Last Updated : 19 Jan, 2019 07:33 PM

 

Published : 19 Jan 2019 07:33 PM
Last Updated : 19 Jan 2019 07:33 PM

புத்தகத் திருவிழாவில் சினிமா தொடர்பாக எதை வாங்கலாம்? 7:  101 திரைக்கதை எழுதும் கலை

திரைக்கதை குறித்து பேசாமொழி பதிப்பகம் சார்பில் வெளியாகியுள்ள மற்றுமொரு நூல் 101 திரைக்கதை எழுதும் கலை. கார்ல் இக்லியாஸ், ஃஸாண்டர் பென்னட் ஆகிய இருவரும் திரைக்கதை எழுதுவது குறித்து வெற்றிகரமான திரைக்கதை ஆசிரியர்கள் கூறிய ஆலோசனைகளை எழுத, அதை தமிழுக்கு ஏற்றவாறு மொழிபெயர்ப்புடன் தேவையான மாற்றங்களையும் செய்து கலையை தன் வசப்படுத்தி இருக்கிறார் தீஷா.

திரைக்கதை எழுதுவதற்கு முன்னால் தன்னைத் தானே தயார்செய்து கொள்வதற்கான 101 குறிப்புகள், திரைக்கதை எழுதும்போது பின்பற்ற வேண்டிய 101 குறிப்புகள் என 202 குறிப்புகள் நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டு இருப்பது நூலின் சிறப்பு.

வில்லியம் கோல்ட்மேனின் பழைய பழமொழி ஒன்று இருக்கிறது. யாருக்கும் எதுவும் தெரியாது. ஆனால், ஒவ்வொரு ஸ்டுடியோ நிர்வாகிக்கும் தெரிந்த ஒரு விஷயம். எந்தப் படமும் சிறந்த திரைக்கதையில் இருந்துதான் தொடங்குகிறது என்பதே அது. இந்த  அறிமுகப் படலத்தைப் படிக்கும்போதே இது வழக்கமான பயிற்சி முறைகள் கொண்ட புத்தகம் இல்லை என்பதை உணர முடிகிறது. அதே சமயத்தில், கலைநுணுக்கமும் நுட்பமும் கொண்ட சிறந்த திரைக்கதையை எழுதுவதற்கு கடின உழைப்பும், முதலீட்டு நேரமும் அதிகம் தேவைப்படும். இது ஒரே இரவில் நடந்துவிடக்கூடியதல்ல என்ற உண்மையையும் இநுநூல் உரக்கப் பேசுகிறது.

இங்கு ஏற்கெனவே வெற்றிபெற்ற திரைப்படங்களின் பாதிப்புகளைக் கொண்டிருக்கும் திரைக்கதைகள் தேவையில்லை, பிரபலமான, வரவேற்பு பெற்ற கதாபாத்திரங்களின் நகல்களைப் பிரதியெடுக்க வேண்டிய அவசியமில்லை, பழமையான உத்திகள், சுவாரஸ்யமற்ற சிந்தனைகள், மோசமான திருப்புமுனைகள் என்று முதிர்ச்சியற்ற திரைக்கதைகளை எழுதாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் தீஷா அழகாக விளக்குகிறார்.

குறைந்தபட்ச கற்பனை சக்தியைக் கொண்டு போலியான திரைக்கதையை உருவாக்க நினைக்க வேண்டாம். அசலான திரைக்கதையை உருவாக்க கடினமாக வேலை செய்ய வேண்டும் என்ற டோனி கில்ராயின் மேற்கோளைக் குறிப்பிடும் இடம் பொருத்தமானது.

க்ளிஷே காட்சிகளைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து திரைக்கதை ஆசிரியர் பில் மார்ஸலிலி கூறிய வழிமுறைகள், ஆலோசனைகள் அப்படியே பின்பற்றக்கூடியவை. எடுத்துக்காட்டாக, நாயகனும், நாயகியும் சந்திப்பது போல் ஒரு காட்சி. எதையுமே முதலில் செய்யும்போது அது பெரும்பாலும் ஏற்கெனவே பார்த்த ஒரு காட்சியின்  பாதிப்பில்தான் வரும். இதுவரை பார்த்த படங்களின் பாதிப்பிலிருந்து பழகிய காட்சியை எழுதுவதுதான் க்ளிஷே. இதனைத் தவிர்க்க அக்குறிப்பிட்ட ஒரு காட்சி குறித்து 20 வழிகளில் யோசித்து எழுத வேண்டும் என்கிறார். ஒரு திரைக்கதையை முடித்துவிட்டாலும் அதை திருத்தி திருத்தி எழுதும்போதுதான் அதில் இருக்கும் குழப்பங்களும், குறைகளும் தெரியவரும் என்ற பில் மார்ஸலிலியின் ஆலோசனை முக்கியமானது, தேவையானதும் கூட.

இயல்பாகவே நல்ல கதை சொல்லியாக எப்படி இருப்பது, அசலான யோசனையின் பக்கம் நகர வேண்டியது ஏன், மக்களை கூர்ந்து கவனிக்க வேண்டியதன் தேவை என்ன, குழு மனப்பான்மை திரைக்கதைக்கு அவசியமா, வாசிப்பது எப்படி திரைக்கதை எழுத உதவும், திரைப்படங்களை நேசிக்க வேண்டுமா, திரைக்கதை எழுதுவதை ஏன் ஒரு வாழ்க்கைப் பயணமாக மேற்கொள்ள வேண்டும், தீராக் காதலுடன் எழுத எதையெல்லாம் புறம்தள்ள வேண்டும், நல்ல திரைக்கதைக்கு ஏன் வசனங்கள் மட்டும் போதாது, திரைக்கதை எழுத எது ஆதாரம், கதைக்கருக்களை எப்படிக் கண்டுபிடிப்பது, அதை எப்படி வளர்த்து திரைக்கதையாக்குவது போன்ற கேள்விகளுக்கு தீஷாவின் 101 திரைக்கதை எழுதும் கலை தெளிவாகப் பதில் சொல்கிறது.

திரைக்கதையை எப்படி தன் வசப்படுத்துவது என்பது குறித்த மாயைகளை போகிற போக்கில் உடைப்பதோடு மட்டுமல்லாமல்,  எழுதப்பட்ட திரைக்கதையை எப்படி விற்பது என்ற வியாபார நுணுக்கத்தையும் சொல்வதின் மூலம் 101 திரைக்கதை எழுதும் கலை தனிப்பெரும் பலம் வாய்ந்ததாக உள்ளது.

 

நூல்: 101 திரைக்கதை எழுதும் கலை

ஆசிரியர்: தீஷா (தமிழில்)

விலை: ரூ.150

தொடர்புக்கு:

பேசாமொழி பதிப்பகம்,

பியூர் சினிமா புத்தக அங்காடி,

7, சிவன் கோயில் தெரு,

வடபழனி (கமலா திரையரங்கம் அருகில்),

சென்னை - 26.

044-48655405

9840644916

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x