Published : 14 Apr 2018 05:30 PM
Last Updated : 14 Apr 2018 05:30 PM
சென்னையில் தொடர்ந்து சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு புறக்கணிக்கப்படும் பெரும் பகுதி வடசென்னை.
தேர்தல் நாட்களில் அரசியல் கட்சிகளின் முக்கிய ஆடுகளங்களாக உள்ள வடசென்னை நகரங்கள் இன்றுவரை அவற்றின் அங்கீகாரத்தைப் பெற பல்வேறு தளங்களில் போராடிக் கொண்டிருக்கின்றன.
ஓ… நீங்க வடசென்னையிலதான் இருக்கீங்களா? என்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கும் கேள்விகளை வடசென்னை வாசியாக நான் பல நாட்களில் எதிர் கொண்டிருக்கிறேன். அவர்களைப் பொறுத்தவரை வடசென்னை என்பது ஒரு குறுகிய சாலைகளுடன் இறுக்கமான வீடுகளைக் கொண்ட நெரிசல் நிறைந்த பகுதி. அடித்தட்டு மக்களுக்கான இடம்.
திரைப்படங்களில் காட்டுவது போல் ரவுடிகள் ஆங்காங்கே ஜீப்களில் அமர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருப்பார்கள். வெளிப்படையாகக் கூறினால் உயர் வகுப்பு மக்களின் பொருளாதாரம், வசதி வாய்ப்புகள், நடை, உடை, மொழிகளுடன் ஒப்பிட்டு தகுதியற்றவர்களாகவும், தரக்குறைவானவர்களாகவும், குற்றம் புரிபவர்கள் நடமாடும் பகுதியாக சுட்டிக்காட்டுவதற்கான இடம்.
வடசென்னையின் அழுக்குப் பக்கங்களைத்தானே நீங்கள் சினிமாவில் பார்த்திருக்கிறீர்கள். அதை மட்டுமே வைத்து வடசென்னையை நீங்கள் தீர்மானித்துவிட்டால் அது உங்கள் அறியாமையே..
வடசென்னை ஏழைகளின் சொர்க்கம் என்பதையும், அவர்களுக்கான தனித்துவத்தையும், அடையாளத்தையும் இந்தத் தொடரில் கூற முயல்கிறேன்.
உங்கள் முகமூடிகளைக் கழற்றிவிட்டு, முன்முடிவுகளை அகற்றிவிட்டு பயணத்துக்குதயாராகுங்கள்..,
முதல் பயணத்தில் வியர்வை சிந்தியே உயர்ந்த வியாசர்பாடியைப் பற்றிப் பார்க்கலாம் வாங்க...
சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள சிகை அலங்காரங்களை தெரிந்து கொள்ள உங்களுக்கு கூகுள் உதவி கூட தேவையில்லை, குட்டி பிரேசில் என்று அழைக்கப்படும் வியாசர்பாடிக்கு ஒருமுறை விசிட் அடியுங்கள்.
தலையின் வண்ண நிறமான சிகை அலங்காரங்களுடன் உள்ள சிறுவர்களையும், இளைஞர்களையும் பார்த்தால் ஸ்டைலிஷ், டிரெண்டி என்று ஏகப்பட்ட வார்த்தைகளில் அவர்களை வர்ணிக்க ஆரம்பித்து விடுவீர்கள். அவர்களுடன் சற்று உரையாடிப் பாருங்கள். தங்களைப் புறக்கணிக்கும் சமூகத்திடமிருந்து ஏதோ ஒருவிதத்தில் தங்களை தனித்துவமாகக் காட்ட அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்..
அந்தத் தனித்துவமான அடையாளத்திற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த முதல் மாற்றம்தான் இந்த சிகை அலங்காரம். பாப் மார்லி, சேகுவேரா இந்த இளைஞர்களிடம் ஆழமாகச் சென்றிருக்கிறார்கள் சிலருக்கு காரணங்களுடன், சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமல்.
முல்லை நகர், சத்திய மூர்த்தி நகர், பி.வி.காலனி, சர்மா நகர், மகாகவி பாரதியார் நகர், அம்பேத்கர் கல்லூரி சாலை என இன்னும் பல முக்கிய பகுதிகளைக் கொண்ட வியாசர்பாடியில் பன்முகக் கலாச்சாரத்தின் தொகுப்பு
நீங்கள் வியாசர்பாடிக்கு வந்தால் 300 அடி தூரத்தில் கோயில்களையும், தேவாலயங்களையும், மசூதிகளையும் அடுத்தடுத்து கடக்கலாம். தமிழகத்தில் மிக பழமைவாய்ந்த கோயில்களில் ஒன்றான ஸ்ரீ ரவீஸ்வரர் சிவன் கோயில் இங்குள்ள அம்பேத்கர் சாலையில்தான் உள்ளது. இக்கோயிலில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சோழர் காலத்துக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
பர்மாவிலிருந்து 1964-ல் இந்தியா வந்த தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இங்கு தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இதனால் இப்பகுதிகளில் பர்மா உணவு கலாச்சாரம் பரவலாகக் காணப்படுகிறது.
அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் எந்தவித நெருடலும் இல்லாமல் வசிக்கும் இங்கு சாதிக்கும் இடமில்லை, மதத்துக்கும் இடமில்லை..... மாறாக மனிதத்துக்கு இடம் அளித்திருக்கிறார்கள்.
இங்கு பிரபல இரவு உணவாக, டூடுல்ஸ் வகையைச் சேர்ந்த கவுசோ, அத்தோ, மொய்ங்கோ ஆகியவை உள்ளன.
கூட்டமிகுந்த சாலையோரக் கடை ஒன்றில், நண்பர்களுடன் இன்றைய டிரெண்டிங் செய்திகளை பேசிக் கொண்டே அத்தோவை சாப்பிட்டுக் கொண்டிருந்த சீரஞ்சிவியிடம் கொஞ்சம் அத்தோவை பற்றிக் கூறுங்களேன் என்றபோது, ‘’அதை அப்படிங்க வார்த்தையால் விவரிக்க முடியும்....முடியாதுங்க...’’ என்றவர் தொடர்ந்து பேசினார். "நான் வடசென்னை வாசி. எங்களுக்கான உணர்வு அடையாளங்களுடன் அத்தோ முக்கியமான ஒன்று. இது பர்மா உணவு கலாச்சராத்தை சேர்ந்தது என்று நினைக்கிறேன்.
எனது கல்லூரி நாட்களில் எனது நண்பர்களிடன் அத்தோவைப் பற்றி கூறும்போது என்னடா சைனீஸ்ல பேசுறனு கிண்டல் செய்வாங்க. பிறகு ஒருமுறை அவர்களை அழைத்துக் கொண்டு அத்தோவை வாங்கிக் கொடுத்தபின் அவர்களும் இதற்கு ரசிகர்களாகிவிட்டார்கள்.
உண்மையைக் கூற வேண்டும் என்றால் இங்குள்ள அத்தோ கடைகளுக்குப் பெருகிய ரசிகர்கள் பட்டாளத்தால் தற்போது தென்சென்னையிலும் அத்தோ கடைகள் தென்பட ஆரம்பித்துள்ளன. இது எங்கள் உணவுக்கு கிடைத்த மாஸ்ஸான அடையாளம்தான்’’ என்று புன்னகையுடன் விடைபெற்றார் சிரஞ்சீவி.
30 வருடங்களாக ஓய்வூதியம் கிடைக்கப் பெறாமல் அலைக்கழிக்கப்பட்டதற்காக கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றம் மன்னிப்பு கேட்ட சுதந்திரப் போராட்டத் தியாகி வி. காந்தி சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர்தான். தொடர்ந்து 30 வருடங்களாக வழக்கு தொடர்ந்து தனக்கான நீதியைப் பெற்றிருக்கிறார் காந்தி.
வியாசர்பாடியைப் பற்றி கூறும்போது அதன் அடையாளமாக உள்ள கால் பந்தாட்டத்தைப் பற்றி கூறாமல் இருக்க முடியுமா, இந்தியாவில் எவ்வாறு கிரிக்கெட் நேசமிகு விளையாட்டாக பார்க்கப்படுகிறதோ, அவ்வாறே வியாசர்பாடியில் கால் பந்தாட்டம் பார்க்கப்படுகிறது.
இளம் பெண்கள், இளைஞர்கள், சிறுமிகள், சிறுவர்கள் என அனைவரும் அவ்விளையாட்டின் தீராக் காதல் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
வியாசர்பாடி முக்கிய மைதானங்களாக உள்ள நேதாஜி மைதானம், முல்லை நகர் மைதானங்களில் சர்வதேச அளவில் கால் பந்தாட்டப் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று லட்சியக் கனவுகளோடு மைதானத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சிறுவர், சிறுமிகளை நீங்கள் காணலாம்.
அவர்களை தொந்தரவு செய்யாமல், ஒரு ரசிகையாக அவர்கள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தபோது யாரைப் பார்க்க வேண்டும் என்று அறிமுகமானார்கள். அந்தச் சிறுமிகள்.
லிசியா, பூஜா.... லிசியாவுக்கு வயது 12, பூஜாவுக்கு வயது 7.
'என்னுடன் சிறிது நேரம் பேச முடியுமா?' என்ற தயக்கத்துடன் தொடர்ந்தபோது, 'பேசலாமே' என்று பட்டென்று சொன்னவர்களிடம், 'எப்படி இந்த ஆர்வம் வந்தது?' என்ற வழக்கமான கேள்வியை முன்வைத்தேன். இருவரும் ஒருசேரப் பதிலை ஆரம்பிக்க, 'நீ முதலில் கூறு' என்று லிசியாவிக்காக விட்டுக் கொடுத்தாள் பூஜா.
"என் அப்பா ஒரு கால்பாந்தாட்ட வீரர். அவருக்கு கால்பந்தாட்டம் என்றால் அவ்வளவு பிடிக்கும். ஏதோ குடும்ப சூழ்நிலை காரணமாக அவரால் அந்த விளையாட்டைத் தொடர முடியவில்லை. அதனால் என்னை கால்பந்தாட்ட வீராங்கனையாக்க அவருக்கு ஆசை. எனக்கும் இந்த விளையாட்டு பிடித்திருக்கிறது. சுமார் இரண்டு வருடங்களாக இங்கு பயிற்சியாளரிடம் தீவிரவமாகக் கற்றுக் கொண்டிருக்கிறேன்" என்றவரிடம் பிடித்த கால்பந்தாட்ட வீரர் யார் என்று கேட்டபோது 'என் அப்பாதான்' என்றார் பெருமிதத்தோடு.
'இறுதிச்சுற்று' படத்தை நினைவுப்படுத்தும் விதமாக, "என் அக்கா தினமும் கால்பந்தாட்டம் ஆட இந்த மைதானத்துக்கு வருவாள். அதைப் பார்த்து எனக்கும் பிடித்துவிட்டது" என்ற பூஜாவுக்குப் பிடித்த கால்பந்தாட்ட வீரர் பிரேசிலின் நெய்மராம்.
இவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போதே இவன் தான் எனக்கு முதலில் கால்பந்தாட்டத்தில் பயிற்சி அளித்தான் என்று குறுகுறு கண்களுடன் இருந்த அஷ்வின் ராஜை அறிமுக செய்து வைத்தார் லிசி. ஆனால் அங்கிருந்த களம் சூழலால் அஷ்வினால் ஒரு நிமிடம் கூட நிற்கமுடியவில்லை. இதெல்லாம் போர்...கா... நான் விளையாடப் போக வேண்டும். எனக்கு இந்த விளையாட்டுல எப்படி ஆர்வம் வந்தததுல்லாம் தெரில” என்று கூறிவிட்டு சட்டென்று தன் நண்பர்களுடம் களத்தில் கலந்துவிட்டார்.
இவர்கள் மட்டுமில்ல குட்டி பிரேசில் என்று அழைக்கப்படும் வியாசர்பாடியில் நூற்றுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் கால் பந்தாட்டத்தில் பல சாதனைகள் புரிந்திருக்கிறார்கள். புரிய காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிலர் தொடர் முயற்சியினால் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்கிறார்கள். இதற்கு இங்கிருந்து சென்னை எஃப்சி அணி, இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் தனபால் கணேஷை உதாரணமாகக் கூறலாம். இங்குள்ள பலர் இளைஞர்களுக்கு இவர்தான் தற்போதைய ரோல் மாடலாக இருக்கிறார்.
தனபால் கணேஷைப் போல் சிலர் அறிந்ததாக அடையாளம் காணப்பட்டாலும், குடும்ப நெருக்கடி, ஏழ்மை, முறையில்லாத கால் பந்தாட்ட விளையாட்டு அமைப்புகளாலும் சிலர் தங்களது கனவைத் துறந்து பிற பணிகளுக்குச் சென்று விடும் சூழல்தான் இங்கு நிதர்சனம். அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்ல வழி தெரியாமல் அவர்களது இல்லங்களில் அம்பேத்கர் படங்களுடன் காலம் காலமாக துருப்பிடித்து மவுனமாக தொங்கி கொண்டிருக்கும் பதக்கங்கள்தான் கால்ம்பந்தாட்டத்தின் மீதான அவர்களது காதலில் மிச்சமிருக்கிறது.
இவர்களுக்கான உரத்த குரலாக தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கு எழுத்தாளர் கரன் கார்க்கியிடம் பேசும்போது,
‘’வியாசர்பாடி வாழ்வியலில் கால் பந்தாட்டம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் இங்கு அவர்களுக்கான போதிய வழிகாட்டுதல் மிகக் குறைவாக உள்ளது. கால் பந்தாட்டம் விளையாடுவதற்கான போதிய உபகரணங்களும் கிடையாது. ஆதரவும் இருக்காது. அதே சிறுவன் வேறு ஏதாவது நாட்டில் இருந்தால் சிறந்த நாயகனாக இருந்திருப்பான். எனக்கு தெரிந்து கால்பந்தாட்ட வீரனாக இருந்த சம்பத் என்ற இளைஞர் தற்போது கணிதம் பாடம் நடத்தும் ஆசிரியராக மாறிவிட்டார். பிரேசிலின் கால் பந்தாட்ட நாயகன் பீலே இருக்கிறாரே, அவரது ஆட்ட நுணுக்கங்களை அப்படியே பிரதிபலிப்பான் சம்பத்.
சுமார் 45 கிலோ எடையில்தான் இருப்பான். ஆனால், களத்திலிருந்து அவனிடம் பந்தைக் கடத்துவது மிகக் கடினம். அவனுடைய தந்தை ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளி. அவனுக்கு போதிய வசதிதியும், பின்புலம் இல்லாததாலும் தற்போது கணித வகுப்பு எடுத்து கொண்டிருக்கிறான். எவ்வாறு உடலை வைத்திருக்க வேண்டும், எத்தகைய உணவு பழக்கவழக்கங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று சம்பத்துக்கு கால் பந்தாட்டத்தைப் பற்றி எல்லாம் தெரியும். ஆனால், தற்போது அவனிடம் கால் பந்தாட்டத்தின் எந்த அடையாளமும் இல்லை.
இங்கு அனைத்தும் சாதிய ரீதியாகப் பிரிந்து இருக்கிறது. அதுதான் எல்லாவற்றுக்கும் அடித்தளமாக இருக்கிறது. இங்குள்ள சிறுவனால் ஒரு பந்தை வைத்து தங்கள் திறமையை வெளிப்படுத்த முடியும். ஆனால், இங்குள்ள அமைப்புகள் எல்லா பெரிய பெரிய ஆட்களிடம் மட்டுமே செல்கிறது. அவர்கள் இந்தச் சிறுவனைக் கண்டுகொள்ளமாட்டார்கள். அவனுக்கு அழகான காலணி என்பது ஒரு கனவு, ஒரு புதிய நல்ல காலணியை வாங்குவது என்பது அவனுக்கு கார் வாங்குவதற்குச் சமமானது.
அவனால் இதனைக் கடந்துவர முடிவதில்லை, அவநம்பிக்கையில் துவண்டு விடுகிறான். இது தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனையும் கடந்து சிலர் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் வடசென்னையின் கன்னிகாபுரம் பகுதியில் இருக்கிறேன் அங்குள்ள குடிசைப் பகுதியிலுள்ள சிறுவர்கள் அர்ஜெண்டினா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு ஜூனியர் பிரிவில் என்று விளையாடச் செல்வார்கள். ஆனால் அங்கு விளையாடிவிட்டு வந்து இங்கிருக்கும் சூழலுக்கு ஏற்றுக் கொண்டு, கனவைப் புறக்கணித்து வேலைக்குச் சென்று விடுவார்கள். அவன் மீது பழி சொல்ல முடியாது. அவன் அதனை நோக்கி இந்த சமூகத்தால் நகர்த்தப்படுகிறான்.
இதனையும் கடந்து தனது சொந்தப் பணத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அமெரிக்கா, ரஷ்யாவை தாண்டிய திறமைகள் நமது சிறுவர்களிடம் உள்ளன. ஆனால், நாம் அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கத் தவறிக் கொண்டிருக்கிறோம். நமது தவறால் அவர்கள் இங்குள்ள குடோன் தெருக்களில் மூட்டை தூக்குகிறார்கள்.
இங்கிருக்கும் சூழல்கள் குறித்து நான் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பேன். நீங்களும் எழுதுவீர்கள் அவ்வளவுதான்.
முதலில் நாம் ஒரு நல்ல நேர்மையான மனிதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அக்குழந்தைகளின் கனவுகளை மெய்ப்பிப்பவர்கள் விளையாட்டுத் துறையில் அமைச்சர்களாகவும், அதிகாரிகளாகவும், பயிற்சியாளர்களாகவும் நியமிக்கப்பட வேண்டும். பிழைப்பிற்கும், வாழ்விற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அவர்கள் அதனை உணர வேண்டும் அவர்கள் உணரும் வேளையில் அந்தக் குழந்தைகள் நிச்சயம் உயரப் பறப்பார்கள்” என்றார் கரன் கார்க்கி.
நிச்சயம் இந்த மெஸிகளும், ரொனால்டோகளும், நெய்மர்களும் சர்வதேச அளவில் விரைவில் களம் காணுவார்கள் என்ற நம்பிக்கையில் இந்தக் குட்டி பிரேசிலை விட்டு விடை பெறலாம்.
- பயணங்கள் தொடரும்...
இந்து குணசேகர், தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT