய மாற்றப்பட வேண்டிய சிலர் இருக்கின்றனர். அவர்கள் தவறானவர்களிடம் சிக்கி கைப்பாவையாக இருக்கின்றனர்.
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பெண்களுக்கு எதிரான ஆபாசங்களைக் கையாள சைபர் சட்டங்களும் வலுவாக இருக்க வேண்டும். காவல்துறையில் சைபர் குற்றப்பிரிவில் கூடுதல் பணியாட்கள் இருக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் முன்வைக்கிறேன்" என்றார் ஜோதிமணி.
சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் இத்தகைய மனநிலை குறித்து திண்டுக்கல்லைச் சார்ந்த உளவியலாளர் சர்மிளாவிடம் பேசினோம்.
அவர் நம்மிடம் கூறியதாவது:
''வசை மொழிகள் பெண் உடல் அவயங்களைச் சுற்றியே இருப்பதற்கும், பொதுவெளியில் பிரபலமான பெண்களை அவர்களது ஒழுக்கம் சார்ந்து பேசி மட்டுப்படுத்த நினைப்பதும் குடும்பங்களில் இருந்தே கடத்தப்படுகிறது. இங்கே பல குடும்பங்கள் ஆணாதிக்க குடும்பங்களாகத் தான் இருக்கின்றன. அங்கே பேசப்படும் வார்த்தைகள் அப்படியே குழந்தைகளைச் சென்றடைகிறது.
ஒவ்வொரு முறை அப்பா ஆபாசமாகத் திட்டும்போதும் மவுனமாக அழுகையோடு தாய் செல்லும்போது அது அந்த வீட்டுச் சிறுவனுக்கு ஒரு பிரச்சினையின் போது எப்படி நிலைமையை கைக்குள் வைத்துக் கொள்ளும் உத்தியாகவே சென்று சேர்கிறது. ஆங்கிலத்தில், To take control of the situation என்பார்கள்.
அதே சிறுவன் எதிர்காலத்தில் வளர்ந்து குடும்பத் தலைவராகும் போது தன் மனைவியைக் கண்டிக்க அப்பா பயன்படுத்திய அதே வார்த்தையைப் பயன்படுத்தி திட்டவே வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அப்படிப் பின்பற்றும்போது அதை பெரும்பாலும் அர்த்தம் உணர்ந்து திட்டுவதைக் காட்டிலும் அடக்குமுறைக்கான ஒரு ஒலியாகக் கடத்துவான்.
சிலர் எத்தகைய குடும்பப் பின்னணியில் இருந்து வந்தாலும்கூட கல்வி, வேலை என வெளியுலகம் காணக்காண தங்களை மாற்றிக் கொள்வார்கள்.
இன்னொரு கோணம் உணர்வைத் தூண்டுதல் (to provoke). இரண்டு பேர் வாக்குவாதம் செய்யும்போது எந்த வார்த்தையைச் சொன்னால் எதிரி நிலை குலைந்து கோபத்தின் உச்சிக்கோ அல்லது அவமானத்தின் எல்லைக்கோ செல்வான் என்பதை தெரிந்து கொண்டு அத்தகைய வார்த்தைகளைச் சொல்வது.
குடும்ப வன்முறை நிகழ்வுகளில் வேலைக்குச் செல்லும் மனைவியைப் பார்த்து கணவன் உனக்கு எத்தனைப் பேருடன் தொடர்பு இருக்கிறது என்று நான் சொல்லவா? உன் யோக்கியதை எனக்குத் தெரியாதா? இல்லை நேரடியாகவே நீ பாலியல் தொழிலாளி என்றெல்லாம் சொல்வதும் அவர்களின் கோப, அவமான உணர்வுகளைத் தூண்டவே. நீங்கள் சொன்ன உச்ச நீதிமன்ற வழக்கிலும் நீதிபதிகள் அதையே குறிப்பிட்டுள்ளனர்.
குடும்பங்களில் பெண்ணை தனக்கு நிகராக பார்க்கும் போக்கு மேலோங்கும்போது இத்தகைய வசை மொழிகள் இயல்பாக மறைந்துவிடும்''.
இவ்வாறு சர்மிளா கூறினார்.
குழாயடிச் சண்டைகளும் விதிவிலக்கல்ல:
பெண்களை இழிவாகப் பேசும், பெண்ணுறுப்பை வசை மொழியாக மாற்றும் ஆண்களைப் பற்றி பேசும் அதே வேளையில் குழாயடிகளிலும் தெருச் சண்டைகளிலும் உச்சஸ்தாயியில் அதே வார்த்தைகளைப் பேசும் பெண்களையும் கண்டிக்காமல் இருக்க இயலாது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக நேரம் தங்கள் தாயுடனேயே நேரம் செலவழிக்கின்றனர். அப்படியென்றால் அவர்களது வளர் பருவ வருடங்கள் (Formative years) அன்னையுடனேயே செலவாகிறது. அதனால் குழாயடியில் பேசப்படும் கெட்ட வார்த்தைகளும் குழந்தைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பெண்களும் உணர வேண்டும்.
பெண் வெறுப்பு, பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம் சமூகத்தில் எப்படி இருக்கக் கூடாதோ அதே போல் பெண்களே பெண்களுக்கு எதிராக கொள்ளும் மனநிலையும் இருக்கக் கூடாது. இரண்டுமே சமமான தீமையையே விளைவிக்கும்.
தொடர்புக்கு:
bharathi.p@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT