Published : 13 Oct 2018 03:36 PM
Last Updated : 13 Oct 2018 03:36 PM
'மீ டூ'... கடந்த சில தினங்களாக இணைய உலகத்தை பரபரப்புக்குள்ளான வார்த்தையாக மாறியிருக்கிறது.
பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அளித்த பாலியல் குற்றச்சாட்டுக்கு எழுந்த எதிர்வினைகளைத் தொடர்ந்து திரைப்படத்துறை, பத்திரிகைத் துறை என பல துறைகளைச் சேர்ந்த பெண்கள் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன்முறைகள் குறித்த பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் 'மீ டூ' பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எதிரான இணைய இயக்கமாக இந்தியாவில் மாறி இருக்கிறது.
இந்தியாவில் தற்போது அறிமுகமாகியிருக்கிற 'மீ டூ ' இயக்கம்... கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்காவில் வலுவாகப் பேசப்பட்ட விவாதமாக இருந்தது.
உண்மையைக் கூற வேண்டும் என்றால் நாம் நமது சமூகத்தில் இந்த விவாதத்தை மிகத் தாமதமாகவே தொடங்கி இருக்கிறோம்.
2006 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சமூக ஆர்வலரான தாரானா பர்க் என்ற பெண்மணி, பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு ஆதரவாகப் பல குரல்கள் உள்ளன என்பதை உணர்த்தும் வகையில் 2006 ஆம் ஆண்டு #METOO இயக்கத்தை ஆரம்பித்தார்.
இதன் தாக்கமே தற்போது இந்தியாவில் பாலியல் துன்புறுத்தல்களைப் பொதுவெளியில் துணிந்து பேசுவதற்கான வாய்ப்புகளைப் பலருக்கும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தப் பாலியல் குற்றச்சாட்டுகளை ஒரு பார்வையாளராக அந்தப் புகார்களின் வட்டத்துக்கு வெளியே இருந்து பார்க்கும்போது பல விதமான விமர்சனங்களும், கேள்விகளும் எழுவது ஒரு சராசரி மனிதனின் இயல்பு.
ஏன் அந்தப் பெண்கள் இவ்வளவு நாட்கள், இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு இந்தக் குற்றச்சாட்டை பொதுவெளியில் கூறுகிறார்கள்? ஏன் அவர்கள் அந்தத் தவறுகள் நேர்ந்த தருணத்தில் எதிர்வினை ஆற்றவில்லை என்று பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இன்னொரு புறம், பெண்களுக்கு மட்டும்தான் பாலியல் பிரச்சினைகள் ஏற்படுகின்றனவா? ஆண்கள் இம்மாதிரியான பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்படவில்லையா? அவர்கள் ஏன் இதைப் பொதுவெளியில் கூற மறுக்கிறார்கள் போன்ற கேள்விகளையும் ஆங்காங்கே காண முடிகிறது.
இக்கேள்விகளை இந்து தமிழ் இணையதளம் சார்பாக இலக்கியம், ஊடகம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் ஆண்கள் சிலரிடம் முன் வைத்தோம்.
கருப்புப் பிரதிகள் பதிப்பக ஆசிரியர் நீலகண்டன்
முதலில் இது வரவேற்கப்பட வேண்டியது. ஏன் இவ்வளவு வருடங்கள் கழித்து இப்பெண்கள் இப்புகாரைக் கூறுகிறார்கள் என்று கேட்பது அறியாமையின் வெளிப்பாடு மட்டுமே.
அந்தக் காலகட்டத்தில் அப்பெண் இதனைப் பொதுவெளியில் கூறுவதற்கான வாய்ப்பை சமூகமாகிய நாம் வழங்கவில்லை என்பதுதான் உண்மை. இதில் விளிம்பு நிலையில் உழைக்கும் சமூகத்தில் உள்ள பெண்களை உற்று கவனித்தால் புரியும். உதாரணத்துக்கு ஒரு மீன் விற்கும் பெண்மணியை எடுத்துக் கொள்ளுங்கள். தன்னிடம் தவறாக நடந்துகொண்ட பேருந்து நடத்துநரிடம் அப்பெண் தைரியத்துடன் அவரை எதிர்கொண்டு நடத்துநரின் தவறை உணர்த்திய சம்பவத்தை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
இவர்களைப் போன்ற பெண்கள் இயல்பாகவே இந்தச் சிக்கலான சமூகக் கட்டமைப்பில் வாழக் கற்றுக் கொண்டுள்ளதுடன் தங்களைப் பாதுகாக்கவும் கற்றுக் கொண்டுள்ளனர். அவர்களிடம் நாம் தைரியத்தை உருவாக்க வேண்டியதில்லை.
ஆனால், இதற்கு அப்பால் ஒரு மேல்நிலை வர்க்கம் உள்ளது. அவர்களுக்கு இந்தச் சமூகம், ஆண்களுக்குப் பிறகுதான் நீ என்று கற்பிக்கப்பட்ட கலாச்சார அச்சத்தினால் அவர்களில் பலர் தங்களுக்கு நேர்வதை ஏற்றுக்கொள்கிறார்கள். பிறகு தன்னைப் போன்ற பெண் ஒருவர் பாதிக்கப்பட்டதை வெளியில் கூறும்போது அவர்களும் இணைந்து கொள்கிறார்கள். இதில் குற்றம் சொல்ல என்ன இருக்கிறது?
’மீ டூ ’ இந்தியாவைப் பொறுத்தவரை பணியிடங்கள் சார்ந்த பிரச்சினையாக மட்டும் பார்க்கப்படுகிறது. பணியிடங்களுக்கு அப்பால் நமது குடும்பங்களில் உள்ள பிரச்சினைகள் இங்கு எழுப்பப்படவில்லை. நான் நீண்டகாலமாக விளிம்பு நிலையில் உள்ள குடும்பங்களுடன் பாலியல் சார்ந்த உரையாடலை நடத்தி இருக்கிறேன். அவர்களின் பெரும்பாலான பெண்கள் தங்களது குடும்பத்திலுள்ள சொந்த அப்பாவாலும், அண்ணனாலும், தம்பியாலும், மாமாவாலும், சித்தப்பாவாலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இது உண்மையா? பொய்யா? என்று ஆராய்வதற்கு முன்னர், இது உண்மையாக இருக்கலாம் என்ற வாய்ப்பை நான் ஏன் நம்புகிறேன். ஏனென்றால், நமது சாதி மற்றும் மதம் சார்ந்த ஆணாதிக்கச் சமூகத்தில் இம்மாதிரியான பாலியல் துன்புறுத்தல்கள் நியாயப்படுத்தப்படுகின்றன.
இங்கு பெண் என்பவள் இராண்டாம் பால்...இன்னும் வெளிப்படையாகக் கூறினால் இரண்டாம் பால் என்பதைவிட பெண் என்பவள் பாலியல் பண்டமாகத்தான் நம் சமூகத்தில் பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறாள். கடந்த சில வருடங்களில் ஐரோப்பிய சமூகத்தில் பாலினம் சார்ந்த ஏற்ற இறக்கங்கள் நடந்துள்ளன. ஆனால் நமது குடும்பங்கள் நிறைந்த சமூகத்தில் அம்மாதிரியான எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இங்கு ஜனநாயகமும், சம உரிமையும் பெண்ணுக்குக் கிடையாது. ஐரோப்பா போன்ற கண்டங்களில் நிர்வாக தளங்களில் தலைமைப் பணிகளில் பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் இங்கு ஒரு ஊடகத்தில் கூட ஒரு பெண் ஆசிரியரை நீங்கள் காண முடியாது. வெறும் தொகுப்பாளராகவும் காட்சிப் பொருளாகாவும் மட்டுமே பெண்கள் பல நேரங்களில் காட்சிப்படுத்தப்படுகிறார்கள்.
பெண்களின் முழு ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை நாம் இன்னும் ஏற்படுத்தித் தரவில்லை. பெண்களுக்கு எதிரான அநீதி ஒன்று மிக இயல்பான கட்டமைப்பில் நமது சமூகத்தில் இருந்துகொண்டே இருக்கிறது.
பெண்களின் இந்தக் குற்றச்சாட்டுகளில் சில குறைவாகவோ அல்லது மிகைப்படுத்தியோ கூறப்பட்டிருக்கலாம். ஆனால், நமது சமூக அமைப்பில் இது நிச்சயம் நிகழக்கூடியதுதான் என்பதை மறுப்பதற்கில்லை.
ஆண்கள் தங்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல்களைப் பொதுவெளியில் கூறாமல் இருப்பதற்கும் பாலியல் சமத்துவமின்மையே காரணம் என்று கூறுவேன். நம்மைப் பொறுத்தவரை ஆண் என்பவன் அதிகாரம் மிக்கவன். இது அவனது ஆண்மை தொடர்பான விஷயம். எடுத்துக்காட்டுக்கு தன்னைப் பெண் ஒருவர் கிண்டலடித்தால் தன் நண்பனிடமும் குடும்பத்தினரிடமும் அந்த ஆண் கூற நேர்ந்தால்..அடுத்து அவனை நோக்கி எழுப்பப்படும் கேள்வி ”நீ ஆம்பளையாடா?” இம்மாதிரியான கொடுமையான வன்முறைகள் நமது சமூகத்தில் ஆணை நோக்கி கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
உளவியல் ரீதியாக பெண்ணை விட ஆண் தான் நமது சமூகத்தில் பலவீனமாக இருக்கிறான். தனது தாழ்வு மனப்பான்மையை மறைப்பதற்கு ஆண் தன்னை மேலானவன் என நினைத்துக் கொள்கிறான். அவனும் துன்பப்பட்டு..இந்தச் சமூகத்தையும் துன்பப்படுத்திக் கொண்டிருக்கிறான்.
இந்திய ஆண்கள் பலர் பெண்களைக் கவர்வதற்காக, அவன் பார்க்கும் சினிமாக்களில் காட்டும் நாயகனின் வடிவத்தை தனது வடிவமாக ஏற்றுக் கொள்கிறார்கள். இங்கு மென்மையாகவும், தன்மையாகவும் பேசுபவர்கள் மதிப்புக்குரியவர்களாக பார்க்கப்படமாட்டர்கள். இவர்களைப் பொறுத்தவரை ஆண் என்பவன் குரலை உயர்த்தி ஒருபடி முன்னே இருக்க வேண்டும் . இதன் மூலமாக பெண்களைக் கவர பெரும்பாலான ஆண்கள் முற்படுகிறார்கள்.
தனித்துவமான தன்மையை ஆண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். இது பெண்களுக்கும் பொருந்தும். இந்த ஆண் என்ற கருத்தாக்கத்தை உளவியல் தன்மை கொண்டு உடைத்தெறிய வேண்டும் என்ற கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
இதன் மூலம் நமது சமூக அமைப்பில் நாம் ஒருபடி முன்னோக்கிச் செல்ல வேண்டும். உளவியல் ரீதியாக ஆண், பெண் இருவரிடத்திலும் நாம் பாலியல் துன்புறுத்தல்களை மறைக்கும் தன்மையை நீக்க வேண்டும்.
இந்த 'மீ டூ' பிரச்சாரத்தின் மூலம் ஆண் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்வதற்கு, தங்களை திருத்திக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். பாலியல் சார்ந்த புரிதல்கள் கல்வி மூலமாக உரையாடலாக மாற்றப்பட்டு விவாதிக்கப்படும்போது, இம்மாதிரியான தவறுகள் குறையும் என்று நம்புகிறேன்.
சுரேஷ்: காட்சி ஊடகச் செய்தியாளர்
'மீ டூ' பாலியல் துன்புறுத்தல் குறித்தான பெண்களின் குற்றச்சாட்டுகள் நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். வரும் காலங்களில் இம்மாதிரியான பிரச்சினைகள் ஏற்படும்போது அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான தைரியத்தை இம்மாதிரியான பிரச்சாரங்கள் அளிக்கும் என்று நம்புகிறேன்.
ஆண்களைப் பொறுத்தவரை இதனை இரண்டு விதமாகப் பார்க்கலாம். பாலியல் துன்புறுத்தல்கள் இளைஞர்களைக் காட்டிலும் 18 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் ஆசிரியர்கள், உறவினர்களால் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இவர்களில் சிலர் இதுகுறித்து வெளியே கூறாமல் குழப்பம் மிகுந்த மனநிலையில் தனிமைக்குத் தள்ளப்படுகின்றனர். சிலர் தற்கொலையும் செய்து கொள்கின்றனர்.
இளைஞர்களை எடுத்துக்கொண்டால் அவர்களில் சிலர் இதனை ஏற்றுக் கொள்கிறார்கள். சிலர் குடும்பச் சூழ்நிலையானாலும் இந்த சமூகம் கற்பித்த தவறான போதனைகளாலும் கூறாமல் சென்று விடுகிறார்கள். இந்த மனப்பான்மையில் மாற்றம் வேண்டும்.
அசோக் ராஜ் : ஐடி ஊழியர்
’மீ டூ’ குறித்து சமூக வலைதளங்களில் எழுந்துள்ள விவாதம் நிச்சயம் ஆரோக்கியமானதுதான். ஆனால், குற்றம் சொல்பவரின் குரல்கள் ஒலிக்கப்படும்போதும், குற்றம் சாட்டப்பட்டவருடனான பதிலையும் பெற வேண்டியது இந்த விஷயத்தில் மிக முக்கியம்.
வெறும் பதிவுகளாக இதனைக் கடந்து செல்லாமல் அடுத்த கட்டத்தை நோக்கி இந்தப் பிரச்சாரத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.
ஆண்களைப் பொறுத்தவரை பாலியல் சார்ந்த புகார்களை அவர்கள் ஏன் பொதுவெளியில் கூறுவது இல்லை என்றால்? நமது சமூகத்தைப் பொறுத்தவரை பெண்களுக்குத்தான் இதுகுறித்தான போதனைகள் வழங்கப்பட்டுக் கொண்டே உள்ளன. ஆண்களுக்கு இல்லையே... அவர்களுக்கு இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று நினைக்கிறேன்.
ஆனால் பெண்களுக்கான பார்வை இந்த விஷயத்தில் வேறுபடுகிறது. ஆண்கள் இதிலிருந்து மீண்டு வந்துவிடுவார்கள்.
கல்வியில் பாலியல் சார்ந்த உரையாடல்கள் அதிகம் நடக்க வேண்டும். அப்போது இது ஆண்கள், பெண்கள் இருவருக்கும் இதுசார்ந்த உளவியல் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படும்.
’மீ டூ’ இயக்கத்தின் தொடர் இணையப் பிரச்சாரங்களின் எதிரொலியாக, பெண்கள் தெரிவிக்கும் பாலியல் புகார்களை விசாரிக்க சட்ட நிபுணர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்திருப்பதன் மூலம் இந்தப் பிரச்சாரத்துக்கான சிறிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதேபோல் இந்த புகார்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து அப்பெண்களுக்கான நீதி கிட்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT