Published : 20 Nov 2018 01:19 PM
Last Updated : 20 Nov 2018 01:19 PM

பறிபோன தென்னம்பிள்ளைகள்; நொடிந்த நூறாண்டு வாழ்வாதாரம்: கதறும் விவசாயிகள்

கடந்த வாரம் கரை கடந்த 'கஜா' புயல் தென்னை விவசாயிகளின் 15 ஆண்டுகால உழைப்பையும், அடுத்த 100 ஆண்டுகால வாழ்வாதாரத்தையும் தன்னுடன் எடுத்துக்கொண்டு சென்று விட்டது. வெள்ளம், வறட்சி, காவிரி இழுபறி அரசியல்களுக்குள் சிக்கித் தவித்த டெல்டா விவசாயிகள், இப்போது 'கஜா' புயலின் கோரத்தாண்டவத்தால் தென்னந்தோப்பில் சாய்ந்து விழுந்திருக்கும் தென்னை மரங்களின் மீதமர்ந்து கண்ணீருடன் தவிக்கிறார்கள். இதற்கிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தென்னை விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2 லட்சத்து 64 ஆயிரத்து 600 இழப்பீடு அறிவித்துள்ளார்.

தென்னை விவசாயம் நெல் உள்ளிட்ட பயிர்களைப் போன்ற விவசாயம் அல்ல. அந்தந்த ஆண்டுகளுக்கு உழைத்து, அந்தந்த ஆண்டுகளிலேயே பலனோ - நஷ்டமோ அடைய முடியாது. தென்னை மர விவசாயிகள் பலனை அனுபவிக்கவே 10-15 ஆண்டு உழைப்பைக் கொடுக்க வேண்டும். உண்மையில் 'கஜா' புயல் தென்னை விவசாயிகளிடம் இருந்து எதனை எடுத்துச் சென்றுள்ளது, அரசு நிவாரணம் அறிவிப்பதற்கு முன்னர் என்னென்ன விஷயங்களை மனதில் வைத்திருக்க வேண்டும், அவர்களுக்கு உடனடி நிவாரணம் என்ன, நீண்டகால நிவாரணமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தஞ்சை மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த சில விவசாயிகளிடம் பேசினேன்.

அவர்கள் அனைவரும் இரண்டு விஷயங்களை ஒற்றுமையுடன் சொல்கின்றனர். ஒன்று "எல்லாமே போயிட்டது, நாங்கள் பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்" என்பது. மற்றொன்று "அரசியல்வாதிகள், அதிகாரிகள் யாரும் வரவில்லை" என்பது.

தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் தென்னை விவசாயம் தான் பிரதானம். அதிலும் பேராவூரணியில் 95% மக்களின் வாழ்வாதாரம் தென்னை விவசாயத்தைச் சார்ந்ததுதான்.

பேராவூரணியில் உள்ள சேதுபாவசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், குருவிக்கரம்பை, நாடியம், மருங்கப்பள்ளம், கொரட்டூர், கழனிவாசல், நாடியம்  உள்ளிட்ட பல கிராமங்களில் தென்னை தான் வாழ்வாதாரம்.

குருவிக்கரம்பை கிராமத்தைச் சேர்ந்த தென்னை விவசாயி கோவிந்தராஜூ என்பவரிடம் பேசினேன். "இங்கு 99% தென்னை விவசாயம் தான். ஆயிரத்து 500 குடும்பங்கள் உள்ளன. ஒரு வீட்டுக்கு 10 ஏக்கர் என்ற அளவில் தென்னை விவசாயம் நடைபெறும். சுமார் 2 லட்சம் தென்னை மரங்கள் இருக்கும். எங்கள் பகுதியில் வெயிலின் தாக்கமே தெரியாது. சோலைவனம் போன்று இருக்கும். இப்போது பாலைவனம் போலாகிவிட்டது. 99 சதவீதம் தென்னை மரங்கள் சேதமாகிவிட்டன. மீதமுள்ள ஒரு சதவீதம் கூட காய்ப்பு இல்லாத மரங்கள் தான். அதனால் இனி பயன் கிடையாது" என்கிறார், கோவிந்தராஜூ.

