Published : 02 Aug 2018 05:40 PM
Last Updated : 02 Aug 2018 05:40 PM
கோயில் கருவறையில் கடைபிடிக்கப்படும் தீண்டாமையை அகற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதை தம் வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியார் இறுதியில் அது நிறைவேறும் முன்பே மறைந்தார். அதனால் தான், பல்வேறு சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டி 2006 ஆம் ஆண்டில் தான் முதல்வராக இருந்தபோது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான தனிச்சட்டத்தை இயற்றிய கருணாநிதி, பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்குவதற்கான நடவடிக்கை தான் இது எனக் கூறினார்.
சட்டம் இயற்றிய பிறகும் பிராமணரல்லாத ஒருவரை அர்ச்சகராக்க முடியாமல் சிக்கல்கள் நீண்டுகொண்டே இருந்தன. சட்டம் இயற்றி 12 ஆண்டுகள் கழித்துதான் தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் பிராமணரல்லாத ஒருவர் இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் அந்தப் பணியில் நியமிக்கப்பட்டு 5 மாதங்களாகிவிட்டன.
சமய நம்பிக்கை கொண்டவரான மாரிச்சாமி என்பவர்தான் தள்ளாகுளத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். புகைப்படக் கலைஞரான அவர் 2007 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது அமைக்கப்பட்ட சைவ - வைணவ ஆகம பயிற்சி நிலையங்களில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 205 பேரில் ஒருவர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தள்ளாகுளம் ஐயப்பன் கோயில் அர்ச்சகர் பணிக்கான விளம்பரத்தைப் பார்த்திருக்கிறார் மாரிச்சாமி. 8 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும், அர்ச்சகர் பயிற்சி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் இவைதான் முக்கிய தகுதிகள். ‘சாதி தடையில்லை’ என்றும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதைக் கண்டு விண்ணப்பித்த மாரிச்சாமியை, அழகர் கோயில் துணை ஆணையர், ரங்கராஜ பட்டர், தமிழ் ஆசிரியர்கள் ஆகியோர் நேர்காணல் செய்தனர்.
மாரிச்சாமியுடன் சேர்ந்து 2 அர்ச்சக மாணவர்கள், 3 பிராமண மாணவர்கள் ஆகியோரும் நேர்காணலுக்கு வந்திருந்தனர். இந்த நேர்காணலில் அர்ச்சகர் பயிற்சி சான்றிதழ் வைத்திருந்த மாரிச்சாமி வென்றிருக்கிறார். கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் தள்ளாகுளம் ஐயப்பன் கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றி வருகிறார் மாரிச்சாமி.
சாதாரணமாக நடக்கவில்லை
இந்த மாற்றம் மிகச் சாதாரணமாக நடந்திருப்பதாகத் தோன்றலாம். ஆனால், இல்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டப் போராட்டம் 1970களிலேயே தொடங்கிவிட்டது. 1970 ஆம் ஆண்டு நவம்பரில் அப்போதைய முதல்வர் கருணாநிதி இதற்கான சட்ட மசோதாவைக் கொண்டு வந்தார். அந்த மசோதா 1971 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது. ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26 ஆகிய பிரிவுகள் வழங்கியுள்ள மத சுதந்திரம் - வழிபாட்டுரிமை ஆகியவற்றில் தமிழக அரசு தலையிடுவதாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் பட்டர்கள் தாக்கல் செய்த மனு உட்பட 12 மனுக்கள் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
மசோதா ஏற்கப்பட்டபோதும், ஆகமவிதிகள் மீறல் உள்ளிட்ட சந்தேகங்களை எழுப்பி, அர்ச்சகர் நியமனத்தில் குறைபாடுகள் இருந்தால் உச்ச நீதிமன்றத்தில் முறையிடலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வாய்ப்பு முடங்கியது.
அதன்பிறகு 1974-ல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் விதத்திலான சட்டத் திருத்தத்தைக் கருணாநிதி கொண்டு வந்தார். பின்னர், ஆட்சி மாற்றங்கள் நடைபெற்று 2006 ஆம் ஆண்டில் தனிச்சட்டத்தை நிறைவேற்றினார் கருணாநிதி.
தொடர் நடவடிக்கையாக 2007 ஆம் ஆண்டில் சைவ முறைப்படி திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி, மதுரை ஆகிய நான்கு மாவட்டங்களிலும், வைணவ முறைப்படி ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களிலும் ஆகம பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், இந்த சட்டத்தையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் தான், 2015 ஆம் ஆண்டு அனைத்து சாதியினரும், அர்ச்சகராகும் சட்டம் செல்லும், என்று நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ரமணா ஆகியோர் தீர்ப்பளித்தனர். எனினும், அத்தீர்ப்பின் பகுதி 43-ல், ஒவ்வொரு நியமனமும் செய்யப்பட்டு, அதனால் பாதிக்கப்பட்டவர் வழக்கு போட்டால் அதன்படிக்கான சட்டப் பரிகாரமே இறுதித் தீர்வாக அமையும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஏன் இது வரலாற்று சாதனை?
தீர்ப்பு வழங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்து இப்போதுதான் பிராமணரல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இது ஏன் வரலாற்று சாதனை என்பது குறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் அருள்மொழி, “மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமம் என்பதுதான் மனிதப் பண்பாடு. இதற்கு எதிரான தத்துவம் எல்லா நாடுகளிலும் உள்ளது. இந்தியாவில் அது சாதியாக அடையாளம் காணப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப்படும் சாதியில் பிறந்து தகுதியாலும் பொருளாதாரத்தாலும் உயர்ந்து, எவ்வளவு உயர்ந்த பதவிகளை அடைந்தாலும் பிறப்பால் ஏற்பட்ட அடையாளம் மாறாது.
உயர்ந்ததென்றால் போற்றத்தக்கது, தாழ்ந்ததென்றால் இழிவு செய்வோம் என்பதுதான் இந்து சனாதன மனப்பான்மை. இந்த மனப்பான்மைக்கு எதிராக ஒவ்வொரு அமைப்பையும் கேள்வி கேட்டது தான் பெரியாரியம். பல இடங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் என சொல்லப்படுபவர்கள் நுழைவது தடுக்கப்பட்டது. இப்போது அதை உடைத்தாகிவிட்டது. எங்காவது தற்போது இரட்டைக் குவளை முறையோ, பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கத் தடை உண்டாக்கினால், சம்பந்தப்பட்டவர்கள் சிறை செல்ல வேண்டும். அதற்கான சட்டப் பாதுகாப்பு வரை உருவாகி விட்டது.
1971 வரை இந்தியாவில் எந்தவொரு உயர் நீதிமன்றத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் நீதிபதியாக இல்லை. இந்த வருத்தத்தை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியிடம் பெரியார் தெரிவிக்கிறார். அப்போதுதான் வரதராசன் என்பவரை உயர் நீதிமன்ற நீதிபதியாக்குகிறார் கருணாநிதி. அவர்தான் இந்தியாவிலேயே முதன்முதலாக நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். உச்ச நீதிமன்றத்தில் அமர்ந்த முதல் ஒடுக்கப்பட்ட சமூக நீதிபதியும் அவர்தான். ஆனால், அப்படிப்பட்ட தமிழகத்தில் பிராமணரல்லாத ஒருவரை அர்ச்சகராக நியமிக்க முடியவில்லை.
கோயில்களில் பூஜை செய்வதற்கு என்ன தகுதிகள் இருக்க வேண்டும்? வேத -ஆகம பயிற்சி பெறுதல், அதற்கென உள்ள கட்டுப்பாடு முறைகளை பின்பற்றுதல் இவை இருந்தால் ஒருவர் அர்ச்சகராகலாம். ஆனால், இவற்றையெல்லாம் அறிந்திருந்தாலும், ஆகம விதிகள் என்ற பெயரில் பிராமணராகப் பிறந்திருக்க வேண்டும் என கூறுகின்றனர்.
ஆக, ஏற்கெனவே கூறிய விதிமுறைகள் இருக்கிறதா என்று தெரியாமலேயே பல கோயில்களில் பிரமாண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அர்ச்சகராக உள்ளனர். மிகப்பெரிய கோயில்களில் அர்ச்சகர்களாக சம்பளம் வாங்குபவர்களுக்கு இத்தகுதிகள் இருக்கின்றனவா என யாரும் சோதனை செய்யவில்லை. ஆனால், மற்ற சமூகங்களில் பிறந்தவர்கள் ஆர்வத்தாலும், ஈடுபாட்டாலும் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு வந்தாலும் அர்ச்சகராக முடியாது எனக் கூறுவது மனிதப் பிறப்பின் மீது சுமத்தப்படும் இழிவு.
இதுதான் நான் என் வாழ்க்கையில் சாதிக்காத கடைசி விஷயம் எனப் பெரியார் சொல்கிறார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இதனை நிகழ்த்தியிருப்பது உண்மையில் வரவேற்கத்தக்க விஷயம் தான். இது அதிமுக அரசின் முக்கிய முன்னெடுப்பாகும்” எனத் தெரிவித்தார்.
வரலாற்று சாதனையான இதனை ஏன் தமிழக அரசு கொண்டாடி அறிவிக்கவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த அருள்மொழி, “மீண்டும் பிரச்சினைகள் வரலாம் என அறிவிக்காமல் இருந்திருக்கலாம். மறுபடியும் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டு தடை வந்தால், அது பிறப்பால் ஏற்றத்தாழ்வு கருதுவதாகிவிடும்” என்கிறார்.
கோயில்களில் சமூக நீதிக்கான மிக முக்கியமான நகர்வு இது என்றாலும், மதுரை மீனாட்சியம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில் போன்ற பெரும் கோயில்களில் பிராமணரல்லாத ஒருவரை அர்ச்சகராக்க நியமிப்பதற்கு இன்னும் பயணிக்க வேண்டும் என்கிறார் அருள்மொழி.
“இது முக்கியமான முன்னெடுப்புதான். இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில் ஒன்றில் பிராமணரல்லாத ஒருவரை அர்ச்சகராக நியமித்திருக்கின்றனர். வரும் காலங்களில் பெரிய கோயில்களில் நியமிக்க முடியும். அது இயல்பாக நடக்க வேண்டும். பிறப்பினால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதை அடையாளப்படுத்தும் இடம் கோயில். அந்த இடத்திலிருந்து அதனை அப்புறப்படுத்துவது சாதனையாக உள்ளது” என்றார் அருள்மொழி.
தமிழக அரசின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து பேசிய அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்கநாதன், “2007 ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஆகம பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டன. சைவ முறைப்படி திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி, மதுரை ஆகிய இடங்களிலும், வைணவ முறைப்படி ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களிலும் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டன. அங்கு பயிற்சி வழங்கப்பட்டு முறையாக தீட்சையும் அளிக்கப்பட்டது. படிப்பின் இடையிலேயே பல எதிர்ப்புகள் எழுந்தன. அதனையெல்லாம் தாண்டித்தான் படித்தோம். படித்து முடித்ததும் உடனடியாக சான்றிதழ் வழங்கவில்லை. தவிர உச்ச நீதிமன்றத்தில் தென்னிந்திய பிராமண நலச்சங்கம் உட்பட பல சங்கங்கள் இதனை எதிர்த்து வழக்குத் தொடுத்திருந்தன.
தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த பட்டர்கள், கோயிலுக்குள் பிராமணர்கள் தவித்து வேறு சமூகத்தினர் சென்றால் கோயிலின் புனிதத் தன்மை போய்விடும் என மக்கள் கருவதாகக் கூறி தடை பெற்றனர். தொடர்ச்சியாக அந்த வழக்கு நடைபெற்றது. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கமும், மக்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பு, வழக்கறிஞர்கள் சேர்ந்து என் பெயரில் வழக்கை நடத்தினோம்.
2015, டிசம்பர் 14-ல் ஆகமப் பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என தீர்ப்பு வந்தது. எல்லோரும் அதனை வரவேற்றனர். ஆனால், அதில் சில குழப்பங்கள் உள்ளன. உதாரணமாக, திருவண்ணாமலை கோயிலில் பிராமணரல்லாத ஒருவரை நியமித்து, அவர் ஆகம விதிகளில் ஏதேனும் தவறு செய்தால், அதனை சுட்டிக்காட்டி அவரின் நியமனத்திற்கு தடை வாங்க முடியும்.
ஸ்ரீரங்கம், மதுரை போன்ற பெரிய கோயில்களில் பிராமணரல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்களை அர்ச்சகராக நியமிப்பதை நோக்கி அரசு நகர வேண்டும். இப்போது மாரிச்சாமி அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருக்கும் ஐயப்பன் கோயில் ஆகமம் இல்லாதது. ஆகமம் உள்ள கோயில்களில் பிராமணரல்லாதவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
பயிற்சி நிலையங்கள் அதிகமாக திறக்க வேண்டும். பல கோயில்களில் இன்னும் வாரிசு முறைப்படிதான் அர்ச்சகர்கள் உள்ளனர். இது ஒழிய வேண்டும். பயிற்சி பெற்று மீதமுள்ளவர்களுக்கு கோயில்களில் அர்ச்சகர் பணி வழங்க வேண்டும்” என்றார் ரங்கநாதன்.
ஆகமம் உள்ள பெரிய கோயில்களில் பிராமணரல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்படும்போது தான் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் முழுமையாக அகற்றப்படும்.
தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT