Published : 16 Dec 2018 02:44 PM
Last Updated : 16 Dec 2018 02:44 PM
குமரிக்கடலில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, பெரியார், அண்ணா தொடங்கி பல தேசியத் தலைவர்கள், திராவிட இயக்கத் தலைவர்கள், கம்யூனிஸ்ட் தலைவர்கள் என தமிழகம் முழுக்க உயர்ந்து நிற்கும் பல சிலைகள் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் எண்ணத்தில் உதித்தவை. கட்சி வேறுபாடு, கருத்து மாறுபாடு, கொள்கை முரண்களைக் கடந்து தமிழுக்கு, தமிழ்நாட்டுக்கு என உழைத்த பல தலைவர்களை தமிழர் மரபின் பகுதியாக மாற்றும் வகையில் சிலை அமைத்தவர் கருணாநிதி.
தமிழகத்தில் சிலைகளுக்கான தனித்த வரலாற்றில், கருணாநிதியின் பங்கு முக்கியமானது. இன்றைக்கு அவருடைய சிலையை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார்.
கருணாநிதி அமைத்த சிலைகளுக்கு மட்டுமல்ல, அவரின் வெண்கல சிலையை செய்த சிற்பி தீனதயாளனுக்கும் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு உண்டு. தமிழகத்தின் முக்கியமான சிலைகளை செய்தவர் சிற்பி எஸ்.பி.பிள்ளை. அவரது பேரன் தான் தீனதயாளன். தமிழகத்தில் சிற்பக்கலையில் சிறந்து விளங்கிய தாத்தா-பேரன் வரலாற்றை அறிய சிற்பி தீனதயாளனிடம் பேசினோம்.
"எனக்கு கலைஞரின் சிலை செய்ய வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காதா என்ற குழப்பத்தில் தான் இருந்தேன். அவர் சிலையை செய்ய பல சிற்பிகள் போட்டியிடுவாங்கன்னு தெரியும். இருந்தாலும் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தேன். ஆகஸ்ட் இறுதியில் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது", என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் தீனதயாளன். தமிழகத்தின் புகழ்பெற்ற பல சிலைகளை அமைத்த தீனதயாளன் பத்தாம் வகுப்பு முடித்தவுடன், தாத்தாவின் கம்பெனியிலேயே சிலை அமைக்கும் கலையைக் கற்று 40 ஆண்டுகளாக மேலாக சிலைவடிக்கும் பணியில் இருக்கிறார்.
"1966-ம் ஆண்டில் அண்ணா சாலையில் அமைக்கப்பட்ட அண்ணா சிலை, மயிலாப்பூரில் திருவள்ளுவர் அமர்ந்த நிலையில் உள்ள சிலை, நாகர்கோயிலில் அண்ணா திடலில் அமைக்கப்பட்ட ஜீவானந்தம் சிலை உள்ளிட்ட பல சிலைகளை திமுக ஆட்சிக் காலத்தில் என் தாத்தா அமைத்தார். தமிழ்நாடு முழுக்க அண்ணாவின் மார்பளவு சிலைகளை வைக்க வாய்ப்பு வழங்கினார். அஞ்சுகத்தம்மாள் சிலை என் தாத்தா செய்தது தான். திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் முக்கிய சிலைகள் அமைக்கும் வாய்ப்பு கலைஞர் மூலமாக எங்களுக்கு கிடைக்கும். அண்ணா சாலையில் வைப்பதற்காக அண்ணா சிலை செய்வதற்கான வாய்ப்பு வேறொருவருக்கு சென்றது. அதேசமயத்தில், மாநகராட்சி சார்பாக செய்ய வேண்டிய அண்ணா சிலைக்கு சிற்பி எஸ்.பி.பிள்ளைக்கு டெண்டர் விடப்பட்டிருந்தது. மாநகராட்சிக்காக எங்கள் தாத்தா செய்த சிலையை அண்ணாவை அழைத்து வந்து காட்டினார் கலைஞர். அது மிகவும் தத்ரூபமாக இருப்பதாக அண்ணா பாராட்டினார். அந்த சிலையையே அண்ணா சாலையில் வைக்கவும் 'ஓகே' செய்தார்" என தீனதயாளன் தன் தாத்தாவின் வரலாற்று பக்கங்களை திரும்பி பார்க்கிறார்.
முதன்முதலாக கருணாநிதிக்கு திராவிடர் கழகம் சார்பில் சிலைவைக்கப்படும் என பெரியார் அறிவித்தார். பெரியார் மறைவுக்குப் பிறகு மணியம்மையார் அச்சிலையை அமைத்தார். அந்த சிலையை வடிவமைத்ததும் சிற்பி எஸ்.பி.பிள்ளை தான். அண்ணா சாலையிலிருந்த அந்த சிலை எம்ஜிஆர் இறந்தபோது உடைக்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் உருவாக்கப்பட்ட 7 அடியளவில் கருணாநிதியின் சிலையை தீனதயாளன் வடிவமைத்துள்ளார். அந்த சிலை 'விடுதலை' அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி மறைந்தபிறகு, ’பெரியாரால் நிறுவப்பட்ட கலைஞரின் சிலை மீண்டும் திறக்கப்படும்’ என திராவிடர் கழகத்தலைவர் வீரமணி அறிவித்தது நினைவுகூறத்தக்கது.
1991 இல் அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்ட அண்ணா சிலை, அண்ணா நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள மார்பளவு அண்ணா சிலை, 'முரசொலி' அலுவலகம் மற்றும் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள முரசொலி மாறன் சிலை, சென்னை மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சிங்காரவேலர் சிலை, காமராஜர் நினைவிடத்தில் உள்ள காமராஜர் சிலை என தமிழகத்தின் மிக முக்கியமான சிலைகள் தீனதயாளனின் கை வண்ணம் தான். திருக்குவளை மற்றும் கோபாலபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் தந்தை முத்துவேலர் சிலையும் தீனதயாளன் செய்தது தான்.
"மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை வைப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. அதன்பிறகு, நான் செய்த கண்ணகி சிலையை கலைஞர் அன்பகத்தில் வைத்தார். அப்போது பாராட்டி அவர் கையெழுத்திட்ட மோதிரத்தை வழங்கினார்" என மகிழும் தீனதயாளன் "1982 இல் தாத்தா இறந்தவுடம் கொஞ்சம் கொஞ்சமாக கற்று 1987 இல் தான் முதல் சிலையை செய்தேன். நாகர்கோயிலில் செய்த சிலை ஒன்றுக்காக எனக்கு மரியாதை செய்வதற்கான நிகழ்ச்சிக்கு நான் செல்லவில்லை.
அப்போது என்னைப் பற்றி கலைஞர் விசாரிக்கவே நான் எஸ்.பி.பிள்ளையின் பேரன் என்பது தெரியவந்திருக்கிறது. அதனை மனதில் வைத்து 1991 இல் அறிவாலயத்தில் அமைக்க அண்ணா சிலை செய்யும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. அதற்காக கோபாலபுரத்தில் முதலாவதாக கலைஞரிடம் பேசினேன். அப்போது ’சிலைய சிறப்பா செய்யணும், நீ நல்லா வருவ’ என வாழ்த்தினார்" என கருணாநிதியுடனான தன் நினைவுகளைப் பகிர்கிறார்.
இன்றைக்கு திறக்கப்படும் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி பார்வையிட்டார். "சிலையை பார்த்த அந்த கணம் அவரது கண் லேசாக கலங்கியது. சிலை எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை நுணுக்கமாக ஆராய்ந்தார். திருத்தங்கள் சொன்னார். கலைஞர் பயன்படுத்தும் பேனாவையே சிலைக்கும் வைத்தேன். உயர்த்திய கை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை கூட கூறினார். அவர் கையை உயர்த்தி இருப்பதுபோல் வடிவமைக்க வேண்டும் என்பது கூட அவரது எண்ணம் தான். "அண்ணா சிலையை விட உயரவும் கூடாது, குறையவும் கூடாது, நிகராக இருக்க வேண்டும்" என்று கூறினார்.
தலைவர் அண்ணா மீது வைத்திருந்த பற்றை உணர்த்துவதாக சிலை இருக்க வேண்டும் என கூறினார்" என்கிறார் தீனதயாளன். கருணாநிதியின் சிலையை செய்ய தீனதயாளனுக்கு இரண்டு மாதங்களாகியிருக்கிறது. 64 வயதான தீனதயாளனுக்கு 10 பணியாளர்களும் இந்த சிலை அமைப்பதில் பங்காற்றியுள்ளனர். அத்துடன் அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணாவின் சிலையையும் இவர் புணரமைத்துள்ளார்.
கருணாநிதி தமிழகம் எங்கும் சிலைகள் அமைப்பதில் எவ்வளவு அக்கறை கொண்டவர் என்பதை கூறிய தீனதயாளன், "மன்னர் ராஜராஜ சோழன் சிலை செய்யப்பட்ட போது அவர் எப்படி இருப்பார் என அவர்தான் டிசைன் செய்தார். கண்ணகியின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும், எப்படி பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டிருப்பார் என்ற உருவகத்துடன் ஆலோசனைகளை சொல்வார். அரசாங்கம் மூலம் சிலை அமைக்கப்பட்டாலும் கலைஞர் நேரடியாக வந்து பார்வையிடுவார். எவ்வளவோ வேலைகள் இருந்தாலும், மீஞ்சூரில் உள்ள பணிக்கூடத்திற்கு வந்து பார்வையிடுவார். வலியவர் எளியவர் பார்க்காமல் பழகுவார். "என்னய்யா வாயா, போயா" என இயல்பாக பேசுவார்.
அவையெல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள். எங்களுக்கு பல வாய்ப்புகளை வழங்கியது கலைஞர் தான். ஆரம்பத்தில் எங்கள் திறமையைக் கண்டு வாழ்வில் வெளிச்சத்தை பாய்த்தது அவர் தான். அவர் சிலையை செய்ததை அவருக்கு நன்றி செலுத்தும் விதமாகவே பார்க்கிறேன். என் பிறவிப் பயனை அடைந்து விட்டது போன்று உணர்கிறேன்" என்கிறார் உளப்பூர்வமாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT