Published : 29 Dec 2018 10:20 AM
Last Updated : 29 Dec 2018 10:20 AM
ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டாவது ஆண்டிலேயே பிரதமர் நரேந்திரமோடி மிகவும் பெருமையுடன் 2015 ஆம் ஆண்டு அறிவித்த திட்டம் 'எல்லோருக்கும் வீடு திட்டம்', அதாவது, 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்'. நகர்ப்புறம், கிராமப்புறம் என இரு பிரிவுகளாக செயல்படுத்தப்படும் இந்த திட்டம் தற்சமயம் எந்த நிலைமையில் உள்ளது, குறிப்பிட்ட இலக்கை குறித்த காலகட்டத்தில் அடைய முடியுமா, தரவுகள் சொல்வது என்ன, தமிழகத்தில் இந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு 3 ஆண்டுகளை கடந்த நிலையில் ஒருமுறை அலசி பார்ப்போம்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் (நகர்ப்புறம்):
ஆவாஸ் யோஜனா திட்டப்படி, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர் (ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்கும் மிகாமல்), குறைந்த வருவாய்ப் பிரிவினர் (ஆண்டு வருமானம் 3 லட்சம்-6 லட்சம் வரை) இத்திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர். அதே நேரத்தில்,நடுத்தர வருமான பிரிவினர் - 1 (ஆண்டு வருமானம் 6 லட்சம் - 12 லட்சம் வரை), நடுத்தர வருமான பிரிவினர் - 2 (12 லட்சம் - 18 லட்சம் வரை) ஆகியோரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.
மேற்கண்ட பிரிவினர் அனைவருக்கும் சிஎல்எஸ்எஸ் (Credit Linked Subsidy Scheme) எனப்படும் கடனோடு இணைந்த வட்டி மானியம் என்கிற வட்டிச் சலுகையை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. வீட்டுக் கடன் எப்படி பெறுவோமோ அதே நடைமுறைதான் இந்த சலுகையை பெறவும் கடைபிடிக்கப்படுகின்றன. பொதுத்துறை, தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் என, வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலமாக இச்சலுகையை பெற முடியும். 6.5% என்ற வட்டி மானியத்தில் 6 லட்சம் வரை இதன் கீழ் கடன் பெற முடியும். இக்கடனை 20 ஆண்டுகள் வரை செலுத்தலாம்.
இத்திட்டத்தின்படி, 2022 ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடியே 20 லட்சம் வீடுகள் கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்தது. தரச்சான்று நிறுவனமான கிரிசில் ரேட்டிங் அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த நவம்பர் 23, 2018 வரை, இத்திட்டத்தின் கீழ் 63 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அவற்றுள் 23 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வரும் நிலையில், 12 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஆந்திர பிரதேசம், உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் 55% வீடுகளை பெற்றுள்ளதாக கிரிசில் தெரிவித்துள்ளது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் (கிராமப்புறம்):
2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின்படி, 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்திய கிராமங்களில் ஒரு கோடியே 2 லட்சம் வீடுகள் கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், மத்திய ஊரக வளர்ச்சி துறையின் இணையத்தில் உள்ள தகவலின்படி, இத்திட்டத்தின் கீழ், கடந்த டிசம்பர் 13 வரை 60.90 லட்சம் வீடுகள் தான் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகள் 25 ச.மீட்டர் பரப்பளவுடையது.
தமிழகத்தில் எப்படி செயல்படுத்தப்படுகிறது?
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை செயல்படுத்துவதில் குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக தமிழகம் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உண்மையில் தமிழ்நாட்டில் இத்திட்டம் சரிவர செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து அறிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் எஸ்.கிருஷ்னனிடம் பேசினோம். அவரிடம் பேசியதிலிருந்து:
"பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகும். அந்த திட்டம் நான்கு பிரிவுகளாக செயல்படுத்தப்படுகிறது. முதலாவதாக, பயனாளிகள் தாங்களே வீடு கட்டிக்கொள்ளவும் பழைய வீட்டைப் புனரமைத்துக்கொள்ளவும் அரசே நேரடியாக மானியம் வழங்கும் பிரிவில் (Beneficiary-led individual house construction)தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இந்த பிரிவில் 10 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த பிரிவில் பயனாளிகள் தனித்தனி வீடுகளை அவர்களே கட்டிக்கொள்வர்.
இரண்டாவது, ஒரு குறிப்பிட்ட கட்டுமானத் திட்டத்தில் 35 சதவீத வீடுகள் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு வழங்கப்படும். அவர்களுக்கு மானியம் வழங்கப்படும். (Affordable housing in partnership with public or private sector). இதன்கீழ் ஒப்புதல் பெற்று 86,000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
மூன்றாவது, நகரத்தில் உள்ள குடிசைப் பகுதிகளை அகற்றிவிட்டு, அங்கு வசித்தவர்களுக்கு மாற்றுக் குடியிருப்புகளைக் கட்டும் பொறுப்பைத் தனியார் கட்டுமான நிறுவனங்களிடம் ஒப்படைப்பது. குடிசைப் பகுதியில் வசித்தவர்களுக்கு உயரமாகக் கட்டப்படும் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மாற்று வீடுகள் வழங்கியது போக, எஞ்சியிருக்கும் வீடுகள் பொதுச் சந்தையில் விற்பனை செய்யப்படும் அல்லது வணிகப் பயன்பாடுகளுக்கு அனுமதிக்கப்படும் (In-situ" Slum redevelopment ). இந்த பிரிவின் கீழ் தமிழகம் எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளவில்லை. மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இது அதிகம் செயல்படுத்தப்படுகிறது.
நான்காவது, சிஎல்எல்எஸ் (Credit Linked Subsidy Scheme) - இதில் வட்டி சலுகை கிடைக்கும். தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த பிரிவில் வங்கிகள் மூலம் நேரடியாகவே செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசிடமிருந்து வங்கிகளுக்கு நேரடியாக நிதி சென்றுவிடும். இதன்கீழ் தமிழ்நாட்டில் செயல்பாடு அதிகம் இல்லை. அதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். வங்கிகள் மூலம் செயல்படும் மற்ற திட்டங்கள் தமிழ்நாட்டில் நன்றாக செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், இதில் அவ்வாறு இல்லை என்பதால் ஆராய்ந்தோம். சில காரணங்கள் தெரியவந்திருக்கிறது", என எஸ்.கிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும், இந்த திட்டங்களுக்கு தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்குவது எப்படி உள்ளது எனக்கூறிய எஸ்.கிருஷ்ணன், "பயனாளிகள் தாங்களே வீடு கட்டிக்கொள்ளும் திட்டத்தில் ஒரு பயனாளிக்கு ரூ.2.1 லட்சம் நிதி கிடைக்கிறது. இந்த பிரிவில் நிதி சரியாக வருகிறது. உடனடியாக மத்திய அரசிடமிருந்து வாங்கி பயணாளிகளுக்கு கிடைக்கும் வகையில் உள்ளது. கடந்தாண்டு இத்திட்டத்திற்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டதால் சில பிரச்சினைகள் இருந்தன. இந்தாண்டு நிலைமை சீராக இருக்கிறது.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு வழங்கப்படும் மானியம் திட்டத்தில் ஒரு வீட்டுக்கு ரூ. 1.5 லட்சம் மத்திய அரசு கொடுக்கிறது. பல அடுக்குமாடி கட்டிடம் கட்டினால் ரூ.11 லட்சம் வரை செலவாகின்றது. 3-4 அடுக்கு என்றால் 7.5-8 லட்சம் ரூபாய் வரை செலவாகின்றது. முன்பு ராஜீவ் ஆவாஸ் யோஜனா திட்டம் இருந்தபோது 40-50 சதவீதம் செலவு தொகையை மத்திய அரசு தந்தது. இப்போது அந்த நிதியுதவி கிடைக்காததால் சிரமங்கள் உள்ளன. அதனால், மீதம் தேவைப்படும் நிதியை மாநில அரசு திரட்ட வேண்டிய நிலை உள்ளது. அதனால் உலக வங்கி மூலமாக 35,000-40,000 வீடுகள் கட்ட மாநில அரசு நிதியுதவி மூலமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆசிய வளர்ச்சி வங்கி மூலமாகவும் ஒரு திட்டத்தை செயல்படுத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. நிர்வாக இயக்குநர், செயல் பொறியாளர்கள் என அனைத்து அதிகாரிகளும் இத்திட்டத்தைக் கண்காணிக்கின்றனர்" என எஸ்.கிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் 13 லட்சத்து 94 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. விண்ணப்பித்தவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியுடையவர்களா என்பதை பொறுத்து அவர்கள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற முடியும் என, எஸ்.கிருஷ்ணன் கூறினார்.
இலக்கு எட்டப்படுமா?
'அனைவருக்கும் வீடு' திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் அதிகம் பேசப்பட்ட பெருமைப்படும் திட்டம். ஆனால், இந்த திட்டம் மத்திய அரசு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றப்படுமா என்பது சந்தேகத்துக்குரியது என்ற முரண்பட்ட தகவல்களும் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற மேற்பார்வை கமிட்டி இத்திட்டம் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வின் அறிக்கையில், "இத்திட்டத்தின் மொத்த செலவு தொகை ரூ.2.04 லட்சம் கோடியில் ரூ.57,699 கோடி மத்திய அரசின் பங்கு ஆகும். ஆனால், அதில், ரூ.26,162 கோடியை விட குறைவான தொகையையே மத்திய அரசு விடுவித்துள்ளது" என தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த திட்டத்தின் செயல்பாடு மிகவும் ஏமாற்றகரமானதாக உள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், நகர்ப்புற வளர்ச்சிக்காக பாஜக அரசு அறிவித்த மற்ற திட்டங்களான ஸ்மார்ட் சிட்டி திட்டம், அம்ருத் திட்டம் ஆகிய திட்டங்கள், ஜூன் 25, 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் சரிவர நிறைவேற்றப்படவில்லை என கவலை தெரிவித்துள்ளது.
இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 70,000 வீடுகள் நிலுவையில் உள்ளன என்பதையும் இங்கே தெரிவிக்க வேண்டும்.
நாடாளுமன்ற மேற்பார்வை கமிட்டி அளித்த அறிக்கை முடிவுகளை பரிசோதித்து, தகுதியான பயனாளிகளை இத்திட்டம் சென்றடைய வேண்டும். திட்டம் அறிவிக்கப்பட்டபோது இருந்த வேகம், செயல்பாட்டில் இல்லை என்பதையும், இலக்கை அடைவதில் வேகம் குறைவாக இருக்கிறது என்பதையுமே மேற்கூறிய செய்திகள் நமக்கு தெரிவிக்கின்றன. இவற்றை ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT