Published : 23 Oct 2018 03:18 PM
Last Updated : 23 Oct 2018 03:18 PM
ராய சர்க்கார். இந்தியாவில் சமீபகாலமாக நடைபெற்று வரும் ‘மீ டூ’ இயக்கத்தை உற்றுநோக்குபவர்களுக்கு மட்டுமே இவரைத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அமெரிக்காவில் 2006-ம் ஆண்டிலேயே தாரனா பூர்க் என்ற சமூகச் செயற்பாட்டாளரால் தொடங்கப்பட்ட ‘மீ டூ’ இயக்கம், இந்தியாவில் 2018 ஆம் ஆண்டில் தொடங்கி வேகமெடுப்பதற்கு முக்கியக் காரணமானவர் ராய சர்க்கார்.
பெண்கள் தங்களுக்கு பல்வேறு துறைகளிலும், இடங்களிலும் நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களையும், துன்புறுத்தியவர்களையும் சமூக ஊடகங்கள் மூலமாக அம்பலப்படுத்தி, அதன்மூலம் தங்களுக்கான நீதியை அடைவதற்கானஅடுத்த கட்ட நகர்வுக்கான கருவியே ‘மீ டூ’.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை மாணவியான ராய சர்க்கார், இந்திய உயர்கல்வித் துறையில் தங்களுடைய மாணவிகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்படும் பேராசிரியர்களின் பட்டியலை 2017-ல் வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து பல மாணவிகளும் தங்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய பேராசிரியர்களின் பெயர்களை வெளியிட்டனர். இப்படி இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட ‘மீ டூ’ தற்போது சினிமா, இசை, இதழியல், அரசியல் என பல்வேறு தளங்களில் பரவி, பாதிக்கப்பட்ட பெண்களின் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
’மீ டூ’ இயக்கம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், அடுத்த கட்டத்திற்கு இதனை எப்படி நகர்த்துவது என்பது போன்ற கேள்விகளுக்கு ‘இந்து தமிழ் திசை’க்காக அளித்துள்ள இந்த பிரத்யேகப் பேட்டியில் பதிலளித்துள்ளார் ராய சர்க்கார்.
இந்திய கல்வித்துறையில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்தும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்தும் பட்டியலை வெளியிடலாம் என கடந்த ஆண்டு எந்த தருணத்தில் முடிவெடுத்தீர்கள்? நீங்கள் பட்டியலை வெளியிட்டவுடன் இந்தியா முழுவதும் அதுவொரு இயக்கமாக மாறும் என யூகித்தீர்களா?
அது ஒரு உணர்ச்சிவயப்பட்ட நிலையில் எடுக்கப்பட்ட முடிவுதான். இந்திய பல்கலைக்கழகங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதை நினைத்து கோபம் அடைந்திருந்த தருணத்தில் தான் அந்த முடிவை எடுத்தேன். வெளிநாடுகளில் நடைபெற்ற ‘மீ டூ’ இயக்கம் தான் கல்வித்துறையில் பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் ஆண்களின் பட்டியலைத் தயாரிக்க வைத்தது. அந்தப் பட்டியல், இப்படியொரு இயக்கமாக உருமாறும் என நான் நினைக்கவில்லை. கடந்த ஆண்டு நான் வெளிட்ட பட்டியலின் தூண்டுதலால் தற்போதைக்கு ‘மீ டூ’ அனைத்து துறைகளுக்கும் பரவியிருக்கிறது. ‘மீ டூ’ இயக்கத்தினால் வருங்காலத்தில் ஏற்படும் விளைவுகளை என்னால் யூகிக்க முடியாது. ஆனால், தாங்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களுக்கு இதன்மூலம் பெண்கள் முடிவுகட்ட முடியும்.
பட்டியலை வெளியிடுவதற்கு முன்பும், அதற்கு பின்பும் ஏதேனும் உளவியல் பிரச்சினைகளைச் சந்தித்தீர்களா? அதனைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?
நான் எந்தவொரு உளவியல் பிரச்சினைகளையும் சந்திக்கவில்லை. ஆனால், நான் வெளியிட்ட பட்டியலால் கோபம் அடைந்திருந்தவர்களால் நான் துன்புறுத்தப்பட்டேன். அது எனக்கு தொந்தரவை அளித்தது. நான் எதிர்பார்த்திராத பெரும் கவனமும் கிடைத்தது.
உங்களால் கடந்த ஆண்டு இந்தியாவில் தொடங்கிய ‘மீ டூ’ இயக்கத்திற்கும் தற்போது பாலிவுட், ஊடகம் என பல்வேறு துறைகளில் நடைபெறும் ‘மீ டூ’ இயக்கத்திற்கும் ஏதேனும் வேறுபாடு இருப்பதாக நினைக்கிறீர்களா? ‘மீ டூ’ இயக்கம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளதாக எண்ணுகிறீர்களா?
நான் முன்னெடுத்ததும், இப்போது நடக்கும் ‘மீ டூ’ இயக்கமும் ஒன்றுதான். இரண்டிலும் பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களைப் பொதுவெளியில் பகிர்கிறார்கள். அதன்மூலம் தங்களைத் துன்புறுத்திய ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுக்கிறார்கள். இப்போது நடக்கும் ‘மீ டூ’ இயக்கத்தில் பெண்கள் கூறுவதை மற்றவர்கள் கவனிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், தற்போது நிறுவன மயமாக்கப்பட்ட துறைகளுக்கு மட்டுமே ‘மீ டூ’ என்ற எல்லை உள்ளதாக நினைக்கிறேன். அதை விடுத்து, ஒழுங்குபடுத்தப்படாத துறைகளில் பணிபுரியும் பெண்களின் பாலியல் புகார்களையும் கேட்க வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களும் இதில் இணைய வேண்டும்.
‘மீ டூ’ ஹேஷ்டேகில் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பகிரும் பெண்கள், மற்றவர்கள் கூறும் புகார்களையும் பெயர்களை வெளியிடாமல் பகிர்கிறார்கள். அப்படி பகிரும்போது அந்த குற்றச்சாட்டின் குறைந்தபட்ச உண்மைத்தன்மையை ஆராய வேண்டும்தானே?
நான் பட்டியலை வெளியிட்டபோது ஒன்றில் கவனமாக இருந்தேன். பாதிக்கப்பட்ட மற்ற பெண்களின் அனுபவங்களை பொதுவெளியில் பகிர்ந்து அதுகுறித்து மற்றவர்கள் புறம்பேசுவது போல் ஆகிவிடக்கூடாது என்பதில் கவனம் கொண்டிருந்தேன். நானாக மற்றவர்களின் அனுபவங்களைப் பகிர்வதை பெரும்பாலும் தவிர்த்தேன். தங்களுடைய வாழ்வாதாரம், பாதுகாப்பு, லட்சியம் என எல்லாவற்றையும் ஆபத்துக்குள்ளாக்கி அவர்கள் இதனைச் செய்கிறார்கள். அதனை வெளிப்படுத்தும் உரிமை அவர்களுக்கு உண்டு. பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களை விரோதப் போக்குடன் அணுகாமல், பரிவுடன் அணுகக்கூடிய கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும்.
மற்ற நாடுகளில் ‘மீ டூ’ இயக்கம் ஒருவிதமாகவும், இந்தியாவில் வேறுவிதமாகவும் புரிந்து கொள்ளப்படுவதாக நினைக்கிறீர்களா? இந்தியாவில் ‘மீ டூ’வில் குற்றம் சாட்டும் பெண்களின் அரசியல், மத, சாதிய அடையாளங்கள் முன்னிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு நிலவுகிறதே?
மற்ற நாடுகளில் நடைபெறும் ‘மீ டூ’ இயக்கத்திலும் இனவாதம், வகுப்புவாதம் உள்ளிட்ட பாகுபாடுகள் உள்ளன.
இந்தியாவில் பாலியல் குற்றம் சாட்டும் பெண்களுக்கு ஆதரவு காட்டுவதில் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படுவதாக நினைக்கிறீர்களா?
பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களை சந்தேகக் கண்ணுடன் நோக்குகின்றனர். இல்லையென்றால், அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டு மிரட்டப்படுகின்றனர். அவர்கள் அதிகபட்ச ஆபத்துடன் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். நீதி வழங்கப்படுவதில் போதாமை நிலவும் சூழலில் அவர்கள் நீதிமன்றங்களை நாடுகின்றனர். அவர்களை நாம் பரிவுடனும் அன்புடனும் நோக்க வேண்டும் என மக்களை கேட்டுக்கொள்கிறேன்.
ஊடகம், சினிமா என எல்லா துறைகளிலும் நடைபெறும் ‘மீ டூ’ இயக்கத்திற்கு சிலர் பெயர் வாங்க ஆசைப்படுவதாக எண்ணியிருக்கிறீர்களா?
இதுவொரு போட்டியில்லை என்று நான் நினைக்கிறேன். ‘மீ டூ’வை ஆரம்பித்த முதல் பெண் நிச்சயமாக நான் இல்லை. அனைத்துத் துறை பெண்களும் வெளியில் வந்து தாங்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களைப் பகிர்ந்துகொள்வதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகின்றேன். ஆனால், குற்றச்சாட்டுகளை முன்வைக்கத் தேவையான தளமும், வளங்களும் சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள பெண்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பதால் அவர்களால் அந்தக் குற்றச்சாட்டுகளைப் பொதுவெளியில் சொல்ல முடிவதில்லை. இது மாறும் என்று நான் எண்ணுகிறேன்.
இந்தியாவில் தற்போது நடைபெறும் ‘மீ டூ’ சமூகத்தில் மேல்தட்டு சமூகப் பெண்களால் நடத்தப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு உள்ளதே?
தற்போதைக்கு சமூகத்தின் மேல்தட்டு பெண்கள் தான் தங்கள் அனுபவங்களைப் பகிர்கின்றனர் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அவர்கள் சந்தித்த பாதிப்புகளும் மற்றவர்களுடையது போலவே கவனிக்கத்தக்கவைதான். ஆனால், முன்பு சொன்னதுபோலவே நீதி கிடைக்கப் போதுமான வளங்கள் இல்லாதவர்களுடைய புகார்களும் கேட்கப்பட வேண்டும், அவர்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். இந்த இயக்கம் பிரத்யேகமாக சிலருக்கு மட்டுமே என இருக்க முடியாது. பாதிக்கப்பட்ட அனைவரும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். தற்போது தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்களை பொதுவெளியில் கூறும் பெண்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.
சமுதாயத்தின் விளிம்பு நிலையில் உள்ள தலித்துகள், பெண்கள், மாற்றுப்பாலினத்தவர்கள், எல்ஜிபிடி பிரிவினர் ஆகியோருக்கு ‘மீ டூ’ இயக்கத்தில் பங்கெடுக்க வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அவர்களுக்குப் பாலியல் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தும் தளம் இல்லை.
இந்த விவாதத்தில் தலித் பெண்கள் இல்லை, அவர்கள் தவிர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு இயக்கமாக ஒன்றை முன்னெடுக்கும்போது ஒடுக்கப்பட்டவர்களின் குரல் பின்னே கவனிக்கப்படட்டும் என விட்டுவிடக் கூடாது. அவர்களின் குரல்கள் தான் முன்னொலிக்க வேண்டும். இப்போது அப்படியில்லை. இந்த நிலைமை மாற வேண்டும். அவர்களும் சொல்வதற்கான வளங்களை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இன்னும் சில பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை பொதுவெளியில் சொல்வதற்குத் தயங்குகிறார்களே?
ஒவ்வொருவரும் தங்களுடைய குழப்பமான காலகட்டத்தைப் பொதுவெளியில் பகிர வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் அமைதியாக இருக்க விரும்பினால், அப்படி இருக்க உங்களுக்கு எல்லாவித உரிமைகளும் உண்டு. அமைதியாக இருந்தாலும், நீங்கள் சந்தித்த துன்பங்கள் மதிக்கப்பட வேண்டியவையே. உங்களுடைய குடும்பத்தினர், நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டாலும் உங்களுக்குத் தேவையான பலமும், அன்பும் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
பாலியல் குற்றம் சாட்டும் பெண்களையே புகார் கூறும் மனநிலை நிலவுகிறதே?
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளியே சொல்வதால் அவர்களுக்கு குற்றவுணர்வை ஏற்படுத்த மற்றவர்கள் கையாளும் ஒரு பழைய யுக்திதான் பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சொல்வது. ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க பாதிக்கப்பட்டவர்களை குற்றம் சொல்வதை நாம் நிறுத்த வேண்டும். அதற்குப் பதிலாக அந்தப் பிரச்சினையின் வேர் காரணியைக் கண்டறிதல் வேண்டும். அதன் மூலமாகத்தான் பிரச்சினைகளை நாம் அழித்தொழித்து வருங்காலத்தில் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும்.
சில பெண்கள் தங்கள் உயரதிகாரிகள் அல்லது தங்கள் துறையில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் மீது வெறுப்புணர்வில் ‘மீ டூ’-ஐ பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுகிறது. இப்படி ஒரு கருத்தையே நான் ஏற்கவில்லை. ஒரு பெண் எதற்காக தன்னுடைய பாதுகாப்பு, நலன், லட்சியம் என எல்லாவற்றையும் ஆபத்துக்குள்ளாக்கி தங்கள் மேலதிகாரியின் மீது பழி தீர்க்க வேண்டும்? சமூக வலைதள ட்ரோல்கள், அவதூறு வழக்குகள் என அனைத்தையும் சந்தித்து பெண்கள் மேலதிகாரிகளை பழி தீர்ப்பார்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
அதிகப்படியான பாலியல் புகார்கள் வந்துகொண்டிருக்கும் சமயத்தில் அதனை எதிர்கொள்வதற்கான சட்டம் இந்தியாவில் வலுவாக இருப்பதாக நினைக்கிறீர்களா?
பாலியல் குற்றம் சாட்டும் பெண்கள் மீது அவதூறு வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. அவதூறு வழக்கு என்பது பிரிட்டிஷ் காலத்திய காலாவதியாகிவிட்ட சட்டம். இந்த சட்டம் மிரட்டுவதற்காகவும், குரல்களை அமைதியாக்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவெளியில் தங்கள் அனுபவங்களைப் பகிரும் பெண்களுக்கு உதவும் வகையில் இந்தியாவில் நீதித்துறை மாற்றம் அடைதல் வேண்டும். அதற்கேற்ற வகையில் சட்ட மாற்றங்கள் அவசியம். இந்தியாவில் மறுசீரமைப்பு சட்ட நடைமுறைகள் இல்லை.
மாறாக, நீதிபதிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் காரசாரமான நடைமுறைகளைக் கையாள்கிறார்கள். இங்கிருக்கும் சட்ட நடைமுறை பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், அதிலிருந்து மீளவும், அதற்குப் பின்னான வாழ்க்கையை வாழவும் மிக சொற்பமாகவே உதவிபுரிகிறது. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று நீதி வழங்கும் வகையிலான சட்ட மாற்றங்கள் வேண்டும். நீதியை அனைவரும் பெறும் வகையில் நீதிமன்றங்கள், நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் புகார்களை பல காவல்துறை அதிகாரிகள் ஏற்பதேயில்லை, குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பாக அவர்கள் நிற்கிறார்கள். இது நிறுத்தப்பட வேண்டும்.
தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment