Published : 18 Jan 2019 07:26 PM
Last Updated : 18 Jan 2019 07:26 PM
திரைக்கதை குறித்த அடிப்படைப் புரிதலையும், திரைக்கதை எழுதுவதற்கான பயிற்சிகளையும் கருந்தேள் ராஜேஷ் திரைக்கதை எனும் பூனை நூலில் எளிமையாகவும் அழகாகவும் விளக்கியுள்ளார். தமிழ் ஸ்டுடியோ அருண் பேசாமொழி பதிப்பகம் சார்பில் இந்நூலை பதிப்பித்துள்ளார்.
தமிழில் திரைக்கதைக் கலைக்கான நூல்கள் மிக சொற்பமாகவே வரும் தருணத்தில் மீண்டும் திரைக்கதை குறித்து எழுதியிருக்கும் கருந்தேள் ராஜேஷின் அக்கறை வரவேற்கத்தக்கது. திரைக்கதைக்கான நூல்களைத் தொடர்ந்து வெளியிடும் அருணுக்கும் வாழ்த்துகள்.
ஹாலிவுட்டின் திரைக்கதை பிதாமகன்களில் சிட் ஃபீல்ட், ராபர்ட் மெக்கீ, ப்ளேக் ஸ்னைடர் ஆகிய மூவரும் குறிப்பிடத்தகுந்தவர்கள். அதில் ப்ளேக் ஸ்னெய்டரால் எழுதப்பட்ட Save the Cat புத்தகத்தை தமிழில் வரிக்கு வரி நேரடியாக மொழிபெயர்ப்பு செய்யாமல், தமிழுக்கு ஏற்றவாறு மாற்றங்களை நிகழ்த்தி திரைக்கதை எனும் பூனையில் கருந்தேள் ராஜேஷ் எழுதியுள்ளார். திரைக்கதை எழுத்தாளருக்குரிய பொறுப்புடனும் பல திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவங்களின் துணை கொண்டும் அவர் எழுதியிருக்கும் விதம் வசீகரிக்கிறது.
தமிழில் திரைக்கதையை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் பாட்ஷா, அன்பே சிவம், இம்சை அரசன் 23-ம் புலிகேசி, கஜினி, தெய்வத் திருமகள், சூதுகவ்வும், கடைக்குட்டி சிங்கம், 96, ராட்சசன் என பல படங்களை உதாரணமாகச் சொல்லியிருக்கும் விதம் படங்களின் ஜானர் மற்றும் திரைக்கதையின் நுட்பங்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
சிட் ஃபீல்டின் திரைக்கதை வழிமுறையையும் போகிற போக்கில் எளிமையாகச் சொல்வது நூலுக்கு வலு சேர்க்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் படிக்கும் வாசகர்கள் திரைக்கதை எழுதுவதற்கான பயிற்சியையும் செய்யச் சொல்கிறார். அந்தப் பயிற்சியை முடித்த பிறகுதான் அடுத்த அத்தியாயத்தைத் தொடர்ந்து படிக்க முடியும். அந்த நூதன உத்தியை நூல் முழுக்க பரவவிட்டிருப்பதில் கருந்தேள் ராஜேஷின் புத்திசாலித்தனம் தெரிகிறது.
திரைக்கதை எழுதுவதற்கான முதல் படி, அட்டகாசமான ஒன் லைன் வேண்டும். அந்த ஒன் லைன் குழப்பமில்லாமல் இருந்தால் அதுவே கதையை வழிநடத்திச் செல்ல உதவும் என்கிறார் ராஜேஷ். மேலும், ஒன் லைனுக்காக சில தமிழ்ப் படங்களையும் உதாரணமாகச் சொல்லி திரைக்கதை எனும் கடலுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார்.
ஒன் லைனிலேயே கதையின் ஜானரும், நகை முரணும் ஏன் வெளிப்படுத்த வேண்டும், ஒன் லைனை வைத்துக்கொண்டு திரைக்கதை எழுதுவது எப்படி? எல்லோரும் விரும்பும் ஹீரோ கதாபாத்திரத்தை எப்படி கட்டமைப்பது, ஒவ்வொரு நடிகரின் பெரும்பாலான படங்களில் ஏன் ஒரேமாதிரியான டெம்ப்ளேட் இடம்பெறுவது ஏன், ஒரு கட்டமைப்புக்குள் உள்ள 10 வகை சிச்சுவேஷன்கள் என்ன, மூன்று பாக திரைக்கதை அமைப்பு ஏன் அவசியம் போன்றவற்றை ஆழமாகச் சொல்வதோடு அதற்கான பயிற்சிகளையும் செய்யச் சொல்லியிருப்பதால் நூலின் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கிறது.
அந்த வகையில் திரைக்கதை எனும் பூனை இதுவரை யோசிக்காத கோணங்களில் யோசிக்க வைத்து சிறந்த திரைக்கதை எழுத்தாளர் ஆவதற்கான அடிப்படைக் கட்டமைப்பைத் திடப்படுத்துகிறது.
நூல்: திரைக்கதை எனும் பூனை
ஆசிரியர்: கருந்தேள் ராஜேஷ்
விலை: ரூ.180
தொடர்புக்கு:
பேசாமொழி பதிப்பகம்,
பியூர் சினிமா புத்தக அங்காடி,
7, சிவன் கோயில் தெரு,
வடபழனி (கமலா திரையரங்கம் அருகில்),
சென்னை - 26.
044-48655405
9840644916
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT