Published : 05 Aug 2018 07:53 AM
Last Updated : 05 Aug 2018 07:53 AM

47 மயில்கள் விஷம் வைத்து கொலை: மதுரையில் தேசிய பறவைக்கு நேர்ந்த பரிதாபம்

மதுரை அருகே மருதங்குளத்தில் நேற்று 47 மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை அருகே அழகர்கோவில் சாலையில் உள்ள மருதங்குளம் பகுதியில்  உள்ள கால்வாய், தென்னந்தோப்பு, கருவேல மரக் காடுகளில் நேற்று மயில்கள் இறந்து கிடந்தன. அப்பகுதியில் உள்ள கோல்டன் சிட்டி குடியிருப்புப் பகுதி வழிப்பாதையில் ஆரம்பித்து வழிநெடுக கொத்துக் கொத்தாக மயில்கள் இறந்து கிடந்தது  மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.

தகவலறிந்த  மதுரை வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த மயில்களை மீட்டு  பிரேதப் பரிசோதனைக்காக மதுரை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று மதியம் வரை சுமார்  47 மயில்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இறந்து கிடந்த மயில்கள் அருகே விஷம் கலக்கப்பட்டிருந்த நெற்கதிர்கள் சிதறிக் கிடந்தன. மர்ம நபர்கள் நெற்கதிரில்  விஷத்தைக் கலந்து மயில்களைச் சாகடித்தது வனத்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து ரேஞ்சர் ஆறுமுகம் கூறும்போது, ‘‘மயில்கள் இறந்து கிடந்த பகுதி அருகே உள்ள வயல் வெளிகளில் தற்போது நெல்சாகுபடி நடந்துள்ளது. மயில்கள் வந்து பயிர்களை நாசம் செய்யும் என்பதால் விஷம்  வைத்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். ஆனால், அதுவும் உறுதியான தகவலாக இல்லை’’ என்றார்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் கூறும்போது,

‘‘விவசாய பூமியாக இருந்த இப்பகுதி தற்போது குடியிருப்புகளாக மாறிவிட்டாலும் நூற்றுக்கும் மேற்பட்ட மயில்கள் தினமும் வந்து செல்லும். அவற்றை பிள்ளைகளைப்போல் பார்த்துக் கொள் வோம். தினமும் இரை போடுவோம்.  கடந்த 2 நாட்களாக  வழக்கமாக வரும் மயில்களைக் காணவில்லையே என  கால்வாய்களுக்குச் சென்று பார்த்தோம். அங்கு மயில்கள் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x