Last Updated : 18 Jan, 2019 01:11 PM

 

Published : 18 Jan 2019 01:11 PM
Last Updated : 18 Jan 2019 01:11 PM

புத்தகத் திருவிழாவில் சினிமா தொடர்பாக எதை வாங்கலாம்? 4- ஒரு துளி நட்சத்திரம்

கேமர் இமேஜ் திரைப்பட விழாவின் முக்கியத்துவத்தையும், அதன் போட்டிப் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பது குறித்தும் ஒளிப்பதிவாளர் சி.ஜெ.ராஜ்குமார் எழுதியுள்ள நூல் ஒரு துளி நட்சத்திரம். டிஸ்கவரி புக் பேலஸ் சார்பில் வேடியப்பன் இந்நூலைப் பதிப்பித்துள்ளார்.

கோவா திரைப்பட விழா, சென்னை சர்வதேச திரைப்பட விழா, திருவனந்தபுரம் திரைப்பட விழா ஆகியவை திரை ஆர்வலர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஆனால், உலக அளவில் இன்றளவில் 3000 திரைப்பட விழாக்கள் நடைபெற்று வருகின்றன என்ற ஆச்சர்யத் தகவலுடன் உலகப் படங்களுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார் ஒளிப்பதிவாளர் சி.ஜெ.ராஜ்குமார்.

1932-ம் ஆண்டு தொடங்கப்பட்ட வெனிஸ் திரைப்பட விழா, 1946-ம் ஆண்டு தொடங்கப்பட்ட  கான் திரைப்பட விழா,  1951-ல் தொடங்கப்பட்ட பெர்லின் திரைப்பட விழா என்று பழமையான திரைப்பட விழாக்கள் குறித்த தரவுகளைக் கொடுத்தபடி ஒளிப்பதிவாளர்களை பிரத்யேகமாக கவுரவிக்கும் கேமர் இமேஜ் திரைப்பட விழாவின் எல்லா அம்சங்களையும் பல்வேறு கோணங்களில் நூலாசிரியர் அழகாக விளக்கியுள்ளார்.

போலந்து நாட்டில்  ஒருவாரம் நடத்தப்படும் கேமர் இமேஜ் திரைப்பட விழாவில் அனைத்து முன்னணி கேமரா தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது புதிய தயாரிப்புகள், தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் என்ற அரிய தகவலையும் நூலாசிரியர் சி.ஜெ.ராஜ்குமார் குறிப்பிட்டுள்ளார்.

கேமர் இமேஜ் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான முதல் பரிசாக தங்கத் தவளை விருது, இரண்டாம் பரிசாக வெள்ளித் தவளை விருது, மூன்றாம் பரிசாக வெண்கலத் தவளை விருது வழங்கப்படுகிறது. வெள்ளிவிழா கண்ட இத்திரைப்பட விழாவில் விருதுகளை வென்ற உலகின் சிறந்த ஒளிப்பதிவாளர்களால் பதிவு செய்யப்பட்ட 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் திரை மொழி குறித்தும் ஒளிப்பதிவின் சிறப்பு உத்திகள் குறித்தும் தனக்கே உரிய மொழி நடையில் சி.ஜெ.ராஜ்குமார் விவரித்திருப்பது ரசனைக்குரியது.

அதுமட்டுமல்லாமல், மாணவர்களின் படைப்புகளை அங்கீகரிக்கும் போட்டிப் பிரிவுகள், ஆவணப்படப் போட்டிப் பிரிவு, மியூசிக் வீடியோ பிரிவு, தொலைக்காட்சி பைலட் எபிசோட் போட்டிப் பிரிவு, அறிமுக ஒளிப்பதிவாளர்களுக்கான போட்டிப் பிரிவு, வாழ்நாள் சாதனையாளருக்கான கேமர் இமேஜ் விருது என விருதுகளின் பல்வேறு பிரிவுகளை வெளியிட்டவர் அவ்விருதுகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதைப் பற்றியும் ஒளிவுமறைவு இல்லாமல் கூறியுள்ள விதம் பாராட்டுக்குரியது.

கேமர் இமேஜ் திரைப்பட விழாவில் பங்கேற்பது எப்படி? போட்டிப் பிரிவுகள், விண்ணப்பம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள், கட்டண விவரம் ஆகியவற்றை அறிந்துகொள்ளும் ஆர்வமுள்ளவர்கள் இந்நூலை வாசிக்க வேண்டியது அவசியம்.

கேமர் இமேஜ் திரைப்பட விழா ஒளிப்பதிவு பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கும், திரைப்படத் துறையில் பணி புரிபவர்களுக்கும்  ஒரு துளி நட்சத்திரம் மிகப்பெரிய வழிகாட்டியாகத் திகழும்.

 

நூல்: ஒரு துளி நட்சத்திரம்

ஆசிரியர்: ஒளிப்பதிவாளர் சி.ஜெ.ராஜ்குமார்

விலை: ரூ.150

 

தொடர்புக்கு:

டிஸ்கவரி புக் பேலஸ்

பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்,

கே.கே.நகர் மேற்கு,

சென்னை - 78.

போன்: 044- 4855 7525

செல்பேசி: 8754507070

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x