Published : 04 Jan 2019 05:52 PM
Last Updated : 04 Jan 2019 05:52 PM

எல்லா அரசியல்வாதிகளின் வாரிசுகளும் அரசியலுக்கு வரவேண்டுமா?- கனிமொழி சிறப்புப் பேட்டி

திமுக சார்பில் மாநிலங்களவை விவாதங்கள், கட்சிப் பணிகள், கூட்டங்கள் என தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார் திமுக மகளிரணிச் செயலாளரும் மாநிலங்களவை எம்.பி.யுமான கனிமொழி.

'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்காக அவரிடம்  உரையாடியதில் இருந்து...

ஜெயலலிதா நினைவுநாளின்போது அரசியலில் ஆணாதிக்கம் அதிகமாக இருப்பதாகக் கூறியிருந்தீர்கள். ஆண்கள் நிறைந்த அரசியலில் ஒரு பெண்ணாக அதை நீங்கள் எதிர்கொண்டீர்களா?

ஆணாதிக்கம் இல்லாத துறையே கிடையாது. அரசியல் என்று வரும்போது, இத்துறையில் பெண்கள் அதிகமாக இன்னும் வர ஆரம்பிக்கவில்லை. இதனால் இருக்கும் சில பெண்களுக்கு பிரச்சினை அதிகமாக இருக்கிறது.

எல்லாத் துறைகளிலுமே ஆணாதிக்கம் இருக்கிறது. நான் பத்திரிகையாளராகப் பணியாற்றும்போது, தமிழ்நாட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் கூடப் பெண்கள் இல்லை. அதையெல்லாம் உடைத்துவிட்டு இப்போதுதான் வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

அரசியல் என்றாலே அதிகாரம்தானே. கொள்கைகள் அமைப்பது, சட்டத்தை உருவாக்குவது என அரசியல் ஓர் அதிகார விளையாட்டு. அதனால் இதில் ஆணாதிக்கம் இன்னும் அதிகமாக இருக்கிறது. பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு என்பதை இன்னும் அமல்படுத்த முடியாமல் இருப்பதற்கு ஆணாதிக்க மனப்பான்மையும் ஒரு முக்கியக் காரணம்.

தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வருவார்?

தளபதி மு.க.ஸ்டாலின். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

டிடிவி தினகரனின் அரசியல் பாதையை எப்படிப் பார்க்கிறீர்கள்? ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி, பிரச்சினைகளின்போது நிதானத்தைத் தவறவிடாமல் புன்னகையோடு எதிர்கொள்வது ஆகியவை அவருக்கான பலமாகக் கருதப்படுகிறதே?

ஒரு விஷயத்தை சிரித்துக்கொண்டே எதிர்கொள்வது மட்டுமே அரசியல்வாதிக்கான தகுதி ஆகிவிடாது. ஆனால் அவரது எதிர்காலத்தை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதைப் பற்றி என்னால் ஆருடம் சொல்ல முடியாது.

ரஜினி, கமலின் அரசியல் வருகை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

நடிகர்கள், மருத்துவர்கள்,பத்திரிகையாளர்கள் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். வரட்டும். ஆனால் அவர்கள் மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டவர்களாக இருக்கவேண்டும். அதே நேரத்தில் அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்பது முக்கியம்.

தமிழ்நாட்டில் அரசியலுக்கு வருபவர்கள் தமிழகத்துக்கு நேர்மையானவர்களாக நடந்துகொள்ள வேண்டும். அவ்வளவே!

கமல் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தும் அதில் திமுக கலந்துகொள்ளவில்லை, இதனால் திமுக கமலை மதிக்கவில்லை என்பதுபோன்ற தோற்றம் எழுந்திருக்கிறது. காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கத் தயாரான மனநிலையில் இருப்பதாகக் கமல் தெரிவித்த நிலையில், திமுக கூட்டணியில் கமல் இருப்பாரா?

ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்பதை மட்டுமே வைத்து எதையும் முடிவு செய்துவிடமுடியாது.  தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை என்பதால் கமலுக்கு தலைவர் கருணாநிதி மீது மரியாதை கிடையாது என்று சொல்லிவிடமுடியாது. அதற்கான விளக்கத்தையும் அவர் சொல்லி இருந்தார். கூட்டணி பற்றி நான் கருத்து சொல்ல முடியாது.

கவிஞர் கனிமொழி என்ன செய்கிறார்?

சிரிக்கிறார்.. எதுவும் செய்யவில்லை. இந்த ஆண்டிலாவது புதிதாக எழுத வேண்டும்,எழுதுவேன்.

தமிழகத்தில் உங்களுக்குப் பிடித்த பெண் அரசியல்வாதிகள் யார்?

ம்ம்ம்.. நாகம்மையார், மணியம்மையார்.

சமகால அரசியல்வாதிகளில் யாராவது?

தமிழ்நாட்டில்.. பெரிய தலைவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எதையுமே எதிர்பார்க்காமல் போராடிய பெண்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். திமுகவிலேயே அத்தகைய பெண்களைக் கண்டு வியந்திருக்கிறேன்.

எந்தப் பிரச்சினை என்றாலும் முதல் ஆளாக ட்விட்டரில் கருத்து சொல்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை. அவரின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

அவர் தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கிறார். பத்திரிகையாளரைச் சந்திக்கிறார். கடினமாக உழைக்கிறார் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அவரின் கட்சி சார்பை விமர்சிக்கிறோம். அடிப்படையில், கொள்கையிலேயே எங்களுக்கும் அவருக்கும் வேறுபாடு இருக்கிறது. அதில் நான் என்ன கருத்து சொல்வது?

கருணாநிதி - ஸ்டாலின் இடையே என்ன ஒற்றுமை, வேற்றுமை?

தலைவரையும் தளபதியையும் ஏன் ஒப்பிட வேண்டும்? அவர்கள் இருவரும் வெவ்வேறு ஆளுமைகள். 

மக்களவைத் தேர்தலில் நீங்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறீர்கள் என்றும் செய்திகள் வெளிவருகின்றன. அவை உண்மையா?

தேர்தலில் போட்டியிடும் எண்ணம் உள்ளது. ஆனால் கட்சித் தலைமை அனுமதித்தால் போட்டியிடுவேன். ஆனால் எந்தத் தொகுதி என்பது குறித்தெல்லாம் நான் யோசிக்கவில்லை. கட்சி அதனை முடிவு செய்யும்.

முத்தலாக் மசாதாவில் திமுகவின் நிலைப்பாடு என்ன?

அதில் குறிப்பிடப்படும் சிறை தண்டனையை நாங்கள் எதிர்க்கிறோம். முத்தலாக் செல்லாது என்று சொல்பவர்களை சிறைக்கு அனுப்புவேன் என்று சொல்கிறார்கள். திருமண பந்தம் முறியக்கூடாது என்றுதான் சம்பந்தப்பட்ட பெண்கள் போராடுகிறார்கள். ஆனால் முத்தலாக் கூறியதாலேயே 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்றால், அந்தக் குடும்பத்தை யார் காப்பாற்றுவது? பிறகு அந்தத் திருமணம் என்ன ஆகும்?

எல்லா மதங்களிலுமே பிரிவு, முறிவு இருக்கிறது. அதற்காக ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் சிறை தண்டனை வழங்குவது எந்த விதத்தில் நியாயம்?

எல்லாவற்றுக்கும் மேலாக, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை முதலில் அமல்படுத்துங்கள். பெண்களுக்கு அதிகாரமளிக்க, வலிமை சேர்க்க அதைவிடப் பெரிய விஷயம் எதுவுமில்லை.

உங்கள் மகன் அரசியலுக்கு வருவாரா?

எனக்குப் புரியவில்லை, ஏன் எல்லோரும் உங்கள் மகன் அரசியலுக்கு வருவாரா என்று கேட்கிறீர்கள்?  எல்லோரிடமும் சென்று நீங்கள் அப்படிக் கேட்பதில்லை. அரசியல்வாதிகளிடம் மட்டும் கேட்பீர்கள், பிறகு அவன் அரசியலுக்கு வந்துவிட்டால் குடும்ப அரசியல் என்று நீங்களே வசைபாடுவீர்கள்.

அரசியலுக்கு வர யாருக்கு விருப்பம் இருக்கிறதோ, அவர்கள் வரட்டும். எல்லா அரசியல்வாதிகளின் வாரிசுகளும் அரசியலுக்கு வரவேண்டுமா என்ன?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x