பி.எஸ்.சி பட்டப்படிப்பு படித்திருக்கும் கோவிந்தராஜூ, பாரம்பரியமாக 15 ஏக்கரில் தென்னை விவசாயம் செய்துள்ளார். அவரைப் போன்று அந்தப் பகுதியில் பட்டப்படிப்பு படித்த பலரும் வேறு வேலைக்குச் செல்லாமல் விவசாயம் செய்து வருவதாகக் கூறுகிறார்

"தென்னை மரம் பாலை விடுவதற்கு 5 வருடங்கள் ஆகும். 10 வருடங்களில் தான் பலன் கிடைக்கும். 15 ஆண்டுகளுக்குப் பிறகு தான் அது நிலைத்த (sustained) மரமாகும். அதன்பிறகு வரும் 70-100 ஆண்டுகளுக்கு தென்னை தான் எங்களின் வாழ்வாதாரம்", என குரல் தேய்ந்த குரலில் கூறும் கோவிந்தராஜூக்கு மட்டுமே கிட்டத்தட்ட ஆயிரத்து 500 மரங்கள் நாசமாகியுள்ளன.

ஒரு ஏக்கருக்கு 70 மரங்கள் என்பது அரசின் கணக்கு. ஆனால், ஏக்கருக்கு 90-100 மரங்கள் இருக்கும் என்பதே அங்குள்ள விவசாயிகள் நம்மிடம் கூறுவது. குருவிக்கரம்பை கிராமத்தில் மட்டுமே 2 லட்சம் தென்னை மரங்களுக்கு மேல் நாசமாகியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் நகரத்திற்கு மட்டுமே மின்சாரம் சரிசெய்யப்பட்டுள்ளதால், தமிழக அரசு அறிவிக்கும் நிவாரணங்கள் என்ன என்பது கூட பல விவசாயிகள் அறிந்திருக்கவில்லை.

"நாங்கள் தஞ்சையின் தென்பகுதி கடைசி. காவிரி கடைமடைப் பகுதி. ஏற்கெனவே காவிரி நீர் திறந்துவிட்டாலும், எங்களுக்கு கடைசியாகத்தான் கிடைக்கும். இப்போது, அரசின் நிவாரணங்களும் கடைசியாகத்தான் கிடைக்கும் போல. ஜெனரேட்டர்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்தேக்கத்தில் தண்ணீர் ஏற்றுகின்றனர்" என்கிறார் கோவிந்தராஜூ.

தென்னை விவசாயத்தைப் பொறுத்தவரை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை காய்களை வெட்டி விடுகின்றனர். ஏக்கருக்குப் பொதுவாக 3,000 காய்கள். அன்றைக்கு விலைவாசியைப் பொறுத்து, சராசரியாக செலவுகள் போக 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை வருவாய் கிடைக்கும் என்கின்றனர் விவசாயிகள்.

கடந்த ஆண்டு வறட்சியால் தண்ணீருக்கே அதிக செலவு செய்துள்ளனர் தென்னை விவசாயிகள். தென்னை மரங்களுக்கு வாரம் ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை ரசாயண உரத்திற்கே செலவிட வேண்டும்.

விவசாயி கோவிந்தராஜூ வங்கிக் கடன், தனிநபர் கடன் என 5-10 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார். அவரைப்போன்றே பல விவசாயிகளின் நிலைமையும் உள்ளது.

பேராவூரணியைப் பொறுத்தவரையில் இளநீர் வியாபாரம் அதிகம் இல்லை. தென்னை சார்ந்து 10க்கும் மேற்பட்ட உபதொழில்களே பிரதானம். பேராவூரணி, பட்டுக்கோட்டை தேங்காய் கொப்பரை பிரபலமானது. தேங்காய் மட்டை, நார் என அனைத்தும் பயன் தரக்கூடியவை தான்.  நார் கழிவிலிருந்து பித்து என்கிற தேங்காய் நார் பஞ்சு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன் மூலம் அரசுக்கும் வருவாய் தான்.

பேராவூரணி விவசாயிகள் பலர் நெல் விவசாயத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னர் தென்னை விவசாயத்திற்கு மாறியுள்ளனர். வறட்சி தாக்குதல், விவசாய கூலிப் பிரச்சினைகள் காரணமாக தென்னை விவசாயத்திற்கு மாறியுள்ளனர். இந்தப் பாதிப்பிலிருந்து தாங்கள் மீள 10-15 ஆண்டுகள் வரை ஆகும் என்கின்றனர் விவசாயிகள்.

அதே குருவிக்கரம்பையைச் சேர்ந்த விவசாயி கோமதி, தென்னை மரங்களை இழந்தது பெற்ற பிள்ளைகளை இழந்தது போல உள்ளது என கண்ணீர் வடிக்கிறார்.

"நாங்கள் நெல்லை 10 ஏக்கரிலும் தென்னையை 15 ஏக்கரிலும் விவசாயம் செய்தோம். மொத்தமும் காலியாகிவிட்டது. மீதம் நிற்கும் தென்னை மரங்களும் நாசமாகி விட்டன. தென்னையைப் பொறுத்தவரை உடனடி லாபம் இல்லை. ஆனால், நிலைத்த தென்னை மரம் அடுத்து வரும் 70 ஆண்டுகளுக்கு வாழ்வாதாரம். எங்கள் முன்னோர் நட்ட மரங்களும் போய்விட்டன. ஒவ்வொரு தோப்பின் சேதத்தைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. எல்லோரும் வந்து விசாரிக்கிறார்கள். தென்னை இல்லாத ஊரைப் பார்க்கும் எல்லோரும் கதறி அழுகிறார்கள். மனசு ஜீரணிக்கவில்லை. மரணத்தை விட கொடுமையானது, மோசமானது. மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும். கடன் வாங்கிப் படிக்க வைத்திருக்கிறோம். அந்தக் கடனை எப்படி அடைப்பது?" என்கிறார், கோமதி.

கோமதிக்கு 10 ஏக்கரில் பயிரிட்டிருந்த நெற்பயிரும் நாசமாகிவிட்டது. நெல் நடவு செய்தே 15-20 நாட்கள் தான் ஆகியுள்ளன. அவற்றுக்குச் செலவு செய்த 1.15 லட்சமும் அவருக்கு இழப்பாகியுள்ளது.

தென்னை மரங்கள் வீழ்ந்தது ஒருபுறம் ஆறாத ரணத்தைக் கொடுக்க அவற்றை எப்படி அப்புறப்படுத்துவது எனத் தெரியாமல் தவிக்கின்றனர் விவசாயிகள்.

"இதை எப்படி அப்புறப்படுத்துவது என்றே தெரியவில்லை. அதிகாரிகள் வருவார்கள் என்கிறார்கள். ஆனால், எங்களுக்கு நம்பிக்கையில்லை. இருக்கும் தேங்காய்களை என்ன செய்வது? இன்னும் தோப்பு சேறும் சகதியுமாக இருப்பதால், இறங்க முடியவில்லை. இன்னும் எந்த அதிகாரிகளும் வந்து பார்க்கவில்லை. எந்த ஊருக்கும் போகவில்லை என்று சொந்தக்காரர்கள் சொல்கின்றனர். இந்த தென்னை மரங்களை அப்புறப்படுத்தி கொடுத்தாலே அரசு எங்களுக்குச் செய்யும் பெரிய ஆறுதல்" என்கிறார். கோமதி.

10-15 ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிகளின் நிலைமை இப்படியிருக்க 5 ஏக்கர் வைத்திருக்கும் சிறு விவசாயிகள், அதனை நம்பியிருந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது என்கின்றனர் விவசாயிகள்.

அவசரத் தேவைகளுக்கு பெரும் தொகை தேவைப்படும்போது தென்னந்தோப்பை காட்டித்தான் கடன் பெறுவார்கள். இப்போது கடன் வாங்கவும் முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

நெல் உள்ளிட்ட பயிர் வகைகளுக்கே காப்பீடு குறித்த விழிப்புணர்வு குறைவுதான். இந்நிலையில், தென்னை மரத்திற்கு காப்பீடு குறித்த விழிப்புணர்வு இல்லை என்கிறார் பேராவூரணியைச் சேர்ந்த விவசாயி நீலகண்டன்.

"10 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்திருக்கிறோம். கிட்டத்தட்ட 200 மரங்கள் நாசமாகிவிட்டன. தென்னை மரம் சம்பந்தமாக எந்த அதிகாரிகளும் வரவில்லை. தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்யலாம். ஆனால், அதுகுறித்த விழிப்புணர்வு இல்லை. யாரும் காப்பீடு செய்யவில்லை.  அமைச்சர் விஜயபாஸ்கர் பாதிப்புகளே இல்லை என பேட்டி கொடுத்திருப்பது அரசின் அலட்சியத்தைக் காட்டுகிறது. எந்தவொரு துறையும் சரியாகச் செயல்படவில்லை. கடமைக்கு செய்கின்றனர்" என்கிறார் நீலகண்டன்.

இனி அடுத்து வரும் 10-15 ஆண்டுகளுக்கு தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் என்ன?

"தென்னை விவசாயத்திற்கு அனைத்து செலவுகளும் சேர்த்து 7-8 லட்சம் வந்துவிடும். ஒரு தென்னங்கன்று 500 ரூபாய்க்கு விற்கிறது. வேளாண் துறை மானிய விலையில் கொடுக்கிறது.  பொட்டாசியம் இன்றைக்கு 800 ருபாய், காம்ப்ளக்ஸ் 1,000 ரூபாய். பாதிக்கப்பட்ட மரம் ஒன்றுக்கு 5,000 ரூபாய் வரை அறிவிக்க வேண்டும். ஏக்கருக்கு 3 லட்சம் வரை கொடுக்க வேண்டும்" என்கிறார் நீலகண்டன்.

தென்னை விவசாயிகள் இப்படி மீளமுடியாத பாதிப்புகளில் இருக்கையில், பேராவூரணி தொகுதி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜன் அங்கு எட்டிக்கூட பார்க்கவில்லை என்றும், அவர் ஊரிலேயே இல்லை என்றும் குற்றம் சாட்டுகிறார் சேதுபாவசத்திரம் முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜரத்தினம்.

"முன்னாள் மத்திய இணையமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மட்டும் பேராவூரணிக்கு வந்து பார்த்திருக்கிறார். அரசியல்வாதிகள், அதிகாரிகள் வரவில்லை. எம்எல்ஏ ஊரிலேயே இல்லை என்கின்றனர். இந்தப் பேரிடர் காலங்களில் உள்ளாட்சி அதிகாரிகள் இல்லாதது பெரும் குறை. சாய்ந்த ஒரு தென்னை மரத்தை வெட்டி அப்புறப்படுத்த 2,000 ரூபாய் செலவாகும். ஒரு தென்னங்கன்னு வாங்கி நடுவதற்கு 1,500 ரூபாய். இதை அரசு செய்துகொடுக்க வேண்டும். 10-15 ஆண்டுகளுக்கு தென்னை மர விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் இல்லை. இதையெல்லாம், கணக்கிட்டு நிவாரணம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் விவசாயத்தைக் கைவிட்டு வேறு தொழிலுக்குத் தான் செல்ல வேண்டும்" என விரக்தியுடன் சொல்கிறார் ராஜரத்தினம்.

தமிழக அரசு தென்னை விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் அளிப்பதோடு மட்டுமின்றி நீண்ட கால நிவாரணமாக தென்னை மர விவசாயிகளுக்கு திட்டம் வகுக்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி ரங்கநாதன், "நெல் பற்றிதான் பலரும் கவலைப்படுகின்றனர். தென்னை பற்றி யாரும் கவலைப்படவில்லை. தென்னைக்கு லட்சக்கணக்கில் செலவிட வேண்டும். எந்த விவசாயிகளிடமும் பணம் இல்லை. நிவாரணம் அறிவிப்பதற்கு முன் விவசாயிகளை சந்தித்து கூட்டம் நடத்தியிருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பின் காப்பீடு செய்ய முடியாது. ஆனால், இதற்கு சிறப்பு கவனம் செலுத்தி பாதி தொகையாவது தர வேண்டும்" என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

அதிகாரிகள் நேரடியாக வரவில்லை, மத்திய அரசுக்கு எவ்வளவு தூரம் விவசாய இழப்பு புரிகிறது என்பதும் தெரியவில்லை. பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும் போதாது. ஆனால், மத்திய அரசு இந்த இழப்புகளை உடனடியாக கணக்கிட்டு, கண்ணீர் வடிக்கும் தென்னை விவசாயிகளின் துயரை ஓரளவுக்காவது துடைக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x