Published : 17 Oct 2018 11:30 AM
Last Updated : 17 Oct 2018 11:30 AM
நவராத்திரிப் பண்டிகையில் கொலு சிறப்பாகக் கொண்டாடடப்படும் வேளையில், இயற்கை வழியில் உருவாக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு பசுமைக் கொலு அமைத்திருக்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த சித்ரா ரவீந்திரன்.
கொலுவின் முதல் படியில், ஷாப்பிங் செல்லப் பயன்படுத்தும் பைகளைப் பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் அமைத்திருக்கிறார் சித்ரா. பிளாஸ்டிக், பாலித்தீன் பயன்பாடு தவிர்த்து கூடை மற்றும் துணிப்பைகள் முதல் படியை அலங்கரிக்கின்றன.
இரண்டாவது படியில் வீடு சுத்தம் செய்யும் இயற்கை திரவம், துணி துவைக்கும் திரவம் உள்ளிட்ட பொருட்களை அவரே தயாரித்து காட்சிப்படுத்தி உள்ளார்.
மூன்றாவது படியில் வேதிப்பொருட்கள் இல்லாத இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட குளியல், பாத்திரம் கழுவும் சோப்புகள், திரவங்கள் வைக்கப்பட்டுள்ளன.
நான்காவது படியில் பயணத்தின்போது பயன்படுத்தப்படும் பிளேட்டுகள், டம்ளர்கள், ஸ்பூன், டிபன் பாக்ஸ், சம்படங்கள் மற்றும் டிஷ்யூக்களுக்குப் பதிலாக கர்ச்சீப்புகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஐந்தாவது படியில் பழங்காலத்தில் பயன்படுத்தியது போல ஜாடிகளில் உப்பு, ஊறுகாய் போன்ற உணவுப் பொருட்களும் துணிப்பைகளில் மளிகைப் பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் விதைகளை அடைத்து களிமண்ணால் உருவாக்கப்பட்ட ’விதை விநாயகர்’ கொலுவின் மத்தியில் அமர்ந்திருக்கிறார்.
தரையில், மீதமான நூலைப் பயன்படுத்தி எம்பிராய்டரி மூலம் விரிப்பை அமைத்துள்ளார் சித்ரா. அதன் மேல் தாம்பூலப் பை வைக்கப்பட்டுள்ளது. அதில் மஞ்சள், குங்குமம் டப்பாக்களுக்குப் பதிலாக மஞ்சள் கட்டையையும், எலுமிச்சம் பழம், வெற்றிலை மற்றும் பாக்கை துணிப்பைகளில் வைத்துக் கொடுக்கிறார் சித்ரா.
இயற்கை கொலு குறித்து சித்ராவிடம் பேசினோம், ‘’இயற்கையின் பரிணாமத்தில் கடைசியாகத் தோன்றிய மனிதன், ஆதிகாலத்தில் தோன்றிய உயிர்களையும் இயற்கையையும் அழித்து வருகிறான். குறிப்பாக நிலம், நீர் ஆகியவற்றைக் கடுமையாக மாசுபடுத்தி விட்டோம். 40 வருடங்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் வரும் முன் இயற்கை ஓரளவு ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் இப்போது முழுவதுமாக சீர்கெட்டுவிட்டது.
இந்நிலை மாறவேண்டுமெனில் நாம் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும், வேதிப்பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மனமிருந்தால் மார்க்கமுண்டு. கடைகளில் பாக்கெட்டுகளில் அடைக்கப்படாத பொருட்களை வாங்கலாம். திரவப் பொருட்களை, பாத்திரங்கள் கொண்டு சென்று வாங்கலாம். அன்றாட வாழ்க்கையில் சிரமம்தான் என்றாலும் முயற்சித்தால் பழகிவிடும்’’ என்று புன்னகைக்கிறார் சித்ரா.
மூச்சு முட்டி நிற்கும் இயற்கை அன்னைக்கு நம்மால் முடிந்த வகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து உதவுவோம்..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT