Published : 03 Jan 2019 04:52 PM
Last Updated : 03 Jan 2019 04:52 PM
| மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும் அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நல்லடையாள அணிவகுப்புத் தொடர் இது. |
பொருளாதாரத்தில் நலிந்த மாணவர்களுக்கு அம்மா உணவகத்தில் இருந்து இலவசமாக தினந்தோறும் காலை உணவு, அரசுப் பள்ளி என்றாலும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சிகள், படிப்பு தாண்டி பறை, சிலம்பம், கராத்தே என கலை வகுப்புகள் என சென்னை மாநகரில் அசத்துகிறார் அன்பாசிரியர் கிருஷ்ணவேணி.
கிருஷ்ணவேணி, தன்னுடைய ஆசிரியப் பயணத்துக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார்.
''முதலில் 1988-ல் மீஞ்சூரில் உள்ள நாலூர் கம்மார்பாளையம் என்ற ஊரில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த குழந்தைகளைத் தவிர மற்ற யாரும் படிக்கவில்லை. தினசரி சுமார் 3 மணி நேரம் பயணம் செய்துதான் பள்ளியை அடைய முடியும் என்ற நிலை. இதனால் வேறு பள்ளிக்கு மாற்றல் வாங்கினேன். அப்போது 20 வயது என்பதால் பாகுபாடு பற்றியும் நாம் செய்யவேண்டியது குறித்தும் புரிதல் இல்லாமல் இருந்தது.
அப்போது செய்யாமல் விட்டது சில வருடங்கள் கழித்துதான் புரிந்தது. 2009-ல் சென்னை, முகப்பேர் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இணைந்தேன். மீஞ்சூரில் தவறவிட்டவற்றை முகப்பேரில் நிகழ்த்த முடிவு செய்தேன். அங்கும் தாழ்த்தப்பட்ட வகுப்புக் குழந்தைகளே படித்தனர். என்ன பிரச்சினை என்று பார்த்தேன்.
குடிகாரர்களின் கூடாரம்
மாலை 4 மணிக்கு மேல் எங்கள் பள்ளி, குடிமகன்கள் கூடும் இடமாக இருந்தது. தினசரி ஓர் அரை மணி நேரத்தை பாட்டில் பொறுக்கவே செலவிட வேண்டும். சிலசமயத்தில் குழந்தையைப் பார்க்கவேண்டும் என்று மதுபோதையில் பள்ளி நேரத்திலேயே அப்பாக்கள் வருவர். அப்போதெல்லாம் குழந்தைகளின் முகத்தைக் காணவே முடியாது. அவமானமும் குற்ற உணர்வும் அவர்களுக்கு மன உளைச்சலைத் தந்தன. போலீஸைக் கூப்பிடவில்லை. உள்ளூர் இளைஞர்களிடம் பேசினேன். குடிகாரர்கள் வந்தால், இளைஞர்களில் சிலர் உடனே பள்ளிக்கு வந்தனர். மெல்ல மெல்ல குடிகாரர்களின் தொல்லை குறைந்தது. இப்போது அறவே இல்லை.
தினசரி குளியல் - அவசியம்
அப்போதெல்லாம் நிறைய மாணவர்கள் குளிக்காமலே வருவார்கள். அவர்களைப் பெற்றவர்களின் வாழ்வாதாரம் அதையெல்லாம் கவனிக்க முடியாத சூழ்நிலையில் இருந்தது. சிறிய கொட்டகைதான் வீடு என்பவர்களுக்குக் குளியலறையும் கழிப்பறையும் எங்கிருக்கும்? அவர்களுக்குப் பள்ளியிலேயே குளிக்க வசதி ஏற்படுத்தினோம். நன்கொடையாளர்களின் உதவியால் சோப், துண்டுகளைப் பெற்றோம். நாளடைவில் குளித்த பிறகு ஏற்படும் புத்துணர்ச்சி எல்லோருக்கும் பிடிக்கத் தொடங்கியது. அரசு கட்டிக் கொடுத்த குளியலறைகளில் குளித்துவிட்டு வர ஆரம்பித்தனர்.
இலவச 'அம்மா உணவக' இட்லி
அடுத்த பிரச்சினையாக உணவு இருந்தது. நிறையப் பேர் சாப்பிடாமலே பள்ளிக்கு வந்தனர். அவர்களுக்கு அம்மா உணவகத்தில் இருந்து இட்லி வாங்கிக் காலை உணவு அளிக்கலாம் என்று யோசித்தேன். அங்கே பார்சல் கிடையாது என்று தர மறுத்தனர். அவர்களிடம் பொறுமையாக விளக்கி, அதிகாரிகளின் உதவியோடு இட்லிகளை வாங்க ஆரம்பித்தேன். 40 இட்லிகளில் ஆரம்பித்தது, இன்று தன்னார்வலர்களின் உதவியோடு தினசரி 100 இட்லிகள்வாங்கப்பட்டு, 40 மாணவர்களின் பசி ஆறுகிறது.
6 ஆண்டுகளுக்கு முன்னால் மாணவன் ஒருவன், ''எல்லாம் நல்லாதான் இருக்கு டீச்சர். என்ன இருந்தாலும் கீழதானே உக்கார்றோம்!'' என்றான். அந்தப் பிஞ்சின் வார்த்தை மனதைச் சுட்டது. உடனே சொந்த செலவில் 100 பிளாஸ்டிக் நாற்காலிகளை வாங்கினேன். நண்பர்கள், பொதுமக்களின் உதவியுடன் 26 வட்ட மேசைகளை வாங்கினோம்.
ஆட்சியர் அளித்த 25 ஆயிரம் ரூபாய்
பிளாஸ்டிக் என்பதால் நாளடைவில் நாற்காலிகள் உடையத் தொடங்கின. 1000 ரூபாய் மதிப்பிலான மர நாற்காலியை வாங்க முடிவு செய்தோம். தன்னார்வலர்கள், என்ஜிஓக்கள் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கினோம். போன வருட ஆண்டு விழாவுக்கு அப்போதைய ஆட்சியர் அன்புச்செல்வன் எங்கள் பள்ளிக்கு வந்தார். மாணவர்களைக் கண்டு வியந்தவர் ரூ.25,000 வழங்கினார். அதைக்கொண்டு 25 நாற்காலிகளை வாங்கினோம். இப்போது 100 நாற்காலிகள் 1 - 5 வகுப்புகள் முழுவதையும் அலங்கரிக்கின்றன. குழந்தைகள் என்பதால் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. மாணவர்களுக்கு மட்டும் பிளாஸ்டிக்கையே பயன்படுத்தி வருகிறோம்.
ஆட்டிச குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி
எங்கள் பள்ளியில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மூவரும் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனும் படிக்கின்றனர். அவர்கள் அனைவருமே நிறைய பள்ளிகளுக்குப் போய்விட்டு, அதே வேகத்தில் திரும்பியவர்கள். அரசுப் பள்ளியில் சேர்க்குமாறு மருத்துவர் கூறிய ஆலோசனையின்பேரில் எங்கள் பள்ளிக்கு வந்தனர்.
அவர்கள் அனைவரிடமுமே நான் தனித்தனியாக சொன்னது ஒன்றுதான். பள்ளியில் குழந்தையுடன் பெற்றோரோ அல்லது காப்பாளரோ உடனிருக்க வேண்டும். குழந்தைக்கு எதில் திறமை இருக்கிறது என்று சோதிக்க வேண்டும். இங்கு படிக்கும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு நினைவாற்றல் அதிகம். மற்றவர்களுக்கு 2 முறை பயிற்சி கொடுத்தால், அவனுக்கு 10 முறை பயிற்சி அளிக்கவேண்டும். அதுபோதும்.
சிறுவன் இப்போது ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் என்ன வார்த்தை சொன்னாலும் எழுதுவான். இந்திய மேப்பில் எல்லா மாநிலங்களையும் குறிப்பான். கணக்கில் கூட்டல், கழித்தல், பெருக்கல் தெரியும்.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களால் க்ரியேட்டிவ் ஆக யோசிக்க முடியாது என்பதைத் தாண்டி, மற்ற எல்லா விஷயங்களையும் சிறப்பாகச் செய்வான். சிறுவன் ஒருமுறை, ''படிச்சு ஐஏஎஸ் ஆகிட்டு, உங்களை ஆடி கார்ல கூட்டிட்டுப் போகணும் டீச்சர்!'' என்றான். அந்த கணம் என்னுடைய 30 ஆண்டு ஆசிரியர் வாழ்க்கை பூர்த்தியானதுபோல் இருந்தது. முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாணவனின் பழக்க வழக்கங்களும் மெல்ல மாறி வருகின்றன.
சக மாணவர்களின் தோழமை
ஆரம்பத்தில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை சக மாணவர்கள் எப்படி எதிர்கொள்வார்களோ என்று பயந்தேன். ஆனால் அவர்கள் நட்புடன் பழகுகின்றனர். ஆட்டிச சிறுவனுக்கு ஏதாவது தேவை என்றாலும் ஆசிரியர்களிடம் ஓடிவந்து சொல்கின்றனர்.
காரில் வந்திறங்கும் மாணவர்கள்
முழுத் தமிழ் வழியில் இயங்கும் எங்கள் பள்ளியில் இப்போது மருத்துவரின் குழந்தை, ஐடியில் பணியாற்றுவோர், ரயில்வே ஊழியர், ஆசிரியரின் மகன், தொழிலதிபரின் மகன் என எல்லாத் தரப்பில் இருந்தும் படிக்கிறார்கள். மருத்துவர், மாணவர்களின் சிலம்பப் பயிற்சிக்கான செலவை ஏற்றுக் கொண்டார். மக்கள் பாதை இயக்கத்தைச் சேர்ந்தவர் பறை இசைப் பயிற்சி அளிக்கிறார்.
எதிர்காலத் திட்டங்கள்
கற்பித்தலை மட்டுமே செய்யாமல் பள்ளியை கலைக்கூடமாக்க வேண்டும். பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் பின் தங்கியவர்கள் என எல்லாத் தரப்பினரும் பள்ளியில் ஒன்றாகப் படிக்க வேண்டும். முன்னேறிய மக்கள், மற்றவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும். வருடாவருடம் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் பள்ளிக்கு புதிய கட்டிடம் வேண்டும். அதற்கான பயணங்களில் இருக்கிறேன்'' என்று புன்னகைக்கிறார் அன்பாசிரியர் கிருஷ்ணவேணி.
க.சே.ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in
அன்பாசிரியர் கிருஷ்ணவேணியின் தொடர்பு எண்: 9500183677
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT