Published : 13 Oct 2018 03:56 PM
Last Updated : 13 Oct 2018 03:56 PM

முப்படைகளில் சேர சிறப்புப் பயிற்சி வகுப்புகள்; இயலாதவர்க்கு இலவசக் கல்வி: டிஏவி குழுமம் அறிமுகம்

டிஏவி குழுமம் சார்பாக ஒருங்கிணைந்த பாதுகாப்புத் துறைகளில் (ராணுவம், விமானம் மற்றும் கப்பல்) சேர சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பவர்களுக்கு இலவசப் பயிற்சி அல்லது ஸ்பான்சர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகளில் சேர என்ன தகுதி?

* 18 முதல் 24 வயது வரை அனைத்துப் பட்டதாரிகளும், பள்ளிப் படிப்பை முடித்தவர்களும் சேரலாம்.

* ஆண், பெண் என இருபாலருக்கும் இதில் சம வாய்ப்பு உண்டு. ஆனால் திருமணம் ஆகாதவராக இருத்தல் அவசியம்.

* ராணுவப்படைக்கான பயிற்சி வகுப்பில் சேர ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

* கப்பற்படைக்கான பயிற்சி வகுப்பில் சேர பொறியியல் முடித்திருக்க வேண்டும்.

* விமானப்படைக்கான பயிற்சியில் சேர பொறியியல் முடித்திருக்க வேண்டும் அல்லது பள்ளிப் படிப்பில் இயற்பியல், கணிதம் படித்திருக்க வேண்டும்.

* அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் மணமாகாத/ கணவனை இழந்த பெண்களுக்கு வாய்ப்பு உண்டு. இவர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பயிற்சி வகுப்புகள் குறித்துப் பேசிய டிஏவி குழுமத்தின் கல்வி சார் ஒருங்கிணைப்பாளர் வசந்தா பாலசுப்ரமணியன், ''உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் குறைவான மாணவர்களே முப்படைகளில் சேர முன்வருகிறார்கள்.

மருத்துவர், பொறியாளர் என்று தேர்ந்தெடுக்கும் நாம் பாதுகாப்புத் துறை சார்ந்த வேலைகளை விருப்பத் தேர்வாக எடுத்துக் கொள்வதில்லை. ராணுவம்/ விமானம் /கப்பற்படை என்றாலே மரணத்துடனேயே இணைத்துப் பார்த்து அச்சப்படுகிறார்கள். அதே துறைகளில் மற்ற பல வேலைவாய்ப்புகள் உள்ளன. அதனால் முப்படைகளுக்கான தேர்வு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தோம்.

இதனால் பயிற்சி வகுப்புகளை அறிமுகப்படுத்தி, குறைவான கட்டணத்தில் தரமான ஆசிரியர்களைக் கொண்டு நடத்தி வருகிறோம். ஒருங்கிணைந்த பாதுகாப்புத் துறை சார்ந்த படிப்புக்கு ரூ.7,000 கட்டணம்.

இதற்கான பயிற்சி அக்டோபர் 6-ம் தேதி தொடங்கியுள்ளது. 2019 பிப்ரவரி 2-ம் தேதி வரை மொத்தம் 36 அமர்வுகள் பயிற்சி அளிக்கப்படும். ஒரு அமர்வில் இரண்டரை மணி நேரம் வகுப்பு எடுக்கப்படுகிறது. அதிலேயே தேர்வுகள், விடைத்தாள் திருத்தம் உண்டு.

பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அல்லது ஸ்பான்சர்கள் மூலம் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x