Last Updated : 05 Dec, 2018 11:53 AM

 

Published : 05 Dec 2018 11:53 AM
Last Updated : 05 Dec 2018 11:53 AM

ஆண்களுக்காக: 3-  பார்வையில் உரசாதீர்...

"கண் முன்னே எத்தனை நிலவு காலையிலே

கலர் கலராய் எத்தனை பூக்கள் சாலையிலே

ஏன் உடம்பினில் உடம்பினில் மாற்றம்

என் தலை முதல் கால் வரை ஏக்கம்

பருவம் என்றால் எதையோ வேண்டும் காதலிலே

 

வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே

இலவசமாய் தருவேன் எந்தன் இதயம்தானே

வலி என்பது இனிதானே

அது கூட சுகம்தானே

ஒரு முறைதான் உரசிப் போடி பார்வையிலே..."

 

பின்வரும் கட்டுரைக்கும் மேற்கோளில் உள்ள சினிமா பாட்டுக்கும் தொடர்பு இருக்கிறது. ஏன் சமூகத்தில் நடக்கும் பல குற்றங்களுக்கும், வன்முறைகளுக்கும்கூட சினிமாவுடன் நிறையவே தொடர்பு இருக்கிறது.

அப்படி பொத்தாம் பொதுவாகக் கூறாதீர்கள் என பலரும் வக்காலத்து வாங்கலாம். நானும் இங்கே எதையும் முற்றிலுமாக பொதுமைப்படுத்த விழையவில்லை. ஆனால், கணிதப் பாடத்தில் வரும் 4-ஐ விட 5 பெரியது என்ற அடிப்படை தர்க்கத்தைப் போல்தான் சினிமாவால் விளையும் நன்மையைவிட அதை அப்படியே உள்வாங்கிக் கொள்பவர்களால் சமூகத்தில் ஏற்படும் தீமைகள் பெரியது என்பது.

பதின்ம வயது தொடங்கி பல்போன பாட்டன் வயதுவரை சில ஆண்களின் பார்வையில் விரசம் இருக்கிறது. எல்லா ஆண்களின் பார்வையும் தவறானது அல்ல. ஆனால், ஒருசில ஆண்களின் பார்வை ஆடைக்கு மேல் ஆடை அணிந்து அதன் மீது ஒரு துப்பட்டாவும் அணிந்திருந்தாலும்கூட எக்ஸ்ரே போல் ஊடுருவும். இதில் கேமரா கண்கள் வேறு. ஆம். நம்மை நமக்குத் தெரியாமல் அன்றாடம் செல்போனில் யாராவது ஒருவரேனும் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு இருக்கிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

"பார்க்கிறதப் பாரு பார்வையிலேயே தின்னுடுவான் போல" என்ற வசைமொழிகளை நாமேகூட பேருந்து நிறுத்தங்களில் கூறியிருப்போம்.

இந்த அத்தியாயம், பெண்ணின் மீதான சில ஆண்களின் பார்வையைப் பற்றியே பேசவுள்ளது. பெண்களைப் பின் தொடரும் அந்தப் பார்வைக் கோளாறு பற்றியே அலசவுள்ளது.

அதற்காக இங்குள்ள ஆண்களுக்கு பெண் மீது சமூகப் பார்வையே இல்லை என்று அர்த்தமில்லை. இந்த மண்ணில் பெரியாரைவிட பெண்ணின் மீது சமூகப் பார்வையைப் பாய்ச்சியவர் வேறு யார் இருந்துவிட முடியும்! சபலபுத்தி ஆண்கள் சிலருக்கு அந்த சமூகப் பார்வையில் ஒரு துளியேனும் ஏற்பட வேண்டும் என்பதே நமது நோக்கமும் எதிர்பார்ப்பும்.

இங்கே ஒரு சம்பவத்தைச் சொல்ல விரும்புகிறேன். எனது தோழியின் மகள். 6-ம் வகுப்பை அப்போதுதான் எட்டியிருந்தாள். வாசிப்பில் ஆர்வம் இருந்ததால் தோழி எல்லா புத்தகத் திருவிழாவுக்கும் அவளைத் தவறாமல் அழைத்துச் சென்றுவிடுவாள்.

சென்னையில் வசித்த அவள் தீவுத்திடலில் நடந்த புத்தகத் திருவிழாவுக்கும் அப்படித்தான் குடும்பத்துடன் சென்றிருந்தாள். புத்தகம் எல்லாம் வாங்கியாகிவிட்டது. வீட்டுக்கு வந்த தோழி புத்தகங்களை புரட்டிக் கொண்டே, மகள் எந்தப் புத்தகத்தைப் பற்றி முதலில் பேசுவாள் என எதிர்பார்த்திருக்க மகளோ இரண்டே கேள்விகளில் தோழியை நிலைகுலையச் செய்துவிட்டாள்.

அம்மா.. புக் ஃபேர்ல ஏம்மா நிறைய பேர் என் செஸ்டையே பார்த்தார்கள்? என்னை இடித்தவர்களும் அங்கேயேதான் இடித்தார்கள். எப்படி வலிச்சது தெரியுமா? என்றாள்.

ஒரு நிமிடம் வாயடைத்துப் போனாள் தோழி. 6-ம் வகுப்புக் குழந்தைக்கு நேர்ந்த அவலம் இது. அவர்களும் கூட இந்த தேசத்தில் ஆயிரம் மீ டூ புகார் சொல்ல வாய்ப்புகள் இருக்கின்றன.

ஒரு ஆண், வயது பேதம் பார்க்காமல் பெண்ணின் உடல் அங்கங்களை வெறித்துப் பார்ப்பது ஏன் என்று எப்படி அந்தக் குழந்தைக்கு புரியவைக்க முடியும்? ஆனால், இதை ஒரு பெண் குழந்தையிடம் விளக்கி தற்காப்பைச் சொல்லித் தருவதைவிட ஆண்களுக்கு உற்று உற்று ஒரு பெண் குழந்தையையோ பெண்ணையோ பார்ப்பது மனப் பிறழ்ச்சி என்பதைப் புரிய வைக்க வேண்டும்.

எல்லாம் ஹார்மோன் செய்யும் வேலை..

குழந்தைகள் பதின்ம வயதை எட்டும்போது ஆண், பெண் என இருபாலருக்கும் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆண் பிள்ளைகளுக்கு இயல்பாகவே பெண் உடல் மீது ஒரு வகை ஈர்ப்பு உண்டாகிறது. பெண்ணுக்குத் தன்னை எப்போதும் யாரோ கவனிக்கிறார்களோ என்ற எண்ணம் உருவாகிறது. அதனாலேயே பெண் பிள்ளைகள் சாதாரணமாக பள்ளி நாளில்கூட தங்களை கூடுதல் மெனக்கெடலுடன் பிரசன்டபிள் லுக் (Presentable look) என்ற ஒரு தோற்றத்துக்காக ஒப்பனை செய்து கொள்கின்றனர்.

 

 

ஹார்மோன் மாற்றத்தால் எதிர்பாலினத்தவர் மீது ஈர்ப்பு ஏற்படும் இந்தப் பருவம்தான் உடல் குறித்த புரிதலை பெரியவர்கள் இருபாலருக்குமே தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். பருவம் எய்திய பிறகு பெண்ணுக்கு மார்பகங்கள் வளர்கின்றன. அவளது இடுப்புப் பகுதியில் வளைவு நெளிவுகள் உருவாகின்றன. இது ஹார்மோன் மாற்றத்தால் மீசை முளைப்பை ரசித்துக் கொண்டிருக்கும் ஆண் பிள்ளைக்கு ஈர்ப்பை உண்டாக்குகிறது. ஒருவர் மீது ஒருவருக்கு ஏற்படும் ஈர்ப்பே பள்ளிப் பருவத்தின் பப்பி லவ் ஆக மலர்கிறது.

இங்குதான் பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களின் ஆலோசனையும் வழிநடத்தலும் அவசியமாகிறது. ஏனெனில் இத்தகைய பிராயத்தில் புதிதாய் அரும்பும் உணர்வுகளுக்கு சினிமா தூபம் போடும்.

இது குறித்து மனநல மருத்துவர் அசோகன் நம்மிடம் கூறியதாவது:

சினிமாவின் வெற்றியே காட்சிகள்தான். ஒரு திரையரங்கில் கன்ஃபைண்ட் சூழல் எனப்படும் ஒருவித அடைபட்ட இடத்திலிருந்து சில காட்சிகளைப் பார்க்கும்போது அது அவர்களின் மாய உலகுக்கு அழகிய தீனியாகிவிடுகிறது. பொதுவாக நாம் மனதில் ஏதாவது யோசித்தோம் என்றால்கூட அது மைக்ரோ மில்லி செகண்ட் விஷுவல் க்ளிப்பாகத்தான் ஓடும்.

 

 

அதுபோல் தன் மனதில் உள்ள சிறுசிறு ஆசைகளுக்கு சமமான காட்சிகளைத் திரையில் பார்க்கும்போது ஒரு ரசிகனாக தன்னை அந்த இடத்தில் பொருத்தி அடையாளம் (Identify) காண்கிறான். தனது கனவுகள், நம்பிக்கைகள், ஆசைகளுக்கு வடிவம் கிடைத்துவிட்டதாகப் பார்க்கிறான். இதுபோல் பல தனிநபர்களும் காட்சிகள் மீது நம்பிக்கை கொள்ளும்போது ஒரு படம் வெற்றியடைகிறது.

ஒரு திரைப்படத்தை 16 வயதில் பார்க்கும்போதும் 25 வயதில் பார்க்கும்போதும் 50 வயதில் பார்க்கும்போதும் வெவ்வேறு கோணங்களில் மனம் அணுகும்.

இத்தகைய வலிமையான சினிமாக்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும். அவை, பதின்பருவக் காதலை கொண்டாடினால் நிச்சயம் அதன் தாக்கம் சமூகத்தில் இருக்கத்தான் செய்யும்.

பார்வையாலேயே சீண்டிப் பார்க்கும் காட்சிகளை தாக்கம் அறியாமல் புகுத்தும்போது அது பாதிப்புகளை ஏற்படுத்தும்.

பெற்றோரின் பங்கு:

பதின்பருவப் பிள்ளைகளைப் பேணுவதில் பெற்றோருக்குத்தான் மிக அதிகமான பொறுப்பு இருக்கிறது. முதலில் பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேச வேண்டும். முன்பெல்லாம் கூட்டுக் குடும்ப கலாச்சாரம் இருக்கும். அப்போது பிள்ளைகள் தங்கள் வயது ஒத்த சகோதர சகோதரிகளிடமோ இல்லை வேறு உறவுகளிடமோ தங்களது உடல் ரீதியான உளவியல் ரீதியான சந்தேகங்களைக் கேட்டுத் தீர்த்துக் கொள்வார்கள். ஆனால், இப்போது அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இந்த சூழலில் பெற்றோர்கள் நண்பராக, உடன் பிறந்தவராக, உறவினராக பல பொறுப்புகளைக் கையாள வேண்டும்.

 

 

இளம் வயதில் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் இச்சை இயல்பானதே. ஆனால், அதைக் கட்டுப்படுத்த வேண்டும். அதன் அவசியம் என்ன என்பதை புரிய வைக்க வேண்டும். பாலுறவு சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பொருளாதார ரீதியாக தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்ட பின்னர்தான் காதலோ காமமோ இணங்க வேண்டும். இல்லாவிட்டால் அது தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தி வாழ்க்கை பாதையை சீரழித்துவிடும் என்பதை நிகழ் வாழ்வு உதாரணங்களைக் கொண்டு உணர்த்தலாம். அப்படி நாம் போதிய நேரத்தை பிள்ளைகளுடன் பேசச் செலவிடவில்லை என்றால் அவர்கள் பேசுவதற்கு ஒரு ஆளைத் தேர்ந்தெடுப்பார்கள். அப்புறம் அவர்கள் காட்டும் பாதையில் செல்வார்கள். சில நேரம் அது விபரீதமாகக் கூட அமையலாம் எனவே மனம் திறந்து பேசுங்கள் என்பதே மருத்துவர் அசோகனின் ஆலோசனையாக உள்ளது. பாலியல் கல்வி பள்ளியில் சொல்லி புரிய வைப்பார்கள் என்று காத்திருப்பதைக் காட்டிலும் வீட்டிலேயே சொல்லி விளங்கவைத்தல்தான் எளிமையானது.

ஒரு மெல்லிய கோடு

காதலுக்கும் காமத்துக்கும் ஒரு மெல்லிய கோடுதான். காமத்தில் முடியாத காதல் இருக்கவே இயலாது. அதனால் காதல் என்பதைத் தாண்டி திருமண பந்தமானது சமூக அங்கீகாரத்துடனான தாம்பத்யத்துக்குத் தேவையானதாக இருக்கிறது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் காதல் என்பது காமத்துக்கான ஒரு போர்வையாகிவிட்டது.

குடும்பம் என்பது சுமையாகப் பார்க்கப்படுவதால் இன்று லிவிங் டூ கெதர் உறவையும் கடந்த polyamory என்ற ஒரு உறவுப் பழக்கம்கூட வந்துவிட்டது. அதாவது வயது வந்த நபர்கள் ஒருவொருக்கொருவர் முழு சம்மதத்துடனேயே பல்வேறு நபர்களுடன் உறவு கொள்வதே இப்படி அழைக்கப்படுகிறது.

 

இப்படி உறவுகள் இன்று திரிந்து புதிது புதிதாக பரிணாமம் பெறும்போது ஆரோக்கியமான உறவு முறையை ஆரம்பத்திலேயே உணர்த்திவிட்டால் பாலியல் உணர்வுகளை பதின் பருவத்தில் இருந்தே கையாளல் கற்றுக் கொடுத்துவிட்டால் பார்வையால் உரச மாட்டார்கள், பார்க்காமல் சென்றால் அடிடா அவளை என்று வெறி கொள்ளவும் மாட்டார்கள்.

சர்வே சொல்வது என்ன?

ஆக்‌ஷன் எய்ட் என்ற லண்டனிலிருந்து இயங்கும் அமைப்பு ஒன்று 2016-ல் சர்வதேச அளவில் தெருக்களில், சாலைகளில் பெண்கள்மீது பாய்ச்சப்படும் வக்கிரப் பார்வை குறித்து ஒரு சர்வே எடுத்தது. அந்த சர்வேயில் லண்டன் நகரங்களில் வாழும் 75% பெண்கள், தாய்லாந்தில் 86% பெண்கள், பிரேசிலில் 89% பெண்கள், இந்தியாவில் 79% பெண்கள் சாலையோரங்களில் சபல புத்திக்காரர்களால் பாதிக்கப்படுவதாகத் தெரியவந்தது.

ஒரு சிறுமியோ, இளைஞியோ அல்லது நடுத்தர வயதுப் பெண்ணோ சாலையில் இறங்கி நடக்கிறாள். அவளைப் பார்த்து அவள் அறிந்திராத ஆண் ஒருவன் ஆபாசமாக சமிக்ஞை செய்கிறான். அருவருப்பாக பேசுகிறான் அல்லது ஓசை எழுப்புகிறான். அந்தப் பெண்ணிடம் உடனே எதிர்வினையாற்ற இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று அவனைக் கண்டுகொள்ளாமல் செல்வது. இன்னொன்று ஏதாவது திட்டிச் செல்வது. இணைய உலகில் ஒருபடி மேலே சென்று சில பெண்கள் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து ஷேமிங் என்ற முறையைக் கையாள்கின்றனர்.

தெருக்களில் பெண்கள் பார்வையால் உரசப்படுவது பற்றி 1993-ல் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் சிந்தியா கிரான்ட் போமேன் என்ற பெண் Street Harassment and the Informal Ghettoization of Women  (Harvard Law Review, Vol. 106, January 1993) ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

ஆனால், இப்போது 2018-ம் ஆண்டும் அதே பிரச்சினையைப் பற்றி தினம் தினம் உலகின் ஏதாவது ஒரு மூளையில் யாரேனும் பேசவோ எழுதவோ செய்ய வேண்டியுள்ளது.

காரணம், இன்னமும் அடிப்படையில் ஆண்கள் பெண்களை மலராக, அழகான ஓவியமாக, 50 கேஜி தாஜ்மஹாலாகவே கொண்டாடுகின்றனர். அதனால் தொடுவதும், பார்ப்பதும் அவர்களுக்கு அத்துமீறலாகவே தெரியவில்லை. பெண் என்பவளை சக மனிதியாகப் பார்த்துப் பழகும்போதுதான் பார்வையால் உரசும் விரசம் ஒழியும்.

- பேசித் தீர்ப்போம்

தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x